Thursday, 5 March 2015

செய்திகள்-02.03.15

செய்திகள்-02.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம்மை நாமே தீர்ப்பிட கற்றுக்கொள்வதே கிறிஸ்தவத்தின் முதல்படி

2. லிபியாவில் பணிகளைத் தொடரும் திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு

3. திருத்தந்தை, குர்திஸ்தான் மாநிலப் பிரதமர் சந்திப்பு

4. திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை

5. திருத்தந்தை - சிரியா, ஈராக் வெனிசுவேலாவில் அமைதி வேண்டும்

6. கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் 4000 இந்தியர்கள்

7. காங்கோவில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக் கொலை

8. தென் சுடானில் அரச ஆதரவு இயக்கத்தால் சிறார்கள் கடத்தப்படல்

9. மாரடைப்பால் மரணம் நிகழ்வதற்கு உடல் பருமனும் ஒரு முக்கியக் காரணம்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம்மை நாமே தீர்ப்பிட கற்றுக்கொள்வதே கிறிஸ்தவத்தின் முதல்படி

மார்ச்,02,2015. மற்றவர்களைத் தீர்ப்பிடுவது நமக்கு எளிதாக உள்ளது, ஆனால் நம்மையே நாம் முதலில் தீர்ப்பிடக் கற்றுக்கொள்ளும்போதுதான், கிறிஸ்தவ பயணத்தில் முன்னேற்றம் காணமுடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் பாவிகள் என்பதை மனதில்கொண்டு நம்மையே நாம் சரியான முறையில் தீர்ப்பிட கற்றுக்கொள்வதே கிறிஸ்தவத்தின் முதல்படி என்றார்.
நம்மை நாமே நியாயப்படுத்துவதில் நாம் தலைசிறந்து விளங்குகின்றோம், ‘அது நானில்லை’, ‘அது என் தவறில்லை’, ‘எனக்கு எதுவும் தெரியாது என்றெல்லாம் தவறுகளிலிருந்து தப்பிக்கப் பார்ப்பது கிறிஸ்தவ வாழ்வல்ல என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது எளிது, ஆனால் அங்கு வித்தியாசமாகச் செயல்பட்டு, நம் தவறுகளை ஏற்கும்போது முதலில் கவலை வந்தாலும், இறுதியில் அது அமைதியையும் நலத்தையுமே நமக்கு வழங்குகின்றது என்றார்.
நம் பாவங்கள் குறித்து வெட்கப்படுதல், இறை இரக்கம் குறித்து பெருமைப்படல் போன்றவை குறித்தும் தன் மறையுரையில் விரிவாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி.

2. லிபியாவில் பணிகளைத் தொடரும் திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு

மார்ச்,02,2015 லிபியாவில் நிலவிவரும் அண்மைய பதட்ட நிலைகள் மத்தியிலும், தங்கள் பணிகளைத் தொடர்ந்துவரும் அந்நாட்டு ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினருக்கு தன் நன்றியை வெளியிடுவதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த CERNA எனப்படும் வட ஆப்ரிக்கப் பகுதி நாடுகளின் 10 ஆயர்களை, இத்திங்களன்று  திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபியாவின் இன்றைய நிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டதோடு, அங்குள்ள தலத்திருஅவை பொறுப்பாளர்களின் தன்னலமற்ற பணி குறித்த மகிழ்வையும் தெரிவித்தார்.
CERNA என்ற ஆயர் பேரவையின் கீழுள்ள Morocco, Algeria, Tunisia மற்றும் Libya வில் உள்ள துறவு சபையினர், தங்கள் நாட்டு சகோதர சகோதரிகளுக்காக தங்களையே அர்ப்பணித்து, பணிகளில் ஈடுபட்டுள்ளது, தொடரவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கமளித்தார்.
மதங்களுக்கிடையே கலந்துரையாடல்கள் ஊக்குவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை, குர்திஸ்தான் மாநிலப் பிரதமர் சந்திப்பு
மார்ச்02,2015. ஈராக்கின் குர்திஸ்தான் மாநிலப் பிரதமர் Nechirvan Barzani அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், பாப்பிறை பதக்கம் ஒன்றை Nechirvan Barzani அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை.
இத்தாலியிலுள்ள குர்திஸ்தான் மாநிலப் பிரதிநிதி Rezan Kader உட்பட நான்கு ஆண் அதிகாரிகளும் குர்திஸ்தான் பிரதமருடன் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றிருந்தனர். மேலும், ஐ.நா.வின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர் இரினோ பொக்கோவா அவர்களும், வத்திக்கானில் இத்திங்களன்று திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.
திருப்பீட நாடுகளுக்கு இடையேயான பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher, இலத்தீன் அமெரிக்க பாப்பிறை பணிக்குழுவின் உதவித் தலைவர் Guzman Carriquiry ஆகியோரையும் இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை

மார்ச்,02,2015 தன் சீடர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், சிலுவையின் பாதையில் நடப்பதற்கு ஊக்கமளிக்கவும் தன் உருமாற்றம் நிகழ்வை ஒரு கருவியாக இயேசு பயன்படுத்தினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தியில் தரப்பட்டுள்ள 'இயேசுவின் உருமாற்றம்' நிகழ்ச்சி குறித்து நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமையர்களின் ஆட்சியிலிருந்து தங்கள் நாட்டை விடுவிப்பதற்கு மெசியா வருவார் என்று மக்கள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை இயேசு விரும்பவில்லை என்று கூறினார்.
தன்னுடைய மகிமை நிறை பாடுகள் குறித்து எடுத்துரைத்தவற்றை சீடர்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை உணரத்தான் இயேசு, தன் உயிர்ப்புக்குப் பின் வெளிப்படப்போகும் மகிமையின் முன்னோட்டத்தை தன் மூன்று முக்கியச் சீடர்களுக்கு உருமாற்றத்தின் வழி காண்பித்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இயேசுவின் உருமாற்றத்தின்போது மோசேயும், எலியாவும் தோன்றியது, சட்டம் மற்றும் இறைவாக்கினர்களின் அடையாளமாகவும், அனைத்தும் இயேசுவில் தோன்றி, அவரிலேயே முடிவடைகின்றன என்பதை சுட்டிக்காட்டுபவைகளாக உள்ளன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
நாமும் நம் வாழ்வை இழந்து மற்றவர்களின் மீட்புக்குக் காரணமாக இருக்கும்போது, மகிமையடைவோம்; ஏனெனில், சிலுவைகளும், துன்பங்களும் இறுதியில் மகிழ்ச்சியை நோக்கியே இட்டுச் செல்கின்றன என்று தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை - சிரியா, ஈராக் வெனிசுவேலாவில் அமைதி வேண்டும்

மார்ச்,02,2015 சிரியா, ஈராக் வெனிசுவேலா ஆகிய நாடுகளில், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்களை மறந்துவிடாமல், அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்ற அழைப்பை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வன்முறை, கடத்தல், துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு கிறிஸ்தவர்கள் உள்ளாவது குறித்த செய்திகள், சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "சகிக்கமுடியாத இந்தக் கொடுஞ்செயல்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நாம் தொடர்ந்து செபிக்கிறோம் என்பதையும், துன்புறுவோரை நாம் மறக்கவில்லை என்பதையும் இப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் உணரட்டும்" என்றும் கூறினார்.
மத்தியக் கிழக்குப் பகுதி வாழ் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு செபங்களை எழுப்பியத் திருத்தந்தை, தொடர்ந்து, தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் பதட்டநிலைகள் குறைவதற்குச் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
அனைவரும் வன்முறைகளை மறுப்பதோடு, ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கான மதிப்பைக் காட்டுமாறும் தன் அழைப்பை முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

6. கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் 4000 இந்தியர்கள்

மார்ச்,02,2015 இந்தியா, மற்றும் இலங்கை கடல்படை பாதுகாப்பு உதவியுடன், கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா, சிறப்புடன் நடந்தேறியுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், பாக் வளைகுடா கடலில் அமைந்துள்ள கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து 110 படகுகளில் சென்ற 4003 பேரும், இலங்கையிலிருந்து 3000த்திற்கும் மேற்பட்டோரும் இச்சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இடம்பெறும் கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, இரு நாடுகளிலுமிருந்து வந்திருந்த பக்தர்களுடன், சிலுவைப்பாதை, ஞாயிறு காலை திருப்பலி மற்றும் தேர்பவனி இடம்பெற்றன.
1974ம் ஆண்டு, கச்சத் தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விழா நடத்துவதில் ஏற்பட்டச் சிக்கல்கள், 2010ம் ஆண்டிற்குப்பின், ஓரளவு சுமுகமாகியுள்ளதைத் தொடர்ந்து, திருவிழாக் கொண்டாட்டங்கள் இருநாட்டு மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகிறது.
1913ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர், கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தை ஓலைக் குடிசையாக எழுப்பினர்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

7. காங்கோவில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக் கொலை

மார்ச்,02,2015. காங்கோ சனநாயக குடியரசின் Mweso நகர் அருள்பணியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
Mweso பங்குதளத்தின் நிதி நிர்வாகத்தைக் கவனித்துவந்த அருள்பணி Jean-Paul Kakule Kyalembera கொலைச்செய்யப்பட்டுள்ளதற்கு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களே காரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார் அப்பகுதியின் Goma ஆயர் Theophile Kaboy Ruboneka.
மாலையில் கோவிலை மூடச்சென்றபோது, அதனுள் மறைந்திருந்த திருடர்கள், அருள்பணி Kyalembera அவர்களை தலையிலும் வயிற்றிலும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆதாரம் : FIDES / வத்திக்கான் வானொலி.

8. தென் சுடானில் அரச ஆதரவு இயக்கத்தால் சிறார்கள் கடத்தப்படல்

மார்ச்,02,2015. தென் சுடான் அரசுடன் இணைந்து செயலாற்றும் தீவிரவாதக்குழு ஒன்றாலேயே அண்மையில் அந்நாட்டுச் சிறார்கள் கடத்தப்பட்டதாக ஐ.நா. நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தென் சுடானில் அரசு ஆதரவு இயக்கத்தால் கடத்தப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் இருக்கிறது எனவும், முன்னர் நம்பப்பட்டது போல் அது 89 அல்ல என்றும் ஐநாவின் சிறார்களுக்கான அமைப்பு, யுனிசெஃப் கூறியுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டவர்களுள் பலர் பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், 12வயது வரை கொண்ட அச்சிறுவர்கள் ஆயுதம் தாங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த‌ தீவிரவாதக் குழு எவ்வகையிலும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

9. மாரடைப்பால் மரணம் நிகழ்வதற்கு உடல் பருமனும் ஒரு முக்கியக் காரணம்

மார்ச்,02,2015. அண்மை ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 4 கோடி பேருக்கு உடல்பருமன் பிரச்சனை இருப்பதாகவும், இது 2030ம் ஆண்டில் இரு மடங்காகும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமனுக்கு, பரம்பரை, உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை போன்றவற்றை முக்கியக் காரணமாகக் காட்டும் உலக நலவாழ்வு நிறுவனம், கடந்த ஆண்டு உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடந்தவர்களில் உடல் பருமனால் இறந்தவர்கள்தான் அதிகம் என மேலும் தெரிவிக்கிறது.
சில மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்பு ஹார்மோன்களின் அதீத விளைவுகளால் உடல் எடை அதிகரிப்பு, உடல்பயிற்சிகளின்மை, நொறுக்குத் தீனிகள் போன்றவைகளையும் உடல்பருமனுக்கான சில காரணங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளது, உலக நலவாழ்வு அமைப்பு.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...