Thursday, 5 March 2015

செய்திகள்-04.03.15

செய்திகள்-04.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - துன்புறுவோருடன் இணைவது ஆயர்களின் முக்கிய கடமை

2. போம்பெயி, நேப்பிள்ஸ் நகரங்களில் திருத்தந்தையின் பயணம்

3. இத்தாலிய மொழியில் முதல் திருப்பலி - பொன்விழாவில் திருத்தந்தை

4. புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

5. ஆசியாவில், கிறிஸ்தவ மதமானது, ஓர் அன்னிய மதமாகவே கருதப்படுகிறது

6. திருத்தந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வத்திக்கான் அதிகாரி

7. "பிறரன்புப் பயணங்கள்" லாகூர் உயர் மறைமாவட்டத்தின் தவக்கால முயற்சி

8. 55 கோடி நோயாளிகளுக்கு மார்ஃபின் கிடைப்பதில்லை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - துன்புறுவோருடன் இணைவது ஆயர்களின் முக்கிய கடமை

மார்ச்,04,2015 ஆயர்கள் என்ற முறையில், திருவிருந்து இடம்பெறும் மேசையைச் சுற்றி, மக்களை நாம் ஒன்று சேர்க்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Focolare என்ற இயக்கத்தின் நண்பர்கள் என்றழைக்கப்படும் ஆயர்கள், மார்ச் 2ம் தேதி முதல், 6ம் தேதி முடிய உரோம் நகருக்கருகே அமைந்துள்ள Castel Gandolfo எனுமிடத்தில் கூடிவந்துள்ளனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் 60 ஆயர்களை, இப்புதன் காலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தின் ஓரறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையையும், திருவிருந்தையும் மையமாகக் கொண்டு, இறைமக்களை இணைப்பது ஆயர்களின் முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.
இறைவனின் வார்த்தையையும், உடலையும் பகிர்ந்தளிக்காமல், மக்களைக் கூடிவரச் செய்வது வெறும் நட்புணர்வில் கூடிவரும் சமுதாயமாக மட்டுமே மாறமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
திருஅவையின் துன்புறும் அங்கங்களாக தற்போது விளங்கும் சிரியா, ஈராக், உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆயர்களை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, துன்புறும் மக்களோடு தங்களையே அடையாளப்படுத்துவது ஆயர்களின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் ஆகியவை, Focolare இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக விளங்குவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
Focolare இயக்கத்தின் நண்பர்கள் என்றழைக்கப்படும் ஆயர்களில், ஈராக், சிரியா, உக்ரைன், ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், இப்புதன் பிற்பகலில் செய்தியாளர்களுடன் ஒரு சிறப்புப் பகிர்வில் ஈடுபட்டனர்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. போம்பெயி, நேப்பிள்ஸ் நகரங்களில் திருத்தந்தையின் பயணம்

மார்ச்,04,2015 மார்ச் 21ம் தேதி, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் போம்பெயி மற்றும் நேப்பிள்ஸ் நகரங்களுக்குச் செல்லும் நிகழ்வின் விவரங்களை வத்திக்கான் இப்புதனன்று வெளியிட்டது.
மார்ச் 21, காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 8 மணிக்கு போம்பெயி நகரை அடைந்து, அங்குள்ள செபமாலை அன்னையின் திருத்தலத்தில் செபத்தில் ஈடுபடுவார்.
அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, நேப்பிள்ஸ் நகரை 9 மணியளவில் அடைந்து, அங்கு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் சதுக்கத்தில் நகர அதிகாரிகளையும், மக்களையும் சந்தித்தபின், Plebiscito சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.
மதியம் ஒரு மணிக்கு, "Giuseppe Salvia" என்ற சிறையில் உள்ளவர்களைச் சந்தித்து, கைதிகளின் ஒரு சில பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்துவார்.
பிற்பகல் 3 மணிக்கு, புனித Gennaro அவர்களின் திருப்பண்டங்களை வணக்கம் செய்தபின், நேப்பிள்ஸ் பேராலயத்தில், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் நிரந்தர தியாக்கொன்களை சந்தித்து உரையாற்றுவார்.
மாலை 4.15 மணியளவில், Gesù Nuovo பசிலிக்காவில் நோயுற்றோரைச் சந்தித்தபின், 5.00 மணியளவில் Caracciolo சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து, உரையாற்றுவார்.
நேப்பிள்ஸ் நகரிலிருந்து 6.15 மணியளவில் புறப்பட்டு, 7.00 மணிக்கு வத்திக்கான் வந்தடைவார் திருத்தந்தை.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. இத்தாலிய மொழியில் முதல் திருப்பலி - பொன்விழாவில் திருத்தந்தை

மார்ச்,04,2015 திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் உரோம் நகர், Via Appia Nuova வில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில் 1965ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி முதன்முதலாக இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றினார்.
திருஅவை வரலாற்றில் நிகழ்ந்த இந்த முக்கிய மாற்றத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அதே ஆலயத்தில் மார்ச் 7, வருகிற சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றச் செல்கிறார்.
இக்கோவிலின் பங்குத் தந்தையாக பணியாற்றிய புனித Luigi Orione அவர்கள் இறைவனடி சேர்ந்ததன் 75ம் ஆண்டு நினைவும் இவ்வாண்டு சிறப்பிக்கப்படுகிறது.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த இத்தாலியர்களின் துயர் துடைக்க புனித Luigi Orione அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் தங்கள் பங்கு கோவிலைத் தேர்ந்தார் என்று கூறிய பங்குத் தந்தை, Francesco Mazzitelli அவர்கள், வறியோரை தன் உள்ளத்தில் எப்போதும் எண்ணி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க வருவது பொருத்தமாக உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

மார்ச்,04,2015 Lisieux நகர் புனித தெரேசா அவர்களின் பெற்றோரான, முத்திப்பேறு பெற்ற Louis மற்றும் Zelie Martin ஆகிய இருவரும் அக்டோபர் மாதம் புனிதர்களாக உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனிதர் படிநிலைகள் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், “புனிதர்களால் என்ன பயன்?” என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இதனை எடுத்துரைத்தார். 
குடும்பத்தை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றத்தின்போது, முத்திப்பேறு பெற்ற Louis மற்றும் Zelie Martin ஆகிய இருவரும் புனிதர்களாக உயர்த்தப்படுவது மிகப்  பொருத்தமான நிகழ்வாக அமையும் என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஒன்பது குழந்தைகளை பெற்று வளர்த்த Louis மற்றும் Zelie Martin இருவரும், நாள்தவறாத திருப்பலி, செபமாலை என்று தங்கள் குழந்தைகளை வளர்த்ததோடு, தங்கள் குழந்தைகளில் ஐவரை இறைவன் பணிக்கென அர்ப்பணித்தனர்.
2008ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், Louis மற்றும் Zelie Martin இருவரையும் முத்திப்பேறு பெற்றவர்கள் என ஒரே நேரத்தில் உயர்த்தினார்.
கணவன் மனைவி என வாழ்ந்த இருவர் ஒரே நேரத்தில் புனிதர்களாக உயர்த்தப்படுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல்முறையாக நிகழும் சிறப்பு.

ஆதாரம் Zenit / வத்திக்கான் வானொலி

5. ஆசியாவில், கிறிஸ்தவ மதமானது, ஓர் அன்னிய மதமாகவே கருதப்படுகிறது

மார்ச்,04,2015 நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் ஆசியாவின் சில நாடுகளில், கிறிஸ்தவ மதமானது, ஆசிய கலாச்சாரத்துடன் இணையாத ஓர் அன்னிய மதமாகவே கருதப்படுகிறது என்று ஆசிய கர்தினால்களில் ஒருவரான லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
"50 ஆண்டுகளுக்குப் பின் Gaudium et Spes ஏட்டிற்கு ஆசியாவில் வரவேற்பு" என்ற தலைப்பில், அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் இத்திங்களன்று வழங்கிய உரையில், மணிலா பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.
"கலாச்சாரங்களின் சந்திப்பு" என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், ஆசியாவின் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால், அவர்களைப் பற்றிய புரிதல் இன்னும் பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை என்று விளக்கினார்.
வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆசிய நாடுகளில் மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் கத்தோலிக்கத் திருஅவை முழு மூச்சுடன் ஈடுபட்டாலும், அப்பணிகளை சந்தேகக் கண் கொண்டு நோக்குவது அரசுகளின் கண்ணோட்டமாக உள்ளது என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் CNA / வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வத்திக்கான் அதிகாரி

மார்ச்,04,2015 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல தாக்கங்களை உருவாக்கிவரும் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்குவதால், அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் எழுவது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வத்திக்கான் காவல் பணி அதிகாரி ஒருவர் கூறினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களிடமிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்று செய்திகள் வெளிவருவது குறித்து, "Policia Moderna" என்ற இதழுக்கு வத்திக்கான் காவல் துறையான Gendermerieவின் தலைவர், Domenico Giani அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த மூன்று திருத்தந்தையரின் பணிக்காலத்தில் காவல்துறையில் பணியாற்றிவரும் Giani அவர்கள், இஸ்லாமியக் குழுக்களிடமிருந்து எச்சரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தாலும், பல இஸ்லாமிய நாடுகள் திருத்தந்தையரின் பணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதையும் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஊடகங்களில் எச்சரிக்கைகள் வெளிவந்தாலும், எந்த ஒரு குழுவிடமிருந்து வத்திக்கானுக்கு நேரடித் தாக்குதல்கள் எழுவதாகத் தெரியவில்லை என்று Giani அவர்கள் குறிப்பிட்டார்.
அண்மைய எச்சரிக்கைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்ந்திருந்தாலும், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தையோ, மக்களுடன் மேற்கொள்ளும் சந்திப்புக்களையோ மாற்றப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார் என்றும் காவல்துறை அதிகாரி Giani அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் Zenit / வத்திக்கான் வானொலி

7. "பிறரன்புப் பயணங்கள்" லாகூர் உயர் மறைமாவட்டத்தின் தவக்கால முயற்சி

மார்ச்,04,2015 பாகிஸ்தான் லாகூர் உயர் மறைமாவட்டம், நிகழும் தவக்காலத்தில், துன்புறுவோரைச் சந்திக்கும் வாய்ப்புக்களை, மக்களுக்கு வழங்கி வருகிறது.
"பிறரன்புப் பயணங்கள்" என்ற தலைப்பில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் பயணம், லாகூர் திரு இருதயப் பேராலயத்திலிருந்து கடந்த ஞாயிறு துவங்கியது.
லாகூரில் உள்ள மனநலக் காப்பகம், முதியோர் இல்லம், அனாதை இல்லம், மாற்றுத் திறனாளிகள் மையம் என்ற பல இல்லங்களுக்குச் செல்லும் தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருவதாக லாகூர் உயர் மறைமாவட்டம் தெரிவிக்கிறது.
தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்வோர் உணவுப் பொருள்களையும், பரிசுப் பொருள்களையும் வறியோருடன் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் AsiaNews / வத்திக்கான் வானொலி

8. 55 கோடி நோயாளிகளுக்கு மார்ஃபின் கிடைப்பதில்லை

மார்ச்,04,2015 உலகின் நோயுற்றோரில், நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு, அதாவது, ஏறத்தாழ 55 கோடிக்கும் அதிகமான நோயாளிகளுக்கு மார்ஃபின்போன்ற வலி நிவாரண மருந்துகளை உபயோகிக்க குறைந்த வழிகள் அல்லது முற்றிலும் உபயோகிக்க வழியே இல்லாமல் இருக்கிறது என்று ஐ.நா.வின் போதைப்பொருள் கண்காணிப்புப் பிரிவின் பன்னாட்டு போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
வியென்னாவிலிருந்து செயலாற்றும் INCB, (International Narcotics Control Board) என்ற வாரியம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஆண்டறிக்கையில்உலக மக்கள் தொகையில் 17 விழுக்காட்டினர் மட்டுமே, உலகில் கிடைக்கும் வலி நிவாரணியான மார்ஃபினில், 92 விழுக்காட்டிற்கும் அதிமான அளவை உபயோகிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியுஸீலாந்தில் தான் மார்ஃபின் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கு ஐரோப்பாவில், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் heroin போதைப்பொருளின் தவறானப் பயன்பாட்டின் அதிகரிப்பு, மற்றும் அதனால் விளையும் உயிரிழப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பு பற்றியும் இந்த ஆய்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது

ஆதாரம் UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment