Wednesday 5 October 2011

Catholic News - hottest and latest - 01October 2011

1. திருவழிபாட்டுப் பேராயம், திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை புதிய நடவடிக்கை

2. உலகில் மத சுதந்திரத்துக்காக கிறிஸ்தவர்களே அதிகம் நசுக்கப்படுகின்றனர் கர்தினால்  எர்டோ

3. ஒரிசா மறைசாட்சிகளுக்கு நீதி-கிறிஸ்தவர்கள் கோரிக்கை

4. மியான்மார் அரசு, அணைக்கட்டுத் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியிருப்பதற்கு ஆயர் வரவேற்பு

5. டெங்கு காய்ச்சலினின்று காப்பாற்றப்படுமாறு பாகிஸ்தான் கத்தோலிக்கர் செபம்

6. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அகிம்சாவின் சக்திமிக்க பலத்தைக் காட்டுகின்றது பான் கி மூன்

7. இந்தியாவில் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு, உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருவழிபாட்டுப் பேராயம், திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை புதிய நடவடிக்கை

அக்.01,2011. திருப்பீடத் திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயம், திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு உதவும் நோக்கத்தில் அப்பேராயத்தின் சில பொறுப்புக்களை நீக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"motu proprio" அதாவது அவரின் சொந்த முயற்சியின் பேரில் என்று பொருள்படும் அப்போஸ்தலிக்க கடிதத்தின் வழியாக இப்பேராயத்தின் சில பொறுப்புக்களை நீக்கியுள்ள திருத்தந்தை, வத்திக்கானின் உச்ச நீதிமன்றமாகிய உரோமன் ரோட்டாவில் புதிய அலுவலகம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
குருத்துவத் திருநிலைப்பாட்டிலிருந்து விலக்கு வழங்குதல், முறையான திருமணத் தம்பதியராக வாழாதத் திருமணங்களை இரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இப்புதிய அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
"Quaerit Semper"  என்ற தலைப்பிலான இந்த அப்போஸ்தலிக்க ஆவணத்தின் மூலம் இப்பணியை அளித்துள்ள திருத்தந்தை, இவற்றைத் திருவழிபாட்டுப் பேராயத்திலிருந்து நீக்கியுள்ளதால் அப்பேராயம் திருவழிபாடு குறித்த விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய விதிமுறைகள் இச்சனிக்கிழமையிலிருந்து அமலுக்கு வருகின்றன.

2. உலகில் மத சுதந்திரத்துக்காக கிறிஸ்தவர்களே அதிகம் நசுக்கப்படுகின்றனர் கர்தினால்  எர்டோ

அக்.01,2011. இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் தங்களது மத சுதந்திரத்துக்காக அதிகம் நசுக்கப்படுகின்றனர், இது கவலை தருவதாக உள்ளது என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் தலைவராகிய புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர்  எர்டோ தெரிவித்தார்.
அல்பேனியாவின் திரானாவில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் எர்டோ, சனநாயக அரசுகளும் ஐரோப்பிய சமுதாய அவையும், சமயச் சுதந்திரத்தை  மதிக்காத நாடுகள் மீது மிகுந்த அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
உலகின் பல்வேறு பாகங்களில் விசுவாசத்திற்காகத் துன்புறும் கிறிஸ்தவர்களை நினைப்பதாகக் கூறிய கர்தினால் எர்டோ, இவர்களுடன் ஐரோப்பியத் திருச்சபை மிக நெருக்கமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
ஊடகங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களில் கிறிஸ்தவத்திற்கு எதிரான போக்கு, திட்டமிட்டுப் பரவி வருவதாகவும் இவை அனைத்திலும் கிறிஸ்தவ விசுவாசமும் திருச்சபையும் நியாயமற்று நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த நான்கு நாள் கூட்டமானது இஞ்ஞாயிறன்று நிறைவடைகிறது.

3. ஒரிசா மறைசாட்சிகளுக்கு நீதி-கிறிஸ்தவர்கள் கோரிக்கை

அக்.01,2011. மேலும், இந்தியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் Sajan K. George.
ஒரிசா மறைசாட்சிகளுக்கு நீதிகேட்டு தேசிய மனித உரிமைகள் அவைக்குக் கடிதம் அனுப்பியதற்கான காரணத்தை விளக்கிய ஜார்ஜ், கிறிஸ்தவர்களின் துன்பங்கள் தேசிய அரசியல் வட்டத்திலிருந்து மறைந்து போகக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். 
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிய பின்னரும் உள்ளூர் கிறிஸ்தவர்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஓரங்கட்டப்படுதல், தரமான எதிர்காலத்தை அமைக்க முடியாமல் கஷ்டப்படுதல் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள் என்று ஜார்ஜ் ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் கணிப்புப்படி, 2005க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராய் 4,000த்திற்கு அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிகிறது.

4. மியான்மார் அரசு, அணைக்கட்டுத் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியிருப்பதற்கு ஆயர் வரவேற்பு

அக்.01,2011. மியான்மார் அரசு, நீர்மின்சாரத்திட்டம் ஒன்றுக்காகக் கட்டிவந்த மிகவும் சர்ச்சைக்குரிய அணைக்கட்டுத் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியிருப்பதை வரவேற்றுள்ளார் மியான்மார் ஆயர் ரெய்மண்ட் சா போ ராய்.
இது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் போ ராய், மியான்மார் அரசு, பொதுமக்களின் விருப்பத்திற்குச் செவிமடுக்க விரும்புவதாக அறிவித்துள்ளது, நாட்டிற்கு நல்ல ஓர் அடையாளமாக இருக்கின்றது  என்றார்.
இந்த அணைக்கட்டுத் திட்டத்தால் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆயர்களாகிய தாங்களும் பொதுநிலைக் கிறிஸ்தவர்களும் அரசுக்கு ஏற்கனவே விளக்கியிருக்கிறோம் என்ற ஆயர், மியான்மார் அரசு தொடர்ந்து மக்களின் கருத்துக்களைக் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
மியான்மாரின் முக்கிய நதியான ஐராவதியில் சீன-பர்மிய கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுவரும் இந்த மையித்சோன் அணை அமையும் பகுதி, இராணுவத்திற்கும்  கச்சின் இனச் சிறுபான்மைப் புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வரும் ஒரு களமாக இருக்கிறது.

5. டெங்கு காய்ச்சலினின்று காப்பாற்றப்படுமாறு பாகிஸ்தான் கத்தோலிக்கர் செபம்

அக்.01,2011. பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தாக்கப்பட்டிருக்கும் வேளை, இந்நோயினின்று மக்களைக் காப்பாற்றுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கர் செபித்து வருகின்றனர்.
தற்சமயம் நாட்டை முடக்கிப் போட்டுள்ள டெங்கு காய்ச்சலை எகிப்தின் பத்துக் கொள்ளை நோய்கள் என்று அழைத்துள்ள லாகூர் உயர்மறைமாவட்ட குருகுல அதிபர் அருட்பணி ஆண்ட்ரூ நிசாரி, தினமும் செபமாலையும் குடும்ப செபமும் செய்து இறைவனிடம் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார்.
கொசுக்கள் பெருமளவில் பரவி மக்களைத் தாக்குகின்றன, வெள்ளம் எல்லாவற்றையும் அழித்து வருகின்றது, வீடுகள் இருளுக்குள் கிடக்கின்றன, மின்சாரத் தட்டுப்பாடும் அதிகமாக இருக்கின்றது என்று கூறினார் அருட்பணி நிசாரி.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 11,024 பேர் தாக்கப்பட்டனர் மற்றும் 40 பேர் இறந்தனர். ஆனால் தற்சமயம் இதனால் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் தாக்கப்பட்டனர் மற்றும் 125 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது. 

6. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அகிம்சாவின் சக்திமிக்க பலத்தைக் காட்டுகின்றது பான் கி மூன்

அக்.01,2011. சக்திநிறைந்த அகிம்சா வழியில் அமைதியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதற்கு, கடந்த ஆண்டில் பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் இடம் பெற்ற அரசியல் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகளாய் இருக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மகாத்மா காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் நாள் அனைத்துலக அகிம்சா நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
துப்பாக்கியால் சுடுவதைவிட அதைக் கைவிடுவது மிகவும் வல்லமையானது என்பதை டுனிசியா, எகிப்து மற்றும் பிற நாடுகளின் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் வன்முறையற்ற வழிகளைக் கையாளுமாறு இச்சர்வதேச நாளில் கேட்பதாக பான் கி மூன் கூறியுள்ளார்.
இவ்வுலக நாள் 2007ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

7. இந்தியாவில் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு, உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை

அக்.01,2011. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது இலட்சம் பேர் இறக்கும்வேளை, வருங்காலத்தில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
உலகில் புகையிலையைப் பயன்படுத்துவோர் குறித்து ஐ.நா. வின் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் தினமும் 2,500 பேர் வீதம் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர், அதாவது 40 வினாடிக்கு ஒருவர் வீதம் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
புகையிலை தொடர்பான நோய்களால் 2020ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 20 இலட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்' என்றும், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வாய்வு கூறுகிறது. 
சென்னை நகரில் "கடந்த 2005ம் ஆண்டில் 2 விழுக்காட்டுப் பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது, இப்பழக்கம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இவர்களில் 15.2 விழுக்காட்டுப் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கொல்கட்டா என மற்ற நகரங்களோடு ஒப்பிடும் போது சென்னையில்தான் அதிகம் என்று அவ்வாய்வு கூறுகிறது.

No comments:

Post a Comment