Thursday, 5 March 2015

செய்திகள் - 26.02.15

செய்திகள் - 26.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை ஆறாம் பால், இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றிய 50ம் ஆண்டு

2. உரையாடலை வளர்க்க எத்தியோப்பியத் திருஅவை சக்திவாய்ந்த கருவி

3. அமெரிக்கா சிந்திக்கும் இராணுவத் தாக்குதல் குறித்து ஆயர்களின் மடல்

4. சிரியா நாடு வரலாற்றில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது

5. புல்டோசர்கள் முன்பு முகம் குப்புற வீழ்ந்து துறவியர் போராட்டம்

6. இந்தியத் திருஅவை, 60,000த்திற்கும் அதிகமான வயது முதிர்ந்தோருக்குப் பணி

7. இயற்கைப் பேரிடர்களால் ஆசிய பசிபிக் பகுதியில் 8 கோடி மக்கள் பாதிப்பு

8. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை ஆறாம் பால், இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றிய 50ம் ஆண்டு

பிப்.26,2015 உலகின் அனைத்து பங்குக் கோவில்களிலும், இன்னும் வேறு பல கோவில்களிலும் மக்கள் பங்கேற்கும் திருப்பலியில், இன்று நாம் புதிய வழிபாட்டு வடிவத்தை துவக்குகிறோம் என்று முன்னாள் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் உரோம் நகரில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில் 1965ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி முதன்முதலாக இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றுகையில் இவ்வாறு கூறினார்.
திருஅவை வரலாற்றில் நிகழ்ந்த இந்த முக்கிய மாற்றத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், Via Appia Nuova வில் அமைந்துள்ள அதே ஆலயத்தில் வருகிற மார்ச் 7ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றச் செல்கிறார்.
இந்தப் பொன்விழாவையொட்டி, உரோம் மறைமாவட்டத்தின் திருவழிபாட்டு பணிக்குழு, "நன்றியில் இணைந்து" என்ற மையக்கருத்துடன் கருத்தரங்கு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அகில உலக நற்கருணை மாநாடுகளுக்குப் பொறுப்பாளராகச் செயலாற்றும் பேராயர் பியெரோ மரினி அவர்கள், "வழிபடும் மக்களுக்கிடையே உரையாடலை வளர்க்கும் கருவி, பேசும் மொழி" என்ற தலைப்பில் ஓர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

2. உரையாடலை வளர்க்க எத்தியோப்பியத் திருஅவை சக்திவாய்ந்த கருவி

பிப்.26,2015 எண்ணிக்கை அளவில், எத்தியோப்பா நாட்டில், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரே என்றாலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய உரையாடலையும், ஒருங்கிணைப்பையும் வளர்ப்பதில் தலத்திருஅவை சக்திவாய்ந்த ஒரு கருவியாகச் செயலாற்றுகிறது என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 14ம் தேதியன்று திருஅவையின் புதிய கர்தினால்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற Addis Ababaவின் பேராயர் கர்தினால் Berhaneyesus Demerew Souraphiel அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
எத்தியோப்பிய நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும், தனக்கு வழங்கிய கர்தினால் பொறுப்பு வழியாக, இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை மதிப்பளித்துள்ளார் என்று குறிப்பிட்ட கர்தினால் Souraphiel அவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுக்கு, எத்தியோப்பியா ஓர் எடுத்துக்காட்டான நாடாகத் திகழ்கிறது என்று எடுத்துரைத்தார்.
எத்தியோப்பா நாட்டில் பணியாற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளுடனும், கத்தோலிக்கத் திருஅவை நலமான உறவு கொண்டுள்ளது என்பதையும் கர்தினால் Souraphiel அவர்கள், தன் பேட்டியில் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
புனித வின்சென்ட் மற்றும் கப்பூச்சியன் துறவிகளால் உருவாக்கப்பட்ட எத்தியோப்பியத் திருஅவை, தற்போது முழுமனித முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு செயலாற்றிவருகிறது என்று கர்தினால் Souraphiel அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அமெரிக்கா சிந்திக்கும் இராணுவத் தாக்குதல் குறித்து ஆயர்களின் மடல்

பிப்.26,2015 கட்டுக்கடங்காத வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களிடமிருந்து, சிறுபான்மை மதத்தினரையும், ஏனைய மக்களையும் காப்பதற்கு சக்திமிகுந்த வழிகளைப் பயன்படுத்துவது நியாயமானதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, அந்நாட்டு அரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளது.
லிபியா நாட்டுக் கடற்கரையில், ISIS தீவிரவாதிகளால் 21 காப்டிக் கிறிஸ்தவர்கள், கொடூரமாகக் கொலையுண்டதையடுத்து, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற்கொள்ள அமெரிக்க பாராளு மன்றத்தின் ஆலோசனையைத் தேடி வருகிறார்.
இச்சூழலில், பிப்ரவரி 23, கடந்த திங்களன்று அமெரிக்க அரசுத் தலைவருக்கு, அமெரிக்க ஆயர்களின்  சார்பில், ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Joseph Kurtz அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, மத்தியகிழக்குப் பகுதியில் இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளும்போது, மனிதாபிமான உணர்வுகளுடன் பன்னாட்டு அரசுகள் எடுத்துள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டு தாக்குதல்கள் நடைபெறவேண்டும் என்று ஆயர்களின் மடல் வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் தலையீடு, வெறும் இராணுவத் தாக்குதல்களாக மட்டும் அமைந்துவிடாமல், துன்புறும் மக்களின் துயர் துடைக்கும் பணிகளிலும் உதவும் வகையில் அமையவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

4. சிரியா நாடு வரலாற்றில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது

பிப்.26,2015 ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவரின் இராணுவத் தலையீட்டால், சிரியா நாடு வரலாற்றில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
Hassaké-Nisibis என்ற சிரிய கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Jacques Behnan Hindo அவர்கள், பிரான்ஸ், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பன்னாட்டு ஆதரவுடன் போராட்டக் குழுக்கள் சிரியாவில் வலுவடைந்தன என்றும், தற்போது, இக்குழுக்கள் அத்துமீறி வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்க இந்நாடுகள் மீண்டும் இராணுவத் தலையீட்டை மேற்கொள்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
அடிப்படைவாதக் கொள்கைகள் கொண்ட இந்தப் போராட்டக் குழுக்கள் கடந்த மூன்று நாட்களில் Khabur நதிக்கரையில் அமைந்துள்ள மூன்று கிறிஸ்தவ கிராமங்களைக் கைப்பற்றியுள்ளன என்றும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களில் 140க்கும் அதிகமானோர் பிணையக் கைதிகளாக சிக்கியுள்ளனர் என்றும் பேராயர் Hindo அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

5. புல்டோசர்கள் முன்பு முகம் குப்புற வீழ்ந்து துறவியர் போராட்டம்

பிப்.26,2015 எகிப்து நாட்டில் திட்டமிடப்பட்டு வரும் ஒரு சாலையால், 4ம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்றுள்ள கோவிலும், துறவு மடமும் இடிக்கப்படும் ஆபத்தில் உள்ளன என்று Fides செய்தி கூறுகிறது.
எகிப்தின் Fayoum என்ற நகரை, ஏனைய நகரங்களுடன் இணைக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு சாலையின் கட்டமைப்பு, 4ம் நூற்றாண்டு முதல் காப்பாற்றப்பட்டு வரும் ஒரு பழம்பெரும் கோவிலை பாதிக்கும் என்று காப்டிக் வழிபாட்டு முறை துறவிகள் கூறியுள்ளனர்.
Macarius என்ற புனிதரின் பெயர் தாங்கிய பழைமை வாய்ந்த துறவு மடத்தைச் சேர்ந்த துறவியர், இந்த முயற்சியைத் தடுக்கும் நோக்கத்தில், புல்டோசர்கள் முன்பு முகம் குப்புற வீழ்ந்து போராட்டம் நடத்தினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
துறவு மடத்தை இடிக்க வந்த பணியாளர்கள், இஸ்லாமிய மதத்தின் கடவுள் பெயரைச் சொன்னபடி முன்னேறி வந்தனர் என்றும் இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

6. இந்தியத் திருஅவை, 60,000த்திற்கும் அதிகமான வயது முதிர்ந்தோருக்குப் பணி

பிப்.26,2015 சாதி, மதம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வொரு நாளும் 60,000த்திற்கும் அதிகமான வயது முதிர்ந்தோருக்குப் பணியாற்றி வருகிறது என்று இந்திய கத்தோலிக்க மருத்துவர் ஒருவர் கூறினார்.
"வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் மற்றும் உடல்துன்பத்தில் பேணுதல்" என்ற தலைப்பில், வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பையைச் சேர்ந்த கத்தோலிக்க மருத்துவர் Pascoal Carvalho அவர்கள் இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள 'வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை'யின் உறுப்பினராகப் பணியாற்றும் மருத்துவர் Carvalho அவர்கள், இந்தியாவுக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று கூறினார்.
இந்தியாவில், 1901ம் ஆண்டு, 1 கோடியே 21 இலட்சம் என்ற அளவில் இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2001ம் ஆண்டு 7 கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் Carvalho அவர்கள், இம்முதியோரில் 30 விழுக்காட்டினர், மருத்துவ உதவிகள் எளிதில் கிடைக்காத கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்றும் கூறினார்.
இந்தியாவில் 18,500 முதியோர் இல்லங்கள் வழியாகவும், 1700 சிறு மருத்துவ மனைகள் வழியாகவும், இந்திய கத்தோலிக்க சமுதாயம், 60,000த்திற்கும் அதிகமான முதியோருக்கு பணியாற்றுகின்றனர் என்றும் மருத்துவர் Carvalho அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. இயற்கைப் பேரிடர்களால் ஆசிய பசிபிக் பகுதியில் 8 கோடி மக்கள் பாதிப்பு

பிப்.26,2015 நடந்து முடிந்த 2014ம் ஆண்டில் உருவான இயற்கைப் பேரிடர்களில் ஆசிய பசிபிக் பகுதியில் வாழும் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
"2014: ஆசியா, பசிபிக் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்" என்ற தலைப்பில், ஐ.நா.வின் பொருளாதார, சமூகத் தொடர்பு அவை, இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு உலகைத் தாக்கிய 226 இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆசிய, பசிபிக் பகுதிகளில் நிகழ்ந்தன என்று கூறப்பட்டுள்ளது.
உயிர் பலிகள் என்ற அளவில், 2013ம் ஆண்டில் ஏற்பட்ட 18,744 என்ற அளவு, கடந்த ஆண்டு 6,000 என்ற அளவு குறைந்திருந்தாலும், இப்பேரிடர்களால் மக்கள் 6000 கோடி டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவில் வீசிய HudHud புயலால், 1100 கோடி டாலர்கள் மதிப்புள்ள அழிவும், சீனாவின் Ludian பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 600 கோடி டாலர்கள் மதிப்புள்ள அழிவும் உருவானதென்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பகுதி நாடுகள், வருகிற மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளும் கூட்டத்தின்போது, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும், பேரிடர் நேரங்களில் மக்களிடம் மன உறுதியை வளர்க்கும் வழிகளையும் அரசுகள் ஆலோசனை செய்யவேண்டும் என்று ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்

பிப்.26,2015 மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பதாக மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் துவங்கியதிலிருந்து தற்போதுவரை, 19 பேர் தமிழ்நாட்டில் உறுப்புதானம் செய்திருக்கின்றனர். இந்தியாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உறுப்புதானம் செய்தது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பாக, ஒரே மாதத்தில் 17 பேர் உறுப்புதானம் செய்ததுதான் அதிக அளவு எண்ணிக்கையாக இருந்தது.
தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைப் பெறுவது என்பது முறைப்படி அமலுக்கு வந்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை, 587 பேர் 3231 உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர்.
உறுப்புகளைத் தானம் அளிக்கும் வீதம், இந்தியாவைப் பொருத்தவரை, கோடியில் ஒருவர் என்று இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த எண்ணிக்கை பத்து லட்சம் பேருக்கு 3.3 பேர் என்று இருந்துவருகிறது.
தமிழகத்தில் இருக்கும் வெளிப்படைத் தன்மையும் அரசின் முயற்சிகளும் இதற்குக் காரணம் என்கிறார் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் அமலோற்பவநாதன்.
"மேலும், தமிழக மக்கள் இந்த விடயத்தில் இயல்பாகவே தானம் அளிக்கும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்; தவறு ஏதும் நேராமல், சரியான நபர்களுக்கு உறுப்புகள் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், தன் மகனின் உறுப்புகளைத் தானம் செய்ததது தமிழகம் முழுவதும் பெரும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

சீரிய சிந்தனை

ஒரு நாள் அரசர் ஒருவர், தனது பணியாளுடன் வெளியூர் சென்றார். இருட்டி விட்டதால் வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்தார் அரசர். அங்கு ஒரு மரத்தில் குதிரையைக் கட்டிவிட்டு, தனது பணியாளிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார் அரசர். சுயமாக சிந்திக்கத் தெரியாத அந்தப் பணியாள், அரசரிடம், அரசே, இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று கேட்டார். அதற்கு அரசர், ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார். பணியாளும், சரி நல்லது என்றார். சத்திரத்துக்குள் சென்ற அரசர், பணியாள் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். 'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் விண்மீன்கள் தானாக வந்தனவா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்ற சிந்தனையில் இருக்கிறேன் என்றார் பணியாள். நல்லது என்று கூறிச்சென்ற அரசர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். பணியாள் சொன்னார்- அரசே, கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டுவந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று.  அரசர் நிம்மதியுடன் படுத்துத் தூங்கினார். காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பணியாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசர், ''இப்போது என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். பணியாள்  சொன்னார்-அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...