Saturday 28 March 2015

செய்திகள்-24.03.15

செய்திகள்-24.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளின் வழிகளை ஏற்றுக்கொள்வதற்குப் புனித வாரம் நமக்கு உதவுவதாக

2. திருத்தந்தையின் நேப்பிள்ஸ் திருத்தூதப் பயணத்தில் புனிதரின் இரத்தம் உருகியது

3. இந்தியக் கிறிஸ்தவர்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது, கர்தினால் கிளீமிஸ்

4. இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு நடவடிக்கை

5. சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ அவர்களுக்கு கத்தோலிக்கர் அஞ்சலி 

6. மே 17ம் தேதி புனிதர் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள பாலஸ்தீனத் தலைவருக்கு அழைப்பு

7. உலகில் மரணத் தொழிற்சாலைகள் தடை செய்யப்பட வேண்டும்

8. காச நோயால் ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இறப்பு

9. பிரான்சில் 144 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து
------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளின் வழிகளை ஏற்றுக்கொள்வதற்குப் புனித வாரம் நமக்கு உதவுவதாக

மார்ச்,24,2015. கடவுளின் அன்பைக் குறை சொல்லாமலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் அழைக்கப்படுகின்றனர் என்று இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரயேல் மக்கள் தங்களின் பாலைவனப் பயணத்தின்போது கடவுளுக்கு எதிராக எவ்வாறு பேசினர் என்பது பற்றிக் கூறும் இச்செவ்வாய் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுளின் வழிகளை ஏற்றுக்கொள்வதற்குப் புனித வாரம் நமக்கு உதவுவதாக என்றும் கூறினார். 
பாலைவனப் பயணத்தில் இஸ்ரயேலருக்கு வழங்கப்பட்ட உணவை அம்மக்கள் வெறுத்துப் பேசியது பற்றி விளக்கிய திருத்தந்தை, கடவுள், ஆயிரக்கணக்கான  பல்வேறு வழிகளில் நமக்கு மீட்பை வழங்குகிறார், ஆனால், கடவுளின் வழிகளை  ஏற்றுக்கொள்வதற்கு நாம் அடிக்கடி திறனற்றவர்களாக உள்ளோம் என்றும் கூறினார். 
கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி இந்த இஸ்ரயேல் மக்களைத் தண்டித்தார், அவர்களில் பலர் இறந்தனர், ஆயினும், மோசே மக்களுக்காக மன்றாடினார், கடவுளின் ஆணைப்படி வெண்கலத்தில் கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து உயர்த்தினார், பாம்புக் கடிக்குப் பின்னர் அதைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொண்டனர் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று எத்தனை கிறிஸ்தவர்கள் தங்களின் துன்பமெனும் பாலைநிலத்தில் முணுமுணுத்து கடவுளின் வழிகளை ஏற்காமல் இறக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாமும் இந்த மக்களின் தவறையே அடிக்கடி செய்கிறோம், வாழ்வின் அதிருப்திகளால் பல கிறிஸ்தவர்கள் நஞ்சூட்டப்பட்டுள்ளோம், கடவுள் நல்லவர், வாழ்வின் கடினமான நேரங்களை ஏற்பதற்கு அவரின் அருளை மன்றாடுவோம் என்று தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் நேப்பிள்ஸ் திருத்தூதப் பயணத்தில் புனிதரின் இரத்தம் உருகியது
மார்ச்,24,2015. துன்பம், மனமாற்றத்துக்கான அழைப்பு, இது நமது குறையுள்ள மற்றும் வடுப்படும் தன்மையை நினைவுபடுத்துகின்றதுஎன்ற தனது சிந்தனையை இச்செவ்வாயன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நேப்பிள்ஸ் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் குருத்துவ மாணவருக்கு சில அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, நான்காம் நூற்றாண்டில் இறந்த புனிதர் ஒருவரின் உறைநிலையில் இருந்த இரத்தம் உருகி ஓர் அற்புதம் நடந்துள்ளது.
மறைசாட்சியான புனித ஜனுவாரிஸ் அவர்களின் இரத்தத்தைக் கொண்ட கண்ணாடிக் குடுவை நேப்பிள்ஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சந்திப்பின்போது அத்திருப்பண்டத்தை எடுத்து ஆசிர் வழங்கினார். அப்போது அதன் ஒரு பகுதி உருகி இருந்தது.
வழக்கமாக, மே 01, இப்புனிதரின் விழாவாகிய செப்டம்பர் 19, டிசம்பர் 16 ஆகிய மூன்று நாள்களில் இந்த இரத்தம் உருகும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மார்ச் 21, கடந்த சனிக்கிழமையன்று இதில் ஒரு பகுதி உருகியுள்ளது.
இதற்கு முன்னர் வழக்கமான இந்த மூன்று நாள்கள் தவிர, 1848ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்களுக்கு இத்திருப்பண்டம் உருகியுள்ளது. 
இது குறித்து நேப்பிள்ஸ் கர்தினால் Crescenzio Sepe அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்தபோது, புனிதர் நம்மைச் சிறிதளவே அன்புகூருகிறார் எனத் தெரிகிறது, நாம் மேலும் மனம் மாற வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார் திருத்தந்தை.
மூன்றாம் நூற்றாண்டில் பிறந்து நான்காம் நூற்றாண்டில் இறந்த மறைசாட்சியான புனித ஜனுவாரிஸ், நேப்பிள்ஸ் நகர் பாதுகாவலராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இந்தியக் கிறிஸ்தவர்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது, கர்தினால் கிளீமிஸ்

மார்ச்,24,2015. இந்தியாவில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் அண்மையில் தாக்கப்பட்டுள்ள சூழலில், தங்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக கிறிஸ்தவர்கள் உணருகின்றனர் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
இந்திய பத்திரிகையைளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான Karan Thapar அவர்களுக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்த கர்தினால் Baselios Cleemis அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உறுதிப்பாட்டை எல்லாரும் கவனமுடன் பின்பற்றுவதாகத் தெரியவில்லை  என்று கூறினார்.
இந்தியக் கிறிஸ்தவர்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது, அருளாளர் அன்னை தெரேசாவின் மனிதாபிமானப் பணிகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் Mohan Bhagwat அவர்கள் கூறியிருப்பது கவலை தருகின்றது என்றும் கூறினார் கர்தினால் Cleemis.
கிறிஸ்மஸ் தினத்தன்று நல்லாட்சி தினம் என பிரதமர் மோடி அவர்களின் அரசு பின்பற்றுவது குறித்து குறைகூறிய கர்தினால் Cleemis அவர்கள், நல்ல நிர்வாகம் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட வேண்டும் மற்றும் கிறிஸ்தவ விழாவின் மேன்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : Business-standard /வத்திக்கான் வானொலி

4. இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு நடவடிக்கை

மார்ச்,24,2015. இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மும்பை உயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 25, இப்புதனன்று மூடப்படும் என்று மஹாராஷ்​டிர மாநிலக் கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவில் Panvel புனித ஜார்ஜ் கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டு அப்புனிதரின் உருவம் சேதமாக்கப்பட்டது, கடந்த வெள்ளிக்கிழமை ஜபல்பூரில் ஓர் ஆலயம் தாக்கப்பட்டது, கடந்த வாரத்தில் மேற்கு வங்காளத்தில் 71 வயது அருள்சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது போன்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை அக்கூட்டத்தில் குறிப்பிட்டனர் கிறிஸ்தவர்கள்.
தேர்வுகள் நடந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.     

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

5. சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ அவர்களுக்கு கத்தோலிக்கர் அஞ்சலி 

மார்ச்,24,2015. சிங்கப்பூர் உலகின் பார்வையில் ஒன்றுமில்லாததாகக் கணிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில், லீ க்வான் யூ என்ற மாபெரும் தலைவரைக் கொண்டிருந்ததற்கு, சிங்கப்பூர் மக்களாகிய நாங்கள் அனைவரும் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் கூறினார்.
சிங்கப்பூரில் 31 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்து, அந்த நகர நாட்டை உலக அளவில் வியப்பூட்டும் நிதி மையமாகவும், இப்புவியில் செல்வமிக்க நாடுகளில் ஒன்றாகவும் உயர்த்திய மறைந்த முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ அவர்களின் மறைவுக்கு கத்தோலிக்கத் திருஅவையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் பேராயர் Goh.
நேர்மை, நிதானம், கூறுபடாநிலை, தன்னலமில்லா அன்பு, பிள்ளைக்குரிய பக்தி, அர்ப்பணிப்பு, கடமையுணர்வு ஆகியவற்றின்மீது இவர் நாட்டைக் கட்டியெழுப்பிய மரபுரிமையை அந்நாட்டினராகிய நாங்கள் பாதுகாத்து அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் Goh.
வருகிற வெள்ளியன்று (மார்ச் 27) சிங்கப்பூர் புனித யோசோப் ஆலயத்தில் லீ அவர்களின் ஆன்ம சாந்திக்காக திருப்பலி நிறைவேற்றவுள்ள பேராயர் Goh அவர்கள், மற்ற மக்களுடன் சேர்ந்து அந்நாட்டின் கத்தோலிக்கரும் தங்களின் பெருந்தலைவரின் மறைவுக்காக வருந்துவதாகவும் கூறினார்.
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ அவர்கள் தனது 91வது வயதில் மார்ச் 23, கடந்த திங்கள் அதிகாலை 3.18 மணியளவில் உயிர்துறந்தார். லீயின் மறைவையொட்டி சிங்கப்பூர் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, மக்கள் செயல் கட்சியைத் தொடங்கி அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். 1959ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பிரித்தானியரிடமிருந்து அந்நாடு முழு அதிகாரத்தை பெற்றது. சிங்கப்பூர் என்ற நாட்டை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ', பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.
திறமையான, பொறுப்பான, நீடித்த முற்போக்கான சிந்தனையுடய ஊழலைத் தடுக்கும் ஆட்சியாக அவரது ஆட்சிக் காலம் இருந்ததால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். சுத்தமே முதல் நோக்கமாகக் கொண்ட அவர், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை அழைத்து, அவர்களுடன் இணைந்து, சிங்கப்பூரை சுத்தம் செய்தார். இதற்குப் பின்னர், சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள், அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மே 17ம் தேதி புனிதர் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள பாலஸ்தீனத் தலைவருக்கு அழைப்பு

மார்ச்,24,2015. வருகிற மே 17ம் தேதி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் Mary Alphonsine Ghattas, Mariam Baouardy ஆகிய இரு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முதுபெரும் தந்தை Fouad Twal.
அண்மையில் பாலஸ்தீனத் தலைவர் Abbas அவர்களை சந்தித்தபோது இந்த அழைப்பை விடுத்தார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த Abbas அவர்கள், புனித பூமியில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளையும், பரப்பிவரும் அன்புச் செய்தியையும், நீதிக்கும் அமைதிக்கும் திருஅவை உழைப்பதையும் பாராட்டினார்.
புனித பூமியின் கலிலியில் 1846ம் ஆண்டு பிறந்த அருளாளர் அருள்சகோதரி Mariam Baouardy, பெத்லகேம் கார்மல் சபையை நிறுவியவர். இவர் தனது வாழ்நாளில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார்.
மேலும், 1843ம் ஆண்டு எருசலேமில் பிறந்த அருளாளர் அருள்சகோதரி Mary Alphonsine Ghattas, செபமாலை அன்னை சகோதரிகள் சபையின் துணை நிறுவனராவார். இவர் 1927ம் ஆண்டில் எருசலேமில் இறந்தார்.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி

7. உலகில் மரணத் தொழிற்சாலைகள் தடை செய்யப்பட வேண்டும்

மார்ச்,24,2015. மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமையை விளக்கிய அதேவேளை, உலகில் மரணத் தொழிற்சாலைகள் தடை செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ.
இத்தாலியில் புனித பாத்ரே பியோ மருத்துவமனையில் வழங்கிய பேட்டியில் இவ்வாறு அழைப்பு விடுத்த தெரிவித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஆயுத உற்பத்திக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார்.
அண்மையில் துனிசியாவில் நடந்த தாக்குதல்களுக்கு எதிரான தனது கண்டனத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் சமயப் போர் அல்லது மேற்கத்திய சிலுவைப்போர் இன்றி அனைத்துலக சமுதாயம் அப்பகுதியில் அமைதியைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் சில்வானோ தொமாசி.

ஆதாரம் : Zenit  /வத்திக்கான் வானொலி

8. காச நோயால் ஆண்டுதோறும் 15 இலட்சம் பேர் இறப்பு

மார்ச்,24,2015. TB என்ற காச நோயை ஒழிப்பதில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலகம் வெற்றி கண்டுள்ளபோதிலும், 2035ம் ஆண்டுக்குள் இந்நோயை முழுவதுமாக ஒழிப்பதற்கு உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
ஆயினும், 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 90 இலட்சம் பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர் மற்றும் 15 இலட்சம் பேர் இறந்தனர் என்பதால் இவ்வெற்றியை நாம் முழுமையாகக் கொண்டாட முடியாது என்றும் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
மார்ச் 24, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக காச நோய் ஒழிப்பு தினத்துக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.
இந்நோய்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை மூலம் 2000த்துக்கும் 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 3 கோடியே 70 இலட்சம் மக்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் கூறிய பான் கி மூன் அவர்கள், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் இந்நோயை முழுவதுமாக ஒழித்துவிட வேண்டுமென்று 2014ம் ஆண்டில் உலக நலவாழ்வு நிறுவனம் யுக்திகளை அமைத்து செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
பெண்கள் 15க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் TB நோய்க் கிருமிகளால் தாக்கப்படுக்ன்றனர். சிறார், கைதிகள், குடியேற்றதாரர், HIV நோயாளிகள் போன்றோரின் இறப்புக்குக் காரணமாகும் ஐந்து முக்கிய நோய்களில் TBயும் ஒன்றாகும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

9. பிரான்சில் 144 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

மார்ச்,24,2015. பிரான்சில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் A320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக இச்செவ்வாயன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த விமானத்தில் 144 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்தனர் என்றும் உள்ளூர் பத்திரிகை ஒன்று கூறுகிறது.
லுஃப்தான்சா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான Germanwings விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் பார்செலோனாவிலிருந்து டுசல்டோர்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய அடையாளத்தை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...