Saturday 28 March 2015

செய்திகள்-26.03.15

செய்திகள்-26.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. கார்மேல் சபையினரின் உலக அமைதி செபத்துடன் திருத்தந்தை

2. குளிர்ந்துபோன கருத்தியல்கள் மகிழ்வைத் தருவதில்லை - திருத்தந்தை

3. ISIS குழுவால் கொல்லப்பட்டவரின் சகோதரர் திருத்தந்தையுடன் சந்திப்பு

4. திருத்தந்தையின் தூரின் நகர் பயண விவரங்கள்

5. ஏப்ரல் 19 முதல் புனிதத்துணி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் - தூரின் பேராயர்

6. மனித உயிர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதே முன்னேற்றம்

7. குர்காவோனில், புதிய சீரோ மலங்கரா மறைமாவட்டம்

8. வங்காளத்தில், கத்தோலிக்கப் பள்ளிக்கு மிரட்டல் கடிதம்
------------------------------------------------------------------------------------------------------

1. கார்மேல் சபையினரின் உலக அமைதி செபத்துடன் திருத்தந்தை

மார்ச்,26,2015. மனிதகுலத்தை வாட்டி, வதைக்கும் போர், வன்முறை ஆகிய நெருப்புக்களை, இறைஅன்பு என்ற தீயினால் வெற்றிபெறுவதற்கு கார்மேல் துறவு சபையினர் மேற்கொள்ளும் உலக அமைதி செபத்தில் நானும் இணைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அவிலா நகர் புனித தெரேசா அவர்கள் பிறந்த 500ம் ஆண்டு நினைவு, மார்ச் 28, இச்சனிக்கிழமை  சிறப்பிக்கப்படும் வேளையில், உலகெங்கிலும் பணியாற்றும் கார்மேல் துறவு சபையின் இருபால் துறவியர் அனைவரும் மார்ச் 26ம் தேதி, வியாழனன்று, உலக அமைதிக்கென ஒரு மணிநேர ஆராதனையில் ஈடுபட, கார்மேல் துறவு சபையின் உலகத் தலைவர் அருள்பணி Saverio Cannistrà அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகளாவிய அமைதி ஆராதனையை, திருத்தந்தை துவங்கி வைத்த இவ்வியாழன் காலை, இச்சபையின் துணைத் தலைவர், வத்திக்கான், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றியத் திருப்பலியில் கலந்துகொண்டார்.
மறைநூல் அறிஞராக, திருஅவை கொண்டாடும் புனித தெரேசா அவர்களின் பரிந்துரையால், உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் ஆயுதம் தாங்கிய வன்முறைகள் முடிவுக்கு வர செபிப்போம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உலக அமைதியை மையப்படுத்தி கார்மேல் துறவு சபையினர் மேற்கொள்ளும் உலகளாவிய செப வழிபாடுகள், மார்ச் 28, புனித தெரேசா அவர்களின் 500ம் ஆண்டு நிறைவு நாள் முடிய தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. குளிர்ந்துபோன கருத்தியல்கள் மகிழ்வைத் தருவதில்லை - திருத்தந்தை

மார்ச்,26,2015. குளிர்ந்து, உறைந்துபோன கருத்தியல்கள் உண்மையான மகிழ்வைத் தருவதில்லை; மாறாக, இயேசுவைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையே மகிழ்வைத் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையாற்றினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை, வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கு இறைவன் வழங்கிய உறுதி மொழிகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
தானும், மனைவி சாராவும் வயதில் முதிர்ந்த நிலையில் இருந்தாலும், இறைவன் தன்னை எண்ணற்ற நாடுகளுக்குத் தந்தையாக்குவதாகக் கூறிய உறுதிமொழியை, ஆபிரகாம் நம்பியதால், அவர் மகிழ்ந்தார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நற்செய்தியில் நாம் சந்திக்கும் மறைநூல் வல்லுனர்கள், இறைவனையும், இயேசுவையும் சந்திப்பதற்குப் பதில், தங்கள் கருத்தியல்களில் கட்டுண்டு போனதால், அவர்களால் உண்மையான மகிழ்வைக் காணமுடியவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மறைநூல் வல்லுனர்கள், இயேசுவை மடக்குவதில் குறியாய் இருந்தபோது, சிறுமைத்தனமான மகிழ்வை அடைந்திருக்கலாம்; ஆனால், உண்மை மகிழ்வை அவர்கள் தொலைத்துவிட்டனர் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
மேலும், "தங்கள் கிறிஸ்தவ வாழ்வின் வழியாக, மனித சமுதாயத்தில் புளிப்புமாவாகச் செயல்பட, பொதுநிலையினர் அழைக்கப்பட்டுள்ளனர்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ISIS குழுவால் கொல்லப்பட்டவரின் சகோதரர் திருத்தந்தையுடன் சந்திப்பு

மார்ச்,26,2015. மனித சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு, நீதி ஆகியவற்றைக் குலைக்கும் வகையில், இலாபம் என்ற ஒரே குறிக்கோளுடன் இவ்வுலகம் செல்லவேண்டாமென நான் இதயப்பூர்வமாக விண்ணப்பிக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மார்ச் 25, இப்புதனன்று புனித பேதுரு வளாகத்தில், கொட்டும் மழையில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, இத்தாலியின் கலாப்ரியா பகுதியில், பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் தொழிலாளிகள் வந்திருந்ததை உணர்ந்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
குடும்பத்திற்குத் தேவையான உணவை ஒவ்வொருநாளும் தருவது, மனித மாண்பை விரும்பும் அனைவரின் முயற்சி என்றும், பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் இளையோர், இத்தகைய மாண்பை இழந்து, குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுடன் சேரும் ஆபத்து உள்ளது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மேலும், சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், ISIS தீவிரவாதிகளால் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட David Haines என்ற பிரித்தானிய பிறரன்புப் பணியாளரின் சகோதரர், Mike Haines அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை புதன் மறையுரையின் இறுதியில் சந்தித்தார்.
ISIS தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்ட மற்றோர் இளையவர் Alan Henning அவர்களின் மனைவி, Barbara Henning  மற்றும் Mike Haines இருவரும் கையெழுத்திட்ட ஓர் அறிக்கையில், வன்முறையாளர்கள் ஒருசிலரின் முயற்சிகள் உலக அமைதியைக் குலைப்பதற்கு நாம் விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, Mike Haines மற்றும் இலண்டனிலிருந்து வந்திருந்த ஓர் இஸ்லாமிய அறிஞர், Shahnawaz Haque என்பவரும் வத்திக்கானுக்குக் கொணர்ந்தனர் என்று பிரித்தானிய தூதர், Nigel Baker அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Zenit / VIS / வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் தூரின் நகர் பயண விவரங்கள்

மார்ச்,26,2015. ஜூன் 21, 22 ஆகிய நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தூரின் நகரில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்த விவரங்களை, தூரின் உயர்மறைமாவட்டப் பேராயர் Cesare Nosiglia அவர்கள், வத்திக்கானில், இப்புதனன்று, செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
ஜூன் 21, ஞாயிறன்று காலை 8 மணிக்கு தூரின் நகர் சென்றடையும் திருத்தந்தை, நேராக, பேராலயம் சென்று, அங்கு, இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட புனிதத் துணிக்கு முன் செபத்தில் ஈடுபடுவார்.
10.45 மணியளவில், Vittorio என்ற சதுக்கத்தில் திருப்பலி ஆற்றியபின், நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்கும் திருத்தந்தை, பேராயர் இல்லத்தில், வளர் இளம் பருவக் கைதிகள் சிலருடன் மதிய உணவு அருந்துவார்.
தூரின் நகரில் பணியாற்றி, இறையடி சேர்ந்த புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறப்பின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதால், ஜூன் 21 பிற்பகல் 3 மணியளவில், தூரின் நகர், சகாய அன்னை பசிலிக்காவில் சலேசிய துறவு சபையைச் சேர்ந்த இருபால் துறவியரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார்.
மாலை 6 மணிக்கு, மீண்டும் ஒருமுறை Vittorio சதுக்கத்தில் தூரின் நகர் இளையோரை சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை.
ஜூன் 22, திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உறவினர்களைச் சந்திக்கிறார் என்றும், அவர்களுக்கு திருப்பலியாற்றி, அவர்களோடு மதிய உணவு அருந்துகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் இருநாள் பயணத்தின் இறுதியில், தூரின் நகரில் வணங்கப்பட்டு வரும் புனிதத் துணியைப் பாதுகாத்து வரும் பணிக்குழுவினர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானுக்குத் திரும்புவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஏப்ரல் 19 முதல் புனிதத்துணி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் - தூரின் பேராயர்

மார்ச்,26,2015. புனித ஜான் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் இரண்டாம் நூற்றாண்டு நினைவாக தூரின் நகருக்கு வருகை தரும் திருப்பயணிகளுக்கு, ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி முடிய, இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட புனிதத்துணி மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தூரின் உயர் மறைமாவட்டப் பேராயர் Cesare Nosiglia அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சிறப்பு ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜூன் 21, 22 ஆகிய நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூரின் நகரில் மேற்கொள்ளும் பயணம், இளையோரின் புனிதர் என்றழைக்கப்படும் புனித ஜான் போஸ்கோ அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் அமையும் என்று பேராயர் Nosiglia அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இந்தப் பயணத்தின்போது, தூரின் நகரில் இளையோரின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும், உலக இளையோர் நாள் நிகழ்ச்சிக்கென Krakow நகருக்கு எடுத்துச் செல்லப்படும் சிறப்புச் சிலுவை, ஜூன் 21, 22 ஆகிய நாட்கள் தூரின் நகரில் வைக்கப்படும் என்றும் பேராயர் Nosiglia அவர்கள் அறிவித்தார்.
மேலும், ஏப்ரல் 19ம் தேதி முதல் புனிதத் துணியைக் காணவரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைத் தொகை முழுமையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையின்போது, அவரது தர்மப் பணிகளுக்கென அளிக்கப்படும் என்றும் பேராயர் Nosiglia அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மனித உயிர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதே முன்னேற்றம்

மார்ச்,26,2015. பொருளாதாரம், சமுதாயம், சுற்றுச்சூழல் முன்னேற்றம் என்ற மூன்று தூண்களின் மேல், பாதுகாக்கப்படக்கூடிய முன்னேற்ற இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாதுகாக்கப்படக்கூடிய முன்னேற்ற இலக்குகள் என்ற மையக்கருத்துடன், நியூ யார்க் நகரில் மார்ச் 24, இச்செவ்வாயன்று நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Bernadito Auza அவர்கள், உலக அரசுகளிடையே, வெளிப்படையான கூட்டுறவு முயற்சிகள் இருப்பது, உலகிற்கு நன்மை தரும் என்று கூறினார்.
உலகில் பரவிவரும் வறுமையை ஒழிப்பதும், மனித உயிர்களுக்கு உரிய மாண்பை வழங்குவதும் முன்னேற்றத்தின் முக்கியக் கூறுகளாக அமையவேண்டும் என்று பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.
சுயநலத்தால் தூண்டப்படும் அரசுகள், தங்கள் முடிவுகளை, மறைமுகமாக, வறிய நாடுகள் மீது திணிப்பதைத் தவிர்த்து, அனைத்து அரசுகளும் ஒளிவு மறைவின்றி மனித சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடுவதையே திருப்பீடம் எப்போதும் விரும்புகிறது என்று பேராயர் Auza அவர்கள் தன் உரையில் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. குர்காவோனில், புதிய சீரோ மலங்கரா மறைமாவட்டம்

மார்ச்,26,2015. டில்லிக்கு அருகே உள்ள குர்காவோன் (Gurgaon) நகரில், சீரோ மலங்கரா புதிய மறைமாவட்டம் ஒன்றை, புனித John Chrysostom பெயரால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று உருவாக்கியுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே வாழும் சீரோ மலங்கரா மக்களின் திருத்தூது மேய்ப்பராகப் பணியாற்றி வந்த ஆயர் Jacob Mar Barnabas Aerath அவர்களை, இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
1960ம் ஆண்டு கேரளாவின் திருவள்ளாவில் பிறந்த Barnabas Aerath அவர்கள், 1986ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 2007ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். நன்னெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம், Khadki நகரில், புனித Ephrem பெயரில், அப்போஸ்தலிக்க நிர்வாக வட்டத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று உருவாக்கி, அதன் முதல் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, ஆயர் Thomas Mar Anthonios Valiyavilayil அவர்களை நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. வங்காளத்தில், கத்தோலிக்கப் பள்ளிக்கு மிரட்டல் கடிதம்

மார்ச்,26,2015. பயனுள்ளவர்கள், பயனற்றவர்கள் என்ற அடிப்படையில், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயுற்றோர், வறியோர் ஆகியோரை மனித சமுதாயத்திலிருந்து நீக்கும் முயற்சிகள் கண்டனத்திற்கு உரியவை என்று மும்பை ஆயர் ஒருவர் கூறினார்.
மார்ச் 25, இப்புதனன்று கொண்டாடப்பட்ட ஆண்டவர் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவை, வாழ்வுக்கு ஆதாரம் தரும் நாளாக இந்தியத் தலத்திருஅவை சிறப்பித்ததையொட்டி, திருப்பலியாற்றிய மும்பை துணை ஆயர், Dominic Savio Fernandes அவர்கள், இவ்வாறு தன் மறையுரையில் கூறினார்.
தாயின் கருவில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் இறைவனின் சாயலைத் தாங்கியுள்ளது என்று கூறிய ஆயர் Fernandes அவர்கள், கருவிலிருந்து கல்லறை முடிய ஒவ்வொரு உயிரையும் மதிக்கும்போது, இறைவனையே மதிப்பதற்குச் சமம் என்று எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, வங்காளத்தில் பணியாற்றிவரும் ஒரு கத்தோலிக்கப் பள்ளி தீவைத்துக் கொளுத்தப்படும் என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளதென குழந்தை மரியா அருள் சகோதரிகள் சபையைச் சேர்ந்த பள்ளி நிர்வாகி, அருள் சகோதரி Anise Jacob அவர்கள், காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...