செய்திகள்-16.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்கள் சந்திப்பு
2. திருத்தந்தை - இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை விளக்குவது கடினம்
3. திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் சந்திப்பு
4. திருத்தந்தை - கடவுள் நம்மீது அதிகமதிகமாக அன்பு செலுத்துகிறார்
5. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், உலகம் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது
6. லாகூர் ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கடும் கண்டனம்
7. துன்புறும் பாகிஸ்தானியரின் சிலுவைப் பாதையில் இந்தியத் திருஅவையும் உடன் பயணிக்கிறது
8. இந்தியாவில் அருள்சகோதரிகளுக்கு எதிரானத் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்
9. பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் செபங்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்கள் சந்திப்பு
மார்ச்,16,2015. இன்றைய உலகில் குடியேற்றதாரர் குறித்த சவால்களை எதிர்கொள்வதிலும், பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்றிணைப்பதிலும், போரின்
காயங்களைக் குணப்படுத்துவதிலும் திருஅவையின் மேய்ப்புப்பணி கடமைகள்
குறித்து போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஐந்தாண்டுக்கு
ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் வந்துள்ள
போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த
திருத்தந்தை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்
பிரிந்து வாழும் குடும்பங்களின் காயங்களைக் குணப்படுத்துவதில்
போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்கள் ஒரு தந்தைபோல் செயல்பட வேண்டுமெனக்
கேட்டுக்கொண்டார்.
தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் துறவிகள் ஆண்டு குறித்தும் தனது உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போஸ்னியா-ஹெர்செகொவினா மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும், துறவற சபையினருக்கும் இடையே நிலவ வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் வலியுறுத்தினார்.
போஸ்னியா-ஹெர்செகொவினா
மக்கள் தங்கள் வரலாற்றில் பல துன்பங்கள் மத்தியில் விசுவாசத்தைக்
காப்பாற்றி வருவது குறித்து மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை, அம்மக்களைச் சந்திப்பதற்கு சரயேவோவில் தான் மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணம் பற்றியும் பேசினார்.
திருத்தந்தையின் சரயேவோ திருத்தூதுப் பயணம் வருகிற ஜூன் 6ம் தேதி சனிக்கிழமையன்று இடம்பெறும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை - இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை விளக்குவது கடினம்
மார்ச்16,2015. நாம் இறைவனால் அன்பு கூரப்பட்டுள்ளவர்கள், எந்த இறையியலாளரும் இதற்கு விளக்கமளிக்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.
புதிய விண்ணுலகையும், புதிய மண்ணுலகையும் படைப்பது குறித்த எசாயா இறைவாக்குப் பகுதியை (எச.65,17-21) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, நான்
என் மக்களில் மகிழ்ச்சியடைவேன் என்று கூறுவதிலிருந்து அவர் தம் மக்களோடு
எவ்வாறு மகிழ்ச்சியடைவது என்பதை நினைத்துப் பார்க்கிறார் என்பதையும், இறைவன் நம்மீது மிகுந்த ஆர்வமாய் இருப்பதையும் காண்கிறோம், என்று கூறினார்
இறைவனின் இரண்டாவது படைப்பு முதல் படைப்பைவிட மிகவும் வியப்பானது, ஏனெனில் அவர் இயேசு கிறிஸ்துவில் செய்தது போல உலகிலும் செய்கிறார், அவர் அனைத்தையும் புதுப்பித்து தனது அளவற்ற மகிழ்வை வெளிப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை .
கடவுள் நம் ஒவ்வொருவரையும் நினைக்கிறார், நம் ஒவ்வொருவர்மீதும் அன்பு கூருகிறார், அவரால் எனது வாழ்வை மாற்ற இயலும், அவர் நிறைய திட்டங்கள் வைத்துள்ளார் என்றும், அவர் நம்மைப் பற்றிக் கனவு காண்கிறார், அவர் நம்மோடு எப்படி மகிழ்ச்சியடைகிறார் என்பதை கனவு காண்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிழ்வு வெற்றியடையும் பொருட்டு அவர் நம் இதயங்களைப் புதுப்பிக்க விரும்புகிறார், நம்மை புதுப்படைப்பாக்க விரும்புகிறார் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுள் என்னைப் பற்றிக் கனவு காண்கிறார் என்பதை நினைத்துப் பார்த்துள்ளோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இயேசு அரச அலுவலர் மகனைக் குணாக்கிய புதுமை பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவன் நம்மீது செலுத்தும் அன்பை விளக்குவது கடினம், ஆனால் நாம் அதை நினைத்துப் பார்த்து அதை உணர்ந்து மகிழ்வால் அழ இயலும் என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை, சான் மரினோ குடியரசின் தலைவர்கள் சந்திப்பு
மார்ச்,16,2015. சான் மரினோ குடியரசின் தலைவர்களான Giancarlo Terenzi, Guerrino Zanotti ஆகிய இருவரையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்துக்கும் சான் மரினோ குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், பொது
நிறுவனங்ளுக்கும் திருஅவைக்கும் இடையே சமூகப் பணிகளில் காணப்படும்
உயிர்த்துடிப்புள்ள ஒத்துழைப்பு போன்றவைகள் திருப்தியாக இருப்பதாக
இச்சந்திப்பில் கூறப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையே உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தனர் சான் மரினோ குடியரசின் தலைவர்கள்.
சான் மரினோ Captains Regent என்பவர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் (பெரிய மற்றும் பொது அவையால்)
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் நாட்டின்
தலைவர் மற்றும் அரசின் தலைவராகச் செயல்படுவார்கள். புதிய தலைவர்களின்
பணியேற்பு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் முதல் நாளில்
இடம்பெறுகிறது. இந்நடைமுறை 1243ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து
வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை - கடவுள் நம்மீது அதிகமதிகமாக அன்பு செலுத்துகிறார்
மார்ச்16,2015. கடவுள் நம்மீது அன்பு கூருகிறார், உண்மையிலேயே நம்மீது அன்பு செலுத்துகிறார், அதிகமதிகமாக அவர் அன்பு செலுத்துகிறார், நற்செய்தி, விசுவாசம் மற்றும் இறையியலின் சாராமே அன்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் சுதந்திரமாகவும், எல்லையற்ற விதத்திலும் நம்மீது அன்பு கூருகிறார், இவ்வாறு கடவுள் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்று கூறினார்.
நாம் நமக்குள் கடவுளின் அன்பை உணருகிறோம் என்று திருச்சிலுவையை நோக்கியபடி உரைத்த திருத்தந்தை, கடவுளே நீர் ஒருவரே நல்லவர், உயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் நலன்களால் நிறைத்து என, நான்காவது நற்கருணை மன்றாட்டில் நாம் செபிப்பதுபோல, இந்த அன்பை, கடவுள் முதலில் படைப்பில் வெளிப்படுத்துகிறார் என்றும், கடவுள் சுதந்திரமாக வழங்கிய அன்பு உலகின் தொடக்கத்திலேயே இருந்தது என்றும் கூறினார்.
பணிவின்மையால் நாம் கடவுளின் நட்புறவை இழந்தபோதிலும், அவர் நம்மைச் சாவின் அழிவுக்கு விட்டுவிடவில்லை, ஏனெனில் தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர் எனவும் நற்கருணை மன்றாட்டில் நாம் செபிக்கின்றோம், கடவுள் தமது இரக்கத்தால் இவ்வுலகுக்கு வந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் சுதந்திரமாகக் கொடுத்த அன்பு படைப்பில் வெளிப்படுவதுபோல, மீட்பு வரலாற்றில் பல நிலைகளில் வெளிப்படுகின்றது, கடவுள் தம் மக்களைத் தேர்ந்தெடுத்தது அவர்கள் அதற்குத் தகுதியடையவர்கள் என்பதால் அல்ல, ஆனால் அனைத்து மக்களிலும் மிகச் சிறிய இனம் என்பதாலே என்றும் உரைத்தார் திருத்தந்தை.
மனிதர் தொடர்ந்து கடவுளின் உடன்படிக்கையை மீறினாலும், அவர்களைக் கைவிடாமல், காலம் நிறைவுற்றபோது அவர்களோடு இயேசுவின் குருதியில் புதிய பிணைப்பை ஏற்படுத்தினார், இந்தப் புதிய, நித்திய உடன்படிக்கையை எதனாலும் உடைக்க முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை.
பவுலடிகளார் நமக்குச் சொன்னதுபோன்று(எபே,2:2-3), இரக்கத்தில் செல்வராகிய கடவுள் நாம் நம் பாவங்களால் இறந்தவர்களாய் இருந்தாலும், அவர் நமக்கு வாழ்வை வழங்கினார், கிறிஸ்துவின் சிலுவை, கடவுள் நம்மீது கொண்டுள்ள கருணை மற்றும் அன்பின் உச்சகட்ட பரிசோதனையாக இருக்கிறது, இயேசு நம்மை இறுதிவரை அன்புகூர்ந்தார் (யோவா.13:1), அவ்வன்பு தமது இவ்வுலக வாழ்வின் இறுதிவரை மட்டுமல்ல, அன்பின் கடைகோடி எல்லைவரை இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை
நம் ஆண்டவர் நம்மை மன்னிக்கிறார், அவரின் கருணையால், அவர் அனைவரையும் எப்போதும் மன்னிக்கிறார் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், உலகம் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது
மார்ச்,16,2015. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், உலகம் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறது, பாகிஸ்தானில்
அமைதி நிலவச் செபிப்போம் என்று இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரைக்குப்
பின்னர் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு ஆலயங்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன், இதில் பலர் இறந்தும் படுகாயமடைந்தும் உள்ளனர், நம் சகோதரர்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மட்டுமே இரத்தம் சிந்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகத் தான் செபிப்பதாக உறுதி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாகிஸ்தானில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட, நன்மைகள் அனைத்தின் ஊற்றாகிய ஆண்டவரிடம் இறைஞ்சுகிறேன் என்று கூறினார்.
உலகம் மறைப்பதற்கு முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது முடிவுக்கு வரப்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.
மேலும், கடும் புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள, பசிபிக் பெருங்கடலிலுள்ள Vanuatu தீவு
மக்களுடன் தனது ஒருமாப்பாட்டுணர்வைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு
இடர்துடைப்பு உதவிகள் செய்யும் எல்லாருக்கும் தனது நன்றியையும்
தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாகிஸ்தானில்
ஒரு கத்தோலிக்க மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயங்களுக்கு எதிராக
தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 70க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. லாகூர் ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கடும் கண்டனம்
மார்ச்,16,2015.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தற்கொலை
குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த தங்களின் கடும்
கண்டனத்தை தெரிவித்துள்ளனர் பாகிஸ்தான் ஆயர்கள்.
லாகூரின் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது குறித்து, பாகிஸ்தான் ஆயர் பேரவை சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, அப்பரேவைத் தலைவர் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அரசு, அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தீவிரவாதச் சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையில், தங்களின் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் பக்கபலமாக நிற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் ஆலயங்களையும், சிறுபான்மை மதத்தவரையும் பாதுகாப்பதற்கு, பஞ்சாப் அரசும், மத்திய அரசும் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் கேட்டுள்ளார்.
அல்கெய்தாவின், ஜமாத்
துல் அஹ்ரர் என்ற ஒரு கிளை அமைப்பின் இரு தீவிரவாதிகள் லாகூரின்
யௌஹனாபாதிலுள்ள இரு கிறிஸ்தவ ஆலயங்களில் இஞ்ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடுகள்
நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்த ஆலயங்களின் முன்பாக நின்று தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில்
மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்துவரும் சூழலில் அங்குள்ள
கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான
அளவே உள்ளனர்.
ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி
7. துன்புறும் பாகிஸ்தானியரின் சிலுவைப் பாதையில் இந்தியத் திருஅவையும் உடன் பயணிக்கிறது
மார்ச்,16,2015.
லாகூர் புறநகர்ப் பகுதியில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் இஸ்லாம்
தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்குத் தனது கண்டனத்தை வெளியிட்ட அதேவேளை, துன்புறும் இம்மக்களின் சிலுவைப் பாதையில் இந்தியத் திருஅவையும் செபத்தோடு, உடன்பயணிக்கிறது என்று கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்த அப்பாவி கிறிஸ்தவர்களின் இரத்தம், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையும், நல்லிணக்க ஒன்றிணைந்த வாழ்வும் உரையாடலும் இடம்பெற்று நல்ல கனிகளை வழங்க உதவட்டும் என்று கூறினார்.
இத்தவக்காலத்தில்
நம் ஆண்டவர் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பில் இந்த மக்கள் முழுமையாகப்
பங்கு கொள்வார்கள் என்றும் உரைத்துள்ள கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்
அவர்கள், இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பஞ்சாப் மற்றும் கராச்சியில் பள்ளிகள் இத்திங்களன்று மூடப்பட்டன.
ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி
8. இந்தியாவில் அருள்சகோதரிகளுக்கு எதிரானத் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்
மார்ச்,16,2015. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள Ranaghat
நகரில் இயேசு மரி அருள்சகோதரிகள் இல்லத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வு
குறித்த தங்களின் ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர்
இந்திய ஆயர்கள்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இக்கன்னியர் இல்லத்தில் எழுபது வயதுக்கு மேற்பட்ட அருள்சகோதரி ஒருவர், குற்றக்
கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உட்பட அவ்வில்லச் சகோதரிகள்
உடலளவில் துன்புறுத்தப்பட்டது மற்றும் அவ்வில்லச் சிற்றாலயத்திலுள்ள
திருஅப்பங்கள் இரக்கமற்ற மனிதமற்ற செயல்களால் சேதப்படுத்தப்பட்டது குறித்து
அனைத்து இந்திய குடிமக்களும் வெட்கப்பட வேண்டும் என ஆயர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய இழிவான செயல்களைக் கடுமையாய்க் கண்டிக்கும் அதேவேளை, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவருடன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மேலும், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இவ்வன்முறை குறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு தன்னலமற்ற சேவையாற்றும் துறவற நிறுவனங்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமாறும் கேட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
மேலும், அருணாச்சல மாநிலத்தின் Miao மறைமாவட்டத்தில்
இஞ்ஞாயிறன்று நான்கு நாள் கூட்டத்தை நிறைவு செய்த வடகிழக்கு இந்தியாவின்
ஏழு மாநிலங்களின் 15 ஆயர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை
தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கு எதிரான தாக்குதல்கள், இன்னும், பெண்களும், அருள்சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் போன்றவற்றுக்கு ஆயர்கள் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளி இரவில், Ranaghat
நகரில் இயேசு மரி அருள்சகோதரிகள் இல்லத்தில் ஒரு கும்பல் எழுபது வயதுக்கு
மேற்பட்ட ஓர் அருள்சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்தது. அங்கிருந்த, 12 இலட்சம் ரூபாயையும் அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது.
இதற்கிடையே, இது, பாலியல் வன்கொடுமை செய்வதற்காகவோ, திருட்டுக்காகவோ நடந்த குற்றமல்ல; சிறுபான்மையினர் மீதான தாக்குதலாகவே இதை கருத வேண்டும்' என, கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி
9. பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் செபங்கள்
மார்ச்,16,2015. Ranaghat நகர் அருள்சகோதரிகள் இல்லத்தைத் தாக்கிய ஆறு வன்முறையாளர்களில் நான்கு பேர் CCTV புகைப்பட கருவிமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவேளை, இந்தியா முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் இஞ்ஞாயிறன்று பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் மக்கள் செபித்தனர்.
இருபது மற்றும் முப்பது வயதுக்குட்பட்ட இந்த ஆறுபேரில் இருவர் தங்களை ஆயுதக் கவசத்தையும், மற்றவர்கள் பிற ஆயுதங்களையும் கொண்டு, அருள்சகோதரிகள் இல்லத்தில் நுழைந்து தொலைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டு இவ்வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சிற்றாலயத்திலிருந்த திருவிவிலியத்தைக் கிழித்து இயேசுவின் மார்பளவு திருவுருவத்தை உடைத்து திருஅப்பங்களை இழிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, அரியானாவின் ஹிசர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் : AFP/ வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment