Saturday, 28 March 2015

செய்திகள்-27.03.15

செய்திகள்-27.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. ஈராக் மற்றும் நைஜீரியாவில் புலம்பெயர்ந்துள்ள மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

2. வாழ்வைப் பிறருக்கு வழங்கும்போது மட்டுமே அதன் மதிப்பை உணருகிறோம்

3. வீடற்ற மக்களிடம் திருத்தந்தை : உங்கள் இல்லம் உங்களை வரவேற்கிறது

4. திருத்தந்தைக்கு வெள்ளைமாளிகையில் செப்டம்பர் 23ல் வரவேற்பு 

5. உக்ரைன் குறித்த ஒப்பந்தங்களை அனைத்துத் தரப்பினரும் நடைமுறைப்படுத்த அழைப்பு

6. அனைத்துலக காரித்தாஸ் : Boko Haram தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது குறித்து பரிசீலனை

7. சிரியா, ஈராக் சண்டைகள் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன

8. அருள்சகோதரி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மறுப்பு

9. ஆசியா பீபியின் விடுதலைக்கு ஐந்து இலட்சம் வலைத்தளத்தில் ஆதரவு

------------------------------------------------------------------------------------------------------

1. ஈராக் மற்றும் நைஜீரியாவில் புலம்பெயர்ந்துள்ள மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

மார்ச்,27,2015. ஈராக்கில் வன்முறைக்குப் பலியாகி, தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் பிற மக்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட செய்தித் தொடர்பகம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில், ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து வெளியேறி அந்நாட்டின் குர்திஸ்தான் பகுதியில் அடைக்கலம் தேடியிருக்கும் மக்கள் குறித்து திருத்தந்தை மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று கூறியுள்ளது.
நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடுத்திருப்பவர்களோடு நல்ல உறவுகளோடு வாழ்ந்துவந்த இம்மக்கள் விரைவில் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவார்கள் என்று திருத்தந்தை நம்புவதாகவும், அம்மக்களுக்காக திருத்தந்தை செபிப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
இந்த ஈராக் கிறிஸ்தவக் குடும்பங்கள் வருகிற புனித வாரத்தில் கிறிஸ்துவின் துன்பங்களில் சிறப்பான விதத்தில் பங்குகொள்கின்றனர் என்றும், இப்புனித வாரத்தில் கிறிஸ்தவர்களோடு இருந்து செபிப்பதற்கு நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் ஈராக் செல்கிறார் என்றும் திருப்பீட அறிக்கை தெரிவிக்கிறது.
உரோம் மறைமாவட்டம் இம்மக்களுக்கென சிறப்பாக நிதி திரட்டி, அப்பணத்தோடு இத்தாலிய இனிப்புகளையும் அனுப்புகிறது.
மேலும், நைஜீரியாவின் வடபகுதியில் துன்புறும் குடும்பங்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், நைஜீரிய ஆயர்களும் தன்னோடு இணைந்து இதே ஒருமைப்பாட்டை இக்குடும்பங்களுக்குத் தெரிவிக்குமாறு திருத்தந்தை கேட்டிருப்பதாகவும் திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வாழ்வைப் பிறருக்கு வழங்கும்போது மட்டுமே அதன் மதிப்பை உணருகிறோம்

மார்ச்,27,2015. “மனித வாழ்வு விலைமதிப்பில்லாத கொடை, ஆயினும், நாம் அதைப் பிறருக்கு வழங்கும்போது மட்டுமே அதனை உணருகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 
மேலும், வருகிற ஜூன் 6ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போஸ்னியா-எர்செகொவினா தலைநகருக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்களை மேற்பார்வையிடுவதற்கு வத்திக்கான் பிரதிநிதிகள் குழு Sarajevo நகருக்குச் சென்றுள்ளவேளை, அமைதி உங்களோடு இருப்பதாக என்ற விருதுவாக்கைக் கொண்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
ஒலிவ மரக்கிளையைக் கொண்ட ஒரு புறாவும் இதில் உள்ளது.
முன்னாள் யூக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த போஸ்னியா-எர்செகொவினாவில் 1992ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியிலிருந்து 1995ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரை நடந்த சண்டையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினோர் முஸ்லிம்கள். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த முதல் இனப்படுகொலையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வீடற்ற மக்களிடம் திருத்தந்தை : உங்கள் இல்லம் உங்களை வரவேற்கிறது

மார்ச்,27,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மச் செயல்கள் அலுவலகத்தின் அழைப்பின்பேரில், வீடற்று வாழும் 150 வறியோர் வத்திக்கான் அருங்காட்சியகத்தை இவ்வியாழனன்று பார்வையிட்டபோது முன்னறிவிப்பு எதுவுமின்றி அங்குச் சென்று அம்மக்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தெருவில் வாழும் இந்த ஏழைகள் வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு அவர்களைச் சந்தித்து, இது உங்கள் இல்லம், இது ஒவ்வொருவரின் இல்லம், இதன் கதவுகள் எல்லாருக்காகவும்  எப்பொழுதும் திறந்தே உள்ளன, வாருங்கள் என அவர்களை வத்திக்கானுக்கு அழைத்தார்.
உங்களைப் போன்ற மக்களின் செபம் எனக்குத் தேவைப்படுகின்றது, எனக்காகச் செபியுங்கள் என்று கேட்டு அவர்களை ஆசிர்வதித்த திருத்தந்தை, நம் ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பாராக, உங்கள் வாழ்வின் பாதையில் அவர் உங்களுக்கு உதவுவாராக, அவரின் கனிவான அன்பை உணருவீர்களாக எனவும் வாழ்த்தினார்.
வருகிற டிசம்பர் 17ம் தேதி தனது 78வது பிறந்த நாளைச் சிறப்பிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்களுடன் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் செலவழித்தார் என்று, திருப்பீட உதவி செய்தித் தொடர்பாளர் அருள்பணி Ciro Benedettini அவர்கள் கூறினார்.
இந்த 150 பேரும் தங்கள் வாழ்வில் முதன்முறையாக வத்திக்கான் தோட்டம் மற்றும் பிற பகுதிகளையும் பார்வையிட்டனர். பின்னர், அவர்களுக்கு சிறப்பு விருந்தொன்றும் வழங்கப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski அவர்கள், இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தைக்கு வெள்ளைமாளிகையில் செப்டம்பர் 23ல் வரவேற்பு 

மார்ச்,27,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வருகிற செப்டம்பர் 23ம் தேதியன்று வெள்ளை மாளிகையில் வரவேற்பார்கள் என்று வெள்ளை மாளிகையின் செய்தி அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.
இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அரசுத்தலைவர் ஒபாமா அவர்களும் தங்களின் பொதுவான அர்ப்பணங்கள் மற்றும் விழுமியங்கள் குறித்து கலந்துரையாடுவார்கள் என்றும் அந்த அலுவலகம் அறிவித்தது.
ஒதுக்கப்பட்டோரையும், ஏழைகளையும் பராமரித்தல், பொருளாதார முன்னேற்ற வாய்ப்புக்களை அனைவருக்கும் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், உலகில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்து சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாத்தல், குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்றல் போன்ற விவகாரங்கள் இந்த உரையாடலில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது மேற்கொண்ட உரையாடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணத்தின்போதும் தொடரவிருப்பதை அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பரில் பிலடெல்ஃபியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கத்தோலிக்கக் குடும்பங்கள் மாநாட்டுக்குச் செல்லும் திருத்தந்தை, வெள்ளை மாளிகைக்கும் செல்கிறார். செப்டம்பர் 24ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் அவையிலும் உரையாற்றுகிறார் திருத்தந்தை. இந்நிகழ்வு, திருத்தந்தையர் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உக்ரைன் குறித்த ஒப்பந்தங்களை அனைத்துத் தரப்பினரும் நடைமுறைப்படுத்த அழைப்பு

மார்ச்,27,2015. உக்ரைன் நிலப்பகுதியையும், அதன் எல்லைகளையும் அனைத்துலக சட்டத்தின்படி மதிப்பதே, உக்ரைன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதன் நிலையான தன்மையை உறுதி செய்வதற்குரிய முக்கிய கூறாக உள்ளது என்று திருப்பீடம் அனைத்துலக சமுதாயத்திடம் கூறியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில், உக்ரைன் நிலைமை பற்றிய அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், உக்ரைன் குறித்த ஒப்பந்தங்களை அனைத்துத் தரப்பினரும் நடைமுறைப்படுத்த உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு போர் நிறுத்தம் அவசியம் எனவும், உக்ரைனில் இடைக்காலப் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திருப்பீடம் வரவேற்றுள்ளதாகவும் உரைத்தார்  பேராயர் தொமாசி.
பேராயர் தொமாசி அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அனைத்துலக காரித்தாஸ் : Boko Haram தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது குறித்து பரிசீலனை

