செய்திகள்-23.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. "உன்னை நானும் தீர்ப்பிடேன்" - திருத்தந்தைக்குப் பிடித்த வார்த்தைகள்
2. திருத்தந்தை: மண்ணில் புதைக்கப்படும் விதையாகி கனி தாருங்கள்
3. மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்
4. இரு கத்தோலிக்க அருள்பணியாளர்களை கைது செய்துள்ளது சீனக் காவல்துறை
5. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்
6. தென் சுடானில் ஏறத்தாழ 250 சிறார் போராளிகள் விடுதலை
7. 1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்த மனிதாபிமானி
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு பெரும் உணவு நெருக்கடி - FAO
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. "உன்னை நானும் தீர்ப்பிடேன்" - திருத்தந்தைக்குப் பிடித்த வார்த்தைகள்
மார்ச்,23,2015. இரக்கம் இல்லாத இடத்தில் நீதியும் இருக்க முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை தன் மறையுரையை வழங்கினார்.
விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவின் முன் பரிசேயர்கள் கொணர்ந்த நிகழ்வை எடுத்துரைக்கும் இத்திங்கள் நற்செய்தியையொட்டி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்ணின் மீது குற்றம் சுமத்தியவர்கள் புனிதர்கள் அல்ல, அவர்களும் பாவிகள், மற்றும், வெளிவேடக்காரர்கள் என்று கூறினார்.
இத்தகைய இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், சமுதாயத்திலும், திருஅவையிலும் உள்ளனர்; மனது களங்கப்பட்டிருக்கும்போது, இரக்கத்தைப் புரிந்துகொள்ளும் நிலை பறிக்கப்படுகிறது என்று மேலும் கூறினார் திருத்தந்தை.
விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை நோக்கி இயேசு கூறிய "உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா? நானும் தீர்ப்பிடேன்" என்ற வார்த்தைகள், தனக்கு விவிலியத்தில் பிடித்த முக்கியமான உரையாடல்களில் ஒன்று என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை, இரக்கத்தால் நிறைந்து வழியும் வார்த்தைகள் என்பதாலேயே தனக்கு மிகவும் பிடித்த வரிகள் என்று கூறினார்.
மேலும், "எண்ணற்ற வேறுபாடுகள் மத்தியிலும், ஒவ்வொரு திருஅவையும், கிறிஸ்தவ சமூகமும் இரக்கத்தின் உறைவிடமாக விளங்குவதாக" என்ற வார்த்தைகளை, இத்திங்களன்று தன் Twitter செய்தியாக எழுதியுள்ளார், திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை: மண்ணில் புதைக்கப்படும் விதையாகி கனி தாருங்கள்
மார்ச்23,2015. இறைவன் மற்றும் அயலார்மீது கொண்ட அன்பிற்காக இயேசுவைப்போல் தங்கள் வாழ்வையே இழக்கத் தயாராக இருக்கும் கிறிஸ்தவர்கள், மண்ணில் புதையும் விதையாகி மிகுந்த கனிதருபவர்களாக மாறலாம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவிழாவுக்கு வந்திருந்த கிரேக்கர்கள், கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்புவை அணுகி, இயேசுவைக் காண விரும்புவதாகக் கூறிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, மண்ணில் மடியும் கோதுமை மணி பற்றிய இயேசுவின் கூற்றுக்கு விளக்கமளித்தார்.
மனுமகன் உயர்த்தப்படவேண்டும் என இயேசு கூறியது, சிலுவையில் உயர்த்தப்படுவதையும், உயிர்த்தெழுதலின்போது தந்தையால் உயர்த்தப்படுவதையும் குறிக்கின்றது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் இறப்பு, புதிய வாழ்வின் ஆதாரமாக இருந்து, இறை அன்பின் வல்லமையை மீண்டும் மீண்டும் உருவாக்குவதாக உள்ளது எனவும் கூறினார்.
இயேசுவைப் பற்றி அறிந்துள்ள வேளையில், இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு நாம் வழங்கவல்லவை, நற்செய்தி, சிலுவை மற்றும் நம் சாட்சிய வாழ்வு எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்க கூடியிருந்த மக்கள், பேதுரு வளாகத்தில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட கையடக்க நற்செய்திப் பிரதிகளை பெற்றுச் செல்லுமாறும் அழைப்பு விடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்
மார்ச்23,2015. மத்தியப்
பிரதேசத்தின் ஜபல்பூரில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது தாக்குதல்
நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கிறிஸ்தவர்களிடையே அச்சம்
நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜா.க. ஆட்சி இடம்பெறும் மத்தியப் பிரதேசத்தில், ஜபல்பூரில் கிறிஸ்தவக்கோவில் ஒன்றில், ஞாயிறு காலை வழிபாடு நடந்துக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று, அங்கு மதமாற்றம் இடம்பெறுவதாகக் கூறி, தாக்குதலைத் துவக்கியுள்ளது.
அங்கு குழுமியிருந்த மக்களைத் தாக்கியதுடன், கோவிலில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி, அருகிலிருந்த கிறிஸ்தவப் பள்ளிக்கும் சேதத்தை உருவாக்கியுள்ளது.
பஜ்ரங் தள், தரம்
சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தற்போது
தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது
செய்யப்படவில்லை.
ஆதாரம் : DINAMALAR /வத்திக்கான் வானொலி
4. இரு கத்தோலிக்க அருள்பணியாளர்களை கைது செய்துள்ளது சீனக் காவல்துறை
மார்ச்23,2015. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் சீனக் கத்தோலிக்கத் திருஅவையில் பணியாற்றிவந்த இரு அருள்பணியாளர்களை கைது செய்துள்ளது, அந்நாட்டு காவல்துறை.
சீனாவில் மறைந்து வாழும் கத்தோலிக்கர்களுக்கு, திருப்பலி நிறைவேற்றி முடித்தவுடன் Mutanjiang என்ற நகரில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் Shaoyun Quan, Jianyou Cao என்ற இருவரும் எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற எவ்விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கத்தோலிக்கத் திருஅவையில் இணைய மறுத்து, மறைந்து வாழும் திருஅவையாக சீனாவில் செயல்பட்டுவரும் மக்களிடையே, ஆன்மீகப் பணியாற்றியதற்காக இவ்விரு அருள்பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் திருவையை, சீன அரசு அங்கீகரிக்க மறுத்து வருவதால், அது மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Mutanjiang நகரில் மறைந்து வாழும் கத்தோலிக்கருக்கு, பங்கு குருவாக Quan என்பவரும், உதவிப்பங்கு குருவாக Cao என்பவரும் கடந்த சில மாதங்களாக சேவையாற்றத் தொடங்கியதையொட்டி தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அனுமதியின்றியும், அரசின் அனுமதி பெறாத இடத்திலும் வழிபாடு நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
சீனாவில், அரசு அனுமதியுடன் அரசின் கீழ் இயங்கும் கத்தோலிக்க சபையென்றும், திருத்தந்தையின்
தலைமையை ஏற்பதால் மறைந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட
திருஅவை என்றும் இரு கத்தோலிக்க சபைகள் உள்ளன.
ஆதாரம் : ASIANEWS/வத்திக்கான் வானொலி
5. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்
மார்ச்23,2015. பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து Youhanabad பகுதி கிறிஸ்தவர்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்வதாக அந்நகர் அருள்பணியாளர் பிரான்சிஸ் குல்ஸார் தெரிவித்தார்.
