செய்திகள்-14.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இன்றைய சமூகத்துக்கு நல்ல, எடுத்துக்காட்டான ஆசிரியர்கள் அவசியம்
2. திருத்தந்தை - பொதுநிலையினர் தங்கள் அழைப்புக்கேற்ப வாழ அழைப்பு
3. சிறப்பு ஜூபிலி ஆண்டு : “கருணை” - டிசம்பர் 08,2015 – நவம்பர்,20,2016
4. கருணையின் புனித ஆண்டு பற்றிய தகவல்கள்
5. திருஅவையில் ஜூபிலி ஆண்டுகள்
6. புதுடெல்லி திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தையின் தலைமைப்பணியின் 2ம் ஆண்டு நிறைவு
7. சிரியாவின் அமைதிக்காக மார்ச் 15,16 தேதிகளில் உண்ணாநோன்பு,செபம்
8. பேரிடர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு அவசியம்
9. பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் புதிய காந்திஜி சிலை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இன்றைய சமூகத்துக்கு நல்ல, எடுத்துக்காட்டான ஆசிரியர்கள் அவசியம்
மார்ச்,14,2015. ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்த அதேவேளை, கணனிகள் பாடங்களின் உட்பொருளைக் கற்றுத்தரலாம், ஆனால்
இன்றைய இளையோரில் விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் பதியவைப்பது நல்ல
ஆசிரியராலே இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
UCIIM என்ற இத்தாலிய கத்தோலிக்க ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள்
அமைப்பு தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ்வமைப்பின்
ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து
உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தான் ஆசிரியராக பணியாற்றிய வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்விப்பணி ஓர் அழகான பணி, ஆனால் ஆசிரியர்கள் பள்ளியில் செலவழிக்கும் நேரம் மட்டுமல்ல, பாடங்களைத் தயாரிப்பதற்கும், ஒவ்வொரு
மாணவருடனும் அவர்கள் செலவழிக்கும் நேரம் அதிகம் என்பதால் அவர்களுக்குக்
ஊதியம் குறைவாக வழங்கப்படுவது கவலைதரும் விடயம் என்றும் கூறினார்.
தனது அர்ஜென்டீனா நாட்டில் தரமான ஊதியம் கிடைப்பதற்காக ஆசிரியர்கள் இரண்டு பள்ளி நேரங்களிலும் வேலை செய்கின்றனர் என்றும், ஆசிரியப் பணி மிகுந்த பொறுப்புமிக்கது என்றும் உரைத்த திருத்தந்தை, ஆசிரியர்கள் மாணவருக்கு ஆன்மீகப் பெற்றோர் போன்றவர்கள், குறிப்பாக, ஆசிரியரின் பொறுமையை அடிக்கடிச் சோதிக்கும் மிகவும் இன்னல்தரக்கூடிய மாணவருக்கு, ஆன்மீகப் பெற்றோர் போன்றவர்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.
எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்வோரைக் கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கும் ஒரு சமூகத்தில், இளையோருக்குப் பள்ளிகளில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் தேவைப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, பள்ளிக்கும், கல்விக்கும், கலாச்சாரத்துக்கும்
அர்த்தம் கொடுக்கக் கூடியவர்களாய் ஆசிரியர்கள் இருந்தால் அவர்கள்
பணியாற்றும் பள்ளிகள் இளையோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்றும்
கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை - பொதுநிலையினர் தங்கள் அழைப்புக்கேற்ப வாழ அழைப்பு
மார்ச்,14,2015. இவ்வுலக
வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் சூழல்களில் சொல்லாலும்
செயலாலும் கிறிஸ்தவ விழுமியங்களுக்குத் தெளிவான சான்றுகளாகத் திகழுமாறு
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“Seguimi”
என்ற மனித-கிறிஸ்தவ முன்னேற்றப் பொதுநிலையினர் குழுவின் ஏறக்குறைய நானூறு
உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழும் இயேசு கிறிஸ்துவே மையம் என்ற இக்குழுவைத் தொடங்கியவர்களின் தனிவரத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இக்குழுவிலுள்ள பொதுநிலையினர் திருஅவையின் பணியில் உயிரூட்டமுடன் முன்னின்று செயல்படுமாறும், தன்னலம் நிறைந்த இவ்வுலகில் கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
1960களில் இத்தாலியின் மோதேனா மற்றும் உரோம் நகரங்களில் முதலில் “Seguimi” குழுவுக்கு வித்திடப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஒளியில், உரையாடலில் கிறிஸ்தவ வாழ்வைச் சிறப்பாக வாழும் ஆர்வத்தில் 1965ம் ஆண்டில் இக்குழு உருவானது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட
அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் 11 நாடுகளில் 800 பேர் இதன்
உறுப்பினர்களாக உள்ளனர். இதில் திருமணமானவர்களும் திருமணமாகாதவர்களும்
உள்ளனர்.
மேலும், “இறைவார்த்தைக்குச்
செவிமடுப்பது மற்றும் அருளடையாளங்களைக் கொண்டாடுவதன் மூலம் கிறிஸ்துவிடம்
மிக நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லும் காலம் தவக்காலம்” என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சிறப்பு ஜூபிலி ஆண்டு : “கருணை” - டிசம்பர் 08,2015 – நவம்பர்,20,2016
மார்ச்,14,2015. கத்தோலிக்கத் திருஅவையின் பணி, கருணை என்ற பண்புக்குச் சாட்சியாகத் திகழ்வது என்பதைக் கோடிட்டுக் காட்டும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது
தலைமைப்பணியின் நிறைவு நாளான இவ்வெள்ளியன்று வத்திக்கான் புனித பேதுரு
பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய தவக்கால பாவமன்னிப்பு
திருவழிபாட்டில் மறையுரையாற்றியபோது இந்த ஜூபிலி புனித ஆண்டை அறிவித்தார்.
திருஅவை தனது மறைப்பணியில், கருணை என்ற பண்புக்கு எவ்வாறு தெளிவான சாட்சியாகத் திகழ்வது என்று அடிக்கடி நினைத்துப் பார்த்தேன், அதனால் ஒரு சிறப்பு புனித ஆண்டை அறிவிப்பதற்குத் தீர்மானித்தேன், இந்தப் புனித ஆண்டு 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதிவரை சிறப்பிக்கப்படும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக்.6,36)” என்ற விவிலிய திருச்சொற்கள், இந்த ஜூபிலி புனித ஆண்டின் தலைப்பு எனவும் கூறிய திருத்தந்தை, இரக்கம் என்ற இந்தப் பண்பு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது என்று புன்முறுவலோடு, மறையுரையில் கூறினார்.
இத்திருவழிபாட்டை
நிறைவு செய்த பின்னர் வத்திக்கான் பசிலிக்காவில் அமர்ந்திருந்த ஓர்
அருள்பணியாளரிடம் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார் திருத்தந்தை
பிரான்சிஸ். அதன் பின்னர் தானும் மற்றோர் இடத்தில் அமர்ந்து ஒப்புரவு
அருளடையாளத்தை சிலருக்கு நிறைவேற்றினார்.
இறையருளால் தொடப்பட்ட அனைவருக்கும் ஆலயத்தின் கதவுகள் எப்போதும் அகலத் திறந்திருக்கின்றன, அவர்கள் நிச்சயமாக இறைவனின் மன்னிப்பைப் பெறலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆண்டவரோடு
24 மணி நேரங்கள் என்ற தவக்கால பாவமன்னிப்பு பக்தி முயற்சி உலகெங்கும்
அனைத்து ஆலயங்களிலும் மார்ச் 13 மாலை முதல் மார்ச் 14 மாலை வரை
கடைப்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்த நிகழ்வில் சிறப்பு ஜூபிலி ஆண்டை
அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கருணையின் புனித ஆண்டு பற்றிய தகவல்கள்
மார்ச்,14,2015.
வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை பெருவிழாவன்று வத்திக்கான் புனித
பேதுரு பசிலிக்கா பேராலயத்திலுள்ள புனிதக் கதவு திறக்கப்படுவதோடு இந்த
கருணை ஜூபிலி ஆண்டு ஆரம்பிக்கும் என்று, புதிய
வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது. அதே நாளில்
உரோம் நகரிலுள்ள நான்கு திருத்தந்தை பசிலிக்காக்களின் புனிதக் கதவுகளும்
திறக்கப்படும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இந்த சிறப்பு ஜூபிலி ஆண்டின் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ள இத்திருப்பீட அவை, கருணையின் புனித ஆண்டு குறித்த மேலும் பல தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
1965ம்
ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன்
ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளன்று தொடங்கும் இந்த ஜூபிலி ஆண்டு, அச்சங்கத்தில் தொடங்கப்பட்ட பணிகள் திருஅவையில் தொடர்ந்து நடைபெற உந்துதலாக உள்ளது என்றும் இத்திருப்பீட அவை கூறியுள்ளது.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறன்று, அதாவது இறை இரக்க ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவின் முன்னால் இந்தப் புனித ஆண்டு பற்றிய திருத்தந்தையின் ஆணை பொதுப்படையாக, ஆடம்பரமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இந்த ஆண்டு நிறைவடையும்.
இந்த ஜூபிலி ஆண்டில், கருணையின்
நற்செய்தியாளர் எனக் குறிப்பிடப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து ஞாயிறு
வாசகங்கள் எடுக்கப்படும் என்றும் புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும்
திருப்பீட அவை அறிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருஅவையில் ஜூபிலி ஆண்டுகள்
மார்ச்,14,2015. பொதுவாக, கத்தோலிக்கத் திருஅவையில் இருபத்தைந்து (25) ஆண்டுகளுக்கு
ஒருமுறை புனித ஜூபிலி ஆண்டு அறிவிக்கப்படுகிறது. அச்சமயத்தில் சிறப்பு
வழிபாடுகளும் சிறப்புத் திருப்பயணங்களும் இடம்பெறும். மனமாற்றத்துக்கும்
மனம் வருந்துதலுக்கும் சிறப்பாக அழைப்பு விடுக்கப்படும்.
அருளடையாளங்கள், குறிப்பாக, ஒப்புரவு அருளடையாளத்தின் மூலம் கடவுளின் அருளை அனுபவிப்பதற்குச் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பழங்கால எபிரேய மரபுப்படி, இஸ்ரயேல் மக்கள் மத்தியில் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கத்தில், தங்களின் சொத்துக்களை இழந்த குடும்பங்கள், ஏன் தங்களின் சுதந்திரத்தை இழந்தவர்கள் மீண்டும் அதனைப் பெறும் நோக்கத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூபிலி ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.
கத்தோலிக்கத் திருஅவையில் 1300ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள் புனித ஆண்டை அறிவித்தார். பின்னர், ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜூபிலி ஆண்டின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1475ம் ஆண்டிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஜூபிலி ஆண்டு திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை
திருஅவையில் 26 ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இறுதியாக
இரண்டாயிரமாம் ஆண்டில் நடைபெற்றது. அரசியல் பிரச்சனைகள் காரணமாக 1800
மற்றும் 1850ம் ஆண்டுகளில் ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்படவில்லை. இதுவரை
இரண்டு சிறப்பு ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவின்
மீட்பின் 1900மாம் ஆண்டையொட்டி, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1933ம் ஆண்டிலும், மீட்பின் 1950ம் ஆண்டையொட்டி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1983ம் ஆண்டிலும் சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்தனர். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, 2015 இவ்வெள்ளியன்று கருணையின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. புதுடெல்லி திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தையின் தலைமைப் பணியின் 2ம் ஆண்டு நிறைவு
மார்ச்,14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின்
266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு
விழாவை இவ்வெள்ளியன்று புதுடெல்லியில் திருப்பீடத் தூதர் பேராயர்
சால்வத்தோரே பெனாக்கியோ அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
புதுடெல்லி திருப்பீடத் தூதரகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் Kiren Rijiju அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் அரசியல் தூதர்களும், தொழிலதிபர்களும், கலாச்சாரத் துறையினரும், இந்தியத் தலத்திருஅவையின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப்பணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் ஹோர்ஹே பெர்கோலியோ அவர்கள், அதே ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போன பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்ற கர்தினால் பெர்கோலியோ அவர்கள், முதல் இயேசு சபை திருத்தந்தை மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் திருத்தந்தை என்ற பெருமையையும் பெற்றார்.
ஆதாரம் : Ansa /வத்திக்கான் வானொலி
7. சிரியாவின் அமைதிக்காக மார்ச் 15,16 தேதிகளில் உண்ணாநோன்பு,செபம்
மார்ச்,14,2015. சிரியாவில் சண்டை தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவுற்று ஐந்தாவது ஆண்டாகவும் சண்டை தொடரும்வேளை, அந்நாட்டில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், உண்ணாநோன்பு மற்றும் செப நாளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார் மெல்கிதே கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்.
தவக்காலம் சிலுவைப்பாதை காலம், அரபு நாடுகளில், குறிப்பாக, சிரியா, ஈராக், பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகளில் ஐந்தாவது ஆண்டாக சிலுவைப்பாதை தொடருகின்றது என்று, அந்தியோக்கியாவின் மெல்கிதே கிரேக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை 3ம் கிரகோரியோஸ் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
சிரியாவில் அமைதி ஏற்படுவதற்காக மார்ச் 15,16 தேதிகளில் உண்ணாநோன்பு மற்றும் செபம் கடைப்பிடிக்கப்படுமாறு உலகினர் அனைவரையும் கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை கிரகோரியோஸ்.
சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி தொடங்கிய சண்டையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாற்பது
இலட்சத்து மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்
மற்றும் 76 இலட்சம் பேர் சிரியாவிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.
கூறியுள்ளது.
சிரியா மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்
ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி
8. பேரிடர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு அவசியம்
மார்ச்,14,2015. உலகில் இயற்கைப் பேரிடர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
ஜப்பானின் சென்டைய்யில் நடைபெற்றுவரும் உலகத் தலைவர்கள் மாநாட்டில் இவ்வாறு உரைத்த பான் கி மூன் அவர்கள், உலகில் உண்மையாகவே பேரிடர்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் நாடுகள் மற்றும் சமுதாயங்களுக்குள் ஒன்றிப்புணர்வு தேவை என்று கூறினார்
ஜப்பானின்
ஹியோகோவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பேரிடர் தடுப்பு
ஒப்பந்தத்தை சீர்தூக்கிப் பார்த்து அதனை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த
மாநாடு நடைபெற்றுவருகிறது. மார்ச் 18, வருகிற புதனன்று இம்மாநாடு நிறைவடையும்.
மேலும்,
தென் பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாத்துவில் இடம்பெற்ற கடும் புயலால்
பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த Pam புயல் மழையால் கிராமங்கள் முழுவதும் அழிந்துள்ளன. இது, பசிபிக் பெருங்கடல் வரலாற்றில் இடம்பெற்ற கடுமையான புயல் எனச் சொல்லப்படுகிறது.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
9. பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் புதிய காந்திஜி சிலை
மார்ச்,14,2015. இலண்டனின் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திஜியின் வெண்கலச் சிலையொன்று இச்சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியப் பிரதமர் David Cameron, இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் மேற்கு வங்காள ஆளுனரும் காந்திஜியின் பேரனுமாகிய ஸ்ரீ கோபாலகிருஷ்ண காந்தி, இந்திய நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர் Cameron அவர்கள், அரசியல் வரலாற்றில் மிக உன்னத நபர்களில் காந்தியும் ஒருவர் எனப் பாராட்டினார்.
காந்திஜி அவர்கள், பிரித்தானியப் பேரரசை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிய நூறாம் ஆண்டைக் குறிக்கும் விதமாக இவ்வுருவம் திறக்கப்பட்டுள்ளது.
15 இலட்சம் டாலர்களுக்கும் அதிகமாகச் சேர்ந்த நன்கொடையைக் கொண்டு ஒன்பது அடி உயரமுள்ள இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க நிதி திரட்டிவந்த காந்தி நினைவுச் சிலை அறக்கட்டளையின் தலைவரான லார்ட் மேக்நாத் தேசாய், இந்தச்
சிலை அமையப்போகிற இடம் மிகவும் சிறப்புமிக்கது என்றும் காந்தி நேராக
நாடாளுமன்றத்தைப் பார்த்தபடி நிற்கப்போகிறார் என்று கூறினார்.
இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி Philip Jackson, காந்தி பற்றி நிறைய அறிந்திராதவர்கள் இந்த சிலையைப் பார்த்துவிட்டு அவரைப் பற்றியும், அகிம்சை வழியாக அவர் எட்டிய உயரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment