Monday 23 March 2015

செய்திகள்-20.03.15

செய்திகள்-20.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-ஜப்பானில் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் திருஅவைக்கு எடுத்துக்காட்டுகள்

2. எந்த ஒரு குற்றமும் ஒருபோதும் மரண தண்டனைக்குத் தகுதியானதல்ல

3. திருத்தந்தை தலைமையேற்றும் நிறைவேற்றும் புனித வாரத் திருவழிபாடுகள்

4. வாழ்வின் நற்செய்தி திருத்தூது மடலின் 20ம் ஆண்டு நிறைவு

5. பாகிஸ்தானில் இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் மன்னிப்பு

6. அசீரிய ஆயர் ஜிகாதிகளுக்கு கடிதம்-கிறிஸ்தவர்கள் எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்பில்லாதவர்கள்

7. அனைத்துலக காடுகள் தினம், ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி

8. அனைத்துலக மகிழ்ச்சி தினம், மகிழ்வான பூமி-மகிழ்வான மக்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-ஜப்பானில் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் திருஅவைக்கு எடுத்துக்காட்டுகள்

மார்ச்,20,2015. ஜப்பானில் கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் தங்களின் விசுவாசத்தை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்திருந்த அந்நாட்டின் தொடக்ககால கிறிஸ்தவ சமூகங்கள் திருஅவைக்கு நல்தூண்டுதலாய் உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, 12க்கும் மேற்பட்ட ஜப்பான் ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் தங்களின் அருள்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகளின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் தந்தையர்களாக அவர்கள் எந்நேரத்திலும் தங்களைச் சந்திக்கக் கூடியவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
16ம் நூற்றாண்டின் மத்தியில் ஜப்பானுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துச் சென்ற புனித பிரான்சிஸ் சேவியர், அவரது தோழர்கள், இன்னும், ஜப்பான் திருஅவையின் தொடக்ககாலத் தலைவர்களான இயேசு சபை மறைப்பணியாளர் புனித Paul Miki, அவரைப் பின்பற்றியவர்கள், கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததைக் குறிப்பிட்டார்  திருத்தந்தை.
இந்த மறைசாட்சிகளின் வாழ்வு, ஜப்பானின் சிறிய கிறிஸ்தவ சமூகத்திற்கு, ஒவ்வொரு துன்ப சோதனையிலும் விசுவாசத்தில் உறுதியாக வாழ ஊக்கமூட்டியது என்றுரைத்த திருத்தந்தை, ஜப்பானில் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்களின் மறுபிறப்பின் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுவதையும் குறிப்பிட்டார். 
ஜப்பானைவிட்டு அனைத்துப் பொதுநிலை மறைப்பணியாளர்களும், அருள்பணியாளர்களும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னரும், பெரும் ஆபத்து மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மறைந்து வாழ்ந்த பொதுநிலை கிறிஸ்தவர்கள் தங்களின் விசுவாசச் சுடரை அணையாமல் காத்து வந்தனர் என்று பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தொடக்ககால கிறிஸ்தவர்களின் நற்செய்தி சான்று வாழ்வை, இன்றும் ஜப்பானில் பொதுநிலை விசுவாசிகள் மற்றும் மறைப்பணியாளர்கள் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர், அவர்களுக்கு ஆயர்கள் ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜப்பான் ஆயர்கள் அமைதிக்காக எடுத்துவரும் முயற்சிகளை, குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜப்பான் தலத்திருஅவை அமைதிக்காக ஆற்றிய பணிகளையும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. எந்த ஒரு குற்றமும் ஒருபோதும் மரண தண்டனைக்குத் தகுதியானதல்ல

மார்ச்,20,2015. வாழ்வு, குறிப்பாக, மனித வாழ்வு கடவுளுக்கு மட்டுமே உரியது என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதப் பண்புக்கும், இறை இரக்கத்துக்கும் முரணானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரண தண்டனைக்கு எதிரான அனைத்துலக குழுவின் தலைவருக்கு இஸ்பானியத்தில் இவ்வெள்ளியன்று ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அளவில் மரண தண்டனை நிறுத்தப்படுவதற்கு ஓய்வின்றி உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை கொடூரமானது, மனிதமற்றது மற்றும் மனித வாழ்வின் மாண்பை அவமதிப்பது என்றும், எந்த ஒரு குற்றமும் ஒருபோதும் மரண தண்டனைக்குத் தகுதியானதல்ல என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இவ்வெள்ளியன்று வத்திக்கானில் தான் சந்தித்த இந்த அனைத்துலக குழுவின் உறுப்பினர்கள் வழியாக இக்கடிதத்தை வழங்கியுள்ள திருத்தந்தை, ஒரு மனிதரைக் கொலை செய்வதன்மூலம் நீதியை ஒருபோதும் நிலைநாட்ட முடியாது, மாறாக, பழிவாங்குதலை ஊக்குவிக்கின்றது என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவது மனிதமற்ற செயல் என்றும் கூறியுள்ளார்.
மனித வாழ்வு தாயின் கருவறை முதல், அது இயற்கையான மரணம் அடையும்வரை புனிதமானது என்பதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, எல்லா வாழ்வும் புனிதமானது, ஏனெனில் மனிதர் ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், ஒரு கொலையை மற்றொரு கொலையால் தண்டிக்க விரும்பாதவர் அவர் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள், சிறுபான்மையினர் அல்லது அரசியல் அதிகாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை ஒழிக்கத் தேடும் சர்வாதிகார ஆட்சிகள் அல்லது தீவிரவாதக் குழுக்கள் மரண தண்டனையைப் பயன்படுத்துகின்றன, மரண தண்டனைகளால் திருஅவை, முதல் நூற்றாண்டுகளைப் போல தற்போதும் புதிய மறைசாட்சிகளால் துன்புறுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
மரண தண்டனையை நிறைவேற்றுவது, நற்செய்தி அறிவிக்கும் பகைவரை அன்புகூருதல் என்ற கோட்பாட்டை மறுப்பதாக உள்ளது என கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தான் கூறியதை மீண்டும் கூறுவதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை.
அனைத்துக் கிறிஸ்தவர்களும், நன்மனம் கொண்ட அனைவரும் சட்டமுறையான அல்லது சட்டத்துக்குப் புறம்பேயான மரண தண்டனைகளை ஒழிப்பதற்கு மட்டுமல்லாமல், கைதிகளின் மனித மாண்பு மதிக்கப்பட்டு சிறைகளின் நிலைமையை   மேம்படுத்த உழைப்பதற்கு கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை தலைமையேற்றும் நிறைவேற்றும் புனித வாரத் திருவழிபாடுகள்

மார்ச்,20,2015. இம்மாதம் 29ம் தேதி தொடங்கும் புனித வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்றும் நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்கள் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு Guido Marini அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் மார்ச் 29, ஞாயிறு காலை 9.30 மணிக்கு, திருத்தந்தையின் குருத்தோலைப் பவனியும், அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்ற தலைப்பில் இக்குருத்தோலை ஞாயிறன்று முப்பதாவது உலக கத்தோலிக்க இளையோர் தினமும் சிறப்பிக்கப்படும்.
ஏப்ரல் 02, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியும், ஏப்ரல் 3 புனித வெள்ளி மாலை 5 மணிக்கு திருப்பாடுகள் திருவழிபாடும், பின்னர் இரவு 8.15 மணிக்கு கொலோசேயும் அரங்கத்தில் சிலுவைப்பாதையும் நடைபெறும்.
ஏப்ரல் 04, புனித சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்புத் திருவழிபாட்டைத் தொடங்கும் திருத்தந்தை திருமுழுக்கு அருளடையாளத்தையும் நிறைவேற்றுவார்.
ஏப்ரல் 05 ஞாயிறு காலை 10.15 மணிக்கு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியைத் தொடங்கும் திருத்தந்தை, நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய பால்கனியில் நின்று உரோம் நகருக்கும் உலகுக்குமான ஊர்பி எத் ஓர்பிசெய்தியையும் ஆசிரையும் வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வாழ்வின் நற்செய்தி திருத்தூது மடலின் 20ம் ஆண்டு நிறைவு

மார்ச்,20,2015. Evangelium vitae அதாவது வாழ்வின் நற்செய்தி திருத்தூது மடல் வெளியிடப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் இம்மாதம் 24ம் தேதி ஓர் அனைத்துலக திருவழிபாடு நடைபெறும்.
மனித வாழ்வு என்ற தலைப்பில், திருப்பீட குடும்ப அவை ஏற்பாடு செய்துள்ள இத்திருவழிபாட்டில், மனித வாழ்வுக்கு ஆதரவாக, குறிப்பாக, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் மனித வாழ்வுக்கு ஆதரவாக ஆற்றிய மறைப்பணிக்காக நன்றி செலுத்தப்படும். அதோடு மனித வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டுமென்று செபிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் இத்திருவழிபாடு மூன்று பகுதிகளாக இடம்பெறும். முதலில், புனித மேரி மேஜர் பசிலிக்காவில் வாழ்வோடு தொடர்புடைய கலைகள் பற்றிய சிந்தனைகள் வழங்கப்படும். பின்னர் 6 மணிக்கு செபமாலை, அதன் பின்னர் 7 மணிக்கு திருப்பலியும் நடைபெறும். இச்செபமாலை பக்தி முயற்சி உலகின் முக்கிய திருத்தலங்களோடு இணைக்கப்ட்ட ஒரு பன்னாட்டுக் கூறைக் கொண்டிருக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பாகிஸ்தானில் இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் மன்னிப்பு

மார்ச்,20,2015. பாகிஸ்தானில் இரு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய குற்றத்தில் சந்தேகிக்கப்பட்ட இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளனர் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
லாகூர் புறநகர்ப் பகுதியிலுள்ள Youhanabadல் இரு கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த ஞாயிறன்று திருவழிபாடுகள் நடந்துகொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஏழு முஸ்லிம்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து லாகூர் வீதிகளில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயுதங்களை வைத்திருந்த இரு முஸ்லிம்களை காவல்துறை கைது செய்தது. எனினும், அத்தாக்குதல்களில் இந்த இருவரும் ஈடுபட்டனர் என்று நினைத்த போராட்டதாரர்கள், அந்த மனிதர்களை இழுத்து அடித்து உயிரோடு எரித்தனர். ஆனால் இவ்விருவரும் அப்பாவிகள் என்று பின்னர் தெரிய வந்துள்ளது.
கிறிஸ்தவ சமூகத்தின் இந்தச் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ள பாகிஸ்தான் தேசிய நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் இயக்குனர் அருள்பணி Emmanuel Yousaf Mani அவர்கள், போதகர்களாகிய தாங்கள் அமைதிக்காகச் செபிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. அசீரிய ஆயர் ஜிகாதிகளுக்கு கடிதம்-கிறிஸ்தவர்கள் எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்பில்லாதவர்கள் 

மார்ச்,20,2015. கிறிஸ்தவர்கள் எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்பில்லாதவர்கள்  என்று அசீரிய ஆயர் ஒருவர் ஐ.எஸ். அரசின் ஜிகாதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Khabur பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களைப் பிணையல் கைதிகளாக வைத்திருக்கும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் ஜிகாதிகளுக்கு கடிதம் எழுதியுள்ள அசீரிய ஆயர் Afram Athnil அவர்கள், இக்கிறிஸ்தவர்கள், சிரியாவில் போரிடும் எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லாதவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அசீரிய கிறிஸ்தவ சமூகங்கள் ஆயுதக் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாதவை என்றும், இந்த உண்மையை சிரியாவில் போரிடும் எந்த ஆயுதம் ஏந்திய அமைப்பாலும் உறுதியாகக் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Athnil.
அதேவேளை, Khabur ஆற்றுக்கு கிழக்கு கரையிலுள்ள அசீரியக் கிராமங்களை ஜிகாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரியிலேயே அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. அனைத்துலக காடுகள் தினம், ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி

மார்ச்,20,2015. வெப்பநிலை மாறுதலை ஏற்கக்கூடிய ஓர் உறுதியான வருங்காலத்தை கட்டியெழுப்பவேண்டுமெனில் உலகின் காடுகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், இதற்கு உயர்மட்ட அளவில் அரசுகளின் அர்ப்பணம் அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
மார்ச்,21 இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக காடுகள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், அனைத்து வகையான காடுகள் மற்றும் காடுகளுக்கு வெளியேயுள்ள அனைத்து மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உலக நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களுக்கு காடுகளைச் சார்ந்துள்ளனர் என்றும், உலக அளவில் கிடைக்கும் நல்ல தண்ணீரில் நான்கில் மூன்று பகுதி, காடுகளிலுள்ள ஆற்றுநீரிலிருந்து கிடைக்கின்றன என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
நிலச்சரிவு, மண்அரிப்பு, சுனாமிகளால் ஏற்படும் சேதங்கள் போன்றவற்றை காடுகள் தடுக்கின்றன என்றுரைத்த பான் கி மூன் அவர்கள், காடுகளைப் பாதுகாப்பதற்கு அரசுகளின் உயர்மட்ட அளவில் கொள்கைகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டு ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் ஊக்கவிக்கப்படுமாறும் பரிந்துரைத்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் காடுகள் அழிவு ஏறக்குறைய 20 விழுக்காடு குறைந்துள்ளதையும் பான் கி மூன் அவர்களின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. அனைத்துலக மகிழ்ச்சி தினம், மகிழ்வான பூமி-மகிழ்வான மக்கள்

மார்ச்,20,2015. மார்ச், 20 இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மகிழ்ச்சி தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலக சமுதாயத்தின் மகிழ்வே, ஐ.நா. நிறுவனத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்வை அடைவது கடினமான முயற்சியாக உள்ளது எனவும், அனைத்து மக்களும் அமைதியிலும், வளமையிலும், மனித மாண்புடனும் வாழவேண்டுமென்று தான் வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார் பான் கி மூன்.
மக்களும், இந்தப் பூமியும் வெப்பநிலை பாதிப்பின் தாக்கமின்றி உறுதியான முன்னேற்றம் காணவே எல்லாரும் விரும்புகின்றனர், இந்த உலக நாளில் நம் உலகை மகிழ்வோடு வைத்திருப்பதற்கு நாம் எல்லாரும் முயற்சிப்போம் என்று தனது செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.
மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் இந்தப் புவியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2015ம் ஆண்டின் அனைத்துலக மகிழ்ச்சி தினம் மகிழ்வான பூமி-மகிழ்வான மக்கள் என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகைக் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்தக் காரை கையசைத்து நிறுத்தினார்.
தம்பி ஆஸ்பத்திரி போகணும்என்றார் அப்பெண்மணி.
நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்என பதிலளித்தார் காரோட்டி.
என் மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பாஎன கெஞ்சினார் அப்பெண்மணி.
நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்என்றார் அந்தக் கார் ஓட்டும் இளைஞர். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால்கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. மருத்துவமனையில், நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினார். அந்தக் கார் இளைஞரும் அமைதியாக அங்கே நின்றிருந்தார். ஒரு தாய் எவ்வளவு வேதனை அடைகிறாள் என்பதிலேயே அவரது சிந்தனை இருந்தது. இளைஞரின் மனது உறுத்தியது, தான் நான்கு நாட்களுக்கு முன்பு செய்த தவற்றை நினைத்து. சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்தார்.  
அந்தத் தாய், கார் இளைஞரிடம் தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்என பணத்தை நீட்டினார்.
வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைச்சுங்கங்கஎன்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தார் இளைஞர். கைத்தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி,
ஹலோ முதியோர் இல்லமா?” எனக் கேட்டார்.
ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?” என கேட்டது மறுமுனை குரல்.
மன்னிக்கவும். நாலு நாளைக்கு முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தரை உங்க இல்லத்துல சேர்த்தேன். அவுங்க அனாதை இல்லை, என்னப் பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக”.  முதியோர் இல்லப் பொறுப்பாளரின் அனுமதியைக்கூட கேட்காமல் கைத்தொலைபேசியை மூடிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு நகர்த்தினார் அந்த மகன்.
நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும், ஒரு மனிதரைப் பிரசவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...