Thursday, 5 March 2015

செய்திகள்-05.03.15

செய்திகள்-05.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. "செல்வரும் இலாசரும்" - திருத்தந்தை ஆற்றிய மறையுரை

2. நோய்த் தணிப்பு கவனம் - கருத்தரங்கு உறுப்பினர்களுடன் திருத்தந்தை

3. மரணதண்டனைக்கு எதிராக ஆதரவு பெருகுவதால் திருஅவை மகிழ்ச்சி

4. மார்ச் 8, உரோமையின் புறநகர் பகுதி பங்குத்தளத்தில் திருத்தந்தை

5. உலக மகளிர் நாளன்று காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய விருது

6. மியான்மாரில் அன்னை மரியாவின் உள்ளம் பாய்ந்த ஏழு வாள்கள்

7. கொல்லப்பட்ட 21 கிறிஸ்தவர்களின் குடும்பங்களுடன் காப்டிக் திருத்தந்தை

8. இலங்கையின் புதிய அரசுத் தலைவர் வடபகுதிக்கு முதல் பயணம்
------------------------------------------------------------------------------------------------------

1. "செல்வரும் இலாசரும்" - திருத்தந்தை ஆற்றிய மறையுரை

மார்ச்,05,2015. நமக்கு அருகில் வாழும் வறியோரைக் காண முடியாதவாறு உலகப் போக்கில் சிந்திக்கும் எண்ணங்கள், நம் ஆன்மாவை இருளில் புதைத்துவிடுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
"செல்வரும் இலாசரும்" என்ற உவமையை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், இவ்வுவமையில் சித்திரிக்கப்பட்டுள்ள செல்வரைக் குறித்து குறைகள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
உவமையில் கூறப்பட்டுள்ள செல்வரை இன்றையச் சூழலில் கற்பனை செய்தால், கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் அவர் வலம்வருவது போல் சிந்திக்கலாம் என்று கூறியத் திருத்தந்தை, உலக அவலங்களைக் காண விரும்பாமல், கறுப்புக் கண்ணாடிகளை உயர்த்திவிட்டு, தங்கள் உலகங்களிலேயே ஆழ்ந்துவிடுபவர்களை எண்ணிப் பார்க்கலாம் என்று எடுத்துரைத்தார்.
உலகப் போக்கில் சிந்திக்கும் மனம் கொண்டிருந்தால், நம்மைச் சுற்றி துன்பங்களில், தேவைகளில் இருப்போரைக் காணமுடியாமல் போகும் என்று தன் மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
உலகச் செல்வங்களிலேயே மூழ்கிவிடும் மனிதர்கள், தங்கள் சுய அடையாளமான பெயர் முதற்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுவர்; மாறாக, வறியவரான இலாசர், தன் பெயருடன் விண்ணகம் சென்றடைகிறார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இவ்வுலகப் போக்கில் சிந்தித்து, இவ்வுலகையே நம்பி வாழ்ந்த செல்வருக்கும், இறைவனை நம்பி வாழ்ந்த இலாசருக்கும் வழங்கப்பட்டத் தீர்ப்புகளைக் குறித்தும் திருத்தந்தை தன் மறையுரையில் பகிர்ந்தார்.
இறுதித் தீர்வையின்போதும், ஆபிரகாம், 'மகனே', 'மகனே' என்று அந்தச் செல்வரை அழைப்பது, இறைவன் நம்மை என்றென்றும் அனாதைகளாக விடாமல் காப்பார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
மேலும், "செல்வங்களுடன் நாம் அதிகமாகப் பிணைக்கப்பட்டிருந்தால், நாம் சுதந்திரமாக இருக்கமுடியாது. நாம் அடிமைகளே" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. நோய்த் தணிப்பு கவனம் - கருத்தரங்கு உறுப்பினர்களுடன் திருத்தந்தை

மார்ச்,05,2015 நோய்த் தணிப்பதில் கவனம் செலுத்துவது, குறிப்பாக, நோயால் துன்புறுவோரைப் பேணுதல், மனிதராகப் பிறந்தோர் அனைவரின் அடிப்படை பண்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை, "வயது முதிர்ந்தோருக்கு ஆதரவு மற்றும் நோய்த் தணிப்பு கவனம்" என்ற தலைப்பில், மார்ச் 5, இவ்வியாழன் முதல், சனிக்கிழமை முடிய ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் 100க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோருடன் துணை இருப்பதே அவர்களுக்கு ஆற்றும் பெரும் சேவை என்று குறிப்பிட்டார்.
பெற்றோரை மதிக்கும்படி விவிலியம் வற்புறுத்திக் கூறும்போது, வயதில் முதிர்ந்த அனைவரையும் மதித்து, ஆதரிக்கவேண்டும் என்பதை இது நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நோய்த் தணிப்பதில் கவனம், உடல்துன்பத்தில் பேணுதல் போன்ற மனிதாபிமானச் செயல்களை இவ்வுலகம் படிப்படியாய் மறந்துவரும் வேளையில், இத்தகைய கருத்தரங்கினை வத்திக்கான் ஏற்பாடு செய்திருப்பது, கத்தோலிக்கத் திருஅவையின் விழுமியங்களை உலகறியச் செய்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார். 
தங்கள் வாழ்வின் இறுதியை நெருங்கியுள்ள வயது முதிர்ந்தோருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், மற்றும் மனநல, ஆன்மீக உதவிகள் ஆகியவை இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதென்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மரணத்தை நெருங்கிவிடும் முதிர்ந்தோரை ஆதரவின்றி விட்டுவிடும் உலகப் போக்கு, அவர்கள் வேதனையைத் தீர்க்க மருத்துவ உலகம் பரிந்துரைக்கும் சுருக்கு வழிகள் ஆகியவை இந்தக் கருத்தரங்கில் பேசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கு, இவ்வறக்கட்டளை நடத்தும் 21வது கருத்தரங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. மரணதண்டனைக்கு எதிராக ஆதரவு பெருகுவதால் திருஅவை மகிழ்ச்சி

மார்ச் 05,2015. மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பதில் அரசுகளும், பொதுமக்களின் கருத்தும் வலுவடைந்து வருவதைக் கண்டு திருப்பீடம் மகிழ்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. அவையும், ஏனைய உலக அமைப்புகளும் 'மரணதண்டனை என்ற கேள்விஎன்ற கருத்தை மையப்படுத்தி ஜெனீவாவில் மேற்கொண்ட ஒரு கருத்துப் பரிமாற்றத்தில், திருப்பீடத்தின் சார்பாக உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு கூறினார்.
மனிதர்களின் அடிப்படை மாண்பு மதிக்கப்படவேண்டும் என்பதை திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று எடுத்துரைத்த பேராயர் தொமாசி அவர்கள், உலக அரசுகள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள துவங்கியிருப்பது நல்லதோர் அடையாளம் என்று கூறினார்.
இரத்தம் சிந்தாமல், மனித உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பதையும், பொதுநலனைப் பேணி வளர்க்க முடியும் என்பதையும் அரசுகள் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மார்ச் 8, உரோமையின் புறநகர் பகுதி பங்குத்தளத்தில் திருத்தந்தை

மார்ச்,05,2015 உரோமையின் கிழக்குப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மீட்பரின் அன்னையாம் புனித மரியா பங்குத் தளத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற ஞாயிறு தன் மேய்ப்புப்பணி சந்திப்பை நிகழ்த்துவார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
மார்ச் 8, வருகிற ஞாயிறன்று, பிற்பகல் 3.45 மணியளவில் அப்பகுதிக்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்திவரும் பணிமையத்தை முதலில் பார்வையிடுவார்.
பின்னர், பங்குக் கோவிலை அடையும் திருத்தந்தை, பங்கு இளையோரை முதலில் சந்திக்கிறார் என்றும், அப்பகுதியில் வாழும் ஆறு வறியோர் குடும்பங்களின் உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபின், கோவிலில் அமர்ந்து, ஒப்புரவு அருள் சாதனம் வழங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலியில், கர்தினால் Agostino Vallini அவர்களும், இன்னும் சில ஆயர்களும் கலந்துகொள்வர் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. உலக மகளிர் நாளன்று காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய விருது

மார்ச் 05,2015. சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண்களும், நிகராகுவா நாட்டில் வேளாண்மையில் ஈடுபட்ட பெண்களும் காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய விருதினைப் பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
'நம்பிக்கையின் குரல்கள்' என்ற அமைப்பினரும், அனைத்துலக காரித்தாஸ் அமைப்பினரும் இணைந்து இவ்வியாழனன்று அறிவித்துள்ள இந்த விருது, மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மகளிர் நாளன்று வழங்கப்படும்.
'பெண்கள், முன்னேற்றத்தை விதைப்பவர்கள்' என்ற கருத்தில் இந்த விருதுகளுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Juana Bertha Duarte Somoza அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சிரியாவிலிருந்து எதிர்காலம் ஏதுமின்றி வெளியேறிய பெண்களுக்கு, Basmeh மற்றும் Zeitooneh என்ற அமைப்பினர், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தையல் கலையைக் கற்றுக்கொடுத்து, அப்பெண்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கையை வளர்த்ததனால், இந்த அமைப்பினர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகராகுவா நாட்டில் வேளாண்மையில் ஈடுபடும் பெண்கள், நிலவளம், தொழில், உற்பத்தி என்ற அனைத்துத் துறையிலும் கவனம் செலுத்தி, பெண்களின் சக்தியைக் கூட்டியதால், அக்குழுவினர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 8, கொண்டாடப்படும் உலக மகளிர் நாளன்று, வத்திக்கானில் நடைபெறும் ஒரு விழாவில், இவ்விருதுகளுடன் 10,000 யூரோக்களும் இவ்விரு குழுவினருக்கும் வழங்கப்படும் என்று இவ்வியாழன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மியான்மாரில் அன்னை மரியாவின் உள்ளம் பாய்ந்த ஏழு வாள்கள்

மார்ச்,05,2015 மியான்மாரைப் பொருத்தவரை, அன்னை மரியாவின் உள்ளத்தை ஏழு வாள்கள் ஊடுருவியுள்ளன என்று கர்தினால் Charles Maung Bo அவர்கள், மரியாவின் திருத்தலத்தில் ஆற்றியத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
மியான்மாரின் அன்னை மரியா தேசியத் திருத்தலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாகக் கூடியிருந்த பக்தர்களுக்கு கர்தினால் Maung Bo அவர்கள் வழங்கிய மறையுரையில், மியான்மார் சமுதாயம் சந்திக்கும் ஏழு அநீதிகளை, மரியாவின் உள்ளத்தை ஊடுருவும் ஏழு வாள்கள் என்று குறிப்பிட்டார்.
தலைமுறை தலைமுறையாய் வளரும் முதலாளித்துவம், ஒரு சில குடும்பங்களே அனைத்து செல்வங்களையும் பெற்றிப்பது, நாட்டில் நடைபெறும் மோதல்களை உரையாடல் வழியே தீர்க்க மறுப்பது ஆகியவை இந்த ஏழு வாள்களில் சில என்று கர்தினால் Maung Bo அவர்கள் குறிப்பிட்டார்.
ஒரு சிலரின் கட்டுக்கடங்காத பேராசையால் இயற்கை வளங்கள் அழிவுறுதல், வறியோரின் நிலங்களைப் பறிப்பதற்கு அநீதிமான சட்டங்கள் துணைபோதல், மனித வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம், ஆகியவை அன்னை மரியாவின் உள்ளத்தை ஊடுருவும் வாள்கள் என்று கர்தினால் Maung Bo அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மியான்மாரில் நிகழும் அநீதிகளால் பக்கத்து நாடுகளுக்குச் சென்றுள்ள இளையோரைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Maung Bo அவர்கள், நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்றும் கூறினார்.

ஆதாரம் Fides / வத்திக்கான் வானொலி

7. கொல்லப்பட்ட 21 கிறிஸ்தவர்களின் குடும்பங்களுடன் காப்டிக் திருத்தந்தை

மார்ச்,05,2015 அண்மையில் லிபியா நாட்டின் கடற்கரையில் ISIS தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களை, காப்டிக் திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள் இப்புதனன்று சந்தித்தார்.
கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் வாழ்ந்த Samalot என்ற கிராமத்தில் இக்குடும்பங்களைச் சந்தித்த காப்டிக் திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், அங்கு நிகழ்த்திய திருவழிபாட்டில், எவ்வித ஐயமுமின்றி, இறந்தோர் அனைவரும் மறைசாட்சிகள் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இறந்தவர்கள் அனைவரும் மறைசாட்சிகள் என்று கூறப்படும் மரணச் சான்றிதழ்களையும் அவர்கள் குடும்பங்களுக்கு திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், வழங்கினார் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதற்கிடையே, Mansour Saad Awad என்ற காப்டிக் கிறிஸ்தவர் ஒருவரின் தலை வெட்டப்பட்ட உடல், Mechili என்ற ஊரின் எல்லையில்  கண்டுபிடிக்கப்பட்டது என்று Fides செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. இலங்கையின் புதிய அரசுத் தலைவர் வடபகுதிக்கு முதல் பயணம்

மார்ச்,05,2015 இலங்கையை ஒருங்கிணைப்பது என்பது, வெளிப்புறமாகத் தெரியும் முன்னேற்றங்களில் மட்டும் அல்ல, மாறாக, மனதளவில் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளாலேயே உருவாகும் என்று இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கை வடபகுதி முதல்வர் விக்னேஸ்வரன், மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன், வடபகுதி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இலங்கை அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.
வடபகுதியின் முன்னேற்றத்தில், நலவாழ்வு, வேளாண்மை, கல்வி, மீன்பிடித் தொழில் ஆகியவை முதலிடம் பெறவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் தங்கள் கணவர்களை இழந்த 800க்கும் அதிகமான கைம்பெண்களுக்கு, தகுந்த உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், பெண்கள் நலத்துறை அமைச்சகத்திடம் கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசுத் தலைவராக, சனவரி மாதம் பொறுப்பேற்ற சிறிசேன அவர்கள், முதன்முறையாக இலங்கையின் வடபகுதிக்கு இச்செவ்வாயன்று பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment