மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில் முருகன் என்பவரின் காப்பிக் கடை உள்ள சாலைக்கு எதிர்ப்புறத்தில் சாக்கடை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு அருகிலிருந்த மரத்தின் நிழல்தான், மனநலம் குன்றிய மனிதர் ஒருவருக்கு அடைக்கலம். அந்தக் காப்பிக்கடைக்கு வாடிக்கையாக வந்து காப்பிக் குடிக்கும் தியாகு என்பவர், காப்பி குடித்துவிட்டு, அந்த மனநலம் குன்றியவருக்கும் காப்பி வாங்கி கொடுத்துவந்தார். சில நாள்கள் சென்று, அவருக்கு காப்பியோடு சேர்த்து ரொட்டியும் வாங்கிக் கொடுக்கத் தொடங்கினார் தியாகு. இவர் அந்தக் கடைக்கு வராத நாள்களில், முருகன், மனநலம் குன்றிய அந்த மனிதருக்கு காப்பியும், ரொட்டியும் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியது. இதற்கு எப்படியாவது ஒரு முடிவுகட்டவேண்டும் என்று முருகன் நினைத்துக்கொண்டிருக்கையில், தியாகு அந்த கடைக்கு வந்தார். சார் நல்ல நேரத்தில வந்தீங்க, நீங்க வராத நாள்கள்ல இவனுக்கு காப்பியும் ரொட்டியும் கொடுத்தா எனக்கு கட்டுபடியாகாது, இங்க பாருங்க, நீங்க வந்தவுடனே அவன் ஆசையா ஓடிவர்றான் என்று சொன்னார் முருகன். அப்படியா, அவை எல்லாவற்றிற்கும் சேர்த்து நான் பணம் தந்துவிடுகிறேன், கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார் தியாகு. என்ன சார் நீங்க, இவனுக்குக் கொடுத்தா அவனுக்குப் புரியவா போகுது அப்படின்னு முருகன் சொன்னார். அதற்கு தியாகு, மனநலம் குன்றிய மனிதர்கள் எல்லாரும் 24 மணி நேரமும் மனநலம் சரியில்லாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல், நம்மைப் போன்ற மனிதர்களும், 24 மணி நேரமும் நல்ல மன நலத்தோடு இருப்போம் என்றும் சொல்ல முடியாது என்று சொன்னார். பின்னர் தியாகு தனது இரண்டு சக்கர வாகனத்திடம் சென்றபோது, அந்த மனநலம் குன்றிய மனிதர், காப்பி டம்ளரை, கை தவறி கீழே போட்டுவிட்டார். அது உடைந்துவிட்டது. இதற்கும் குறை சொன்னால், தியாகு ஏதாவது சொல்லி நம்மைக் குழப்புவார் என்று நினைத்துக்கொண்டே, முருகன், அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அவ்வேளையில் தியாகு, தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்படவிருந்தார். அப்போது, பின்னாலிருந்து வந்த லாரி ஒன்று, அவரது வாகனத்தின் மீது மோதியது. இரண்டு நாள்களுக்கு முன்னர், தியாகு செய்துவைத்த சாதிமறுப்பு திருமணத்தில் பிரச்சனை செய்த ஆள்தான், தன்னை லாரியில் வந்து இடித்தது என்பதை வாகன கண்ணாடியில் பார்த்த தியாகு, நிலைதடுமாறி அருகிலிருந்த சாக்கடையில் போய் விழுந்தார். உடனே கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றது. ஆனால் ஒரு மனிதர் மட்டும் சாக்கடையில் இறங்கி தியாகுவை வெளியே தூக்கிவிட்டார். (Nannambikkai Nanbargal). அவர், அந்த மனநலம் குன்றிய மனிதர் என்பதை முருகன் கண்டார். மனநலம் குன்றிய அவர்தான் உண்மையான மனிதர்.
தூத்துக்குடி இளைஞர் தமிழரசன்
தமிழரசன் என்ற இளைஞர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். யாருமற்ற அனாதையான இவர், இவருக்கு இரண்டு வயது நடந்தபோது, இவரின் தாய் மூளைக்காய்ச்சலிலும், தந்தை ஒரு விபத்திலும் இறந்துவிட்டனர். இவர் தனது வளர்ச்சியை தமிழ்நியூஸ் என்ற யுடியூப்பில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார் (@TamilNEW தினேஷ் பாபு, இம்மானுவேல் எடிசன்). நான் ஆதரவற்ற அனாதை என்று, என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் விருதுநகர் ஆதரவற்றோர் இல்லத்தில் என்னைச் சேர்த்துவிட்டு போய்விட்டார். நான் அந்த இல்லத்தில் வளர்ந்தேன். மூன்று ஆண்டுகளுக்குமுன் இளங்கலை படிப்பையும் முடித்தேன். பின்னர் அந்த இல்லத்திலிருந்து வெளியே வந்து சென்னை, மதுரை போன்ற நகரங்களில் வேலை தேடினேன். வேலை கிடைக்கவில்லை. ஒருநாள் சென்னை மெரினா கடற்கரையில் இரவு படுத்திருந்தேன். காலையில் எழுந்து பார்த்தபோது, எனது பை, படித்த சான்றிதழ்கள் எல்லாமே காணாமல் போய்விட்டன. அதற்குப்பின் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அப்படியே ஊர் ஊராய் சுற்றிவிட்டு, இறுதியில் மதுரை இரயில் நிலையத்தில் ஏழு மாதங்கள் பிச்சை எடுத்து வாழ்வு நடத்தினேன். பின்னர், மதுரைக்கு அருகிலுள்ள அலங்காநல்லூரில் வழிபோக்கனாக வந்து வாழ்வாதாரமின்றி, தெருவோரமாயப் படுத்திருந்தேன். கொரோனா கொள்ளைநோயால் ஊரடங்கு விதிமுறையில் கடைகள் எல்லாம் மூடிவிட்டதால், டீ போடலாம் என்ற எண்ணம் வந்தது. எனக்கு வீடு ஒன்று தேவைப்பட்டது. நான் பிச்சையெடுத்தபோது தினமும் 100 முதல் 150 ரூபாய் கிடைக்கும். அதில் தினமும் 50 முதல் 60 ரூபாய் வரை சாப்பாட்டுக்குச் செலவழிப்பேன். மீதம் ஏழாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருந்தேன். அதில் ஐந்தாயிரம் ரூபாயை வாடகை வீட்டுக்கு கொடுத்தேன். மீதமிருந்த இரண்டாயிரம் ரூபாயை டீ போடவும் முதலீடு செய்தேன். பல ஊர்களுக்கும் சைக்கிளில் காலை மாலை சென்று டீ விற்று வருகிறேன். அதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதை வைத்து, நான் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டதால், என்னைப்போல் கஷ்டப்படும் சாலையோர மக்கள், கோவில் வாசல்களில் இருப்போர் போன்றோரைத் தேடிப் பார்த்து, காலை, மதியம், இரவு என, பத்து பேருக்கு தண்ணீர் பாட்டில்களுடன் உணவு கொடுத்து வருகிறேன். அந்த சாப்பாட்டை நான் கடைகளில் வாங்குவதில்லை. நானே பொருள்கள் வாங்கி சமைக்கிறேன். என்னைப்போல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வயதுமுதிர்ந்தோருக்கு ஒரு காப்பகம் கட்டி, அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, தன்னம்பிக்கை விடாமுயற்சி எல்லாமே என்னிடம் இருக்கிறது. எனது தொழிலும் வெற்றியோடு போய்க்கொண்டிருக்கிறது. கடவுளுடைய உதவி நிச்சயமாக எனக்கு இருக்கும். எனது இலட்சியம் நிச்சயமாக நிறைவேறும். இறக்கத்தான் பிறந்தோம். இரக்கத்தோடு இருப்போம். உண்மையான மனிதர் என்பவர், இளைஞர் தமிழரசன் போன்றவர்களே.
