Monday, 23 March 2015

செய்திகள்-21.03.15

செய்திகள்-21.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணம்

2. இறையன்பிலிருந்து நம்மை எதுவும், சிறையின் கம்பிகள்கூட நம்மைப் பிரிக்க முடியாது

3. நேப்பிள்ஸ் நகரின் மீட்புக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு விண்ணப்பம்

4. திருத்தந்தை - தொழிலாளிகளைச் சுரண்டுவது கிறிஸ்தவப் பண்பு அல்ல

5. அத் லிமினாவில் திருத்தந்தையை சந்தித்த அனுபவம்

6. அமெரிக்க, கானடா சுரங்க நிறுவனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் உரிமைகளை மீறுகின்றன

7. நேபாளத்தில் மனித வர்த்தகத்தால் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல்போகின்றனர் 

8. அனைத்துலக தண்ணீர் தினம் மார்ச் 22

9. தமிழ் அறிவியலாளர் வெங்கட்ராமன் பிரித்தானிய ராயல் கழகத்தின் தலைவர்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணம்

மார்ச்,21,2015. இச்சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 8 மணிக்கு முதலில் Pompeii செபமாலை அன்னை திருத்தலம் சென்றார்.
செபமாலை அன்னை திருவுருவத்துக்கு முன்பாக அமைதியில் செபித்த திருத்தந்தை, அனைவருக்காகவும் சப்தமாகவும் செபித்தார்.
திருஅவையின் தாயே, 12 விண்மீன்களால் முடிசூட்டப்படவரே, புனித செபமாலை அன்னையே, வெறுப்பு மற்றும் இரத்தத்தின் பல சாலைகளை, எங்கள் துயரங்களை, ஆயிரக்கணக்கான பழைய மற்றும் புதிய ஏழ்மைகளை, எங்கள் பாவங்களை உமது கருணையிடம் அர்ப்பணிக்கின்றோம், உம் இதயத்துக்கு ஏற்ற நல்லதோர் உலகை அமைக்க எங்களுக்கு உதவும், கடவுளின் மன்னிப்பை எங்களுக்குப் பெற்றுத்தாரும் தாயே என்று செபித்தார் திருத்தந்தை.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேப்பிள்ஸ் நகர் சென்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் வளாகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாற்றினார்.
பிற்பகலில் புனித ஜனுவாரிஸ் பேராலயத்தில் 3ம் நூற்றாண்டு ஆயரும் மறைசாட்சியுமான புனித ஜனுவாரிஸ் திருப்பண்டத்தைத் தரிசித்து, அங்கே குருக்கள் மற்றும் துறவறத்தாரைச் சந்தித்தார். மாலை 5 மணிக்கு இளையோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இறையன்பிலிருந்து நம்மை எதுவும், சிறையின் கம்பிகள்கூட நம்மைப் பிரிக்க முடியாது

மார்ச்,21,2015. இறையன்பிலிருந்து நம்மை எதுவும், சிறையின் கம்பிகள்கூட நம்மைப் பிரிக்க முடியாது, ஆனால், பாவம் மட்டுமே நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு ஒருநாள் திருத்தூதுப் பயணத்தை இச்சனிக்கிழமையன்று மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Giuseppe Salvia என்ற சிறையில் கைதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
பல கைதிகளுடன் மதிய உணவை அருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம் பாவத்தை ஏற்று, உண்மையாகவே மனம் வருந்தி அதை அறிவித்தால் பாவம் கடவுளைச் சந்திக்கும் இடமாக மாறும் என்றும் கூறினார்.
உலகின் சிறைகளில் கைதிகள் பல நேரங்களில் மனிதமற்ற நிலைகளில் வைக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, தண்டனை காலம் முடிந்து மீண்டும் அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைவதற்கு உதவி செய்யும் தலைவர்கள், மற்றும் மேய்ப்புப்பணியாளர்கள் தங்களின் இப்பணியை தொடர்ந்து ஆற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்பு, மனிதரை எப்போதும் மாற்றும் சக்தி கொண்டது, மனிதர் ஓரங்கட்டப்படும் இடங்கள், சிறைகள் போன்றவை முழு மனித சமுதாயத்துக்கும் தூண்டுதல் தருவதாய் அமையக்கூடும் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் இறைப்பிரசன்னத்தில் வாழுமாறும், நமது எதிர்காலம் கடவுளின் கரங்களில் உள்ளது, பல கடும் பிரச்சனைகள் மத்தியில் இறைவனின் அளவற்ற கருணையில் நம்பிக்கை வைத்து வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நேப்பிள்ஸ் நகரின் மீட்புக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு விண்ணப்பம்

மார்ச்,21,2015. கைதிகளைச் சந்திப்பதற்கு முன்னர் நேப்பிள்ஸ் நகரின் Plebiscito வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நேப்பிள்ஸ் நகரின் மீட்புக்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு விண்ணப்பித்தார்.
இயேசுவின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை, அவை இவ்வுலகின் சக்தியைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது இறைவனின் சக்தியைக் கொண்டுள்ளது, அந்தச் சக்தி அன்பே, ஆதலால் இயேசுவின் வார்த்தைகளை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ளுமாறும் கூறினார் திருத்தந்தை.
குற்றச்செயல்களைப் புரிவோர் மற்றும் ஊழல் வாழ்வு வாழ்வோர் மனம் மாற வேண்டுமென அழைப்பு விடுத்த திருத்தந்தை, நேப்பிள்ஸ் மக்கள் தங்களிடமிருந்து நம்பிக்கை திருடப்பட்டுவிடாதபடி கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நேர்மையற்ற, ஏமாற்று வழியில் எளிதாகப் பணம் சேர்ப்பதற்குத் தங்களை ஈடுபடுத்தாமலும், இளையோர், ஏழைகள், நலிந்தவர்கள் போன்றோரை போதைப்பொருள் வர்த்தகம், மற்றும் பிற குற்றங்களில் பயன்படுத்தும் குற்ற நிறுவனங்களை உறுதியுடன் எதிர்த்துச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
குற்றவாளிகளும், அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களும் அன்புக்கும் நீதிக்கும் மனம் திரும்புங்கள் என்று திருஅவை மீண்டும் சொல்கிறது, கடவுளின் கருணையைக் காண்பதற்கு உங்களை அனுமதியுங்கள், அனைவரையும் மன்னிக்கும் இறையருளால் ஒரு நேர்மையான வாழ்வுக்குத் திரும்ப இயலும் என்றும் நேப்பிள்ஸ் மக்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை - தொழிலாளிகளைச் சுரண்டுவது கிறிஸ்தவப் பண்பு அல்ல

மார்ச்,21,2015. நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள Scampiaவின் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் வளாகத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நேப்பிள்ஸில் மனித வாழ்வு ஒருபோதும் எளிதானதாக இருந்ததில்லை, அதேநேரம் அது துன்பமாகவும் ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறினார்.
தீமையால் ஒருபோதும் ஆட்கொண்டுவிடாமல் நம்பிக்கையுடன் வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இச்சந்திப்பில் ஒரு பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர், நேப்பிள்ஸ் வழக்கறிஞர்கள் சார்பில் நேப்பிள்ஸ் நீதிமன்றத் தலைவர் Antonio Bonajuto அவர்கள் உட்பட மூவர் திருத்தந்தையிடம் தங்களின் விண்ணப்பங்களை முன்வைத்தனர்.
சமுதாயத்தில் நிலவும் ஊழல், இளம் குற்றவாளிகளையும், மரணத்தையும் சோர்வையும் ஏற்படுத்துகின்றது, சட்டத்தையும் நீதியையும் காக்கவேண்டிய தங்களுக்கு திருத்தந்தை வழிகாட்ட வேண்டுமென வழக்கறிஞர் Bonajuto கேட்டுக்கொண்டார்.
இம்மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, குடியேற்றதாரர் இரண்டாம்தர குடிமக்கள் அல்ல என்றும் கூறி, வாழ்வுப் பயணத்தில் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றும் ஆறுதலாகத் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பின்மை மனித மாண்பை பறிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, தொழிலாளிகள் சுரண்டுபடுவதைக் கண்டித்த அதேவேளை, இவ்வாறு சுரண்டுவது கிறிஸ்தவப் பண்பு அல்ல என்றும் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அத் லிமினாவில் திருத்தந்தையை சந்தித்த அனுபவம்

மார்ச்,21,2015. உள்ளூர் நிலைமையை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்க வேண்டியது ஒவ்வோர் ஆயரின் கடமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களுக்கு நினைவுபடுத்தியதாகத் தெரிவித்தார் ஜப்பான் ஆயர் ஒருவர்.
ஆயர்களின் அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த அனுபவத்தை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஜப்பான் நாட்டின் Niigata ஆயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜப்பானின் 16 ஆயர்களும் ஒன்றாகச் சந்தித்து மறைப்பணியில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் பிற அனுபவங்களை திருத்தந்தை கேட்டதாகவும், ஆயர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டதை திருத்தந்தை கவனமுடன் செவிமடுத்ததாகவும் கூறினார் ஆயர் Kikuchi.
ஜப்பானில் இறையழைத்தல், கத்தோலிக்க கல்வி, குடியேற்றதாரருக்கு மறைப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயப் பணி என பல தலைப்புகள் பற்றி ஆயர்களிடம் திருத்தந்தை கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்றும் கூறினார் ஆயர் Kikuchi.
நாகசாகியில் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு ஜப்பான் திருஅவை சிறப்பிப்பதால் ஜப்பானில் கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி மிகுந்த ஆர்வத்துடன் திருத்தந்தை கேட்டதாகவும் ஆயர் Kikuchi      அவர்கள் கூறினார்.
இச்சந்திப்பு ஓர் ஆசிர்வாதமாகவும் ஊக்கமூட்டுவதாகவும் இருந்தது, ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து திருத்தந்தை சிந்தித்து வருகிறார் எனவும் பகிர்ந்துகொண்டார் ஜப்பான் ஆயர் Kikuchi.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. அமெரிக்க, கானடா சுரங்க நிறுவனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் உரிமைகளை மீறுகின்றன

மார்ச்,21,2015. இலத்தீன் அமெரிக்காவில் சுரங்க நிறுவனங்களை நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாடும், கானடாவும், பூர்வீக இன மற்றும் நலிந்த மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள்.
வாஷிங்டனில் அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் இவ்வாறு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர் இலத்தீன் அமெரிக்க ஆயர் பிரதிநிதிகள்.
இலத்தீன் அமெரிக்காவில் பல்வேறு சுரங்க நிறுவனங்களை நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மற்றும் கானடாவின் பன்னாட்டு நிறுவனங்கள் பொதுநல வாழ்வுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன என்று இந்த ஆயர் பிரதிநிதிகள் புகார் அளித்தனர்.
பிரேசில், குவாத்தமாலா, பெரு, ஈக்குவதோர், ஹொண்டூராஸ், மெக்சிகோ ஆகிய ஆறு நாடுகளில் ஏழைகளும், பூர்வீக இனத்தவரும் சுரங்க நிறுவனங்களால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்ற விபரங்களை இப்பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

7. நேபாளத்தில் மனித வர்த்தகத்தால் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல்போகின்றனர் 

மார்ச்,21,2015. நேபாளத்தில், பாலியல் தொழில் மற்றும் உடல்உறுப்பு பறிப்பு தொடர்புடைய மனித வர்த்தகத்தால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் காணாமல்போகின்றனர் என்று அந்நாட்டு காவல்துறை அறிவித்தது.
பல நேரங்களில் இப்பெண்கள் தங்களின் சொந்தக் குடும்பங்களாலேயே விற்கப்படுகின்றனர் என்றுரைத்த கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர் Rupa Rai அவர்கள், நேபாள அரசு இவ்விவகாரத்தின்மீது அக்கறை காட்டி இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
2014ம் ஆண்டில் மேற்கு நேபாளத்தின் கய்லாலி மாவட்டத்தில் மட்டும் 118 பெண்கள் காணாமல்போயுள்ளனர், நேபாளத்தில் இடம்பெறும் மனித வர்த்தகத்தால் காணாமல்போகும் பெண்கள் மற்றும் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளது பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 90 இலட்சம் பேர் மனித வர்த்தகத்துக்குப் பலியாகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

8. அனைத்துலக தண்ணீர் தினம் மார்ச் 22

மார்ச்,21,2015. இன்றைய உலகின் மக்கள் தொகையில் 75 கோடிக்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடிநீர் வசதியின்றி வாழும்வேளை, பாதுகாப்பான குடிநீர், நலவாழ்வு வசதிகள் ஆகிய இவையிரண்டும் உடனடியாக உலகினருக்கு வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
மார்ச்,22 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக தண்ணீர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் ஏறக்குறைய 250 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட நலவாழ்வு வசதிகளின்றி வாழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த புதிய திட்டங்கள், ஒத்துழைப்பு மற்றும் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும், இவ்வாறு செய்தால் உலகில் வறுமையை ஒழித்து, வளமையை ஊக்குவித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ள பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. தமிழ் அறிவியலாளர் வெங்கட்ராமன் பிரித்தானிய ராயல் கழகத்தின் தலைவர்

மார்ச்,21,2015. பிரிட்டனின் புகழ்பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ஒஹையா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் 2009ம் ஆண்டில் நொபெல் வேதியல் விருதை கூட்டாக வென்றார். உடலின் செல்களில் புரதச்சத்தை உற்பத்தி செய்யும் ரிபோசோம்களைப் பற்றி செய்த ஆய்வுகளுக்காக அவர் இந்த விருதை வென்றார்.
தற்போது அவர் இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவி பிரித்தானிய அறிவியல் உலகில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாகும். ராயல் சொசைட்டி 1660ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அதன் தலைவராக இருப்பவர் பிரிட்டனில் அறிவியலுக்காக உழைக்கும் முக்கியமான பிரமுகராக இருப்பார். ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த புகழ் பெற்ற அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் இந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர்களில் ஒருவர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...