Saturday, 28 March 2015

செய்திகள்-25.03.15

செய்திகள்-25.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. விமான விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

2. திருத்தந்தையின் தர்மங்களுக்கு நிதிதிரட்டும் இலாட்டரி குலுக்கல்

3. வாழ்வுக் கலாச்சாரத்தை நிலைநாட்டுவது கிறிஸ்தவர்களின் கடமை

4. கிறிஸ்தவர்களைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் அல்ல - கர்தினால் கிரேசியஸ்

5. நவி மும்பை கோவில் தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது

6. உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் செபமாலை பக்தி முயற்சி

7. பேராயர் ரொமேரோ மரணமடைந்த 35ம் ஆண்டு நினைவு

8. மார்ச் 25 - அடிமைகள் வர்த்தகம் நினைவாக, உலக நாள்
------------------------------------------------------------------------------------------------------

1. விமான விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மார்ச்,25,2015. விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் அனுபவித்துவரும் துயரத்தில் தான் இணைவதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Digne ஆயர் Jean-Philippe Nault அவர்களுக்கு, அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மார்ச் 24, இச்செவ்வாயன்று நிகழ்ந்த விபத்தில் உயிர் துறந்தோருக்கு தன் செபங்களையும், உறவினரை இழந்த குடும்பங்களுக்கு தன் ஆறுதலையும் வெளியிட்டுள்ள திருத்தந்தையின் தந்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிவைத்தார்.
42 இஸ்பானிய குடிமக்கள் உட்பட, 148 பேர் பலியான இந்த விமான விபத்தையொட்டி, பார்சலோனா பேராயர் கர்தினால் Lluís Martínez Sistach அவர்கள், Digne ஆயருக்கு தந்தியொன்றை அனுப்பியதுடன், தன் மறைமாவட்ட மக்கள் அனைவரும், அடுத்துவரும் நாட்களில் இறந்தோர், மற்றும் துயருறுவோர் அனைவருக்கும் செபங்களையும், திருப்பலிகளையும் ஒப்புக்கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
மேலும், பிரான்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவரும், Marseille பேராயருமான Georges Pontier அவர்கள், Digne ஆயர் Nault அவர்களுக்கு அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் தர்மங்களுக்கு நிதிதிரட்டும் இலாட்டரி குலுக்கல்

மார்ச்,25,2015. ஜூன் 29ம் தேதி, புனிதர்கள் பேதுரு பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்கென நடத்தப்படும் இரண்டாவது இலாட்டரி குலுக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலாட்டரி குலுக்கலில் கலந்துகொள்வோர், அடுத்துவரும் நாட்களில், வத்திக்கானில் அமைந்திருக்கும் தபால் நிலையம், பல்பொருள் அங்காடி, புத்தகக் கடை, மருந்துக் கடை ஆகிய இடங்களில் இலாட்டரி 'டிக்கட்டுகளை' 10 யூரோ கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்களுக்கென சனவரி மாதம் நடத்தப்பட்ட முதல் இலாட்டரி குலுக்கலில் மக்கள் தாராள மனதோடு, ஆர்வமாகக் கலந்துகொண்டதால், திருத்தந்தை அந்த முயற்சியை மீண்டும் அறிவித்துள்ளார் என்று திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski அவர்கள் அறிவித்தார். 
மேலும், மார்ச் 26, இவ்வியாழனன்று, வீடற்ற வறியோர் 150 பேர், வத்திக்கான் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இந்த சிறப்பு நிகழ்வின் இறுதியில், அவர்களுக்கு சிறப்பு விருந்தொன்று வழங்கப்படும் என்றும் பேராயர் Krajewski அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : VIS / Zenit / வத்திக்கான் வானொலி

3. வாழ்வுக் கலாச்சாரத்தை நிலைநாட்டுவது கிறிஸ்தவர்களின் கடமை

மார்ச்,25,2015. கருத்தடை, கருக்கலைப்பு, உயிரணுக்கள் மாற்ற ஆய்வுகள், உதவி செய்யப்படும் தற்கொலைகள் என்று இவ்வுலகம் அழிவுக் கலாச்சாரத்தைப் பரப்பும் வேளையில், நாம் மனம் தளராமல் உயிரைப் போற்றிக் காக்கும் முயற்சிகளை, தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய “Evangelium Vitae”, அதாவது, 'வாழ்வின் நற்செய்தி' என்ற சுற்றுமடலின் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சுலோவாக்கியா ஆயர்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், ஆயர்கள் மாமன்றங்களை ஏற்பாடு செய்யும் செயலராகப் பணியாற்றும் கர்தினால் Lorenzo Baldisseri  அவர்கள், இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அழிவுக் கலாச்சாரத்தை எதிர்த்து, வாழ்வுக் கலாச்சாரத்தை நிலைநாட்டும் கடமை கத்தோலிக்கத் திருஅவைக்கு இன்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று கர்தினால் Baldisseri  அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட ஆண்டவர் அறிவிப்பின் பெருவிழாவில், இறைவன் தந்த அழைப்பிற்கு 'ஆம்' என்று சொன்ன அன்னைமரியா, வாழ்வை ஆதரிக்க நாம் சொல்லும் ஒவ்வொரு 'ஆம்' என்ற முயற்சியையும் ஆசீர்வதிக்கிறார் என்று கர்தினால் Baldisseri  அவர்கள், எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், 2015ம் ஆண்டின் அமைதிப் பரிசினைப் பெறும் மூவரில் ஒருவர் என்று, Ducci அறக்கட்டளை அறிவித்துள்ளது.
Paolo Ducci என்ற இத்தாலியர், 1999ம் ஆண்டு, தன் பெற்றோர், Francesco Paolo, மற்றும் Annamaria ஆகியோரின் நினைவாக உருவாக்கிய Ducci அறக்கட்டளை, பல்சமய உரையாடல் மற்றும் பல்வேறு அமைதிப்பணிகளில் ஈடுபடும் தலைசிறந்த மனிதர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்த விருதினை வழங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கிறிஸ்தவர்களைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் அல்ல - கர்தினால் கிரேசியஸ்

மார்ச்,25,2015. கிறிஸ்தவர்களையும், அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் தாக்குவோர், உண்மையான இந்துக்கள் கிடையாது என்று இந்திய கர்தினால், ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்ட இந்தியப் பண்பாட்டை, உலகினர் கண்களில் களங்கப்படுத்தும் இந்த வன்முறையாளர்கள், உலக அரங்கில் நம்மைத் தலைகுனியச் செய்கின்றனர் என்று மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, நவி மும்பையில் உள்ள கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது, அதற்கு முன்னதாக, வங்காளத்தில் ஒரு அருள் சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது ஆகிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, கர்தினால் கிரேசியஸ் தன் கருத்துக்களை வெளியிட்டார்.
மத்தியில் ஆட்சி  செய்யும் பாரதீய ஜனதா கட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு கட்சியென்று சொல்வதற்கில்லை எனினும், அது ஆட்சிக்கு வந்தபின்னர், தாக்குதல்கள் பெருகியுள்ளன என்பதையும் மறுக்க இயலாது என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக பிரதமர் வாக்களித்திருப்பது வெளிப்படையான விடயம் என்றாலும், அவரது வாக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைக் காண கிறிஸ்தவர்கள் காத்திருக்கின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : NDTV / வத்திக்கான் வானொலி

5. நவி மும்பை கோவில் தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது

மார்ச்,25,2015. நவி மும்பை கத்தோலிக்கக் கோவில் தாக்குதல் தொடர்பாக நால்வரை, இச்செவ்வாயன்று கைது செய்திருப்பதாக, மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தனிப்பட்ட நபரின் பகையுணர்வே காரணம் என்றும், மத எதிர்ப்பு உணர்வுகள் காரணம் அல்ல என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் பாட்டில் என்பவர் Panvel புனித ஜார்ஜ் கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகே, சட்டத்திற்குப் புறம்பான தொழில் நடத்தி வந்ததாகவும், அந்தத் தொழில் குறித்து காவல் துறையினருக்குத் தகவல்கள் தந்தது கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தில், பாட்டிலும் அவரது நண்பர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், கத்தோலிக்கப் பள்ளியொன்று தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய 6 பேர், இத்திங்களன்று கைது செய்யப்பட்டனர் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : IndiaToday / வத்திக்கான் வானொலி

6. உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் செபமாலை பக்தி முயற்சி

மார்ச்,25,2015. மரியன்னையின் புகழ்பெற்ற திருத்தலங்களில், உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் இச்செவ்வாய் மாலை செபமாலை பக்தி முயற்சியும், திருப்பலியும் மேற்கொள்ளப்பட்டன.
உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம், மற்றும், லூர்து நகர், பாத்திமா நகர், குவாதலுபே நகர் மரியன்னை திருத்தல ஆலயங்கள் நான்கும் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.
திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய “Evangelium Vitae”, அதாவது, 'வாழ்வின் நற்செய்தி' என்ற சுற்றுமடலின் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முயற்சியாக, குடும்பங்கள் திருப்பீட அவை இந்த முயற்சியை மேற்கொண்டது.
திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இயேசுவின் வாழ்க்கை மறையுண்மைகளை மையப்படுத்தி சொல்லப்பட்ட செபமாலையைத் தொடர்ந்து, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் குடும்பங்கள் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்கள் முன்னின்று நடத்திய இந்த பக்தி முயற்சியும், திருப்பலியும் Telepace என்ற இத்தாலிய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆதாரம் : VIS / Zenit /வத்திக்கான் வானொலி

7. பேராயர் ரொமேரோ மரணமடைந்த 35ம் ஆண்டு நினைவு

மார்ச்,25,2015. 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில், பேராயர் ஆஸ்கர் அர்னுல்போ ரொமேரோ (Oscar Arnulfo Romero) அவர்கள் திருப்பலியாற்றிய வேளையில் கொல்லப்பட்ட நிகழ்வின் 35ம் ஆண்டு நினைவு, உலகின் பல்வேறு இடங்களில் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது.
எல் சால்வதோர் பலகலைக் கழகத்தில், இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இளையோர், பேராயர் ரொமேரோ அவர்கள் வழங்கிய சமுதாயப் பாடங்களை கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
"ஆடுகளுக்கும் ஓநாய்களுக்கும் மேய்ப்பராக விளங்கிய ஆஸ்கர் ரொமேரோ" என்ற தலைப்பில் பேராயர் ரொமேரோ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அருள்பணி ஆல்பெர்த்தோ வித்தாலி அவர்கள், எல் சால்வதோர் நாட்டில், பேராயர் அவர்களின் குரல் ஒன்றே அன்று ஏழைகள் சார்பில் எழுந்தது என்று கூறினார்.
35 ஆண்டுகளுக்கு முன், அடக்குமுறை அரசின் உதவியுடன் கொல்லப்பட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், வருகிற மேமாதம் 23ம் தேதி, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முந்திய நாள் முத்திப்பேறு பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. மார்ச் 25 - அடிமைகள் வர்த்தகம் நினைவாக, உலக நாள்

மார்ச்,25,2015. பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் இனவெறியில் அடங்கியுள்ள ஆபத்தை இவ்வுலகம் உணர்வது மிகவும் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
உலக வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு நிகழ்வின் நினைவுச் சின்னம் ஒன்று, இப்புதனன்று, நியூயார்க் நகர், ஐ.நா. தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட போது, பான் கி மூன் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
அட்லாண்டிக் கடல் வழி நடைபெற்ற அடிமைகள் வர்த்தகம், மற்றும் உலகெங்கும் அடிமைகளாகத் துன்புறுவோரின் நினைவாக மார்ச் 25, இப்புதனன்று, சிறப்பிக்கப்படும் உலக நாளையொட்டி, ‘The Ark of Return,’ அதாவது, 'திரும்புதலின் நம்பிக்கைப் பேழை' என்ற நினைவுச் சின்னம் ஐ.நா. தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
83 நாடுகளிலிருந்து, 310 கலைஞர்கள் வடிவமைத்த பல நினைவுச் சின்னங்களில், ஹெயிட்டி நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் வாழும், Rodney Leon என்பவர் வடிவமைத்த ‘The Ark of Return’ நினைவுச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
அட்லாண்டிக் கடல் வழி அடிமைகள் வர்த்தகம், 1 கோடியே 50 இலட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் வதைத்த ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், அந்நினைவு, கடந்த ஏழு ஆண்டுகளாக, மார்ச் 25ம் தேதி, ஓர் உலக நாளாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment