Tuesday, 24 March 2015

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ

Source: Tamil CNN. li0223_2எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.
லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.
ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.
முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.
இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. “பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !” என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.
ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,
சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்
பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.
சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.
கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.
இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.
“ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !” எனப்பட்ட சிங்கப்பூர், ‘பொருளாதாரப்புலி’ என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்.
– பூ.கொ.சரவணன்
li0223_3

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...