செய்திகள்-03.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - நன்மை செய்ய கற்றுக்கொள்பவர்களை கடவுள் தாராளமாக மன்னிக்கிறார்
2. அமேசான் பகுதி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு REPAM அமைப்பு
3. மியான்மார் இராணுவமும், இனப் புரட்சிப்படையினரும் உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தல்
4. அரபு வசந்தம் எழுச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் நம்பிக்கை இழக்கவில்லை
5. உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்கு எதிராக பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை
6. பாகிஸ்தானில் தவக்கால ஆன்மீகப் பிறரன்புப் பயணங்கள்
7. இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கு 3 நாள் செப வழிபாடுகள்
8. போதைப்பொருள் வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சரிசமநிலை அவசியம்
9. HIV கிருமியின் இரண்டு உட்பிரிவுகள் கேமரூன் கொரில்லாக்களிடமிருந்து பரவல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - நன்மை செய்ய கற்றுக்கொள்பவர்களை கடவுள் தாராளமாக மன்னிக்கிறார்
மார்ச்,03,2015. நன்மை செய்யக் கற்றுக்கொள்பவர்களை கடவுள் தாராளமாக மன்னிக்கிறார், ஆனால், வெளிவேடக்காரர் மற்றும் போலியான புனித வாழ்வு வாழ்பவர்களை கடவுள் மன்னிப்பதில்லை என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நன்மை செய்வதைவிட புனிதர்களாகக் காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை எடுக்கும் போலிப் புனிதர்களைவிட, தங்களின் கடந்தகாலப் பாவங்களை விடுத்து, அதிகமாக நன்மை செய்யக் கற்றுக்கொண்டு, தூய வாழ்வு வாழும் பாவிகளை கடவுள் விரும்புகிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தீமை செய்தலை விட்டொழியுங்கள், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், திக்கற்றோருக்கும், கைம்பெண்ணுக்கும் உதவுங்கள் என்று கடவுளிடமிருந்து நேரிடையாக வரும் எசாயா அறிவுரைப் பகுதியை(எச.1,16-20) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கைவிடப்பட்ட வயதானவர்கள், பள்ளிக்குச் செல்லாத சிறார், சிலுவை அடையாளம் போடத் தெரியாதவர்கள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குவர் என்று கூறினார்.
மனமாற்றத்துக்கு இன்றியமையாத அழைப்பு இது, சரியானதைச் செய்வதன்மூலம் நாம் மனம் மாற முடியும் என்றுரைத்த திருத்தந்தை, துவைக்கப்போட்டு துணியில் கறையை நீக்குவது போன்று இதயத்தின் கறையை அகற்ற முடியாது, ஆனால் நன்மை செய்து இதயத்தின் அழுக்கை அகற்ற முடியும் என்றும் கூறினார்.
எவ்வாறு நன்மை செய்வது என்பதையும் விளக்கிய திருத்தந்தை, நீதியைத் தேடுதல், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்து ஊக்குவித்தல், கைவிடப்பட்டவர்களுக்காகப் பரிந்து பேசுதல், கைம்பெண்ணுக்காக வழக்காடுதல், மனித சமுதாயம் வேதனைப்படும் இடத்தில் நீதி வழங்குதல் போன்றவற்றைச் செய்வதாகும், இதனால் நம் இதயமும் சுத்தப்படுத்தப்படும் என்று கூறினார்.
தூய்மைப்படுத்தப்படும் இதயத்துக்கு கடவுளின் மன்னிப்பும் உறுதி செய்யப்படுகின்றது, தங்களின் அயலாரை தெளிவான செயல்களால் அன்புகூருபவரின் பாவங்களை கடவுள் கணக்கில் வைப்பதில்லை என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
இந்தப் பாதையைத் தேர்ந்துகொண்டால், கடுஞ்சிவப்பாய் இருக்கும் உங்கள் பாவங்கள் உறைந்த பனிபோல வெண்மையாகும் என்கிறார் ஆண்டவர்; இது மிகைப்படத் தெரிந்தாலும் இதுவே உண்மை, ஆண்டவர் தமது மன்னிப்பு எனும் கொடையைத் தாராளமாக நமக்குத் தருகிறார், நம்மை மன்னிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. அமேசான் பகுதி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு REPAM அமைப்பு
மார்ச்,03,2015. “இதயம் அன்பு செலுத்தாதபோது அது கடினமடைகின்றது. ஆண்டவரே, அன்புசெலுத்தத் தெரிந்த இதயத்தை எங்களுக்கு அளித்தருளும்” என்ற வார்த்தைகளை தனது டுவிட்டரில் இச்செவ்வாயன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
மேலும், அமேசான் பருவமழைக் காடுகள் பகுதியைப் பாதுகாக்கும் திருஅவையின் REPAM என்ற கூட்டமைப்பு, தனது நடவடிக்கைகள் குறித்து, திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு விளக்கியது.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அவைத் தலைவர் பேராயர் Pedro Ricardo Barreto Jimeno ஆகியோர் அடங்கிய குழு செய்தியாளர்களுக்கு விளக்கியது.
பெருமளவான சுரங்கத் திட்டங்கள், வெப்பநிலை மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவற்றால், அமேசான் பகுதியும், அம்மக்களின் கலாச்சாரமும் அழிந்து வருகின்றன என்று பேராயர் Barreto கூறினார்.
இம்மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதன் மூலம் அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில் REPAM அமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் விளக்கினார் பேராயர் Barreto.
உலகில் மிகப் பெரிய வெப்பமண்டல காட்டுப் பகுதியாகிய அமேசான், அறுபது இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது, Guyana, Suriname, French Guyana, Venezuela, Ecuador, Colombia, Bolivia, Peru, Brazil ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அமேசான் காடுகளில் 390 பூர்வீக இனங்களைச் சேர்ந்த 2,779,478 பூர்வீக இன மக்களும், 137 தனித்து வாழும் (யாரோடும் தொடர்பில்லாத) பூர்வீக மக்களும் உள்ளனர். இவர்கள், 240 மொழிகளைப் பேசுகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மியான்மார் இராணுவமும், இனப் புரட்சிப்படையினரும் உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தல்
மார்ச்,03,2015. மியான்மார் இராணுவத் தலைவர்களும், பல்வேறு
இனங்களின் புரட்சிப்படைத் தலைவர்களும் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை
நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு
வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டின் முதல் கர்தினால்.
மியான்மாரின் தெற்கே, Bago மாநிலத்தில் அமைந்துள்ள Nyaunglebin அன்னைமரியா திருத்தலத்துக்கு, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் என, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுடன் ஆண்டுத் திருப்பயணத்தை மேற்கொண்ட யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், நாட்டில் ஒற்றுமையும் ஒப்புரவும் ஏற்படுமாறு தான் விடுத்துவரும் அழைப்பை மீண்டும் முன்வைத்தார்.
மியான்மார் இராணுவம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களோடு, குறிப்பாக, ஷான்
மாநிலத்தில் கச்சின் விடுதலைப் படையினர் மற்றும் கோகாங் புரட்சிப்
படையினரோடு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் போ.
மியான்மார் வரலாற்றில் முதன்முறையாக கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள இவரும், மற்ற அருள்பணியாளர்களும், இத்திருப்பயணத்தில் அமைதிப் புறாக்களையும் பறக்கவிட்டனர்.
மியான்மாரில் 135க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
4. அரபு வசந்தம் எழுச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் நம்பிக்கை இழக்கவில்லை
மார்ச்,03,2015. தற்போது முழுமையான மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வட
ஆப்ரிக்காவில் அரபு வசந்தம் என்ற எழுச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால்
தாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்று அப்பகுதி ஆயர்கள் கூறியுள்ளனர்.
'அத் லிமினா' சந்திப்பையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று சந்தித்த, மொரோக்கோ, அல்ஜீரியா, டுனிசியா, லிபியா ஆகிய வட ஆப்ரிக்க நாடுகளின் 10 ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
வட ஆப்ரிக்காவின் இப்பகுதி, புவியியல் மற்றும் கலாச்சார அமைப்பின்படி, ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகியவை சந்திக்கும் பகுதியாக அமைந்துள்ளது என்றுரைத்துள்ள ஆயர்கள், வட
ஆப்ரிக்காவில் தாங்கள் நம்பிக்கையின் பணியாளர்களாக வாழ்வதற்கு ஆண்டவரால்
அழைக்கப்பட்டிருப்பதை உறுதியாக உணர முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
வட
ஆப்ரிக்காவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவை முஸ்லிம்களோடு உரையாடலில் ஈடுபட்டு
சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், CERNA எனப்படும் இப்பகுதி ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
5. உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்கு எதிராக பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை
மார்ச்,03,2015.
உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராட வேண்டுமென்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களுக்கு விடுத்துவரும் அழைப்பை
செயல்படுத்தும் விதமாக, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை இத்தவக்காலத்தில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் நிறுவனத் தலைவர் பேராயர் Rolando Tria Tirona அவர்கள் இம்முயற்சி பற்றிக் கூறுகையில், ஏழைகளின் குரலுக்குச் செவிமடுப்பது, சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது ஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விளக்கினார்.
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு மக்களைத் தயாரிக்கும் ஒரு முயற்சியாக, ஏழைகள்
மற்றும் நசுக்கப்பட்ட மக்களின் நெருக்கடிநிலைகளைச் சிந்திப்பதற்குத்
தலத்திருஅவை விசுவாசிகளைத் தூண்டி வருகின்றது என்றும் பேராயர் Tirona அவர்கள் கூறினார்.
மேலும், கருக்கலைப்பு நடவடிக்கைகளைத் தடைசெய்து, குடும்ப வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் அரசு-சாரா அமைப்பு ஒன்று இம்மாதம் 6 முதல் 8 வரை கருத்தரங்கு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி
6. பாகிஸ்தானில் தவக்கால ஆன்மீகப் பிறரன்புப் பயணங்கள்
மார்ச்,03,2015. தவக்காலத்தை சிறப்பான ஒரு காலமாக அமைக்கும் நோக்கத்தில், பாகிஸ்தான் உயர்மறைமாவட்டம் ஒன்று பிறரன்புப் பயணங்களை நடத்தி வருகின்றது.
மனவளர்ச்சி குன்றியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைப் பாரமரிக்கும் இல்லங்கள், கருணை இல்லங்கள், பிரச்சனையில் சிக்கியுள்ள சிறார் மையங்கள், Mariamabad
அன்னைமரியா திருத்தலம் போன்ற இடங்கள் ஒவ்வொன்றுக்கும் தவக்காலத்தில்
ஒருநாள் ஆன்மீகப் பயணமாக விசுவாசிகளை அழைத்துச் செல்கின்றது லாகூர்
உயர்மறைமாவட்டம்.
இம்மையங்களைப் பார்வையிடும் மக்கள், அவ்வில்லத்தில் இருப்பவர்களுக்குப் பொருளுதவி செய்வதோடு, அவர்களோடு அமர்ந்து உண்டு செபித்து ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் லாகூர் உயர்மறைமாவட்டம், இந்தப் பிறரன்பு ஆன்மீகப் பயணங்களை தவக்காலத்தில் நடத்தி வருகின்றது. Mariamabad அன்னைமரியா திருத்தலம், தெற்கு ஆசியாவில் புகழ்பெற்றதாகும்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
7. இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கு 3 நாள் செப வழிபாடுகள்
மார்ச்,03,2015. இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவது மற்றும் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்வைத் தடைசெய்யும் விதமாக, மூன்று நாள்களுக்கு குறைந்தது நூறு இடங்களில் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், இப்புதன் முதல் மூன்று நாள்களுக்கு பல்வேறு ஆலயங்களில் செப வழிபாடுகளை நடத்தவிருப்பதாக, ஜபல்பூர் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை போதகர் F.J.Valsalen அவர்கள் அறிவித்துள்ளார்.
இன்டோர், ஜபல்பூர், உஜ்ஜெய்ன், டமோ, குவாலியர், போபால் ஆகிய ஆறு மாவட்டங்களில் இச்சபையின் போதகர்கள் செப வழிபாடுகளை நடத்துவார்கள் என்றும், இந்துத் தீவிரவாத அமைப்பின் ghar wapsi என்ற கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி மிகவும் கவலை தருகின்றது என்றும் போதகர் Valsalen அவர்கள் கூறினார்.
ஆதாரம் : DNA / வத்திக்கான் வானொலி
8. போதைப்பொருள் வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சரிசமநிலை அவசியம்
மார்ச்,03,2015.
சட்டத்துக்குப் பறம்பான போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும்
நடவடிக்கையில் சரிசமநிலையுடன் அணுகும் முறையைப் பரிந்துரைத்துள்ளது
அனைத்துலக போதைப்பொருள் கட்டுப்பாட்டு கழகம்(INCB).
போதைப்பொருள் வர்த்தகமும், போதைப்பொருளைப் பயன்பாடும் உலகெங்கும் கடும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன என்று INCB என்ற அக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் cocaine வர்த்தகம், ஆப்ரிக்காவில் amphetamine அறிமுகம், ஆசியாவில் poppy பயிரிடப்படுவது, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில மருந்துகள் என உலகின் அனைத்துப் பகுதிகளும் போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதனைக் களைவதற்குச் சரிசமநிலை அணுகுமுறை அவசியம் என்றும் INCB கழகத் தலைவர் மருத்துவர் Lochan Naidoo கூறினார்.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
9. HIV கிருமியின் இரண்டு உட்பிரிவுகள் கேமரூன் கொரில்லாக்களிடமிருந்து பரவல்
மார்ச்,03,2015. எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் HIV நோய்க் கிருமியின் நான்குவகைகளில் இரண்டு வகை, ஆப்ரிக்காவின்
மேற்கில் தாழ்வான பகுதிகளில் வாழும் கொரில்லாக்களிடமிருந்து
பரவியிருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு வகைகளும், கேமரூன் நாட்டுக் கெரில்லாக்களிடமிருந்து பரவியிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
அந்த
நோய்க் கிருமியின் மற்ற இரண்டு வகைகளும் கேமரூன் நாட்டை சேர்ந்த
சிம்பன்சிகளிடமிருந்து வந்திருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
கேமரூன், காபோன், காங்கோ சனநாயக குடியரசு, உகாண்டா
ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் கொரில்லாக்களிடம் ஆய்வுகளை நடத்திய
பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், தற்போதைய கண்டுபிடிப்பால், எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் நோய்க் கிருமியின் அனைத்து உட்பிரிவுகளுமே எங்கிருந்து வந்தன என்பது தெரிவியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.
மனிதர்களிடையே உயிர்க்கொல்லி நோய்களைப் பரப்பும் திறனுள்ள HIV நோய்க் கிருமிகளின் புகலிடமாக இந்தக் குரங்கினங்கள் இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பிரான்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த Martine Peeters அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று உலகில் 3 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர். இவர்களில் 32 இலட்சம் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். தினமும் 2,700க்கு அதிகமானவர்கள், அதாவது ஒவ்வொரு மணிக்கும் ஏறக்குறைய 240 பேர் வீதம் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment