Monday, 23 March 2015

ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமாதேவி

ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமாதேவி

ரமாதேவி

அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன் மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும் ஏதாவதொரு பணியில் உற்சாகத்துடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். உலக மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகப் பங்கேற்றுத் திரும்பியவரின் முகத்தில் பெருமிதத்தின் சுவடு துளியும் இல்லை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரமாதேவி, அ.ராமலிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அமைப்பின் மாநிலத் தலைவராகவும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அமைப்புச் செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சார்க் பெண்கள் கூட்டமைப்பின் திட்டக்குழு உறுப்பினர் என்ற அங்கீகாரமும் ரமாதேவிக்கு உண்டு.
பிரேசில் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினரான ரமாதேவி, அதன் மூலம் ஐ.நா. சபையில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஐ.நா. சபைத் தலைவர் பான்-கி மூன் தலைமையில் நடைபெற்ற ஆண்-பெண் சமத்துவம் குறித்த பேரணியில் கலந்துகொண்ட இவர், ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைதல்’ என்ற தலைப்பில் உரையாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் நடைபெற்ற கல்விமுறை குறித்த கருத்தரங்கிலும் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இதன் மூலம் ஐ.நா. சபையில் பங்கேற்றுப் பேசிய முதல் அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற பெருமையையும் ரமாதேவி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், இடைவேளை நேரத்தில் நம்மிடம் பேசினார்.
“என் சொந்த ஊர் தேனி. ஆசிரியர் பணிதான் சிறு வயது முதலே என் விருப்பமாக இருந்தது. ஆசிரியப் பணி அறப்பணி என்பதை நிரூபிக்கும் வகையில் என் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று சொல்லும் ரமாதேவிக்கு, போகும் நாடுகளில் எல்லாம் அவரது ஆங்கில அறிவு துணை நிற்பதாகச் சொல்கிறார்.
ரமாதேவி ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆசிரியர் பயிற்சி முடித்ததும் தனியாக இந்தியும் பயின்றார். பின்னர், அவர் படித்த பள்ளியிலேயே இந்தி ஆசிரியையாக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1996-ல் அரசுப் பணி கிடைத்தது. இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தவர், பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பணி உயர்வு பெற்றார்.
“பள்ளி நாட்களிலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றேன். ஆசிரியர் சங்கங்களில் சேர்ந்த பிறகு பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காகப் பல மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் செல்வேன். அப்போதுதான், பணியாற்றும் இடங்களில் பெண்கள் எத்தகைய துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்தேன். சாதனை படைத்த பெண்களாக நாம் நினைப்பவர்கள்கூட பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாவதைத் தெரிந்துகொள்ள முடிந்தது” என்று சொல்லும் ரமாதேவி, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பல துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும் பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
“இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகள் பலவற்றில் பெண்களின் நிலையில் பல்வேறு மாறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம் படித்து பட்டம் பெற்ற பெண்கள் பல்வேறு துறைகளில் உச்சத்துக்குச் சென்று சாதனை படைத்து வருகின்றனர். மறுபுறம் பெண்களுக்கு அடிப்படைக் கல்விகூட மறுக்கப்படும் நிலை இருக்கிறது” என்று நிதர்சனத்தைச் சொல்கிறார்.
பெண்களுக்குக் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லும் இவர், நம் நாட்டின் அடிப்படைக் கல்வி முறையில் பல மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.
“பல நாடுகளுக்குச் சென்று கல்வி முறை குறித்து ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஸ்வீடன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கல்வி முறைக்கும் நாம் பின்பற்றும் கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அங்கு எழுத்துப் பயிற்சி குறைவு. செய்முறைப் பயிற்சிகளே அதிகம். ஆனால், நமக்குச் செய்முறை பயிற்சிகள் மிக மிகக் குறைவு. அதோடு ஆசிரியர்-மாணவர் விகிதத்திலும் மாற்றம் வேண்டும்” என்கிறார்.
பள்ளியிலும், பணியாற்றும் இடங்களிலும் பெண்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள், பாலியல் துன்புறுத்தல்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை முன்வைத்து ரமாதேவி பேசியபோது, டெல்லி நிர்பயா சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, ‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதா?’ என ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து இவர் விளக்கமளித்திருக்கிறார்.
“என்னதான் சட்டதிட்டங்கள் கொண்டுவந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது அவர்கள் தைரியத்தை வளர்த்துக்கொள்வதில்தான் இருக்கிறது. பெண்கள் தைரியத்தை வளர்த்துக்கொண்டால் எதையும் எதிர்கொண்டு சமாளிக்க முடியும்” என்கிறார்.
தான் பணியாற்றி வரும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்கும் வகையில் பாடம் நடத்தி வருகிறார். நமது கல்வி முறையில் உள்ளதுபோல் முதலில் எழுதுவது, படிப்பது, புரிந்துகொள்வது என்பதில்லாமல், பிழைகள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் முதலில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வது (Learning), பேசுவது (Speaking), வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing) என்ற முறைப்படி கற்றுக் கொடுத்து அசத்தி வருகிறார் ஆசிரியை ரமாதேவி.
ரமாதேவி போன்ற ஆசிரியர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறார்கள்.
படங்கள்: இ.மணிகண்டன். Source: The Hindu tamil.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...