சத்யேந்திர பால்
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து டில்லிக்கு பிழைப்பு தேடிவந்த எட்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள், கிழக்கு டெல்லியிலுள்ள ஒரு முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள், வீட்டு வேலை, சமையல் வேலை,கூலி வேலை போன்ற வேலைகளுக்கு ஒவ்வொரு நாளும் சென்று, கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவரும் ஏழைகள். இந்த மக்களின் குழந்தைகளுக்கு மகிழ்வான வாழ்வு மட்டுமல்ல பள்ளிகளும்கூட துாரம்தான். இதன் காரணமாக நிறையச் சிறார் பள்ளிக்குச் சென்றதே இல்லை. சில சிறார் பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இந்த பிள்ளைகள் படிப்பு இப்படி பழாகிறதே என்று, பெற்றோர் உட்பட இங்குள்ள யாரும் கவலைப்பட்டதும் கிடையாது. ஆனால் சத்யேந்திர பால் என்ற 23 வயது நிரம்பிய இளைஞர், படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். UPSC தேர்வு எழுதி அரசு அதிகாரியாக வரவேண்டும் என்பதற்காக, தன்னை தயாரித்துக்கொண்டு இருக்கிறார். இந்த முகாமிலுள்ள குடிசைகள் ஒன்றில் வாழும் இளைஞர் சத்யேந்திர பால், இங்கு பாலம் கட்டுவதற்காகப் போடப்பட்டுள்ள சிமெண்ட் பலகையை வகுப்பறையாக மாற்றி, பாடம் நடத்த ஆரம்பித்தார். முதலில் இரண்டு பிள்ளைகள் மட்டுமே படிக்க வந்தனர். இவர் பாசத்துடனும் அக்கறையுடனும் பாடம் நடத்தியதைப் பார்த்து மாணவர்களின் எண்ணிக்கை முன்னுாறைத் தொட்டுள்ளது. சமுதாய ஆர்வலர்கள் உதவிசெய்ததன் காரணமாக வகுப்பறை, கரும்பலகை, நோட்டு, புத்தகம், எழுத மேசை உட்கார பெஞ்ச் போன்றவை கிடைத்துள்ளன.
இவ்வாறு இளைஞர் சத்யேந்திர பால் அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிறார். காலையில் மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் வகுப்பு நடக்கும். குழந்தைகளின் பெற்றோர் கொடுக்கும் சிறு அன்பளிப்பை ஏற்று, தனது செலவிற்கு வைத்துக்கொள்கிறார். கொரோனா கொள்ளைநோய் காரணமாக பல பள்ளிகளில் வலைத்தள வகுப்புகள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாத இங்குள்ள பிள்ளைகள் எப்படியாவது படித்தால்தான் பொதுத்தேர்வில் பங்கெடுக்க முடியும் என்பதை உணர்ந்த இவர், இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறார். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு வகுப்பறையில் பாடம் படிக்கின்றனர். இளைஞர் பால் அவர்களை உண்மையான மனிதர் என்று சொல்லலாம்.
கோழிக்கோடு விமான விபத்து
ஆகஸ்ட் 7, இவ்வெள்ளி இரவில், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்து எல்லாரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்தவுடனேயே உள்ளூர் மக்கள் பலர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்த விமானியின் உடலையும் மக்களே மீட்டுள்ளனர். இதற்கிடையில், கனமழை, கொரோனா அச்சம் இவையிரண்டையும் பொருள்படுத்தாமல் மருத்துவமனைக்கு வந்து நூற்றுக்கணக்கான மக்கள் ரத்த தானம் செய்துள்ளனர். தொடர்ந்து சில தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில் மிகவும் அரிதான ரத்தத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இவர்களின் மனிதநேயம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த மண்ணில் பிறந்து மறைந்தவர்கள் எத்தனை எத்தனையோ பேர். அதிலும் பெரும்பாலோர் கால வரலாற்றில் எவ்வித முத்திரையும் பதிக்காமல் போயிருக்கின்றனர். ஆனால், சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொல்லப்போனால், அவர்கள் நம் அன்றாட வாழ்க்கையிலும் இடம் பிடித்திருக்கின்றனர். இத்தகைய உண்மையான நல்ல மனிதர்களை வாழ்த்துவோம். நல்ல மனிதர்களாக வாழ்வோம். “எவரது சிந்தனைகள் எப்போதும் மக்களுடனேயே இருக்கின்றனவோ அவர்தான் மனிதர்” என்று சொல்வதற்குத் தகுதியானவர். சிந்திப்போம். (மனித உழைப்பு, பிறரன்பு மனநிலை பற்றி பாடிய் பாடகர் நாவோ).
No comments:
Post a Comment