Thursday 19 March 2015

செய்திகள்-18.03.15

செய்திகள்-18.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. புனித குழந்தை தெரேசாவின் பெற்றோரும் புனிதர்கள் - திருத்தந்தை

2. புனித போஸ்கோ - புதிய பங்கு கோவிலுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

3. எபோலா நோய் நெருக்கடியைக் களைவதில் திருப்பீடம்

4. திருத்தந்தையுடன் Taize அமைப்பின் தலைவர்

5. பெண்களின் நிலை - ஐ.நா. அமர்வில் பேராயர் Auza

6. இந்திய கத்தோலிக்க ஆயர்கள், வங்காள முதலமைச்சருக்கு விண்ணப்பம்

7. கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் இணைந்து மேற்கொண்ட அடக்கச் சடங்கு

8. வன்முறையை வளர்க்கும் மதப் பிரச்சாரத்திற்கு தண்டனை 

9. எபோலா மரணங்களால் பாதிக்கப்பட்ட 90 இலட்சம் குழந்தைகள்
------------------------------------------------------------------------------------------------------

1. புனித குழந்தை தெரேசாவின் பெற்றோரும் புனிதர்கள் - திருத்தந்தை

மார்ச்,18,2015. Lisieux நகர், குழந்தை இயேசுவின் புனித தெரேசா அவர்களின் பெற்றோர், லூயிஸ் மார்ட்டின், மரியா மார்ட்டின் இருவரையும் புனிதர்களென உயர்த்தும் அறிக்கையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார்.
புனித படிநிலைகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்களை, இப்புதன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தம்பதியரான லூயிஸ் மார்ட்டின், மரியா மார்ட்டின் ஆகியோரின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை அங்கீகரித்து, இவ்விருவரையும் புனிதர்களாக உயர்த்தும் அறிக்கையை வெளியிட்டார்.
மேலும், இப்பேராயம் பரிந்துரைத்த இறையடியார்கள் ஐந்து பெண்கள் மற்றும் இரு ஆண்கள் ஆகியோரின் வீரத்துவமான புண்ணிய வாழ்வை அங்கீகரித்து, அவர்கள், புனிதர்படி நிலைகளுக்கு உரியவர்கள் என்று திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த எழுவரில் ஐவர் பெண்கள், மற்றும் இருவர் ஆண்கள். மற்றும், இவர்களில் Pietro Barbarić என்பவர், 23 வயது நிறைந்த இயேசு சபை நவதுறவி என்பதும், Maria Orsola Bussone என்பவர், 16 வயது நிறைந்த இளம்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
இந்த எழுவரின் விவரங்கள் பின்வருமாறு:
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த, Francesco Gattola அவர்கள், Suore Figlie della Santissima Vergine Immaculata of Lourdes என்ற துறவு சபையை உருவாக்கிய அருள்பணியாளர்.
Bosnia Herzegovinaவில் பிறந்த Pietro Barbarić, இயேசு சபை நவ துறவியாக, தன் 23ம் வயதில் இறையடி சேர்ந்தார்.
அயர்லாந்தில் பிறந்த Mary Aikenhead அவர்கள், அயர்லாந்தில், பிறரன்பு அருள் சகோதரிகள் சபையை உருவாக்கியவர்.
இத்தாலியில் பிறந்த Elisabetta Baldo அவர்கள், ஒரு கைம்பெண். இவர், Umili Serve del Signore என்ற துறவு சபையை உருவாக்கியவர்களில் ஒருவர்.
Benedictine Samaritan Sisters of the Cross of Christ என்ற துறவு சபையை உருவாக்கிய Edvige Jaroszewska அவர்கள், Vincenza of the Passion of the Lord என்ற பெயரை தன் துறவு வாழ்வில் ஏற்று, போலந்து நாட்டில் தன் 37வது வயதில் இறையடி சேர்ந்தார்.
ஸ்பெயின் நாட்டில் பிறந்த Giovanna Vázquez Gutiérrez என்பவர், புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையில் இணைந்து, சபையின் துறவு மடத் தலைவியாக பணியாற்றியவர்.
இத்தாலியில் பிறந்து, Focolare இயக்கத்தில் இணைந்த Maria Orsola Bussone என்ற இளம்பெண், தன் 16வது வயதில் இறையடி சேர்ந்தார்.
இந்த ஏழு இறையடியார்களும் திருத்தந்தையின் அங்கீகாரத்திற்குப் பின், வணக்கத்திற்குரியவர்கள் என்று இனி வழங்கப்படுவர்.