மார்ச்,27,2015. Boko Haram இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைக்குப் பயந்து நாட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் புலம்பெயரும் மக்களுக்கு உதவும் செயல்திட்டங்களை வகுத்துள்ளது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம்.
Boko Haram தீவிரவாதிகளால் நைஜீரிய மக்கள் அனுபவிக்கும் அச்சமூட்டும் துன்பங்கள் குறித்தும், கடந்த ஆண்டில் மட்டும் புலம்பெயர்ந்துள்ள பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட நைஜீரிய மக்கள் குறித்தும், உரோம் நகரில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்துள்ள எட்டு இலட்சம் மக்களின் நெருக்கடி நிலைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் நடத்திய இக்கூட்டத்தில் கேமரூன், நைஜர், சாட் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. சிரியா, ஈராக் சண்டைகள் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன

மார்ச்,27,2015. சிரியாவிலும், ஈராக்கிலும் இடம்பெறும் சண்டைகள் உட்பட உலகில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய மோதல்கள், மனித உரிமை மீறல்கள், மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைகள் போன்றவை, கடந்த 22 ஆண்டுகளில் மேற்குலகில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
1992ம் ஆண்டில் போஸ்னியா-எர்செகொவினாவில் சண்டை தொடங்கியதிலிருந்து தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரித்து எட்டு இலட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
2014ம் ஆண்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர் நிலவரம் என்ற தலைப்பில் ஜெனீவாவில் இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐ.நா. அகதிகள் அமைப்பின் தலைவர் António Guterres அவர்கள், சிரியாவிலும் ஈராக்கிலும் நடந்துவரும் மோதல்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். 
சிரியா, ஈராக் நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆப்கானியர்கள்தான் வளந்த நாடுகளில் அதிக அளவில் தஞ்சம் கோருவோர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் விண்ணப்பங்களைப் பெற்ற ஜெர்மனிதான் உலகில் அதிக அளவில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்ற நாடாக உள்ளது.
துருக்கி, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பல இலட்சம் பேர் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. அருள்சகோதரி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மறுப்பு

மார்ச்,27,2015. இந்தியாவை உலுக்கிய எழுபது வயதுக்கு மேற்பட்ட அருள்சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு குறித்து மேற்கு வங்க மாநில அரசு கோரியிருந்த சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கனாபூர் அருகே Ranaghat  ஜீசஸ் மேரி சபையினர் நடத்தும் பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள அருள்சகோதரிகள் இல்லத்தில் கடந்த 14ம் தேதி அதிகாலையில் ஆறுபேர் அடங்கிய ஒரு குற்றக்கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியது.
அதைத் தடுக்க வந்த அந்த அருள்சகோதரியை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, 12 இலட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றது. இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கையை இவ்வெள்ளியன்று நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி

9. ஆசியா பீபியின் விடுதலைக்கு ஐந்து இலட்சம் வலைத்தளத்தில் ஆதரவு

மார்ச்,27,2015. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை சட்டத்தின்பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண்ணின் விடுதலைக்கு வலைத்தளம் மூலம் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆசியா பீபியின் விடுதலைக்காக விண்ணப்பித்து, Emily Clarke என்ற பிரித்தானிய பல்கலைக்கழக மாணவி ஆரம்பித்துள்ள சமூக வலைத்தளத்தில், ஐந்து இலட்சத்து எழுபத்து இரண்டாயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் David Cameron, வெளியுறவுச் செயலர் John Hammond ஆகிய இருவரும் ஆசிய பீபியின் விடுதலைக்காக முயற்சிக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 
இறைவாக்கினர் முகமது நபி அவர்கள் பற்றி ஆசியா பீபி அவர்கள், தன்னுடன் வேலை செய்த பெண்களிடம் அறுவடையின்போது தவறாகப் பேசியதாக 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது.
இவரது தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனைச் சட்டத்தின் மூலம் கொல்லப்பட்ட முதல் பெண்ணாக இவர் இருப்பார். ஆசியா பீபி அவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷேய்க்குப்புரா மாவட்டத்தில் பிறந்தவர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment