Thursday, 5 March 2015

புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்

புனித தெரேசா அவர்களின் பெற்றோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்
Lisieux நகர் புனித தெரேசா அவர்களின் பெற்றோரான, முத்திப்பேறு பெற்ற Louis மற்றும் Zelie Martin ஆகிய இருவரும் அக்டோபர் மாதம் புனிதர்களாக உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனிதர் படிநிலைகள் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், “புனிதர்களால் என்ன பயன்?” என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இதனை எடுத்துரைத்தார். 
குடும்பத்தை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றத்தின்போது, முத்திப்பேறு பெற்ற Louis மற்றும் Zelie Martin ஆகிய இருவரும் புனிதர்களாக உயர்த்தப்படுவது மிகப்  பொருத்தமான நிகழ்வாக அமையும் என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஒன்பது குழந்தைகளை பெற்று வளர்த்த Louis மற்றும் Zelie Martin இருவரும், நாள்தவறாத திருப்பலி, செபமாலை என்று தங்கள் குழந்தைகளை வளர்த்ததோடு, தங்கள் குழந்தைகளில் ஐவரை இறைவன் பணிக்கென அர்ப்பணித்தனர்.
2008ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், Louis மற்றும் Zelie Martin இருவரையும் முத்திப்பேறு பெற்றவர்கள் என ஒரே நேரத்தில் உயர்த்தினார்.
கணவன் மனைவி என வாழ்ந்த இருவர் ஒரே நேரத்தில் புனிதர்களாக உயர்த்தப்படுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல்முறையாக நிகழும் சிறப்பு.
ஆதாரம் Zenit / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment