Tuesday, 25 August 2020

அர்ஜென்டீனா பங்குத்தளம் ஒன்றிற்கு திருத்தந்தை மடல்

 புனித Raymond Nonnatus


புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைவரத்திற்காக செபிக்கும்படி தன்னிடம் கேட்கும் தம்பதியரிடம், புனித Raymond Nonnatusஇடம் மன்றாடுங்கள் என்று கூறுகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிலையில்லாத இவ்வுலகில், நிரந்தரமாய் இருப்பது அன்பு ஒன்றே என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 21, இவ்வெள்ளியன்று, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்துபோகும் பல விடயங்களுக்கு மத்தியில், என்றென்றும் நிலைத்திருப்பது எது என்பதை, ஆண்டவர் நமக்கு நினைவுபடுத்த விரும்புகிறார், அதுவே அன்பு, ஏனெனில் கடவுள் அன்பானவர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

புவனஸ் அய்ரஸ் பங்குத்தளத்திற்கு மடல்

 மேலும், அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அய்ரஸ் நகரில் அமைந்துள்ள, புனித Raymond Nonnatus பங்குத்தள விழாவிற்கு, வாழ்த்து தெரிவித்து, மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றுகையில், புனித Raymond Nonnatus பங்குத்தளத்தின் விழாவில் கலந்துகொண்டு, அன்னையர், சிறார், குழந்தைவரம் வேண்டிய தம்பதியர் போன்றோரை ஆசிர்வதித்தது நினைவில் இருக்கிறது என்று, திருத்தந்தை அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

புனித Raymond Nonnatus ஆலய பங்குத்தந்தை அருள்பணி Rubén Ceraci அவர்களுக்கு, தனது கைப்பட மடல் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித Raymond Nonnatus திருநாளான ஆகஸ்ட் 31ம் தேதி, அந்தப் பங்குத்தளத்தை தான் பார்வையிட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும், புதன் மறைக்கல்வியுரைகளுக்குப்பின் மக்களைச் சந்திக்கையில், குழந்தைவரத்திற்காக செபிக்கும்படி தன்னிடம் கேட்கும் தம்பதியரிடம், புனித Raymond Nonnatusடம் மன்றாடுங்கள் என்றும், அவர்கள், அர்ஜென்டீனா மக்களாக இருந்தால், Cervantes சாலையிலுள்ள அப்புனிதரின் திருத்தலம் சென்று செபியுங்கள் என்றும் கூறிவருவதாக, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராக, 1998ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி வரை பணியாற்றினார்.

No comments:

Post a Comment