Saturday, 7 March 2015

செய்திகள் - 06.03.15

செய்திகள் - 06.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. Neocatechumenal Way உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

2. திருத்தந்தை பிரான்சிஸ், அஜெர்பைஜான் அரசுத்தலைவர் சந்திப்பு

3. நியுயார்க் முன்னாள் பேராயர் கர்தினால் Egan மறைவு, திருத்தந்தை இரங்கல் செய்தி

4. ஆயர் Corti - புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி தியானங்கள் 

5. இவ்வுலகம், போர்க்கால மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது, ஜப்பான் ஆயர்கள்

6. அமெரிக்காவில் மரண தண்டனைக்கு எதிராக தேசிய கத்தோலிக்க ஊடகங்கள்

7. மனித உரிமைகளைக் காக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

8. பன்றிக் காய்ச்சலை ஒழிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவது அவசியம்

------------------------------------------------------------------------------------------------------

1. Neocatechumenal Way உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

மார்ச்,06,2015. திருஅவையில் தேங்கிக் கிடக்கும் நீரை நாம் விரும்பவில்லையென்றால், நாம் நமது மேய்ப்புப்பணியை மறைபோதக மேய்ப்புப்பணிக்கு எடுத்துச் செல்ல வேண்டும், இதைத்தான் Neocatechumenal Way உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இறைவார்த்தையை எடுத்துச்செல்லும் Neocatechumenal Way என்ற கத்தோலிக்க பக்த இயக்கத்தின் ஏறக்குறைய ஏழாயிரம் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத் திருஅவைக்கு இறைபராமரிப்பின் உண்மையான கொடையாக இந்த இயக்கத்தினர்   உள்ளனர் என்று பாராட்டினார்.
உலகின் நாடுகளுக்கு மறைப்பணியாற்றுவதற்கு இதன் உறுப்பினர்களை அனுப்பும் நிகழ்வாக இச்சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, வியட்நாம், பாப்புவா நியு கினி கொசோவோ, உக்ரைன் உட்பட தங்களுக்குக் குறிக்கப்பட்ட நாடுகளுக்கு மறைப்பணியாற்றச் செல்லும் குடும்பங்கள் இச்சந்திப்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
இவர்களின் இந்த மறைப்பணி அழைப்பை உறுதிசெய்து, இதற்கு ஆதரவளித்து இவர்களின் தனிவரத்தை தான் ஆசிர்வதிப்பதாகவும் உரைத்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடவுள் தன்னை அன்புகூருகிறார் மற்றும் அன்பு இயலக்கூடியதே என்பதை, இக்காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மனிதர் உணரவேண்டியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல புறநகர்ப் பகுதிகள், ஆசியாவின் பல நகரங்கள் ஆகியவற்றில் எவ்வளவு மக்கள் தனிமையிலும், துன்பத்திலும், கடவுளைவிட்டுத் தொலைவிலும் வாழ்கின்றனர், இம்மக்களுக்கு இக்கிறிஸ்தவ இயக்கத்தின் மறைப்பணிகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளன என்று கூறினார் திருத்தந்தை.
இந்த இயக்கத்திலுள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்களின் இடங்களைவிட்டு தூர இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்கும் துணிச்சலைப் பாராட்டிய திருத்தந்தை, இறைவார்த்தை, திருவழிபாடு, சமூகம் ஆகிய திருஅவையின் மூன்று கூறுகளை இந்தப் பக்த இயக்கத்தினரும் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டார்.
Neocatechumenal Way என்ற இயக்கத்தினர், திருஅவைக்குப் பெரிய அளவில் நன்மை செய்து வருகின்றனர் எனவும், தனது மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவது புனித பேதுருவின் வழிவருபவரின் பணி என்பதால், இவ்வியக்கத்தின் கிறிஸ்தவக் குடும்பங்களைத் தானும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்பில் குடும்பங்கள் தங்களின் கரங்களில் சிலுவைகளை ஏந்தியிருக்க, திருத்தந்தை 33 அருள்பணியாளர்களுக்கு சிலுவைகளை வழங்கினார்.
Francisco "Kiko" Argüello, Carmen Hernández ஆகிய இருவரும் மத்ரித்தில் சேரிகளில் நற்செய்தி அறிவித்ததன் பயனாக, 1964ம் ஆண்டில் Neocatechumenate பக்த இயக்கம் உருவானது. இது 2008ம் ஆண்டில் திருப்பீடத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த இயக்கம், ஒவ்வொரு பங்கிலும் 20 முதல் 50 பேரை உள்ளடக்கிய சமூகமாகச் செயல்பட்டு வருகின்றது. இன்று உலகெங்கும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ சமூகங்கள் உள்ளன.
  
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ், அஜெர்பைஜான் அரசுத்தலைவர் சந்திப்பு

மார்ச்,06,2015. அஜெர்பைஜான் நாட்டு அரசுத்தலைவர் Ilham Aliyev அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார்.
தற்போதைய உலகின் விழுமியங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடல், அமைதிக்கு ஆதரவான பல்சமய உரையாடல், தற்போதைய அஜெர்பைஜான் பகுதி மற்றும் அனைத்துலகின் நிலவரம், பேச்சுவார்த்தை மூலம் போர்களுக்குத் தீர்வுகாணப்பட வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.
மக்கள் மத்தியிலும், பல்வேறு மதங்கள் மத்தியிலும் இணக்கவாழ்வை ஊக்குவிப்பதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதும் வலியுறுத்தப்பட்டதாக திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.
அஜெர்பைஜான், கிழக்கு ஐரோப்பாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையே, Caucasus மலைப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது, சமயச் சார்பற்ற மற்றும் மக்களாட்சி அமைப்புமுறையைக் கொண்டுள்ள முஸ்லிம் நாடாகும். திரையரங்குளையும், நவீன பல்கலைக்கழகங்களையும் கொண்டிருக்கும் முதல் முஸ்லிம் நாடாகும் இது. எண்ணெய் வளம், இயற்கை வாயுக்கள் மற்றும் வேளாண் உற்பத்தி மூலம் இந்நாடு அதிகமான வருவாயைப் பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நியுயார்க் முன்னாள் பேராயர் கர்தினால் Egan மறைவு, திருத்தந்தை இரங்கல் செய்தி

மார்ச்,06,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கர்தினால் Edward Michael Egan அவர்கள் இறந்ததை முன்னிட்டு தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நியுயார்க் பேராயர் கர்தினால் திமோத்தி டோலன் அவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Egan அவர்கள், தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
அதோடு, கர்தினால் Egan அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறத் தான் செபிப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் அனைவருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இவ்வியாழனன்று நியுயார்க்கில் இறைவனடி எய்திய 82 வயது நிரம்பிய கர்தினால் Egan அவர்கள், 2000மாம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை நியுயார்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
1957ம் ஆண்டில் குருவான இவர், தனது சொந்த சிகாகோ உயர்மறைமாவட்டத்தில் முதலில் பணியாற்றிய பின்னர், நியுயார்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார்.
கர்தினால் Egan அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 226 ஆகவும், இவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 125ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆயர் Corti - புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி தியானங்கள் 

மார்ச்,06,2015. வருகிற ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளிக்கிழமை இரவில் உரோம் நகரின் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளை இத்தாலியின் Novara மறைமாவட்ட முன்னாள் ஆயர் Renato Corti அவர்கள் தயாரிக்கிறார்.
இச்சிலுவைப்பாதை பக்தி முயற்சியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.
மேலும், CL (Communion and Liberation) என்றழைக்கப்படும், ஒன்றிப்பு மற்றும் விடுதலை இயக்கத்தின் 47 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய அறுபதாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
CL கிறிஸ்தவ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு, இந்த இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணியாளர் Giussani அவர்கள் இறந்ததன் பத்தாம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு நிகழ்வுகளின் அடிப்படையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
காலை 10.30 மணிக்கு, செப வழிபாட்டுடன் தொடங்கும் இந்நிகழ்வு திருத்தந்தையின் உரை மற்றும் ஆசிருடன் நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இவ்வுலகம், போர்க்கால மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றது, ஜப்பான் ஆயர்கள்

மார்ச்,06,2015. உலகப் போருக்கு முன்னும் பின்னும் ஜப்பான் நாடு ஆற்றியிருக்கும்  நடவடிக்கைகளால், உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்குத் தாங்கள் சிறப்பு அழைப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்.
ஆயினும் தற்போதைய பொருளாதார உலகமயமாக்கல், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, பயங்கரவாதம் போன்றவற்றால் இந்த உலகம், போர்க்கால மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்று மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், தொழில் மற்றும் நிதி அமைப்பின் தாராளமயமாக்கல் இவ்வுலகை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வுலகில் சமத்துவமின்மை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது, ஏழைகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
1945ம் ஆண்டுவரை கொரியத் தீபகற்பத்தின்மீது ஜப்பான் நாடு கொண்டிருந்த காலனி ஆதிக்கம், சீனா மற்றும்பிற ஆசிய நாடுகளுக்கு எதிராக ஜப்பான் நாட்டின் கடும் நடவடிக்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் துன்பங்களையும், தியாகங்களையும் ஏற்படுத்தின என்றும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.
போருக்குப் பின்னர் எழுபதாம் ஆண்டுகள் : அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற தலைப்பில் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர் ஜப்பான் ஆயர்கள்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. அமெரிக்காவில் மரண தண்டனைக்கு எதிராக தேசிய கத்தோலிக்க ஊடகங்கள்

மார்ச்,06,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுமாறு அந்நாட்டின் நான்கு தேசிய கத்தோலிக்க ஊடகங்கள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
Oklahomaவில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடவுள்ளவேளை, அந்நாட்டின் America, National Catholic Register, National Catholic Reporter, Our Sunday Visitor ஆகிய நான்கு தேசிய கத்தோலிக்க ஊடகங்களும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில், Clayton Lockett என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியபோது உயிர்க்கொல்லி வேதியப்பொருள்களைச் செலுத்திய பின்னர் நாற்பது நிமிடங்களுக்கு அவர் கடும் வேதனையை அனுபவித்து பின்னர் இதயம் செயலிழந்து இறந்தார்.
இத்தகைய நிகழ்வுகளினால் அமெரிக்காவில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் வலுவடைந்து வருகின்றன எனவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அந்நாட்டில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று நம்புவதாகவும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில், கத்தோலிக்க ஊடகங்கள் அரிதாகவே ஒன்றிணைந்து குரல் கொடுக்கும்  என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
                               
7. மனித உரிமைகளைக் காக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

மார்ச்,06,2015. இன்றைய உலகில் பயங்கரவாதப் பேரலைகள் நாளுக்கு நாள் உயர்ந்துவரும்வேளை, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமை கோட்பாடுகள் காக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர்.
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உரையாற்றிய, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் Zeid Ra'ad Al Hussein அவர்கள், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகள் உருவாக்கிய மனித உரிமைகளை உறுதியாய்க் கட்டிக்காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
டுவிட்டர், blog அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரின் பேச்சால் அச்சுறுத்தப்படுவதாக, உலகின் சக்திமிக்க தலைவர்கள் உணர்ந்தால், இந்நிலை தலைவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் Zeid.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், மக்களாட்சி மற்றும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் உரைத்த Zeid, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பரவியுள்ள, கடுமையான இன மற்றும் மத வெறுப்புச் செயல்கள்  குறித்து கவலை தெரிவித்தார்.
இந்நாடுகளில் இடம்பெறும் அநீதியான கோட்பாடுகள், அவமதிப்புகள், தனிமைப்படுத்தல் போன்றவற்றால் மக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் Zeid.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. பன்றிக் காய்ச்சலை ஒழிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவது அவசியம்

மார்ச்,06,2015. ஒவ்வோர் ஆண்டும் மழை மற்றும் குளிர் காலங்களில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பாதித்து இதுவரை ஏறக்குறைய 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இது போன்ற உயிரிழப்புக்களைத் தடுக்க, ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், பல இறப்புகளைத் தடுக்க முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
H1N1 என்ற நோய்க் கிருமியால் பரவும் பன்றிக் காய்ச்சலால், இந்தியாவில்  22,240 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், பன்றிக் காய்ச்சலால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment