செய்திகள்-12.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அன்பு கொள்பவர்களா, வெளிவேடக்காரர்களா – திருத்தந்தையின் கேள்வி
2. திருத்தந்தை : ஒப்புரவு அருள் அடையாளம், நம்பிக்கை தரும் சந்திப்பு
3. திருத்தந்தை : கொரியப் பயணம், தான் ஆற்றும் பணிக்கு பெரும் உந்து சக்தி
4. ஈராண்டு பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்
5. ஈராண்டு பணியில் திருத்தந்தையின் பயணங்கள்
6. மத உரிமையையும் பேச்சுரிமையையும் இணைப்பது, பெரும் சவால்
7. உலகப் போரின் 70ம் ஆண்டு நினைவு - ஜப்பான் ஆயர்கள் அழைப்பு
8. மேமாதம் 23ம் தேதி, முத்திப்பேறு பெற்ற ரொமேரோ
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அன்பு கொள்பவர்களா, வெளிவேடக்காரர்களா – திருத்தந்தையின் கேள்வி
மார்ச்,12,2015. நாம் உண்மையிலேயே பிறர் மீது அன்பு கொள்பவர்களா, அல்லது, புனிதர்களைப்போலத் தோன்றும் வெளிவேடக்காரர்களா என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கேள்வி எழுப்பினார்.
தான் வாழும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், இறைவாக்கினர் எரேமியா நூலில் காணப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
தான் தேர்ந்துகொண்ட மக்கள் தன்னைவிட்டு விலகி, கடின மனம் கொண்டு வாழ்வதைக் குறித்து, மனம் நொந்து இறைவன் சொல்லும் வார்த்தைகள், நம்மிடமும் கூறப்படுகின்றன என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
பேச்சிழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வை, சாத்தானின் செயல் என்று திரித்துக் கூறும் கடின மனதுடையவர்களைப் போல, திருஅவையின் வரலாற்றில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜோன் ஆப் ஆர்க் (St Joan of Ark) அவர்களின் வாழ்வை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
இறைவனின் கருணையைச் சுவைக்கும் புனிதர்கள், அதை ஏனையோருக்கும் வழங்கி, துன்புறும் மனிதர்களை நலமாக்குகின்றனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்" என்று இயேசு கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாம் அன்பு கொண்டவராய் வாழ முடியும், அல்லது, வெளிவேடக்காரராய் வாழமுடியும்; இவற்றிற்கு இடைப்பட்ட மூன்றாம் நிலை இல்லை என்று தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், "மிகவும் சுகமான வாழ்வுக்குள் நுழைந்துவிடாமல் கவனமாக இருங்கள்! சுகமான வாழ்வுக்குள் நுழைந்துவிட்டால், மற்ற மனிதர்களை மறப்பது எளிதாகிவிடும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் twitter செய்தியாக இவ்வியாழன் வெளியாயின.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : ஒப்புரவு அருள் அடையாளம், நம்பிக்கை தரும் சந்திப்பு
மார்ச்,12,2015. கத்தோலிக்க அருள் அடையாளங்களில் ஒப்புரவு அருள் அடையாளம் இறைவனின் கனிவுள்ள முகத்தைக் காட்டுவதால், தனிப்பட்ட ஓரிடத்தை பெறுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தூது மன்னிப்பை வழங்கும் நீதி அவை, வத்திக்கானில்
ஏற்பாடு செய்திருந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த
400க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மன்னிப்பை வழங்கும் ஒப்புரவு அருள் அடையாளத்தின் மூன்று அம்சங்களை தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஒப்புரவு அருள் அடையாளம், கருணையைச் சொல்லித்தரும் ஒரு வழியாக உணரப்படுதல், இந்த அருள் அடையாளத்தைக் கொண்டாடும் வழிகளைக் கற்றுக் கொள்ளுதல், மற்றும், மறு
உலக இயல்பை மையப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்துடன் இந்த அருள் அடையாளத்தை
அணுகுதல் ஆகியவை திருத்தந்தை வலியுறுத்திய மூன்று அம்சங்கள்.
மன்னிப்பு வேண்டி வரும் மனிதரை, கேள்விகளால் சித்திரவதை செய்யும் ஒரு சந்திப்பாக இல்லாமல், நம்பிக்கையையும், மகிழ்வையும்
தரும் ஒரு சந்திப்பாக ஒப்புரவு அருள் அடையாளம் அமையவேண்டும் என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகள் பாவத்தின் பிடியில் வாழும் மனிதர்கள், இந்த அருள் அடையாளத்தில் கடவுளிடம் முழுவதும் சரண் அடையும் தருணத்தில், அருள் அடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர், அங்கு நிகழும் ஒப்புரவுப் புதுமைக்கு ஒரு சாட்சியாக மாறவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர், இறைவனின் கருணையைக் கொணரும் ஒரு வழி மட்டுமே என்ற மேலான உண்மையை, மறு
உலகக் கண்ணோட்டத்தோடு நோக்கும் பக்குவம் பெறவேண்டும் என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் மூன்றாம் பகுதியில் கூறினார்.
இறைவனின் கருணையும், நன்மைத் தனமும், உலகின் தீமைகள் அனைத்தையும் இறுதியில்
வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் அருள் பணியாளர்கள் இந்த அருள்
அடையாளத்தை வழங்குவதில் தாராள மனதுடன் பணியாற்ற வேண்டும் என்ற
விண்ணப்பத்தோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : கொரியப் பயணம், தான் ஆற்றும் பணிக்கு பெரும் உந்து சக்தி
மார்ச்,12,2015. கொரியாவில் தான் மேற்கொண்ட பயணம், உலகளாவிய
கத்தோலிக்கத் திருஅவைக்கு தான் ஆற்றும் பணிக்கு பெரும் உந்து சக்தியாக
உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, வத்திக்கானுக்கு
வருகை தரும் ஆயர்களின் அத் லிமினா பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருக்கும்
கொரியா நாட்டு ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை, ஏழு மாதங்களுக்கு முன், தான் கொரியாவில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இன்னும் பசுமையாக தன் மனதில் உள்ளது என்று கூறினார்.
Paul Yun Ji-chung மற்றும் ஏனைய மறைசாட்சிகளை முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்திய நிகழ்வு, தன் பயணத்தின் சிகரமாக அமைந்ததென கூறியத் திருத்தந்தை, பொது நிலையினரின் விசுவாசத்தின் மேல், கொரியத் திருஅவை கட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
தொடர்புகளை வளர்க்கும் தொழில் நுட்பத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ள கொரியா, உண்மையான, அடிப்படையான மனிதத் தொடர்புகளை இழந்துவரும் ஆபத்தில் உள்ளது என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆசிய இளையோர் நாளைக் குறித்து பேசியத் திருத்தந்தை, கிறிஸ்துவைக் குறித்த முழுமையான உண்மையை, இளையோர் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைப்பது ஆயர்கள், அருள் பணியாளர்கள் அனைவருக்கும் முன் இருக்கும் ஒரு சவால் என்று திருத்தந்தை கூறினார்.
தங்கள் பணித் தளங்களுக்குத் திரும்பிச் செல்லும் ஆயர்கள், தாங்கள் எப்போதும் பணியாளர்கள் என்பதை முழுமையாக உணர்ந்து, அதை, தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
4. ஈராண்டு பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,12,2015. கடந்த ஈராண்டுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் தலைமைப் பணியில் பல்வேறு பண்புகள் வெளிப்பட்டாலும், அவர் பயன்படுத்தி வரும் மொழி, உலகினர் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தனிப்பட்ட ஒரு பண்பாக உள்ளது என்று இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனம் விட்டுப் பேசிய ஒரு பேட்டியை முதல் முறையாக வெளியிட்டவரும், உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் Civiltà Cattolica என்ற இதழின் ஆசிரியருமான அருள்பணி Spadaro அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் உலகத் தலைவர் என்ற உயர்வான இடத்தில் இருந்தாலும், அவர் பேசும் சொற்கள், எளிய மக்களையும் சென்றடைகிறது என்பதே அவரது தலைமைப் பணியின் முக்கிய அம்சம் என்று அருள்பணி Spadaro அவர்கள், சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை வழங்கும் உரைகளை கத்தோலிக்க உலகம் மட்டுமல்ல, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஆர்வமாகப் பின்பற்றுகின்றனர் என்பது வியப்பையும், மகிழ்வையும் தரும் செய்தியாக அமைந்துள்ளது என்று ஆசிரியர் Spadaro அவர்கள் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் இது ஒரு சிறப்புக் காலம், ஏனெனில், அவர் வத்திக்கானில் துவங்கியிருக்கும் மாற்றங்களும், குடும்பத்தை மையப்படுத்தி கூடவிருக்கும் ஆயர்களின் பொது மன்றமும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று அருள் பணி Spadaro அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஈராண்டு பணியில் திருத்தந்தையின் பயணங்கள்
மார்ச்,12,2015. மார்ச் 13, இவ்வெள்ளியன்று தன் தலைமைப் பணியில் ஈராண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் குறித்து, வத்திக்கான் வானொலி ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
விளிம்புகளுக்குச் செல்லும் திருஅவை என்ற கருத்தை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளில் 14 திருத்தூது பயணங்களை மேற்கொண்டுள்ளார்; இவற்றில் ஏழு பயணங்கள் இத்தாலியிலும், 7 பயணங்கள் இத்தாலிக்கு வெளியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாக உரோம் நகரை விட்டு வெளியே மேற்கொண்ட பயணம், இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள இலாம்பதூசா என்ற தீவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு, பல நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய விழையும் புலம் பெயர்ந்தோரில் பலர், இலாம்பதூசா தீவை அடைவதற்குள் உயிரிழந்துள்ளனர் என்பதால், அவர்களுக்கென திருத்தந்தை, அத்தீவில் ஆற்றியத் திருப்பலி, அவரது தலைமைப் பணியின் தேர்வுகளைத் தெளிவுபடுத்தியது என்று ஊடகங்கள் இந்தப் பயணத்தை விவரித்தன.
2013ம் ஆண்டு ஜூலை மாதம், ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, திருத்தந்தை மேற்கொண்ட பிரேசில் நாட்டு பயணமே அவர் இத்தாலிக்கு வெளியே மேற்கொண்ட முதல் பயணம்.
இதைத் தொடர்ந்து, புனித பூமி, ஆல்பேனியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தை பயணம் சென்றுள்ளார்.
ஆசியாவில் தென் கொரியா, இலங்கை, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் திருத்தந்தை மேற்கொண்ட பயணங்கள், அவர் ஆசிய கண்டத்தின் மீது கொண்டுள்ள தனி அன்பை உணர்த்தியது.
இனி வரும் அண்மைய மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மத உரிமையையும் பேச்சுரிமையையும் இணைப்பது, பெரும் சவால்
மார்ச்,12,2015. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதை மறுக்கமுடியாது என்றாலும், மத உரிமை, மற்றும், பேச்சுரிமை என்ற இரு உரிமைகளையும் தகுந்த வகையில் இணைப்பது, அகில உலக அரசுகள் முன்னிருக்கும் பெரும் சவால் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மார்ச் 11, இப்புதனன்று, ஐ.நா.வின் மனித உரிமை அவையின் 28வது கூட்டத்தில் கலந்துகொண்டபோது, இவ்வாறு பேசினார்.
தெளிவான, மனம் திறந்த உரையாடலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஊடகங்கள் வழியே, அச்சத்தை வளர்க்கும் அவதூறான செய்திகள் பெருகிவருவது, மதங்களுக்கிடையே வெறுப்பையும், நம்பிக்கையற்ற உறவையும் வளர்க்கின்றன என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் கூறினார்.
மதத்தின் பெயரால் உலகில் வளர்ந்து வரும் வன்முறைகள், உண்மையிலேயே மதத்தினால் உருவாவது கிடையாது, மாறாக, மதத்தின் கோட்பாடுகளைத் தவறாகப் பொருள் கொள்வதன் விளைவாக வன்முறைகள் உருவாகின்றன என்று பேராயர் தொமாசி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரியாத பேச்சுரிமை, வன்முறைகளை வளர்ப்பதற்கு துணை போகின்றன என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் விளக்கினார்.
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள் என்று பன்முகம் கொண்ட உலகில், அடுத்தவருக்கு தரவேண்டிய மரியாதையே அமைதியாக, ஒற்றுமையாக வாழும் அடிப்படை வழி என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
7. உலகப் போரின் 70ம் ஆண்டு நினைவு - ஜப்பான் ஆயர்கள் அழைப்பு
மார்ச்,12,2015. அமைதியை நிலைநாட்ட இதுவரை பணியாற்றி வந்த ஜப்பான் நாடு, தொடர்ந்து அமைதிப் பணியில் ஈடுபடவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
1945ம் ஆண்டு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போரின் 70ம் ஆண்டு நினைவை உலகம் கொண்டாடிவரும் வேளையில், இவ்வுலகப் போரில் பெருமளவு பாதிக்கப்பட்ட ஜப்பான் நாடு, தொடர்ந்து அமைதிப் பணிகளில் தன்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜப்பான் ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.
வர்த்தகமும், பொருளாதாரமும் உலக மயமாக்கப்பட்டு வரும் சூழலில், இருப்போர் - இல்லாதோருக்கு இடையே நிலவும் இடைவெளி ஒவ்வோர் ஆண்டும் பெருகிவருவதை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறும் ஜப்பான் ஆயர்கள், இந்த இடைவெளியைக் குறைப்பது, உலக அமைதிக்கு மிகவும் அவசரமான ஒரு தேவை என்று கூறினர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகளும், இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 50 ஆண்டுகளும் நிறைவுற்றுள்ள சூழலில், ஜப்பான் நாட்டில், எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள், அமைதியை வளர்க்க விழையும் உலக மக்களோடு இணைய வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.
1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய இரண்டாம் உலகப் போர், 1945ம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவிலும், செப்டம்பர் மாதம் ஜப்பானிலும் முடிவுக்கு வந்தது. 8 கோடிக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட இந்தப் போர், அன்றைய உலக மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினரை கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
8. மேமாதம் 23ம் தேதி, முத்திப்பேறு பெற்ற ரொமேரோ
மார்ச்,12,2015. இறையடியாரான பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், வருகிற மேமாதம் 23ம் தேதி, அதாவது, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவின் திருவிழிப்பு நாள், சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல் சால்வதோர் நாட்டின் தலைநகர், சான் சால்வதோரில் நடைபெறவிருக்கும் இந்தத் திருப்பலியை, புனிதர் பட்டப் படிநிலைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள் தலைமையேற்று நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறையடியார், ரொமேரோ அவர்களை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்த, பேராயர் வின்சென்ஸோ பாலியா அவர்கள், இந்த சிறப்பு நாளை அறிவித்ததும், செய்தியாளர்கள் கூட்டத்தில் எழுந்த ஆரவாரமும், கைத்தட்டலும் பேராயர் ரொமேரோ அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியது என்று, Avvenire இதழில் பணியாற்றும் Lucia Capuzzi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எல் சால்வதோர் நாடு சந்தித்த இராணுவ அடக்குமுறை இன்று இல்லையெனினும், போதைப்
பொருள் வர்த்தகர்களின் பிடியிலிருந்து அந்நாடு விடுதலையடைய முத்திப்பேறு
பெற்ற ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் பரிந்துரை தேவை என்று செய்தியாளர் Capuzzi அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment