செய்திகள் - 28.02.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - பணம் மனிதரின் சேவைக்கு உரியதாய் இருக்க வேண்டும்
2. ஒவ்வொரு நாளும் இயேசு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்
3. திருத்தந்தை திருப்பிக் கொடுத்த நன்கொடை நிதி இலங்கை ஏழைகளுக்கு விநியோகம்
4. சிரியாவில் 15 கிறிஸ்தவர்களைக் கொலையுண்டுள்ள செய்தி உண்மையல்ல
5. ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கலாச்சார அழிவை நடத்துகின்றனர், யுனெஸ்கோ
6. உலக அபூர்வ நோய் தினம் – பிப்ரவரி 28
7. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் எட்டு கோடிப் பேர் பாதிப்பு
8. செல்லிட பேசிகளில் சப்தமாக இசையைக் கேட்பதால் செவித்திறனுக்கு ஆபத்து
9. நேபாளம் உச்ச நீதிமன்றம்-உள்நாட்டுப்போர் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு மறுப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - பணம் மனிதரின் சேவைக்கு உரியதாய் இருக்க வேண்டும்
பிப்.28,2015. பணம் மனிதரின் சேவைக்கு உரியதாய் இருக்க வேண்டும், அவ்வாறு
இல்லாமல் பணம் மனிதரைக் கட்டுப்படுத்தினால் அழிவைக் கொண்டுவரும் என்று
இத்தாலிய கூட்டுறவு சங்கத்தினரிடம் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய
கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் ஏறக்குறைய ஏழாயிரம் உறுப்பினர்களை
வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து
உரையாற்றிய திருத்தந்தை, மனிதர் தெரிவுசெய்வதை ஆணையிடும் தெய்வச்சிலையாக பணம் மாறும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தார்.
மனிதர்
தங்களின் முழுத்திறமையில் எவ்வாறு வளர்வது என்பதை அறிந்திருக்கும்
பொருளாதாரத்தின் புதிய தரம் இக்காலத்தில் நமக்குத் தேவைப்படுகின்றது
என்றும், உள்ளூரிலும், பொதுச்
சமூகங்களிலும் வலிமையற்றவர்களின் சார்பாக நின்று அவர்களின் முன்னேற்றத்தை
ஊக்குவிப்பவர்களாகத் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை.
கூட்டுறவு அமைப்பில் 1+ 1= 3 என்று சொன்னால் அது தோல்வியே என்று கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை நிலைகள் பற்றி தொகுத்து வழங்கிய திருத்தந்தை, இக்காலத்தில் வேலையின்றி இருப்போருக்கு வேலைவாய்ப்பை அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அநீதியான முறையில், குறைந்த ஊதியத்துக்கு பலமணி நேரங்கள் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து கண்டித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 600 யூரோக்களுக்கு 11 மணி நேரம் வேலை செய்ய விருப்பமில்லாதவர்களை ஒதுக்கித்தள்ளும் நிலை குறித்து குறிப்பிட்டார்.
சட்டத்துக்குப் புறம்பே வேலைக்கு ஆள் அமர்த்துவதற்கு இவ்வுலகில் காணப்படும் பசி பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்று வீட்டுவேலை செய்வோரில் எத்தனைபேருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
ஏறக்குறைய
800 அருள்பணியாளர்கள் மற்றும் பங்குத்தளங்களால் இத்தாலிய கூட்டுறவு
சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இக்கூட்டமைப்பின் கிறிஸ்தவ விழுமியங்கள் எல்லாருக்கும் உரியவை என்பதையும் எடுத்துச் சொன்னார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஒவ்வொரு நாளும் இயேசு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்
பிப்.28,2015. “ஒவ்வொரு நாளும் இயேசு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்; எனவே, ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்; எனக்காகப் பரிந்து பேசும்! எனச் செபிப்போம்” என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஸ்காட்லாந்து மறைசாட்சி இயேசு சபை அருள்பணியாளர் புனித John Ogilvie அவர்கள் கொல்லப்பட்டதன் நான்காம் நூற்றாண்டு பெருவிழா நிகழ்வுகளில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, கர்தினால் கோர்மாக் மர்ஃபி ஒக்கானர் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிளாஸ்கோவில் வருகிற மார்ச் 9, 10 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் ஒக்கானர் அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்வார்.
1579ம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த புனித John Ogilvie அவர்கள், Presbyterian கிறிஸ்தவ சபையிலிருந்து கத்தோலிக்கத்துக்கு மனம் மாறியவர். தனது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்த இவர், இங்கிலாந்து
அரசர் முதலாம் ஜேம்ஸ் அவர்களை திருஅவையின் தலைவராக ஏற்க மறுத்தார். இதனால்
அரச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு 1615ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி
தூக்கிலிடப்பட்டார் புனித John Ogilvie.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை திருப்பிக் கொடுத்த நன்கொடை நிதி இலங்கை ஏழைகளுக்கு விநியோகம்
பிப்.28,2015. கடந்த சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், அவர் திருப்பிக் கொடுத்த நன்கொடை நிதியை, அந்நாட்டின் ஏழைகளுக்கு வழங்குவதற்கு இலங்கை ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக இலங்கை மக்களிடமிருந்து கிடைத்த 87 இலட்சம் ரூபாயை, கொழும்புப்
பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் திருத்தந்தையிடம் அன்பளிப்பாக
வழங்கினார். இலங்கைத் திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பும்வேளையில், திருத்தந்தையும் அந்நிதியை கர்தினால் இரஞ்சித் அவர்களிடமே திருப்பி வழங்கினார்.
இலங்கையின்
12 மறைமாவட்டங்களிலுள்ள ஏழைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு
அந்நிதியைச் செலவிடுவதற்கு ஆயர்கள் தீர்மானித்து அதைப் பங்கிட்டுக்
கொடுத்துள்ளனர் என்று இலங்கையில் பிரசுரமாகும் ஒரு தினத்தாளில்
கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15ம் தேதி காலையில் இலங்கைத் திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பும்வேளையில், 87,60,690.25 ரூபாய்க்கான காசோலையை கர்தினால் இரஞ்சித் அவர்கள் திருத்தந்தையிடம் கொடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிரியாவில் 15 கிறிஸ்தவர்களைக் கொலையுண்டுள்ள செய்தி உண்மையல்ல
பிப்.28,2015.
சிரியாவில் ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகள் குறைந்தது 15 அசீரிய
கிறிஸ்தவர்களைக் கொலை செய்துள்ளனர் என்ற செய்திகள் உண்மையல்ல என்று சிரியா
கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிகாதிகள்
எனப்படும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள் தாங்கள் பிணையக் கைதிகளாக
வைத்துள்ள ஏறக்குறைய 350 அசீரிய கிறிஸ்தவர்களைக் கொலை செய்யத்
தொடங்கியுள்ளனர் என்று பல பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதையடுத்து, இச்செய்திகள் உண்மையல்ல எனத் தெரிவித்துள்ளார் அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Antoine Audo.
al-Hasakahல் கல்தேயக் கிறிஸ்தவர்களின் தலைவராகப் பணியாற்றும் அருள்பணியாளர் Nidala அவர்களைத் தான் தொடர்பு கொண்டு பேசியபோது, கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படும் செய்தி உண்மையல்ல என்று கூறியதாக, ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் பேராயர் Antoine Audo.
மேலும், சிரியா கத்தோலிக்கப் பேராயர் Jacques Behnan Hindo அவர்களும், உண்மையென்று கூறமுடியாத வதந்திகளைப் பரப்புவது தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம் என்று, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
Khabur ஆற்றுப் பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து, ஜிகாதிகள்
கடத்தியுள்ள ஆசீரிய மற்றும் கல்தேயக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய
350 என்று சொல்லலாம் எனவும் கூறியுள்ளார் பேராயர் Hindo.
ஆயினும், சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்து குறை கூறியுள்ள பேராயர் Hindo, அனைத்துலக செம்பிறைச் சங்கம் இவ்வாரத்தில் 125 உணவுப் பொட்டலங்களை விநியோகித்தது என்று தெரிவித்தார்.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
5. ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கலாச்சார அழிவை நடத்துகின்றனர், யுனெஸ்கோ
பிப்.28,2015.
ஐ.எஸ்.ஐ.எல். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் மொசூல் அருங்காட்சியகத்தை
தாக்கும் காணொளியைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகச் சொல்லி, அவ்வன்செயல்களுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா.வின் யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கலாச்சார அழிவு நடவடிக்கைகளைச் செய்து வருவதாக, பத்திரிகையாளர் கூட்டத்தில் குற்றம் சாட்டியுள்ள யுனெஸ்கோ இயக்குனர் பொக்கோவா அவர்கள், பயங்கரவாதிகள் மக்களைக் கலங்கடிக்கும் தங்களின் யுக்திகளில் ஒன்றாக, கலாச்சாரப் பாரம்பரிய வளங்களை அழித்து வருகின்றனர் என்று கூறினார்.
ஐ.நா. பொதுச் செயலரும், பாதுகாப்பு
அவையும் இதில் உடனடியாகத் தலையிட்டு கலாச்சார பாரம்பரிய வளங்கள்
காக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பொக்கோவா.
மொசூல் அருங்காட்சியகத்தில் பழங்காலப்
பொருட்களை அழிப்பதைக் காட்டுகின்ற காணொளியை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு
வெளியிட்டுள்ளது. பெரிய சிலைகளை சுத்தியலால் இடித்து வீழ்த்தி உடைப்பதாக
அதில் உள்ளது. கி.மு. 9-ம் நூற்றாண்டு அசீரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருள்களில் உள்ளது.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
6. உலக அபூர்வ நோய் தினம் – பிப்ரவரி 28
பிப்.28,2015. அபூர்வ நோய்களுக்கான சிகிச்சையும், அந்நோய்கள்
குறித்த ஆராய்ச்சிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பென்சில்வேனிய
பல்கலைக்கழக கைவிடப்பட்டநோய் ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிப்ரவரி 28, இச்சனிக்கிழமையன்று உலக அபூர்வ நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்ட இம்மையம், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கேட்டுள்ளது.
கைவிடப்பட்ட
நோய்கள் என்று கூறப்படும் அபூர்வ நோய்களால் அமெரிக்க ஐக்கிய நாட்டில்
மட்டும் இரண்டு கோடியே ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஓர் அபூர்வ நோயால் குறைந்தது இரண்டு இலட்சம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல நோய்கள் பிறப்பிலேயே வருபவை.
இந்நோய்களால் ஏறக்குறைய 30 விழுக்காட்டுச் சிறார் 5 வயதுக்குள்ளே இறந்து
விடுகின்றனர்.
பிறவிப் பார்வையின்மை, கல்லீரல் பிரச்சனை, Duchenne Muscular Dystrophy போன்ற நோய்களைப் பட்டியலிட்டுள்ளது பென்சில்வேனிய ஆய்வு மையம்.
ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி
7. ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் எட்டு கோடிப் பேர் பாதிப்பு
பிப்.28,2015.
ஆசிய-பசிபிக் பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் ஏறக்குறைய எட்டு கோடிப்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறாயிரம் கோடி டாலர் மதிப்புடைய
பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா. கூறியுள்ளது.
வருகிற மாதத்தில் ஜப்பானில் கூட்டம் நடத்தவிருக்கும் ஆசிய-பசிபிக் பகுதி தலைவர்கள் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பார்கள் என்று, ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பகுதி பொருளாதார மற்றும் சமூக அவை(ESCAP) இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
2014ம் ஆண்டில் உலகில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கும் மேல் ஆசிய-பசிபிக் பகுதியில் இடம்பெற்றன என்றும், சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படாவிட்டாலும், கடும்புயல், வெள்ளம், நிலச்சரிவுகள் போன்றவற்றால் அப்பகுதிகள் பாதிக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
அனைத்துப் பேரிடர்களிலும், இத்தகையப் பேரிடர்கள் 85 விழுக்காடு என்றும் கூறும் அவ்வறிக்கை, இந்தியாவில் ஹூட்ஹூட் புயலால் 1100 கோடி டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி
8. செல்லிட பேசிகளில் சப்தமாக இசையைக் கேட்பதால் செவித்திறனுக்கு ஆபத்து
பிப்.28,2015. பாடல்களைச் சப்தமாக கேட்பதால் உலகில் இலட்சக்கணக்கான இளையோர் செவித்திறனை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
நடுத்தர மற்றும் அதிக வருவாய் உள்ள நாடுகளில் இந்நிறுவனம் எடுத்த ஆய்வின்படி, 12க்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தங்களின் கைபேசிகளிலும், பிற இசைக் கருவிகளிலும் ஒலியின் சப்தத்தை மிக அதிகமாக வைத்து கேட்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலை குறித்து எச்சரித்துள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இதனால் இவர்களின் கேட்கும்திறன் பாதிக்கப்படும் என்று கூறியது.
எட்டு மணி நேரத்துக்கு 85 decibelக்கு மேலும், 15 நிமிடங்களுக்கு 100 decibelலுக்கு மேலும் ஒலியின் திறன் இருந்தால் ஆபத்து அதிகம் என்றும், ஒரு
நாளைக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் தங்களின் தனிப்பட்ட இசைக் கருவிகளில்
இசையைக் கேட்காமல் இருப்பது நல்லது என்றும் பரிந்துரைத்துள்ளது ஐ.நா.வின்
நலவாழ்வு நிறுவனம்.
ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி
9. நேபாளம் உச்ச நீதிமன்றம்-உள்நாட்டுப்போர் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு மறுப்பு
பிப்.28,2015.
உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகளைக் கடுமையாய் மீறிய குற்றவாளிகளுக்கு
மன்னிப்பு வழங்குவதற்கு நேபாள நீதி சார்ந்த சட்டவிதியில் உள்ள நிபந்தனைகளை
இரத்து செய்துள்ளது நேபாள உச்ச நீதிமன்றம்.
நீதியின் கோட்பாடுகள், அரசியல் அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு விதிகள், அனைத்துலக சட்டம், நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றவாளிகள் செயல்படுகிறார்கள் என்று சொல்லி, இக்குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சலுகையை இரத்து செய்துள்ளது நேபாள உச்ச நீதிமன்றம்.
உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 234 பேர், 2014ம் ஆண்டு ஜூனில் பதிவு செய்த வழக்கை விசாரித்த நேபாள உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
நேபாள அரசும், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளது.
1996க்கும் 2006ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நேபாள மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுக்கும்,
அரசின் பாதுகாப்புப் படைக்கும் இடையே நடந்த சண்டையில் 17 ஆயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1300 பேர் காணாமல் போயுள்ளனர்.
No comments:
Post a Comment