ஆதாரம் :  /வத்திக்கான் வானொலி

2. புனித போஸ்கோ - புதிய பங்கு கோவிலுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

மார்ச்,18,2015. குழந்தைகளுடனும் இளையோருடனும் அதிகம் உழைத்த புனித டோன் போஸ்கோவின் பெயரால் துவக்கப்படும் பங்கு கோவிலுக்கு தன் ஆசீரை வழங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயராகப் பணியாற்றிய புவனோஸ் அயிரேஸ் நகரில், மார்ச் 22, வருகிற ஞாயிறன்று துவக்கப்படும் புனித டோன் போஸ்கோ பங்குக் கோவிலுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், நடைபெறும் ஆண்டு, இப்புனிதர் பிறந்த இரண்டாம் நூற்றாண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
புனித டோன் போஸ்கோவின் பெயரால் துவக்கப்படும் பங்குத்தளம், குழந்தைகள், மற்றும் இளையோர் மீது தனி கவனம் செலுத்தி, அவர்கள் மாண்புமிக்க வாழ்வை மேற்கொள்ள உதவட்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. எபோலா நோய் நெருக்கடியைக் களைவதில் திருப்பீடம்

மார்ச்,18,2015. எபோலா நோய் நெருக்கடியைக் களைவதற்கு கத்தோலிக்கத் திருஅவை தன் அர்ப்பணத்தைத் தொடர்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயினால் உருவாகியுள்ள ஆழமான தாக்கங்களைக் களைவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை தன் பணிகளை அர்ப்பண உணர்வுடன் தொடர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன் என்று, திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த நோய் களையும் பணிக்கென 5 இலட்சம் யூரோக்கள் தொகையை திருப்பீடம் அறிவித்துள்ளதேன்று கர்தினால் டர்க்சன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த உதவித் தொகையின் 50 விழுக்காடு, மருத்துவ உதவிகளாகவும், 30 விழுக்காடு, நோயுற்ற குழுமங்களின் மறுவாழ்வுக்காகவும், 20 விழுக்காடு, ஆன்மீக, மற்றும் மேய்ப்புப்பணி முயற்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று திருப்பீட நீதி, அமைதி அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையுடன் Taize அமைப்பின் தலைவர்

மார்ச்,18,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் புனித ஆண்டினை அறிவித்துள்ளதற்கு, Taize கிறிஸ்தவ ஒன்றிப்பு உலக அமைப்பின் தலைவர் சகோதரர் Alois அவர்கள் தன் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்தபோது, இறைவனின் இரக்கம் Taize அமைப்பினைத் தோற்றுவித்த சகோதரர், Roger அவர்களின் மனதுக்கு நெருங்கிய ஒரு கருத்து என்றும் கூறினார்.
இளையோரை ஒருங்கிணைக்கும் உலக இயக்கமான Taize குழுமத்தின் தலைவர், சகோதரர் Alois அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று சந்தித்த வேளையில் இவ்வாறு கூறினார்.
Taize குழுமத்தைத் தோற்றுவித்த சகோதரர் Roger அவர்கள் பிறந்ததன் முதல் நூற்றாண்டு வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அளித்தார்.
Taize குழுமத்தின் நிறுவனர், சகோதரர் Roger அவர்கள், திருத்தந்தையர் புனித 23ம் ஜான், முத்திப்பேறு பெற்ற 6ம் பால், மற்றும் புனித 2ம் ஜான் பால் ஆகியோரை ஒவ்வோர் ஆண்டும் சந்தித்து வந்தார் என்பதும், Taize குழுமத்தின் தற்போதைய தலைவர் சகோதரர் Alois அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் ஒவ்வோர் ஆண்டும் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி

5. பெண்களின் நிலை - ஐ.நா. அமர்வில் பேராயர் Auza

மார்ச்,18,2015. பெண்களை சரிநிகர் சமமாகக் கருதி, செயல்படும் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத்தின் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களும் முழுமனதுடன் இணைந்து பணியாற்றுவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண்களின் நிலையை மையப்படுத்தி, மார்ச் 9 முதல், 20 முடிய நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் 59வது அமர்வில் பேசிய, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernadito Auza அவர்கள், தன் உரையின் இறுதியில் இந்த உறுதியை அளித்தார்.
பல நாடுகளில் பெண்களின் வாழ்வு நிலையும், மாண்பும் பெருமளவு உயர்ந்துள்ளன எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், பாகுபாடுகளும், வன்முறைகளும் குறையவில்லை என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள், வறுமையுடன் தொடர்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Auza அவர்கள், வறுமையை நீக்குவது, பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் தேவைப்படும் ஓர் அவசர உதவி என்றும் பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.
பெண்களை விளிம்புகளுக்குத் தள்ளும் சமுதாயம், பயன்தராத ஒரு சமுதாயம் என்றும், பெண்கள் வாழ்வைச் சுமந்து, அதை அடுத்தவருக்கு வழங்குபவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, பேராயர் Auza அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

6. இந்திய கத்தோலிக்க ஆயர்கள், வங்காள முதலமைச்சருக்கு விண்ணப்பம்

மார்ச்,18,2015. 71 வயதான அருள் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர்களை உடனடியாக கைது  செய்யவேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, வங்காள முதலமைச்சர், மமத்தா பானெர்ஜி அவர்களுக்கு இப்புதனன்று விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த வன்கொடுமைக்கு உள்ளான அருள் சகோதரியை, இப்புதனன்று சந்தித்த இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்.
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வன்முறையில் ஈடுபட்டோரை விரைவில் சட்டத்தின் கரங்களில் ஒப்படைக்கும் பொறுப்பு, வங்காள அரசைச் சார்ந்தது என்று கர்தினால் Cleemis அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
கொல்கத்தாவுக்கருகே ரணகாட் (Ranaghat) எனுமிடத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுமை குறித்தும், ஹரியானா மாநிலத்தில் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கப்பட்டது குறித்தும் உடனடியான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி

7. கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் இணைந்து மேற்கொண்ட அடக்கச் சடங்கு

மார்ச்,18,2015. பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறவர்கள், எனவே, ஒப்புரவில் உருவாக்கப்படும் பாகிஸ்தானையே அவர்கள் விரும்புகின்றனர் என்று லாகூர் பேராயர், செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.
லாகூர் புறநகரில் யூஹனாபாத் (Youhanabad) எனுமிடத்தில், புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலும், கிறிஸ்துவின் ஆலயம் என்ற கிறிஸ்தவ கோவிலும் தாக்கப்பட்டதில் இறந்தோரின், அடக்கச் சடங்கு புனித யோவான் கோவிலில்  நடைபெற்றபோது, பேராயர் ஷா அவர்கள் இவ்வாறு தன் மறையுரையில் கூறினார்.
10,000த்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கரும், கிறிஸ்தவரும் இணைந்து வந்து மேற்கொண்ட இந்த அடக்கச் சடங்கில், ஏனைய சபைகளின் ஆயர்களும், இஸ்லாமியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
வன்முறை, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை என்றும் வழங்காது என்பதை கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்று கூறிய பேராயர் ஷா அவர்கள், பாகிஸ்தானை உண்மையான முன்னேற்றத்தை நோக்கி நடத்திச்செல்ல கிறிஸ்தவர்கள் எப்போதும் உழைப்பர் என்று கூறினார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

8. வன்முறையை வளர்க்கும் மதப் பிரச்சாரத்திற்கு தண்டனை 

மார்ச்,18,2015. வன்முறையைத் தூண்டும் வகையில் மதப் பிரச்சாரங்கள் மேற்கொள்வோரை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஈராக் நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றினார், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ.
ஈராக் அரசின் மத விவகாரங்கள் பணித்துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கையொட்டி, ஈராக் பாராளு மன்றத்தில், பாபிலோன் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இஞ்ஞாயிறன்று இவ்வாறு உரையாற்றினார்.
மக்களை வழிநடத்தும் மதத் தலைவர்கள், பன்முகக் காலாச்சாரம், சகிப்புத்தன்மை, அடிப்படை மனித உரிமை ஆகிய உயர்ந்த விழுமியங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் தலைவர்களாக விளங்கவேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
இதற்கிடையே, எகிப்து நாட்டில், சரியான மத உணர்வுகளை வளர்க்கும் வகையில், அந்நாட்டின் கல்வித் திட்டத்தில், மதங்கள் குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும் என்று எகிப்து அரசு திட்டமிட்டு வருகிறதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாட்டில் மதப் புரட்சியொன்று நல்ல முறையில் உருவாகவேண்டும் என்று எகிப்து அரசுத் தலைவர் Abdel Fattah al Sisi அவர்கள் மதத் தலைவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று Fides செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

9. எபோலா மரணங்களால் பாதிக்கப்பட்ட 90 இலட்சம் குழந்தைகள்

மார்ச்,18,2015. எபோலா நோயினால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்காவில், மரணங்களைக் கண்டதால் பாதிக்கப்பட்டுள்ள 90 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பது உலக சமுதாயத்தின் கடமை என்று ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEF, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் விண்ணப்பம் செய்துள்ளது.
எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24,000 பேரில், 5,000 குழந்தைகள் உள்ளனர் என்றும், 16,000த்திற்கும் அதிகமான குழந்தைகள், இந்த நோயினால் தங்கள் பெற்றோரில் ஒருவரையாகிலும் இழந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
மரணம் என்பது என்னவென்று புரியாத வயதில், இந்த நோயினால் உருவான உயிர் இழப்புக்கள் 90 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது என்றும், இக்குழந்தைகளுக்கு இந்நோயைக் குறித்த சரியான புரிதலை உருவாக்க வேண்டும் என்றும் UNICEF அறிக்கை கூறுகிறது.
லைபீரியா நாட்டில் புதிதாக யாரும் எபோலா நோயினால் தாக்கப்படவில்லை என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, UNICEF அமைப்பு இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...