தாலிபான் தீவிரவாதிகளால் இம்மாதம் 15ம் தேதி இரு கோவில்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிதெஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த Youhanabad பங்குதள அருள்பணியாளர் குல்ஸார் அவர்கள், தாலிபான் தாக்குதலைத் தொடர்ந்து இரு இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்கள் கொன்றுள்ளது கண்டனத்துக்குரியது என்றும், இஸ்லாமியர்களிடம் தலத்திருஅவை மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
இஸ்லாமியர்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் பல கிறிஸ்தவர்கள் Youhanabad பகுதியை விட்டு, தங்கள் குடும்பத்தோடு வெளியேறியுள்ளதாகவும், செபம் மட்டுமே தற்போது கிறிஸ்தவர்களின் பலமாக இருப்பதாகவும் கூறினார் அருள்பணி குல்ஸார்.
ஆதாரம் : FIDES /வத்திக்கான் வானொலி
6. தென் சுடானில் ஏறத்தாழ 250 சிறார் போராளிகள் விடுதலை
மார்ச்23,2015. கடந்த சனவரி மாதம் தென் சுடானில் துவங்கப்பட்ட சிறார் போராளிகளின் விடுவிப்பு நடவடிக்கையின் மூன்றாவது கட்டமாக தற்போது 250 சிறார் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோங்லி மாநிலத்தைச் சேர்ந்த கோப்ரா கிளர்ச்சிக் குழுவுக்கும் அரசுக்கும் இடையில், கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக இது இடம்பெற்றதாக, இந்நடவடிக்கைகளுக்கு உதவி வரும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள மேலும் 400 சிறுவர்கள் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படுவர் என்றும், இதுவரையில் நடந்த விடுவிப்புக்களில் மிகப்பெரிய விடுவிப்பாக அது இருக்கும் என்றும் யுனிசெப், மேலும் தெரிவித்தது.
தற்போது விடுவிக்கப்பட்ட சிறார்களுள் 9 வயதுடைய ஒரு சிறுவனும் உள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டில் இதுவரை 1300 சிறார் படைவீரர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. 1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்த மனிதாபிமானி
மார்ச்23,2015. உலகில் தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' விருதைப் பெற்றுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவர்.
கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுவாக்கும் விதமாக, அங்குள்ள
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் அவர்கள்
மேற்கொண்டு வரும் கடின முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் பணியாற்றிவந்த ராஜேந்திர சிங் அவர்கள், தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களை பார்த்து, மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று இப்பிரச்சனைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவராவார்.
பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி, தண்ணீர் தேவையினை, அவர் பூர்த்தி செய்து வருவதோடு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் உதவியுடன் மழைநீரை சேகரிப்பது, நீர்நிலைகளை புணரமைப்பது, நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய முறையினை பயன்படுத்தி நீர்வளத்தைப் பெருக்குதல் ஆகிய பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறார்.
தண்ணீர் மீதான போரை அமைதியாக மாற்ற வேண்டும், இதுவே தன்னுடைய இலக்கு என்று கூறியுள்ளார் 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, உலகில் தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
ஆதாரம் : TAMILWIN/வத்திக்கான் வானொலி
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு பெரும் உணவு நெருக்கடி - FAO
மார்ச்,23,2015. வருகிற ஏப்ரல் மாதத்தில் வேளாண்மைப் பணிகளைத் துவக்கவுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசிற்கு, விதைகளும், வேளாண்மைக் கருவிகளும் தேவைப்படுகின்றன என்றும், இவை இல்லையெனில் அந்நாடு பெரும் உணவு நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 15 இலட்சம் மக்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும் சூழலில், ஏப்ரல் மாதத்தில், விவசாயப் பணிகள் துவக்கப்படவில்லையெனில் இவ்வெண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.
உணவு உற்பத்தி குறைந்தால், தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப நினைக்கும் மத்திய ஆப்ரிக்க நாட்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கைக் குறையும், அதனால், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கவேண்டிய பன்னாட்டு சமுதாயத்தின் சுமையும் அதிகரிக்கும் என்றும் FAO நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போதைய அவசரக் கால தேவைகளுக்கென, FAO நிறுவனம், 62 இலட்சம் டாலர்கள் நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment