Friday, 13 March 2015

சனிக்கிழமை பிரதமர் மோடி-தென்னிலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

சனிக்கிழமை பிரதமர் மோடி-தென்னிலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

Source: Tamil CNN. Modi_Nepal5_PTIஇலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தென்னிலங்கை மலையக தமிழ் அரசியல் தலைவர்களை சனிக்கிழமை மாலை கொழும்பில் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்க தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவரும், கல்வி ராஜாங்க அமைச்சருமான ராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோர் பங்குபற்றுவர்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,
இலங்கையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்தியாவிலும் புதிய அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. இந்த யதார்த்தங்களின் அடிப்படையில் நமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படும் சாத்தியம் தோன்றியுள்ளது.
அதேபோல் இங்கே தமிழர்கள் மத்தியிலும் புதிய அரசியல் தலைமைத்துவ அறிகுறிகள் தோன்றியுள்ளன. எனவே அரசுகள் மத்தியிலான உறவுக்குள் உள்ளடங்கலாக, இங்கே வாழும் இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட நமது மக்களுடனும் புதிய போக்கில் இந்திய அரசு உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
இந்த பின்னணியில் இலங்கையில் உருவாகிவரும் நல்லாட்சி சூழல் நாடு முழுக்க வாழும் தமிழ் மக்களை அரவணைத்திட, இந்திய அரசு துணை செய்திட வேண்டும். குறிப்பாக இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய சமூக நிலைமைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக பாரத நாட்டுக்கு வரலாற்றுரீதியான தார்மீக கடப்பாடு இருக்கின்றது. இந்த விடயங்களை நாம் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனத்துக்கு கொண்டு வருவோம்.

No comments:

Post a Comment