செய்திகள்-13.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பாப்பிறை தலைமைப்பணியில் ஈராண்டு நிறைவு காணும் திருத்தந்தை பிரான்சிஸ்
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் திருத்தந்தை
3. கர்தினால் பரோலின் அவர்களின் பெலாருஸ் பயணம்
4. கீழை வழிபாட்டுமுறை பேராயப் பிரதிநிதிகள் குழு சிரியாவில் சுற்றுப்பயணம்
5. கிறிஸ்தவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்தல்
6. துறவறத்தாருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், ஹெய்ட்டி கர்தினால்
7. ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப மோடி அவர்களின் பயணம் உதவும்
8. கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு டெல்லி காவல்துறை முகநூல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பாப்பிறை தலைமைப்பணியில் ஈராண்டு நிறைவு காணும் திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,13,2015. இறைவன் தன்னை இவ்விடத்தில் ஒரு குறுகிய காலத்துக்கு வைத்துள்ளார் என்று தான் உணருவதாக, புதிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மெக்சிகோ நாட்டின் “Televisa” தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் Valentina Alazraki என்பவருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் வழங்கிய ஒரு நீண்ட நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க திருஅவையின் 265வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவு மார்ச் 13, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி இந்நேர்காணல் இடம்பெற்றது.
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் பற்றிய விபரங்கள், தனது கடந்த இரண்டு ஆண்டு பாப்பிறைத் தலைமைப்பணி, திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம், தனது பாதுகாப்பு, அரசியல், குடும்பம் பற்றிய ஆயர்கள் மாமன்றம் முன்வைக்கும் சவால்கள், திருஅவையை அனைத்துச் சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் ஏற்றதாக அமைத்தல், குடியேற்றதாரர், போதைப்பொருள் வர்த்தகம் என, பல தலைப்புகளில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திருத்தந்தை.
வருகிற
செப்டம்பரில் உலக குடும்பங்கள் தினத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க
ஐக்கிய நாடு செல்லும்போது மெக்சிகோவுக்குச் செல்லாமல் இருப்பது குறித்த
கேள்விக்கு மிக விளக்கமாகப் பதிலளித்த திருத்தந்தை, மெக்சிகோ திருத்தூதுப் பயணத்துக்கு ஒரு வாரம் தேவைப்படும் என்று கூறினார்.
இன்றைய உலகில் பசிக்கொடுமையால் இடம்பெறுவதே குடியேற்றம், பசியாலும், சண்டைகளாலும் துன்புறும் மக்கள் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறுகின்றனர், குடியேற்றம் பசியோடும், வேலையின்மையோடும் தொடர்புடையது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் திருத்தந்தை
மார்ச்,13,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரின் இதயத்திலும் கருணையின் திருத்தந்தையாக நோக்கப்படுகிறார் என்று கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
மாபெரும் கருணையின் காவலராக, கருணையின்
சொத்தாக விளங்கும் அப்போஸ்தலிக்க பாவமன்னிப்புச் சலுகை நிறுவனத்திற்கு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக நெருங்கியவராக இருக்கிறார், ஏனெனில் திருத்தந்தை, ஒவ்வொருவரின் இதயத்திலும் கருணையின் திருத்தந்தையாக நோக்கப்படுகிறார் என்று கூறினார் கர்தினால் Mauro Piacenza.
அப்போஸ்தலிக்க
பாவமன்னிப்புச் சலுகை நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அந்நிறுவனம்
நடத்திய பயிற்சியில் பங்கு கொண்ட 500 பேருடன் திருத்தந்தையை சந்தித்து
வாழ்த்தையும் செபங்களையும் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார் அந்நிறுவனத்
தலைவர் கர்தினால் Piacenza.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம்
ஆண்டு மார்ச் 13ம் தேதி கத்தோலிக்க திருஅவையின் 265வது திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் இரண்டாவது ஆண்டு நிறைவு இவ்வெள்ளியன்று
இடம்பெற்றது.
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி
3. கர்தினால் பரோலின் அவர்களின் பெலாருஸ் பயணம்
மார்ச்,13,2015. முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடாகிய பெலாருஸில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
பெலாருஸில், கடந்த ஏழு ஆண்டுகளில் திருப்பீட உயர்மட்ட பிரதிநிதியாக, சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் பரோலின் அவர்கள், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கணிக்கப்பட்ட பெலாருஸ் அரசுத்தலைவர் Aleksandr Lukhashenko அவர்களைச் சந்திக்கிறார்.
பெலாருஸ் தலைநகர் Minskல் இஞ்ஞாயிறு வரை இப்பயணத்தை மேற்கொள்கிறார் கர்தினால் பரோலின். 2010ம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் Lukhashenko அவர்கள், அரசுத்தலைவராக உறுதி செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து பல எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தேர்தலுக்குப் பின்னர் இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெலாருஸ் நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டுமென்ற அழைப்பை, பெலாருஸ் ஆயர்கள் கர்தினால் பரோலின் அவர்களிடம் வழங்கவிருப்பதாக Minsk பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள் தெரிவித்துள்ளார்.
Minsk நகரில்தான் உக்ரேய்னுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கீழை வழிபாட்டுமுறை பேராயப் பிரதிநிதிகள் குழு சிரியாவில் சுற்றுப்பயணம்
மார்ச்,13,2015.
சிரியாவில் தொடர்ந்து துன்புறும் மக்கள் மற்றும் சிரியா திருஅவை மீது
திருப்பீடம் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கத்தில், கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயப் பிரதிநிதிகள் குழு ஒன்று அந்நாட்டில் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது.
கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயச் செயலர் பேராயர் Cyril Vasil அவர்கள் தலைமையில் இவ்வெள்ளியன்று சிரியா சென்றுள்ள இக்குழு, சிரியா கத்தோலிக்கரையும், தேசிய காரித்தாஸ் நிறுவனப் பொறுப்பாளர்களையும், இளையோரையும் சந்தித்து, திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும்.
2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கொலை செய்யப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் Frans Van Der Lugt அவர்கள் சமாதியிலும் இக்குழுவினர் செபிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிரியாவில் ஐந்தாவது ஆண்டாக சண்டை இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டினர் உலகினரால் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இச்சண்டையை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலக சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாற்பது
இலட்சத்து மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்
மற்றும் 76 இலட்சம் பேர் சிரியாவிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.
கூறியுள்ளது.
சிரியா மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
5. கிறிஸ்தவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்தல்
மார்ச்,13,2015. உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கை ஒன்றை, திருப்பீடம் உட்பட பல நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 28வது அமர்வில் இவ்வெள்ளியன்று சமர்ப்பித்தன.
இரஷ்ய கூட்டமைப்பு, லெபனான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது திருப்பீடம்.
இவ்வறிக்கை குறித்துப் பேசிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இக்காலத்தில் பல்வேறு சமயக் குழுக்களின் வாழ்வு, குறிப்பாக, கிறிஸ்தவர்களின் வாழ்வு கடுமையாய் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
இம்மக்களின் வாழ்வு கேள்விக்கு உள்ளாகியுள்ளது என்றும், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களின் இடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர், அடிமைகளாக விற்கப்படுகின்றனர், கொலைசெய்யப்படுகின்றனர், தலை துண்டிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும், சமூகங்களிலும் கிறிஸ்தவர்கள் ஆற்றியுள்ள நற்பணிகளை அனைவருக்கும் தெரிந்தவையே என்றும், இம்மக்களின் துன்பநிலை அகற்றப்பட்டு, அமைதியான நல்லிணக்கக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப அரசுகளும், பொதுமக்கள் சமுதாயமும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் பேராயர் தொமாசி.
திருப்பீடம், இரஷ்ய கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிலிப்பீன்ஸ், இஸ்ரேல் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. துறவறத்தாருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், ஹெய்ட்டி கர்தினால்
மார்ச்,13,2015. ஹெய்ட்டி நாட்டில், பாலியல் வன்கொடுமை, திருட்டு, தாக்குதல்
என பலவகையான இன்னல்களுக்கு உள்ளாகிவரும் துறவறத்தார் மற்றும்
அருள்பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அந்நாட்டு காவல்துறை
தவறியுள்ளது என்று ஹெய்ட்டி தலத்திருஅவை குறை கூறியுள்ளது.
ஹெய்ட்டியின் Les Cayes நகர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் இடம்பெற்ற செப வழிபாட்டில் நூற்றுக்கணக்கான துறவறத்தாருக்கு உரையாற்றிய அந்நகர் கர்தினால் Chibly Langlois அவர்கள், காவல்துறையின் மெத்தனப்போக்கை அறிந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எளிதாக தப்பி விடுகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.
ஹெய்ட்டியில் பணியில் இருக்கும் காவல்துறை உறுப்பினர்களில் பலர் திறமையற்றவர்களாக உள்ளனர் என்றும், காவல்துறை தனது கடமையை ஆற்றவில்லை என்றும் குறை கூறினார் அந்நாட்டின் முதல் கர்தினால் Langlois.
ஹெய்ட்டி துறவு சபைகள் இம்மாதம் 5ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த
அக்டோபரிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 25 தடவைகள் அருள்சகோதரிகள்
மற்றும் குருக்களின் இல்லங்களில் வேற்று மனிதரின் ஆக்ரமிப்புகள்
நடந்துள்ளன. இதனால் குறைந்தது 18 துறவு சபைகளும், அலுவலகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.
ஹெய்ட்டி, கரீபியன் பகுதியிலுள்ள ஒரு சிறிய தீவு நாடாகும்.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
7. ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப மோடி அவர்களின் பயணம் உதவும்
மார்ச்,13,2015. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைப் பயணம், ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப உதவும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப்.
இவ்வெள்ளி
காலை 5.30 மணிக்கு இலங்கை சென்றடைந்து இரண்டு நாள் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுவரும் பிரதமர் மோடி அவர்களின் பயணம் குறித்து யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய மன்னார் ஆயர் ஜோசஃப் அவர்கள் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வும், தன்னாட்சி
உரிமையும் கொண்டுள்ள ஓர் ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்ப இந்தியப்
பிரதமரின் இப்பயணம் உதவும் என்ற தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார் மன்னார்
ஆயர்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உரிமை இழந்த மக்களாக உள்ளனர் எனும் எதார்த்தத்தை இந்தியப் பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்தியா நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆழ்ந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மக்கள் தொடர்ந்து உரிமைகள் இழந்த நிலையில் வாழ்ந்து வருவது, வேதனையாக
உள்ளது என்பதை இந்தியப் பிரதமர் மனதில் உள்வாங்கி அதற்கேற்ற வகையில்
தீர்வுக்கான வழியை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
நீதியின் அடிப்படையில், பல்லின
மக்கள் ஒன்றாக சம உரிமையுடன் இந்தியாவில் வாழ்வதைப் போல இலங்கையிலும்
ஆட்சியாளர்கள் நடைமுறைபடுத்த நரேந்திர மோடி அவர்கள் அழுத்தம் கொடுக்க
வேண்டும் என தானும், தமிழ்ச் சமூகமும் எதிர்பார்ப்பதாக மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.
நீடித்த அமைதியும், நிரந்தரமான அரசியல் தீர்வும் இலங்கையில் ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பும் நல்லெண்ணமும் இன்றியமையாதவை எனவும் அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் தனது இலங்கை பயணத்தின்போது, யாழ்ப்பாணம், தலைமன்னார் உட்பட பல இடங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
8. கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு டெல்லி காவல்துறை முகநூல்
மார்ச்,13,2015. டெல்லியில் கிறிஸ்தவ நிறுவனங்களும், கிறிஸ்தவர்களும் பலமுறை தாக்கப்பட்டுள்ளதையடுத்து, டெல்லி கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் டெல்லி காவல்துறை முகநூல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
“டெல்லி காவல்துறை சிறுபான்மை சகோதரன்” என்ற தலைப்பில் இப்புதிய முகநூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அன்பு கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, டெல்லியில்
கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பில் டெல்லியில் நிலவும்
சட்டம்-ஒழுங்குமுறை பற்றிய உங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யுங்கள் என
அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினரின்
பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அதிகாரி ஒருவரும்
நியமிக்கப்பட்டுள்ளார் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
No comments:
Post a Comment