Monday, 23 March 2015

செய்திகள்-19.03.15

செய்திகள்-19.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. செப்டம்பர் 25ம் தேதி, ஐ.நா. அவையில் திருத்தந்தையின் உரை

2. துனிசியாவின் உயிர் பலிகள் அதிர்ச்சி தருகின்றன - கர்தினால் பரோலின்

3. அர்ஜென்டீனா பல்கலைக் கழகத்திற்கு திருத்தந்தை வாழ்த்து

4. வறிய குடும்பங்களுக்கு திருத்தந்தை வழங்கும் 500 கிலோ உணவு

5. மத சார்பற்ற நிலை என்ற இந்திய உணர்வு சிதைந்து வருகிறது

6. லெபனான் எல்லைகள் மூடப்பட்டதால், சிரியா மக்கள் தவிப்பு

7. குறைந்த செலவில் டயாலிசிஸ் - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள்

8. இலங்கைத் தமிழர்களுக்கு சுவிஸ் நாட்டின் 5500 வீடுகள்
------------------------------------------------------------------------------------------------------

1. செப்டம்பர் 25ம் தேதி, ஐ.நா. அவையில் திருத்தந்தையின் உரை

மார்ச்,19,2015. வருகிற செப்டம்பர் 25ம் தேதி காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய நாட்டுப் பொது அவையில் உரையாற்றுவார் என்ற செய்தியை, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
மார்ச் 18, இப்புதனன்று ஐ.நா. வெளியிட்ட ஓர் அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களை முதலில் தனியாகச் சந்தித்துப் பேசுவார் என்றும், பின்னர், அவர் ஐ.நா. பொது அவையில் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அவை உருவாக்கப்பட்ட 70ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டில், உலக நாடுகள் அனைத்தும் சரியான முன்னேற்றம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து வரும் வேளையில், திருத்தந்தையின் வருகை, அனைவருக்கும் ஓர் உந்து சக்தியாக அமையும் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள், 1965ம் ஆண்டு ஐ.நா.அவையில் உரையாற்றிய முதல் திருத்தந்தை என்பதும், அந்த நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐ.நா.வில் உரையாற்றச் செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
அதேபோல், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் பணிக்காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு ஏழுமுறை திருத்தூது பயணங்கள் மேற்கொண்டபோது, 1979, மற்றும் 1995 ஆகிய இரு ஆண்டுகள் ஐ.நா. அவையில் உரையாற்றியுள்ளார் என்பதும், முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள் 2008ம் ஆண்டு ஐ.நா.அவையில் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

2. துனிசியாவின் உயிர் பலிகள் அதிர்ச்சி தருகின்றன - கர்தினால் பரோலின்

மார்ச்,19,2015. இறை இரக்கத்தின் புனித ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள தருணத்தில், துனிசியாவில் நடைபெற்றுள்ள உயிர் பலிகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
துனிசியாவின், தூனிஸ் நகரில் அமைந்துள்ள Bardo தேசிய அருங்காட்சியகத்தில் இப்புதனன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டுப் பயணிகள் என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன.
இந்த வன்முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தகைய மதியற்ற வன்முறைகள் விரைவில் முடிவுக்கு வர, அனைவரும் இறைவனை மன்றாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் ஊழல்களைக் களைவதன் வழியே, உலகின் பல இடங்களில் வெடிக்கும் வன்முறைகளை நாம் முடிவுக்குக் கொணர முடியும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இறை இரக்கத்தின் புனித ஆண்டு, மனித சமுதாயத்தின் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கும் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கையை, கர்தினால் பரோலின் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அர்ஜென்டீனா பல்கலைக் கழகத்திற்கு திருத்தந்தை வாழ்த்து

மார்ச்,19,2015. கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், இயேசுவின் சக்தி, எண்ணங்கள், அவர் சொல்லித்தந்த பாடங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வீடியோ செய்தியில் வழங்கியுள்ளார்.
மார்ச் 18, இப்புதனன்று, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அயிரெஸ் நகரில், அர்ஜென்டீனா கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில், ஆலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. புவனோஸ் அயிரெஸ் பேராயரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கர்தினால் மாரியோ போலி அவர்கள் அந்த ஆலயத் திறப்புவிழா திருப்பலியை நிகழ்த்தியபோது, திருத்தந்தை அனுப்பிய வீடியோ செய்தி அங்கு ஒளிபரப்பப்பட்டது.
வழிபாட்டுத் தலங்கள், பல்கலைக் கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனியே கட்டப்படுவதற்குப் பதில், பல்கலைக் கழகத்தின் மையமாக விளங்குவதே கிறிஸ்தவ கல்வியின் நோக்கம் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜென்டீனா கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ள ஆலயம், பக்தர்களால் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே தன் ஆவல் என்று கூறி, திருத்தந்தை தன் வீடியோ செய்தியை நிறைவு செய்துள்ளார்.
திறக்கப்பட்டுள்ள புதிய ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் 5 திருப்பலிகளும், ஒரு மணிநேர ஆராதனையும் நடைபெறும் என்று, பல்கலைக்கழகத்தின் தலைவர், அருள்பணி விக்டர் பெர்னான்டெஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வறிய குடும்பங்களுக்கு திருத்தந்தை வழங்கும் 500 கிலோ உணவு

மார்ச்,19,2015. தங்கள் பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவுப் பொருள்களை அனுப்பியுள்ளார் என்ற செய்தி எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது என்று, உரோம் நகரில் உள்ள ஒரு பிறரன்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 8, ஞாயிறன்று மேய்ப்புப்பணி பயணமாகச் சென்ற Tor Bella Monaca பகுதியில் உள்ள மக்களுக்கு 500 கிலோ கிராம் உணவுப் பொருள்களை, அவரது தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றும் பேராயர் Konrad Krajewski வழியாக அனுப்பியுள்ளார்.
திருத்தந்தை, தன் பயணத்தோடு எங்களை மறந்துவிடாமல், தொடர்ந்து தன் அன்பை வெளிப்படுத்துவது, எங்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைகிறது என்று, அப்பகுதியில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள Medicina Solidale என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், Lucia Ercoli அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் அறிவித்த இறை இரக்கத்தின் புனித ஆண்டுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இச்செயல் அமைந்துள்ளது என்று Ercoli அவர்கள் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை அனுப்பியுள்ள இந்த உணவுப் பொருள்கள், அப்பகுதியில், வருகிற சனிக்கிழமையன்று, வறியோருக்கு வழங்கப்பட உள்ளன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

5. மத சார்பற்ற நிலை என்ற இந்திய உணர்வு சிதைந்து வருகிறது

மார்ச்,19,2015. பல்வேறு மத நம்பிக்கை கொண்டோரையும், மத நம்பிக்கை அற்றவர்களையும் வரவேற்கும் கலாச்சாரமே, இந்திய மண்ணுக்கு உரிய கலாச்சாரம் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறினார்.
வங்காளத்தில், 71 வயதான ஓர் அருள் சகோதரிக்கு நடைபெற்ற கொடுமையைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், மத சார்பற்ற நிலை என்ற இந்திய உணர்வு சிதைந்து வருவதைக் கண்டு, சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, நல்லுணர்வு கொண்ட இந்துக்களும் கவலை அடைந்துள்ளனர் என்று கூறினார்.
நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு வன்முறைக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று இந்திய பாராளுமன்றத்தில் கூறப்பட்ட கருத்தைப் பற்றி கேட்டபோது, அரசு எல்லா வன்முறைகளையும் அடக்க முடியாது என்பது தெரிந்தாலும், அத்தகைய வன்முறைகளைத் தூண்டும் வண்ணம் மேடைகளில் பேசப்படும் கருத்துக்களையாவது அரசு தடுக்கலாம் என்று கர்தினால் கிளீமிஸ் அவர்கள் பதிலிறுத்தார்.
இதற்கிடையே, வன்முறைக்கு உள்ளான அருள் சகோதரி, தன்னை வதைத்தவர்கள் அனைவரையும் தான் மன்னித்துவிட்டதாக ஊடகங்களுக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி

6. லெபனான் எல்லைகள் மூடப்பட்டதால், சிரியா மக்கள் தவிப்பு

மார்ச்,19,2015. சிரியாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு இதுவரை அடைக்கலம் தந்த லெபனான் நாடு, தன் எல்லைகளை மூடிவிட்டதென்ற செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது என்று கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகரி லஹாம் (Gregory III Laham) அவர்கள் கூறியுள்ளார்.
லெபனான் நாடு அருகில் இருப்பதால், அங்கு தப்பித்துச் செல்லும் கிறிஸ்தவர்கள், என்றாவது ஒருநாள் மீண்டும் சிரியாவில் நுழையலாம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர் என்றும், லெபனான் நாட்டின் இந்த முடிவு, அவர்கள் நம்பிக்கையை பெருமளவு குலைத்துள்ளது என்றும், முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
சிரியாவில் நிலவும் போரைத் தீர்ப்பதற்கு, வெளிநாட்டு இராணுவங்களின் உதவியைத் தேடுவது தகுந்த தீர்வு அல்ல என்றும், போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உரையாடல் வழியாக மட்டுமே போரை முடிவுக்குக் கொணரமுடியும் என்றும் முதுபெரும் தந்தை லஹாம் எடுத்துரைத்தார்.
சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டுப் போரினால், இதுவரை 32 இலட்சம் மக்கள் பக்கத்து நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர், 76 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும், 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை ஆசிய செய்தி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. குறைந்த செலவில் டயாலிசிஸ் - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள்

மார்ச்,19,2015. சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களின் இரத்தத்தைச் சுத்தம் செய்யும் ஹீமோ டயாலிசிஸ் (Haemodialysis) எனும் சிகிச்சைமுறையை குறைந்த கட்டணத்தில் வழங்கும் தொழில்நுட்பத்தை, கரக்பூரில் (Kharagpur) உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, தேசிய விருது பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான, அனிர்பன் ராய் (Anirban Roy) கூறியதாவது:
ஒரு சராசரி இந்தியருக்கு ஹீமோ டயாலிசிஸ் செய்வது, மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். அதற்கான கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே ஜெர்மனி, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் `ஹாலோ ஃபைபர்ஸ்' எனும் இழைகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இல்லை. எனவே எங்களது இந்த கண்டுபிடிப்பில், `கிளினிக்கல் கிரேட் ஃபைபர்ஸ்' எனும் இழைகளைப் பயன்படுத்தி ஹீமோ டயாலிசிஸ் செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்தத் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகளை உபயோகிக்கத் தேவை இல்லை. சில வெளிநாட்டு நிறுவனங்கள் அத்தகைய கருவிகளைக் கண்டுபிடித்து அவற்றை காப்புரிமை செய்து வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் ஏகபோக தனியுரிமையை அனுபவிக்கிறார்கள்.
இதனால் சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு வாரத்துக்கு ஒரு முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க, ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
ஆனால் கரக்பூர் ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் இத்தகைய டயாலிசர்களை ரூ.200 முதல் ரூ.300க்குள் தயாரிக்க முடியும் என்று  
அனிர்பன் ராய் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளித்துள்ளது. தற்போது இந்தக் கண்டுபிடிப்புக்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : The Hindu / வத்திக்கான் வானொலி

8. இலங்கைத் தமிழர்களுக்கு சுவிஸ் நாட்டின் 5500 வீடுகள்

மார்ச்,19,2015. இலங்கை சென்றுள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் புர்க்ஹால்டர் (Didier Burkhalter) அவர்கள், யாழ்ப்பாணத்தில், சுவிஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை, இப்புதனன்று பயனாளிகளுக்குக் கையளித்ததன் பின்னர், வடமாநில முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுவிஸ் நிறுவனத்தினால் கட்டப்பட்டுள்ள 35 வீடுகளை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களிடம் அவர் கையளித்ததோடு, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு மக்கள் மையம், மற்றும் மழலையர் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
ஓன்றிணைந்து செயற்படுவதன் வழியாக கிராமத்து மக்களின் வளமான எதிர்காலத்திற்குரிய அணுகுமுறைகளையும் நம்பிக்கையையும் வளர்க்கமுடியும் என்பதற்கு, பதிய வீடுகள் அடையாளமாக அமைந்திருப்பதாக புர்க்ஹால்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடஇலங்கையில் 5500 வீடுகளையும் கிராமிய கட்டமைப்புக்களையும் உருவாக்குவதற்கு, சுவிஸ் நிறுவனம் முன்னுரிமை அளித்திருப்பதாகவும், 2009ம் ஆண்டிலிருந்து 35 மழலையர் பள்ளிகள், 5 பள்ளிகள், 77 பொதுக்கிணறுகள் என்பன கட்டப்படுள்ளதென்றும், சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...