Tuesday 24 March 2015

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மௌன ஊர்வலம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மௌன ஊர்வலம்

Source: Tamil CNN.DSC_0289 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பு இன்று வடக்கு கிழக்கில் சம நேரத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கக்கோரியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு மௌன ஊர்வலம் ஒன்றை நடத்தி அந்தந்த மாவட்ட செயலகங்களில் ஜனாதிபதிக்கான மகஜர்களை கையளித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று காலை கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு முன்பாக தொடங்கிய மௌன ஊர்வலம் கிளிநொச்சி அரச செயலகத்தில் முடிவடைந்து அங்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.அந்த மகஜரில் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை குறைவடைந்துள்ளமை.
நல்லாட்சி, ஜனநாயகம் மற்றும் சட்டமுறையிலான ஆட்சி முதலிய பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான கொள்கை விளங்கங்களை முன்வைத்து அதற்கான உறுதி மொழிகள் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழான ஸ்ரீலங்கா புதிய அரசு அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்திற்கு வந்தவுடன் சர்வதேச தரத்திலான பொறுப்பு கூறக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்தி நம்பக தன்மை மிக்க உள்ளக பொறிமுறைகள் கைக்கொள்ளப்படும் என ஐக்கிய நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. அத்தோடு இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வை நோக்கி செயல்படுவதற்கான உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
நிகழ்ச்சி பதிவுக் குறிப்பு. நாட்டின் அதி முக்கிய விடயங்களை முன்னெடுப்பதற்கான 100 நாள் வேலைத் திட்டத்தையும் முன் வைத்தது.
துரதிஷ்ட வசமாக இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்படும் சில விடயங்களே அதில் உள்ளடக்கப்பட்டன. இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் வாக்குகளின் மூலமாகவே புதிய ஜனாதிபதியின் தேர்தல் மூலமான வெற்றி சாத்தியமாகியது என்பது எல்லோராலும் எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். தமிழ் மக்களின் பிரச்சனைகள் புதிய ஜனாதிபதியால் நியாயமாக அணுகப்பட்டு செயல்படுத்தப்படும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தே இவ்வாறு செயல்பட்டனர். புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், முன்னைய ஜனாதிபதியால் காணாமல் போனவர்கள் விடயமாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை செயல்பாட்டு கால எல்லையை மேலும் 06 மாதங்களுக்கு நீடித்தார்.
புதிய அரசாங்கமானது முன்னைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு சர்வதேச நிபுணர்களின் சேவைகளை அவ்வாறே பெற்றுக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தது. கால எல்லை நீடிக்கப்பட்ட போது நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகள் ஏற்கனவே 18 மாதங்கள் பூர்த்தியடைந்திருந்தன. முன்னைய அரசின் கீழ் இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பல சிவில் அமைப்புக்கள் விசனம் தெரிவித்துவந்தன. இந்த சிவில் அமைப்புக்கள் முன் வைத்த விடயங்;கள் சம்பந்தமாக முன்னைய அரசு எந்த வித அக்கறையையும் காட்டவில்லை.
இப்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமும் ஆணைக்குழுவின் விசாரணை செயல்பாட்டு கால எல்லையை நீடிப்பதற்கு முன் இந்த விடயங்களில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்பதையிட்டு சிவில் சமூகங்கள் பெருமளவில் விசனமடைந்துள்ளன.
இவ்வாறான நிலைமையின் கீழ் திருக்கோணமலையில் ஆணைக்குழுவின் அமர்வு நடைபெறுவதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நலன்புரி அமைப்புக்கள் (வ.கா.உ.ந.அ.) மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் (த.சி.ச.அ) என்பன சந்திப்பை ஏற்படுத்தி ஆணைக்குழுவின் விசாரணைகளில் ( ஜனவரி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதலாவது அமர்வு முன்னெடுக்கப்பட்டது ) பங்கு பற்றுவதில்லை என திர்மானம் மேற்கொண்டன. இந்த முடிவானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவினர்களுடன் நீணட கலந்துரையாடலின் பின்பே எடுக்கப்பட்டது.
இந்த இரண்டு அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் சிவில் சமூக அமைப்பினால் (த.சி.ச.அ) ஊடகங்களில் அந்த தீர்மானத்திற்கான காரணங்களை விளக்கி பல விடயங்கள் வெளியிடப்பட்டன.
பெப்ரவரி 28 ம் திகதி தொடங்கி மார்ச் 03 ம் திகதி வரையிலான ( திருக்கோணமலையில் ஆணைக்குழு விசாரணைக்கான திகதிகள்) காலப்பபகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் 200 பேருக்கு மேற்பட்டோர் ஆணைக்குழு விசாரணை நடாத்திய நிலையங்களுக்கு முன்னால் ஒன்று கூடி அவர்களின் ஆதங்கங்களை அமைதிவழி போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தினர். பெப்ரவரி மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆணைக்குழு விசாரணை நடை பெற்ற நிலையங்களில் முன்னைய காலங்களில் போலவே இலங்கை அரசின் புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி போராட்டக்காரர்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையின் முதல் நாளன்று எங்களின் போராட்டத்திற்கான காரணங்களை விளக்கியும் ஆணைக்குழுவினது கட்டமைப்புக்கள் சம்பந்தமாகவும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மன ஆதங்கங்களை விளக்கியும் திருக்கோணமலை, குச்சிவேலி முதலிய இடங்களில் நடைபெற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு விளக்கங்கள் கையளிக்கப்பட்டன.
திருகோணமலை கத்தோலிக்க ஆயர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆணைக் குழுவின் இறுதி நாள் அமர்வின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் பிரதிநிதிகள் ஆணைக் குழுவின் அங்கத்தவர்களை சந்தித்தனர். அந்த ஆணைக்குழுவிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து மனுவினை கையளித்தனர்.
மக்களால் முன் வைக்கப்பட்ட மன ஆதங்கங்களை செவிமடுத்த ஆணைக்குழுவானது இவ்விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கு உரிய நபர்களோடு கூடி ஆராய்வதாக உறுதியளித்தது. இன்றைய திகதி வரை அவ்வாறான ஒன்று கூடல்கள் நடைபெறவில்லை.
கொழும்பிலுள்ள தனியார் ஊடகமொன்று பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியங்களை பதிவு செய்தாலே அன்றி அவர்களுக்காக ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் நலன்களை (பொருளாதார) அவர்கள் இழப்பார்கள் என ஆணைக் குழுவின் செயலாளர் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி வெளியிட்டிருக்கும் விடயம் குறிப்படப்பட வேண்டிய ஒன்றாகும்.
இன்னும் ஒருசில நாட்களில் ஆணைக்குழுவானது தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் கையளிக்க உள்ளதாக அறியக்கிடைத்துள்ளதோடு அதன் பின், இந்த ஆணைக் குழுவானது தொடர்ந்தும் தனது செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
நாங்கள் இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் சகல விதங்களிலும் நம்பிக்கையை இழந்துள்ளோம் என்பதை தெரித்துக்கொள்வதோடு எந்த விதமான அடிப்படை திருத்தங்களுமின்றி இப்போதைய அரசும் முன்னைய அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயல்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்து செல்வதையிட்டு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். என்பதையும் அறிவித்துக்கொள்கிறோம்.
தற்போதைய ஆட்சியில் செயல்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு முரணாக செயல்பாடுகளின் அக்கறை செலுத்துவதில் உள்ள முக்கிய குறைபாடுகளை இது வெளிக்காட்டுவதாய் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக ஐக்கிய நாட்டு செயல் அணியின் அங்கத்தவர்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார் என அறியக் கிடைத்துள்ளது.
இந்த பயணம் விரைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்களாக சகல சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடனும் தாராளமாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி அந்த ஐக்கிய நாட்டு செயல் அணியின் அங்கத்தவர்கள் நேரடியாக பேசுவதற்கும் அவர்களை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறோம். எங்களின் காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு சர்வதேசத்தின் உருப்படியான ஈடுபாட்டுடனான தலையீடுகளை வலியுறுத்துகிறோம்.

DSC_0291
DSC_0292
DSC_0302
DSC_0303
DSC_0304
DSC_0307
DSC_0311

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...