வளலாய் மற்றும் வசாவிளான் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி
குறித்த நிகழ்வு இன்றைய தினம் காலை 10மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, உயர்பாதுகாப்பு வலயங்களில் மிக நீண்டகாலத்தின் பின்னர் குடியமர்ந்திருக்கும் மக்கள் சுகபோகமான வாழ்க்கை வாழவில்லை என்பதை, நான் இங்கே நேரடியாக பார்த்திருக்கிறேன்.
கண்டியில், மாத்தறையில் உள்ள மக்களை போன்று அல்லாமல் உங்களுடைய வாழ்க்கை மிக கடினமானது என்பதை நான் உணர்ந்து கொள்கின்றேன். அதற்காக உங்களுடைய நிலத்தை உங்களிடமே வழங்குவதற்கு மேலதிகமாக, உங்களுடைய வசதிகளையும், கிராமங்களையும் மேம்படுத்தவதற்கான செயற்றிட்டங்களை நாங்க ள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
இதற்காக வடமாகாண முதலமைச்சர் மற்றும், மாகாணசபை ஊடாக தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுப்பதற்கு முயற்சிப்போம். வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகளும், தேவைகளும் உள்ளமையினை நான் ஒத்துக் கொள்கிறேன்.
அவற்றை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள். எனவே இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். அதாவது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உங்களுடைய மனங்களில் கிடந்து குமுறும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். இது தொடக்கம் மட்டுமே.
எனவே இதனை செய்வதற்கும், பெறுபேற்றை அடைவதற்கும் காலம் தேவை. இப்போது எங்கள் தொடக்கத்தில் சில பிழைகள் இருக்கலாம். இருக்கின்றன. அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு போக முடியாது. தொடர்ந்தும் நாம் அதனை செய்வதன் ஊடாக ஒரு கட்டத்தில் அனைத்து பிழைகளும், திருத்தியமைக்கப்படும்.
தற்போது போன்று அல்லாமல் எதிர்காலத்தில் உங்களுடைய கிராமங்களுக்கும், உங்களுடைய வீடுகளுக்கும் நான் நேரடியாக வந்து உங்களுடைய பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டு தீர்த்துவைக்க திட்டமிட்டிருக்கின்றேன்.
இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்க மிக முக்கியமான தேவையாகும். அவ்வாறு செய்தாலே ஒருவர் மீது ஒருவருக்குள்ள சந்தேகங்கள் முழுமையாக அகற்றப்படும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
உங்களுடைய தேவைகளையும், பிரச்சினைகளையும் உங்களுடைய பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், வெளியேயும் எமக்கு கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் கருத்தில் எடுத்து சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் 60குடும்பங்களுக்கு இந்த காணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் மீள்குடியேறும் மக்கள் தங்கள் காணிகளை துப்புரவு செய்வதற்கும், துப்புரவு செய்வதற்கான உப கரணங்களை வாங்குவதற்குமாக 13ஆயிரம் ரூபா காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment