Thursday, 5 March 2015

செய்திகள் - 27.02.15

செய்திகள் - 27.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. ஆண்டு தியானத்தை நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்

2. திருத்தந்தையின் செபங்கள் சிரியா கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலின் ஊற்று

3. சிரியா நெருக்கடியைக் களைவதற்கு அனைத்துலகும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தல்

4. சிரியாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி, ஐ.நா.

5. நல்ல குடும்பங்கள் நல்ல நாட்டை உருவாக்குகின்றன, நைஜீரிய ஆயர்கள்

6. மதம் சார்ந்த சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இந்தியாவில் 2013ல் அதிகம்

7. உலக புகையிலைக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் 10ம் ஆண்டு நிறைவு

8. பூமியைவிட பெரிய கருந்துளை, சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. ஆண்டு தியானத்தை நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.27,2015. தியான நாள்களில் தங்கள் இதயங்களில் விதைக்கப்பட்ட விதைகள் வளர்வதற்கு ஆண்டவர் இயேசு உதவி செய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்பணியாளர்களுக்குத் தியானம் கொடுப்பது எளிதானதல்ல, இவர்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள், எனினும், தனக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் தியானப் போதனைகளை வழங்குவதில் தியானப் போதகர் கார்மேல் சபை அருள்பணியாளர் Bruno Secondin அவர்கள் வெற்றியடைந்துள்ளார் என்று அவருக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.
இத்தியானத்தைச் செய்த நாங்கள் அனைவரும் எம் கரங்களிலும் இதயங்களிலும் எலியாவின் மேலாடையின் ஒரு துண்டுத்துணியை எம் இதயங்களிலும் கரங்களிலும் எடுத்துச் செல்வோம் என்று தான் நம்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.
உரோம் நகருக்குத் தெற்கே ஏறக்குறைய இருபது மைல் தூரத்திலுள்ள அரிச்சா நகரில் விண்ணகப் போதகர் தியான இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(பிப்.22) தொடங்கிய ஐந்து நாள் தியானத்தை இவ்வெள்ளி காலையில் நிறைவுசெய்து வத்திக்கான் வந்தடைந்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவாக்கினர் எலியா காலத்தில் இடம்பெற்ற போலித் தெய்வ வழிபாட்டை, விசுவாசத்தில் ஆழமற்ற நவீன சமய உணர்வோடு ஒப்புமைப்படுத்தி தியான உரையாற்றிய அருள்பணி Secondin அவர்கள், உண்மையான மற்றும் உயிர்த்துடிப்பான வழிபாட்டில் ஆர்வம் காட்டுமாறு வலியுறுத்தினார்.
'வாழும் இறைவனின் பணியாளர்களும் இறைவாக்கினர்களும்' என்பது இத்தியானத்தின்  தலைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் செபங்கள் சிரியா கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலின் ஊற்று

பிப்.27,2015. சிரியாவில் இஸ்லாம் தீவிரவாதிகளின் பிடியில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிக்கியிருக்கும் துன்பம் நிறைந்த சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளும், செபங்களும் மிகுந்த ஆறுதலாக உள்ளன என்று சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தவக்கால ஆண்டுத் தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும் சிரியாவின் நிலைமைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்து, சிரியாவுக்காகச் செபிப்பதோடு, தங்களையும் செபிக்குமாறு கேட்டதாகவும் கூறினர்  சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள்.
ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள், கடந்த சில நாள்களாக, சிரியாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள அசீரிய கிறிஸ்தவக் கிராமங்களை இலக்கு வைத்து  நடத்திவரும் வன்முறையில் 350க்கும் மேற்பட்டவர்கள் அவர்களிடம் சிக்கியுள்ளனர்.   இக்கிறிஸ்தவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட அசீரிய இளைஞர்களில் ஏறக்குறைய 15 பேர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
சிரியாவின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள், சிரியாவின் நெருக்கடி நிலைமையில் இதுவரை எந்த மாற்றமும் தெரியாததால், மக்கள் அனைத்துலக சமூகத்தால் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர் என்று தெரிவித்தார்.  
மேலும், அசீரியக் கிறிஸ்தவர்களில் ஐந்தாயிரத்துக்கு அதிகமானோர் துருக்கி எல்லைகளில் அடைக்கலம் தேடுகின்றனர் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அசீரியக் கிறிஸ்தவ சமூகம், மத்திய கிழக்கில் மிகவும் பழமையான கிறிஸ்தவ சமூகங்களில் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. சிரியா-நெருக்கடியைக் களைவதற்கு அனைத்துலகும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தல்

பிப்.27,2015. சிரியாவில் 12 அசீரிய கிறிஸ்தவக் கிராமங்களில் குறைந்தது பத்துக் கிராமங்கள், ஜிகாதிகள் என்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலைமை குறித்து கத்தோலிக்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்துவரும் சிரியா முதுபெரும் தந்தையர்கள், சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெறும் நெருக்கடி நிலைகளைக் களைவதற்கு அனைத்துலக சமுதாயம் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்துலக சமுதாயம், சிரியா நாட்டின் நெருக்கடியைக் களைவதற்கு சரியான வழியில் செயல்படாமல் இருப்பது அதிர்ச்சியாக இருப்பதாகவும், ஜிகாதிகளின் வன்முறைகளுக்குப் பலியாகிவரும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இதுவே நேரம் எனவும் மெல்கிதே கத்தோலிக்க முதுபெரும் தந்தை Gregoire Laham அவர்கள் கூறினார்.
மேலும், மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் இன அழிவை எதிர்நோக்குகின்றனர், அப்பகுதியின் நிலையான தன்மையும் அமைதியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

4. சிரியாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி, ஐ.நா.    

பிப்.27,2015. சிரியாவில் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு ஐந்தாவது ஆண்டாக போர் நடந்துவருவதால் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு அவையிடம் கூறியுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.
சிரியாவில் போரிடும் குழுவினர் அப்பாவி மக்களைக் கொலை செய்து வருவதாகவும், நாட்டின் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பாவி மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று ஐ.நா. மனிதாபிமான விவகார அதிகாரி Kyung-Wha Kang கூறினார்.
கடந்த டிசம்பரிலிருந்து ஏறக்குறைய ஆறு இலட்சம் பேர் வரை எந்தவித உணவு உதவியும் பெறவில்லை என்று கூறிய Kang அவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான உரிமை மீறல் செய்திகளை தாங்கள் கேட்டு வருவதாகவும் கூறினார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால், கடந்த ஓராண்டில் துருக்கிக்குள் இடம்பெயர்ந்துள்ள ஈராக்கியர்களின் எண்ணிக்கை இருபது இலட்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே, வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள், பழங்காலப் பொருட்களை அழிப்பதைக் காட்டுகின்ற காணொளியை ஐ.எஸ். அரசு வெளியிட்டுள்ளது. பெரிய சிலைகளை இடித்து சுத்தியலால் அவற்றை அடித்து வீழ்த்தி உடைப்பதாக அதில் உள்ளது.
கி.மு. 9-ம் நூற்றாண்டு அசீரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருள்களில் உள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி

5. நல்ல குடும்பங்கள் நல்ல நாட்டை உருவாக்குகின்றன, நைஜீரிய ஆயர்கள்

பிப்.27,2015. நற்பண்பின் முதல் பள்ளியாகிய குடும்பம், பொருளியக் கோட்பாடு மற்றும் தன்னலத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் நல்ல குடும்பங்கள் நல்ல நாட்டை உருவாக்குகின்றன என்றும் நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
2015ம் ஆண்டின் தங்களது முதல் ஆண்டுக் கூட்டத்தை இவ்வியாழனன்று முடித்து அறிக்கை வெளியிட்டுள்ள நைஜீரிய ஆயர்கள், ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமாக உள்ள திரைப்படத் துறைகளும், சமூக ஊடகங்களும், குடும்பத்துக்கும், உறுதியான திருமண வாழ்வுக்கும் மேலும் மேலும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்று கூறியுள்ளனர்.
Boko Haram தீவிரவாத அமைப்பின் வன்முறைகளையும், வரவிருக்கும் பொதுத்தேர்தல் ஏற்படுத்தியுள்ள பதட்டநிலைகளையும் குறிப்பிடாமல், குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிப் பேச முடியாது என்றும் ஆயர்கள் தங்களின் அறிக்கையில்   கூறியுள்ளனர்.
மேலும், நைஜீரிய ஆயர்களின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அரசுத்தலைவர் Goodluck Jonathan அவர்கள், வருகிற மார்ச் 28ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், நைஜீரியாவின் மக்களாட்சியைப் பாதிக்காத வகையில் இடம்பெறும் என்பதற்கு உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, நைஜீரியாவின் வடக்கில் Boko Haram தீவிரவாதிகள் நடத்திய குண்டுவைப்பு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வெள்ளிக்கிழமை செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மதம் சார்ந்த சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இந்தியாவில் 2013ல் அதிகம்

பிப்.27,2015. மதம் தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இந்தியாவிலும், மத நம்பிக்கைகள் மற்றும் மதத்தைக் கடைப்பிடிப்பது மீது அரசின் கட்டுப்பாடுகள்  சீனாவிலும்  2013ம் ஆண்டில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலக அளவில் மதத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள Pew நிறுவனம், மதத்தோடு தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வுகள் 2013ம் ஆண்டில் குறைந்திருந்தாலும், உலகின் 25 விழுக்காட்டு நாடுகளில் இன்னும் இந்நிலை அதிக அளவில் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.
மதம் சார்ந்த சொத்துக்களை அழிப்பது, புனித நூல்களை வன்முறைத் தாக்குதலால் இழிவுபடுத்துவது, இத்தாக்குதல்களில் மனிதர் இறப்பது, காயமடைவது என, மதத்தோடு தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த ஆய்வறிக்கை.
இந்தியா, சீனா போன்ற (உலக மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர்) உலக மக்கள் தொகை அதிகமாகவுள்ள சில நாடுகளில் வாழும் மக்கள், 2013ம் ஆண்டில், தங்களின் மத நம்பிக்கைகளில் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கடந்த மூன்றாண்டுகளில் சமயம் தொடர்புடைய சமூகக் காழ்ப்புணர்வு நடவடிக்கைகள் இரு மடங்குக்குமேல் அதிகரித்துள்ளன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி

7. உலக புகையிலைக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் 10ம் ஆண்டு நிறைவு

பிப்.27,2015. புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் அமலுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும், இவ்வுலகில் புகையிலைப் பயன்பாடு இன்னும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
2005ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இந்த உலகளாவிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இது குறித்து கருத்துப் பேசிய இந்நிறுவனம், புகையிலை தொழிற்சாலைகள் புகையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கின்றன என்று கவலை தெரிவித்தது.
புகையிலைப் பயன்பாட்டால் 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு ஏறக்குறைய எண்பது இலட்சம் பேர் இறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் நாம் இழக்கும் அறுபது இலட்சம் பேரின் வாழ்வைக் காப்பாற்ற நாம் உழைக்க வேண்டும் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
உலகின் 90 விழுக்காட்டு மக்களை உள்ளடக்கிய 180 நாடுகள் இந்த உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் 80 விழுக்காட்டு நாடுகள் புகையிலையைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை ஊக்குவித்துள்ளன மற்றும் ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலையை 150 விழுக்காடு அதிகரித்துள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. பூமியைவிட பெரிய கருந்துளை, சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பிப்.27,2015. பூமியைவிட ஏறக்குறைய 1,200 கோடி அளவிலான பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
"பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து ஏறக்குறைய 90 இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதன்மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது" என்று இதனைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களில் ஒருவரான சீனாவின் Peking பல்கலைக்கழகப் பேராசிரியர் Wu Xuebing கூறுகிறார்.
சீனாவில், லிஜியாங் நகரில் உள்ள‌ விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட‌ தொலைநோக்கி உதவியுடன் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி நாடும் உறுதி செய்துள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' என்று அழைக்கப்படுகின்றன.
இதுகுறித்து சீன அறிவியல் அகாடெமியைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் சென் ஜியான்ஷெங் கூறும்போது, "பொதுவாக, இதுபோன்ற ஒரு கருந்துளையைக் கண்டுபிடிக்க 10 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கிகள்தான் பயன் படுத்தப்படும். ஆனால் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி இவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான். இது சீன விண்வெளி அறிவியலாளர்களின் அறிவுத்திறனைக் காட்டுகிறது" என்றார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...