1. அசிசி நகரில் நடைபெறும் அகில உலக அமைதி கூட்டத்திற்கு மத நம்பிக்கையற்றவர்களுக்கும் திருத்தந்தையின் அழைப்பு
2. ஐரோப்பிய நீதி மன்ற தீர்ப்புக்கு ஐரோப்பிய ஆயர் அவையின் வரவேற்பு
3. கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள சமுதாயக் கோட்பாடுகள் நல்வழிகாட்டும் ஒளி விளக்குகள் - மும்பை பேராயர்
4. இந்தோனேசிய அரசுத் தலைவருக்கு மதத் தலைவர்களின் திறந்த மடல்
5. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கு முறை அரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளனர் - Amnesty International
6. கைதிகள் பரிமாற்றம் நடைபெறுவது மத்திய கிழக்குப் பகுதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் - ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்
7. இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் செலவிடும் நேரத்தை பெற்றோர் மிகவும் குறைக்க வேண்டும்
8. கைதிகளைத் தனிமைப்படுத்தும் தண்டனையை அனைத்து நாடுகளும் ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் - ஐ.நா.ஆய்வாளர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அசிசி நகரில் நடைபெறும் அகில உலக அமைதி கூட்டத்திற்கு மத நம்பிக்கையற்றவர்களுக்கும் திருத்தந்தையின் அழைப்பு
அக்.19,2011. அக்டோபர் 27ம் தேதி இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் அகில உலக அமைதிக் கூட்டத்திற்கு முதல் முறையாக, மத நம்பிக்கையற்றவர்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைத்துள்ளார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இதுவரை இக்கூட்டத்திற்கு அழைப்பு பெற்று வந்தனர் என்றும், இவ்வாண்டு முதல் முறையாக சமய நம்பிக்கை இல்லாதவர்களையும் திருத்தந்தை அழைத்திருப்பதற்கு முக்கிய காரணம், மத நம்பிக்கை அற்றவர்களும் உலக அமைதியை விரும்புகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தவே என்றும் பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Melchor Jose Sanchez கூறினார்.
திருத்தந்தை விடுத்துள்ள இந்த சிறப்பு அழைப்பை பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர், இத்தாலி மற்றும் மெக்சிகோ நாடுகளின் மெய்யியலாளர்கள் ஆகியோர் இதுவரை ஏற்றுள்ளனர்.
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் ஐம்பதுக்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இவ்வமைதிக் கூட்டத்தில் திருத்தந்தை ஒரு சிறப்பு உரையாற்றுவார் என்றும், திருத்தந்தையும், அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து உலக அமைதிக்கு உழைக்கும் தங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள்வார்கள் என்றும் வத்திக்கான் செய்தி ஒன்று கூறியுள்ளது.
2. ஐரோப்பிய நீதி மன்ற தீர்ப்புக்கு ஐரோப்பிய ஆயர் அவையின் வரவேற்பு
அக்.19,2011. மனிதக்கரு மற்றும் திசுக்களை அழிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு அதிகாரப்பூர்வமான உரிமைகள் வழங்கப்படக்கூடாதென்று ஐரோப்பிய நீதி மன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை ஐரோப்பிய ஆயர் அவை பெரிதும் வரவேற்றுள்ளது.
மனிதக்கரு என்றால் என்ன என்பதை தெளிவுடன் கூறியுள்ள ஐரோப்பிய நீதி மன்றம், இதனால் அறிவியல் ஆய்வுகளுக்கு ஒரு பாதையைக் காட்டியுள்ளது என்று ஐரோப்பிய ஆயர் அவை கூறியது.
மனிதக்கருவின் ஆரம்ப காலம் முதலே அதனை முழு மனித உயிராகக் கருதி வரும் திருச்சபையின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பை பெரிதும் வரவேற்பதாக ஐரோப்பிய ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் அறிவியல் ஆய்வும் மனித உயிர்கள் மீது காட்டப்படும் மதிப்பும் இணைந்து செல்ல ஒரு வழி பிறந்துள்ளது என்று ஐரோப்பிய ஆயர் அவை தன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது.
3. கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள சமுதாயக் கோட்பாடுகள் நல்வழிகாட்டும் ஒளி விளக்குகள் - மும்பை பேராயர்
அக்.19,2011. நன்னெறி விழுமியங்கள் குறைந்து, பாலைவனமாக மாறிவரும் இவ்வுலகில் கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள சமுதாயக் கோட்பாடுகள் நல்வழிகாட்டும் ஒளி விளக்குகள் என்று மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
அருளாளர் 23ம் அருளப்பர் 1961ம் ஆண்டு வெளியிட்ட Mater et Magistra என்ற சுற்றுமடலின் ஐம்பது ஆண்டு நினைவாக இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
"Mater et Magistra முதல் Caritas in Veritate வரை திருச்சபையின் சமுதாயப் படிப்பினைகள்" என்ற மையக் கருத்துடன் மும்பை, புனித பத்திநாதர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில், ஆசிய ஆயர் பேரவையின் மனித முன்னேற்ற அவையின் தலைவர் பேராயர் Charles Bo மற்றும் திருப்பீடத்தின் இந்தியத் தூதர் பேராயர் Salvatore Pennacchio ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இக்கருத்தரங்கில் 100க்கும் அதிகமான குருக்கள், 178 துறவியர் இவர்களுடன் ஏறத்தாழ 500 மக்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
4. இந்தோனேசிய அரசுத் தலைவருக்கு மதத் தலைவர்களின் திறந்த மடல்
அக்.19,2011. ஊழல்கள் பெருகி வரும் இந்தோனேசியாவில் நாட்டையும், அரசையும் காப்பாற்றும் கவலையில் மதத் தலைவர்கள் இணைந்துள்ளோம் என்று இந்தோனேசியாவின் பல்சமயத் தலைவர்கள் கூறினர்.
இந்தோனேசியாவின் பல்சமயத் தலைவர்கள், மனித நல ஆர்வலர்கள், மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் பலரும் இணைந்து இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ பம்பாங் யுதோயோனோவுக்கு ஒரு திறந்த மடலை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளனர்.
இந்தோனேசிய ஆயர் பேரவை அலுவலகத்திலிருந்து இச்செவ்வாயன்று புறப்பட்ட ஓர் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஜகார்த்தா நகரின் மையப்பகுதிக்கு சென்று அங்கு தங்களது திறந்த கடிதத்தை வாசித்தனர்.
அரசுத்தலைவர் யுதோயோனோவும் பிற அரசியல் தலைவர்களும் ஊழலை ஒழிப்போம் என்று மக்களுக்கு உறுதிகள் வழங்கியிருந்தாலும், இதுவரை நாட்டில் ஊழல் அதிகரித்து வருகிறதேயொழிய குறையவில்லை என்று இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் மதங்களுக்கிடையே உருவாகும் மோதல்களால் எளிய மக்கள் பாதுகாப்புடன் வாழும் வழிகளும் நாட்டில் குறைந்து வருகிறதென்று இக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கு முறை அரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளனர் - Amnesty International
அக்.19,2011. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மத்திய கிழக்குப் பகுதி நாடுகளிலும், வடக்கு ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ள அடக்கு முறை அரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை Amnesty International என்ற உலக அமைப்பு இச்செவ்வாயன்று வெளியிட்டது.
பக்ரைன், எகிப்து, லிபியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 2005ம் ஆண்டு முதல் ஆயுதங்களை வழங்கி வந்துள்ள நாடுகள் என இவ்வறிக்கை சுட்டிக் காட்டும் 11 நாடுகளில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, இரஷ்யா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள் அடங்கும்.
எகிப்து, லிபியா, ஏமன் ஆகிய நாடுகளில் உருவான புரட்சிகள் மிகவும் கொடூரமாக அடக்கப்பட்டதற்கு இந்நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே காரணம் என்றும் இவ்வுலக அமைதி நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய இராணுவத் தளவாடங்களின் விற்பனை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வரும் வரையில், உலகில் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது பெரும் கேள்விக் குறியாகவே இருக்கும் என்று இவ்வறிக்கையைத் தயாரித்த தலைமை ஆய்வாளர் Helen Hughes இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
6. கைதிகள் பரிமாற்றம் நடைபெறுவது மத்திய கிழக்குப் பகுதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் - ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்
அக்.19,2011. இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன குழுவுக்கும் இடையே தற்போது கைதிகள் பரிமாற்றம் நடைபெறுவது மத்திய கிழக்குப் பகுதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் கூறினார் ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்.
இச்செவ்வாயன்று நடைபெற்ற இந்தக் கைதிகள் பரிமாற்றம் குறித்து தன் மகிழ்வை வெளிப்படுத்திய பான் கி மூன், இப்பகுதியில் நிரந்தர அமைதி உருவாக இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.
Gilad Shalit என்ற இஸ்ரேல் படை வீரரின் விடுதலைக்கு ஈடாக, 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, படை வீரர் Shalitம் 477 பாலஸ்தீனிய கைதிகளும் இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்காக அதிகம் உழைத்த எகிப்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாட்டு அரசுகளுக்கு பான் கி மூன் தன் நன்றியைத் தெரிவித்தார்.
7. இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் செலவிடும் நேரத்தை பெற்றோர் மிகவும் குறைக்க வேண்டும்
அக்.19,2011. தவழும் குழந்தைகள் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் செலவிடும் நேரத்தை பெற்றோர் மிகவும் குறைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கக் குழந்தைகள் நலக்கழகம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு எவ்வகையிலும் கல்வி புகட்ட முடியாதென்று வலியுறுத்திக் எச்சரித்துள்ளது.
1999ம் ஆண்டு அமெரிக்காவில் இது போன்ற ஓர் எச்சரிக்கை வெளிப்பட்டது என்பதை சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்த்திவிட்டு, பெற்றோர் தங்கள் பணிகளில் ஈடுபடுவது அமெரிக்க குடும்பங்களில் பெரிதும் பரவிவரும் ஓர் ஆபத்து என்று கூறியுள்ளது.
இரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஏற்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் தொலைகாட்சிகளில் இடம் பெறவில்லை என்பதுடன், இவ்வாறு நேரத்தைச் செலவிடும் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் பழகும் திறமையையும் இழந்து விடுகின்றனர் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
8. கைதிகளைத் தனிமைப்படுத்தும் தண்டனையை அனைத்து நாடுகளும் ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் - ஐ.நா.ஆய்வாளர்
அக்.19,2011. சிறையில் கைதிகளைத் தனிமைப்படுத்தும் தண்டனையை அனைத்து நாடுகளும் ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
உலகின் அரசுகள் பின்பற்றும் பல சித்திரவதைகளைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஐ.நா.ஆய்வாளர் Juan E. Méndez, தன் ஆய்வின் கண்டுபிடிப்புக்களை ஐ.நா.வின் பொது அவையில் இச்செவ்வாயன்று விளக்குகையில் இவ்வாறு கூறினார்.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழல்களில் ஒரு சில கைதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானால், தனிமைப்படுத்தப்படும் காலம் 15 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்றும், வயதில் குறைந்த இளையோரும், மன நலம் குன்றியவர்களும் இந்தத் தண்டனைக்கு ஒருபோதும் உட்படுத்தப்படக் கூடாது என்றும் ஆயவாளர் Juan E. Méndez வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் தற்போது ஏறத்தாழ 25000 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் Guantánamo Bay போன்ற சிறப்புச் சிறைகளில் இத்தண்டனை காலம் 30 நாட்களுக்கும் மேல் நீடிப்பதாகவும் ஆய்வாளர் Juan E. Méndezன் அறிக்கை கூறுகிறது.
மேலும், இவ்வறிக்கையில் சீனாவின் தண்டனைகள் பற்றி அவர் குறிப்பிடும்போது, அங்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஒரு பெண் ஈராண்டுகள் தனிமைப்படுத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment