Wednesday, 18 March 2015

செய்திகள்-17.03.15

செய்திகள்-17.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-கருணையுடன் இருங்கள், உங்கள் இதயக் கதவுகளை அடைக்காதீர்கள்

2. நைஜீரிய மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து திருத்தந்தை கடிதம்

3. கடவுளின் நன்மைத்தனம் நம் இதயங்களை நிரப்புவதற்கு அனுமதிப்போம்

4. சிரியா சிறார் மறக்கப்பட்ட தலைமுறையாக மாறி வரும் ஆபத்து, பேராயர் தொமாசி

5. பெண்களின் தனிப்பட்ட கொடைகள் பாராட்டப்பட வேண்டும், வத்திக்கான் அதிகாரி

6. Vanuatu தீவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தாலிய ஆயர் பேரவை உதவி

7. பேரிடர்கள் குறித்த நடைமுறை தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும்

8. பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்த அளவு பாதுகாப்பே வழங்கப்படுகிறது

9. பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை, அச்சத்தின் பிடியில் கிறிஸ்தவர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-கருணையுடன் இருங்கள், உங்கள் இதயக் கதவுகளை அடைக்காதீர்கள்
மார்ச்,17,2015. ஆலயம், அனைவரையும் வரவேற்கும் கருணையின் இல்லம், அது இயேசுவின் இல்லம் என்பதால் அதில் நுழையத் தேடும் மக்களுக்கு கிறிஸ்தவர்கள்   கதவுகளை மூடும் இடமாக அது இருக்கக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தம்மைத் தேடும் எவருக்கும், குறிப்பாக, தம்மைவிட்டுத் தொலைவில் இருப்பவர்க்கு இயேசு கதவுகளைத் திறந்து வைக்கிறார் என்று கடந்த காலத்தில் பலமுறை கூறியதையே இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியிலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தம்மில் நம்பிக்கை வைப்பதாக அறிக்கையிட்டவர்கள், ஏன், சிலவேளைகளில் பிறருக்குக் கதவுகளை மூடி தம்மீது நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் என எல்லாருக்கும் கிறிஸ்து தமது கருணையை முழுமையாக வழங்கும்வேளை, ஆலயத்தின் கதவுகளைத் தட்டுபவர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் கதவுகளை அடைத்து விடுகின்றனர் என்று கவலையோடு கூறினார் திருத்தந்தை.
கோவிலின் வாயிற்படியிலிருந்து தண்ணீர் வருவது பற்றிக் கூறும், எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய திருப்பலி முதல் வாசகத்தை(எசே.47,1-9,12) மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, தண்ணீர் குணமளிக்கும் தன்மை கொண்டது என்று சொல்லி தண்ணீர் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
வாழ்வில் பல தவறுகள் இழைத்து மனத்தளவில் நோயாய் இருப்பதாக உணரும் ஒரு மனிதர், ஒரு கட்டத்தில், தண்ணீர் அதாவது தூய ஆவி அவரில் செயல்பட்டு ஏதோ ஒரு சொல்லைக் கேட்டு ஆலயத்துக்குச் செல்லத் துணிந்து சென்றால் அங்கு ஆலயக் கதவுகள் மூடியிருப்பதைக் காண்கிறார் என்று கவலையுடன் கூறிய திருத்தந்தை, ஆலயம் இயேசுவின் வீடு, இயேசு எல்லாரையும் வரவேற்கிறார் என்றும் கூறினார்.
கிறிஸ்துவைத் தேடுவோரைத் தடை செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்ட   திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டம் என்பது கடவுளையும், நம்மைப்போல் பிறரையும் அன்புகூர்வதாகும், எனவே நாம் ஒவ்வொருவரும், அகிலத் திருஅவையும் இயேசுவின் கருணைக்கு மனம் மாறுவதற்காக இத்திருப்பலியில் மன்றாடுவோம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நைஜீரிய மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து திருத்தந்தை கடிதம்

மார்ச்,17,2015. இன, சமூக மற்றும் மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் புதிய வடிவ வன்முறைகளால் துன்புறும் நைஜீரிய மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரின் வன்முறைகளால் துன்புறும்வேளை அந்நாட்டு ஆயர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைதிக்கான பணியில் சோர்வடையாமல் உறுதியுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவருடன் தோழமை உணர்வு கொண்டு, ஏழைகளுக்கு உதவி, இளையோருக்கு அறிவு புகட்டி, நீதியும், உடன்பிறப்பு உணர்வும் மிக்க சமுதாயத்தை ஊக்குவிப்பவர்களாக ஆயர்கள் விளங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை.
கடும் துன்பச் சூழலிலும் தங்களின் மக்களைக் கைவிட்டு விடாமல் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றும் மறைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, உண்மைக்காக ஆற்றும் பணியில் சோர்வுறாமல் தொடர்ந்து செயல்படுமாறும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
தங்களை சமய உணர்வு கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு, தங்களின்  ஆதாயங்களுக்காக மதக்கொள்கைகளை மீறுகின்றவர்களால் பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு அனைத்து நைஜீரியர்களுக்கும் மனமாற்றம், ஒப்புரவு மற்றும் அமைதியை வழங்கட்டும் தான் செபிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
16 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு, ஆப்ரிக்காவின் பேராற்றல் என நோக்கப்படும் நைஜீரியா, ஆப்ரிக்காவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பொருளாதாரத்தில் வளர்ந்து உலகச் சந்தையை கவர்ந்து வருகிறது மற்றும் ஆப்ரிக்காவில் ஒரே பெரிய பொருளாதார நாடாக உள்ளது என்று அந்நாட்டின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கடவுளின் நன்மைத்தனம் நம் இதயங்களை நிரப்புவதற்கு அனுமதிப்போம்

மார்ச்,17,2015. கடவுள், தமது நன்மைத்தனம் மற்றும் கருணையோடு நம் இதயங்களை நிரப்புவதற்கு அவரை அனுமதிப்போம் என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற சனிக்கிழமையன்று இத்தாலியின் Pompei செபமாலை அன்னை திருத்தலத்துக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி கருத்து தெரிவித்த Pompei பேராயர் Tommaso Caputo அவர்கள், திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான திருத்தந்தையின் கண்டனத்தை தனது மறைமாவட்டம் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் பற்றியும் கூறிய பேராயர் Caputo அவர்கள், தென் இத்தாலி தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து இத்தாலிய திருஅவை எப்போதும் கருத்தாய் இருப்பதையும் குறிப்பிட்டார்.
மார்ச் 21, வருகிற சனிக்கிழமையன்று நேப்பிள்ஸ் நகருக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ள திருத்தந்தை, Pompei செபமாலை அன்னை திருத்தலத்துக்கும் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி
                       
4. சிரியா சிறார் மறக்கப்பட்ட தலைமுறையாக மாறி வரும் ஆபத்து, பேராயர் தொமாசி

மார்ச்,17,2015. சிறாரின் நலமான ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்கு சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவுவது மிகவும் இன்றியமையாதது என்று ஜெனீவா மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் கூறினார் திருப்பீடன் உயர் அதிகாரி ஒருவர்.
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில் சிரியா அரபு குடியரசு குறித்த அனைத்துலக விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார். 
போர்களால் சொந்த நாடுகளின்றி வாழும் சிறாருக்கு சட்டமுறையான அடையாளம், இச்சிறாருக்கு கல்வி, குடும்பம் ஆகிய மூன்று கூறுகள் குறித்து வலியுறுத்திப் பேசிய பேராயர் தொமாசி அவர்கள், இலட்சக்கணக்கான சிறாருக்கு சொந்த நாடுகள் என்று எதுவுமில்லை, இவர்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் சிறார் லெபனானில் மட்டும் உள்ளனர் என்றும் கூறினார்.
சிரியாவிலிருந்து தப்பித்து வந்த பெற்றோருக்குப் பிறந்த சிறாரின் பெயர்கள் எந்த அலுவலகத்திலும் பதிவு செய்யப்படாததால், ஏறக்குறைய 3,500 சிறாருக்கு அதிகாரப்பூர்வமாக குடும்பமோ, வேறுஎந்த அடையாளமோ கிடையாது என்ற யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையையும் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.
சிரியாவில் பிரச்சனை தொடங்கியதிலிருந்து ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், இது உலகளாவிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மேலும் 5 கோடியே 12 இலட்சமாக அதிகரித்துள்ளது உட்பட பல புள்ளி விபரங்களை ஐ.நா.வில் முன்வைத்தார் பேராயர் தொமாசி.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பெண்களின் தனிப்பட்ட கொடைகள் பாராட்டப்பட வேண்டும், வத்திக்கான் அதிகாரி

மார்ச்,17,2015. ஆண்களுக்கு இல்லாத தனிப்பட்ட கொடைகளைப் பெற்றிருக்கும் பெண்களின் ஒருங்கிணைந்த ஆளுமை பாராட்டப்பட வேண்டும் என்று ஐ.நா. கூட்டமொன்றில் கூறினார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
தாய்மைப்பேறு அடையும் திறன் கொண்ட பெண்கள், பிள்ளைகளைப் பெற்றெடுப்பவர்களாக மட்டும் நோக்கப்படாமல், அவர்களின் இத்திறன் ஓர் ஆன்மீக, கல்வி மற்றும் வாழ்வுக் கலாச்சாரத்தை வழங்கி, அதைப் பேணிப் பாதுகாக்கும் சக்தி படைத்ததாக வாழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார் பேராயர் Bernardito Auza.
பெண்களின் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளைப் பேணும் செயலூக்கியாக குடும்பம்:பெய்ஜிங் மாநாட்டின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்ற தலைப்பில் ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
தாய்மையின் தனித்துவமிக்க மாண்பும், மதிப்பும் சில சமூகங்களில் போதுமான அளவு பாதுகாக்கப்படாத காலத்தில் நாம் வாழ்ந்து வருவதால், பெண்களின் ஒருங்கிணைந்த ஒரு சூழலைப் பேணி வளர்ப்பது மிகவும் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்றும் பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.
அறிவுசார்ந்த மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சிகளில், பெண்கள், மனைவிகளாகவும் தாயமார்களாகவும் தங்களின் வளர்ச்சியை கலாச்சார மற்றும் சட்ட அடிப்படையில் நிலைநாட்டவேண்டிய அவசியம் உள்ளது, எனவே இவர்களின் தனிப்பட்ட கொடைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வில் கூறினார் பேராயர் Auza

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. Vanuatu தீவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தாலிய ஆயர் பேரவை உதவி

மார்ச்,17,2015. தென் பசிபிக் பகுதியில் Pam புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Vanuatu மற்றும் Tuvalu தீவுகளின் இலட்சக்கணக்கான மக்களுக்கு பத்து இலட்சம் யூரோக்களை அனுப்புவதாக இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
வீடுகளின்றி பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு திருப்பீடத் தூதரகம் வழியாக இவ்வுதவி அனுப்பப்படுகின்றது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தொடர்புத் துறை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது. 
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கடந்த ஞாயிறன்று இத்தீவு மக்களுக்காகச் செபித்தார் மற்றும் இவர்களுக்கு உதவும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, Vanuatu தீவின் மேற்குப் பகுதியிலுள்ள மக்கள் உப்பு நீரைக் குடித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. பேரிடர்கள் குறித்த நடைமுறை தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும்

மார்ச்,17,2015. ஜப்பானின் சென்டைய் நகரில் நடைபெற்றுவரும், 3வது இயற்கைப் பேரிடர் ஆபத்து குறைப்பு உலக மாநாட்டில் பேசிய தென் பசிபிக் பகுதி தலைவர்கள், அசாதாரண வெப்பநிலை மாற்றங்களை சந்திக்கும் தீவு நாடுகளுக்கு பன்னாட்டு உதவி உறுதிப்படுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டனர்.
பேரிடர்கள் நேரிடும்போது, அவற்றிலிருந்து அதிகமான உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் மக்களுக்கு அவை குறித்த நடைமுறை தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாட்டில் கூறப்பட்டது.
ஆபத்தை எதிர்நோக்கும் மக்களும் அறிவிப்புகளுக்கு உடனடியாகச் செவிமடுத்து செயல்படவில்லையெனில், எவ்வளவு நவீனப் பேரிடர் தடுப்பு அமைப்புகள் இருந்தாலும் அவற்றால் பலனில்லை என்று, யுனெஸ்கோவின் பெருங்கடல் குழுவின் திட்ட செயலர் Vladimir Ryabinin கூறினார்.  
இதற்கிடையே, கடுமையான வெப்பநிலை மாற்றங்களால் Kiribati, Tuvalu மற்றும் Solomon தீவுகளும் அதிகமாக ஆபத்துக்களை எதிர்கொள்கின்றன என்று, ஐ.நா.வுக்கான Tuvalu தீவு தூதர் Aunese Makoi Simati செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
3வது இயற்கைப் பேரிடர் ஆபத்து குறைப்பு உலக மாநாடு இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

8. பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்த அளவு பாதுகாப்பே வழங்கப்படுகிறது

மார்ச்,17,2015. பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருந்தாலும், அண்மை நாள்களாக ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் மிகக் குறைவே என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு குறை கூறியது.
தாக்குதல் நடந்த சமயத்தில்கூட அந்த இடத்திலிருந்த அதிகாரிகள் ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தங்களின் கடமையிலிருந்து தவறி தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் ஆர்வமாய் இருந்தனர் என்று மேலும் அந்த ஆணைக்குழு கூறியது.
கடந்த காலத்தில் பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமுதாயம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், ஆலயங்களையும், சிறுபான்மை சமூகங்களையும் பாதுகாப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுள்ளது. 
மேலும், லாகூரில் இரு ஆலயங்களில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் குறைந்தது ஐம்பது முஸ்லிம் தலைவர்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : Asianews / Fides/ வத்திக்கான் வானொலி

9. பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை, அச்சத்தின் பிடியில் கிறிஸ்தவர்கள்

மார்ச்,17,2015. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல. ஆனால் தாக்கும் விதங்களும் வேகமும்தான் மாறி வருகின்றன. மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்கும்போது காவல்துறையோ, அரசு நிர்வாகமோ தடுப்பதோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோ கிடையாது என்று ஊடகங்கள் கணித்துள்ளன. 
தாக்கப்பட்டவர்களுக்கு உதவி, நிவாரணம் ஏதும் அளிக்கப்படுவதில்லை. தாக்குதல்கள் நடத்தியவர்களையும் சிறைப்பிடித்து நீதி விசாரணைக்கு உட்படுத்துவதில்லை பாகிஸ்தான் அரசு என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதல்கள் பன்னாட்டு கவனத்தை ஈர்க்கும் சமயங்களில் மட்டும் அரசு பெயரளவுக்குச் சில நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் கூறப்படுகின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கிறிஸ்தவர்களும் சிந்து மாநிலத்தில் இந்துக்களும் ஆங்காங்கே மிகக் குறைந்த எண்ணிக்கையில் பிரிந்து வாழ்கின்றனர்.
மேலும், பாகிஸ்தானில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் இச்செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை நடவடிக்கைகள் கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நாள் இதுவேயாகும்.
தலிபான்களால் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஏறக்குறைய 150 பள்ளிச்சிறார் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றுவதை பாகிஸ்தான் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, இதுவரை 40 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment