Tuesday, 18 October 2011

catholic news - hottest and latest - 18/10/11

1. உலக அமைதிக்கான பல்சமய செப வழிபாடு குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்

2. எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களுக்கு கர்தினால் Antonios Naguibன் சுற்றறிக்கை

3. அரசியல் கட்சிகள் இனங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்துவிட வேண்டாம் - பேராயர் Anthony Ireri Mukobo

4. உரோம் நகரில் நடைபெற்ற கலவரங்களில் கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டதற்கு வத்திக்கான் கண்டனம்

5. புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழாவுக்குப் போட்டியாக, அகில உலகத் திரைப்பட விழா

6. பெய்ஜிங் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட குருக்களும் துறவியரும்

7. அகில உலக வறுமை ஒழிப்பு நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வழங்கிய செய்தி

8. மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 20 விழுக்காடு குறைந்துள்ளது

9. மக்கள் போராட்டத்தால் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முடக்கம்

------------------------------------------------------------------------------------------------------

1. உலக அமைதிக்கான பல்சமய செப வழிபாடு குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்

அக்.18,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அசிசியில் 1986ல் ந‌டத்திய அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தின் 25ம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாகவும், உலக அமைதிக்காகவும் இம்மாதம் 27ம் தேதி அசிசியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் இடம்பெறும் பல்சமய செப வழிபாடு குறித்த முழு விவரங்களை திருப்பீட அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.
உலகின் அமைதி மற்றும் நீதி குறித்து சிந்திக்கும், கலந்துரையாடும் மற்றும் செபிக்கும் நாளாக இது இருக்கும் என்று கூறிய திருப்பீட‌ நீதி ம‌ற்றும் அமைதி அவைத் த‌லைவ‌ர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இந்நாள் கொண்டாட்ட‌ங்க‌ளில் ப‌ல்வேறு ம‌த‌ப்பிர‌திநிதிக‌ளுட‌ன், ந‌ல்ம‌ன‌ம் கொண்டோரும் சமய நம்பிக்கை இல்லாதவர்களும் பங்கு பெறுவார்கள் என்றார்.
நிதி ம‌ற்றும் பொருளாதார‌ நெருக்க‌டியால் துன்புறும் இன்றைய உலகில் 'உண்மையின் திருப்பயணம் அமைதியின் திருப்பயணம்' என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்த உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டம், மதங்களிடையே உருவாகும் வன்முறைகள் மதத்திற்கு களங்கம் விளைவிப்பதாகவும் மதத்தின் உண்மை தனித்துவத்திற்கு எதிராகச் செல்வதாகவும் உள்ளன என்பதை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கும் என்றார் கர்தினால் டர்க்சன்.
இந்த அசிசிக் கூட்டத்திற்கு முன்னோடியாக‌, இம்மாதம் 26ம் தேதி புதனன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் காலை 10.30 மணிக்கு திருத்தந்தையின் பொது மறைபோதகத்திற்குப் பதிலாக வார்த்தை வழிபாடு நடைபெறும் எனவும் கர்தினால் டர்க்சன் அறிவித்தார்.
இம்மாத‌ம் 27ம் தேதி உரோம் ந‌க‌ரிலிருந்து அசிசி நோக்கி ப‌ல்சம‌ய‌ பிர‌திநிதிக‌ளைச் சுமந்து செல்லும் சிறப்பு இர‌யில், தெர்னி, ஸ்பொலெத்தோ மற்றும் ஃபொலிஞ்ஞோ நகர்களில் நின்று அந்நகர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் திருச்சபையின் ஒருமைப்பாட்டை அறிவித்துச் செல்லும் எனவும் கூறினார் கர்தினால்.
எகிப்து, இஸ்ரேய‌ல், பாகிஸ்தான், ஜோர்தான், ஈரான், இந்தியா, ச‌வுதி அரேபியா, பிலிப்பீன்ஸ் உட்ப‌ட‌ உல‌கின் 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளிலிருந்து பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் உலக அமைதிக்கான இச்செபக்கூட்டத்தின்போது, அமைதிக்கான தேடலில் அப்பாதையை மனிதருக்கு ஒளிர்விக்கும் அடையாளமாக ஒவ்வொரு பிரதிநிதிகிகும் சிறு விளக்கு ஒன் று வழங்கப்படும் எனவும் அறிவித்தார் கர்தினால் டர்க்சன்.
இக்கூட்டத்தில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், லூத்தரன், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் பிரமுகர்கள், Constantinople முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ, சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் பேராயர், மாஸ்கோ முதுபெரும் தலைவருக்கு நெருக்கமானவர், இன்னும், யூதம், இசுலாம், இந்து, புத்தம், இயற்கையை வழிபடுவோர் என சுமார் 100 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


2. எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களுக்கு கர்தினால் Antonios Naguibன் சுற்றறிக்கை

அக்.18,2011. எகிப்து நாட்டின் கண்ணியமான, நேர்மையான குடிமக்களை இழந்து தவிக்கும் நாங்கள், புண்பட்ட மனதுடன் எங்கள் வேதனையை எடுத்துக் கூறுகிறோம் என்று அலெக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஓர் அமைதியான போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததையொட்டி, தன் வருத்தங்களைத் தெரிவித்து கர்தினால் Naguib அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாட்டின் குடியரசை உறுதி செய்யும் ஆவலில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பிய காப்டிக் கத்தோலிக்கர்கள் வன்முறைக்கு பலியானதற்கு தன் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார்.
இந்த வன்முறைக்கு அந்நாட்டு அரசே காரணம் என்ற கண்டனங்களை பல்வேறு அமைப்புக்கள் கூறியுள்ளபோது, கர்தினால் விடுத்துள்ள இவ்வறிக்கையில் தற்போதைய அரசின் மீது தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதோடு, அந்நாட்டில் மக்களாட்சி நிறுவப்படுவதற்கு கத்தோலிக்கர்கள் தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பை  வழங்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் எகிப்தில் நிகழவிருக்கும் பொதுத்தேர்தலில் காப்டிக் கத்தோலிக்கர்கள் முழுமையாகவும், ஆர்வமாகவும் பங்கெடுக்க வேண்டும் என்று அலெக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Naguib சிறப்பான வேண்டுகோளை இவ்வறிக்கையில் விடுத்துள்ளார்.

எகிப்தில் தற்போது 250,000 காப்டிக் கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வருகின்றனர்.


3. அரசியல் கட்சிகள் இனங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்துவிட வேண்டாம் - பேராயர் Anthony Ireri Mukobo

அக்.18,2011. அண்மையில் Kenyaவின் Ngaremara பகுதியில் ஏற்பட்ட இனக் கலவரத்தில் இரு குழந்தைகள் உட்பட, ஏழுபேர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் Isiolo பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Anthony Ireri Mukobo தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்கள் சீருடையில் கொல்லப்பட்டிருப்பதைக் காணும்போது, இன வெறி நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கிறதென்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறிய பேராயர் Mukobo, கென்ய அரசு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக, இனங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்துவிட வேண்டாமென்றும், மோதல்களில் ஈடுபட்டுள்ள இனங்களை பொதுவான ஓர் இடத்தில் கூட்டிவந்து, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அரசின் கடமை என்றும் பேராயர் வலியுறுத்திக் கூறினார்.


4. உரோம் நகரில் நடைபெற்ற கலவரங்களில் கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டதற்கு வத்திக்கான் கண்டனம்

அக்.18,2011. கடந்த வார இறுதியில் உரோம் நகரில் நடைபெற்ற கலவரங்களில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை உரோம் நகரில் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயம் அமைந்துள்ள சதுக்கத்தில் கலவரங்கள் நடைபெற்றன. இக்கலவரங்களின்போது, அச்சதுக்கத்திற்கு அருகே உள்ள புனிதர்கள் மார்செல்லினோ மற்றும் பீட்டர் ஆலயம் தாக்கப்பட்டது.
இக்கோவிலின் முன் கதவு உடைக்கப்பட்டதென்றும், கோவிலின் வாசலில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருஉருவம் அகற்றப்பட்டு, தெருவில் உடைக்கப்பட்டதென்றும் இக்கோவிலின் பங்கு குரு அருள்தந்தை Giuseppe Ciucci இத்தாலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இத்தாலிய அரசுக்கும், பிரதமர் Silvio Berlusconiக்கும் எதிராக எழுந்த இந்த கலவரங்களில் பல வங்கிகள், கடைகள், மற்றும் வாகனங்கள் பெரும் சேதமடைந்தன.


5. புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழாவுக்குப் போட்டியாக, அகில உலகத் திரைப்பட விழா

அக்.18,2011. அன்பு, அமைதி, நல்லுறவு இவற்றை வளர்க்கும் சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்குப் போட்டியாக, கோவா மாநில அரசு சரியான விழுமியங்களைப் பறை சாற்றத் தவறும் திரைப்பட விழாவை நடத்த முனைவது வருத்தத்திற்குரியது என்று கோவாவின் அருள்தந்தை ஒருவர் கூறினார்.
கோவாவில் மிகவும் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படும். இவ்விழாவையொட்டி, நவம்பர் 24 முதல் நவநாள் பக்தி முயற்சிகள் துவக்கப்பட உள்ளன. இச்சூழலில், நவம்பர் 22 முதல் டிசம்பர் 2 வரை கோவாவில் அகில உலகத் திரைப்பட விழாவை நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மனித குலத்தை மேம்படுத்தும் பல நல்ல விழுமியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சமயத் திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில், திரைப்பட விழாவொன்றை மாநில அரசு நடத்த இருப்பது நம்மிடையே பரவி வரும் உலகப் போக்கை உறுதிப்படுத்தும் ஓர் ஆபத்தான போக்கு என்று புனித சேவியர் கோவிலின் அதிபரான இயேசு சபை குரு Savio Barreto கூறினார்.
2004ம் ஆண்டு வரை இந்தியாவில் அகில உலகத் திரைப்பட விழா புது டில்லியில் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. 2005ம் ஆண்டு இவ்விழா கோவாவிற்கு மாற்றப்பட்டது முதல் நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
புனித சேவியர் விழாவுடன் போட்டிபோடும் வண்ணம் அமைந்துள்ள இந்த விழாவை மாற்றும்படி தலத் திருச்சபை அரசுக்கு 2006ம் ஆண்டு முதல் விண்ணப்பங்கள் செய்துள்ளபோதிலும் இதுவரை எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை என்பதை அருள்தந்தை Barreto தெளிவுபடுத்தினார்.


6. பெய்ஜிங் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட குருக்களும் துறவியரும்

அக்.18,2011. சீனாவின் பெய்ஜிங் நகரில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில், பிறரன்புப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், 52 அருள் சகோதரிகள், நான்கு குருக்கள் மற்றும் இரண்டு துறவு சபை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவில் பணியாற்றும் Jinde Charities என்ற அரசுசாரா கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் "பிறரன்புச் சேவைக்கான பந்தயம்" என்ற முயற்சியை இந்த மாரத்தான் போட்டிகளின்போது மேற்கொண்டது.
இந்தப் பிறரன்பு முயற்சிக்கு ஆதரவாக, குருக்களும் துறவியரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் குறுகிய மாரத்தான் நிகழ்ச்சியை முடித்தனர். Ye Fei என்ற குருவும், Li Min, Zhang Reijuan என்ற இரு அருள்சகோதரிகளும் இந்த மாரத்தானின் முழுமையான 42 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி முடித்தனர்.
இதற்கிடையே, இந்தியாவில் பிறந்து, தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் Fauja Singh என்ற நூறு வயது மனிதர் அக்டோபர் 16, இதே ஞாயிறன்று Toronto நகரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முழு தூரத்தையும் கடந்ததால் Guinness உலகச் சாதனை படைத்துள்ளார்.


7. அகில உலக வறுமை ஒழிப்பு நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வழங்கிய செய்தி

அக்.18,2011. உலகின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் முயற்சிகளில், அரசுகள் மக்களைப் புறக்கணிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் 17 இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலக வறுமை ஒழிப்பு நாளையொட்டி தன் செய்தியை வழங்கிய பான் கி மூன், மக்களை அடிப்படை மூலதனமாகக் கொண்டு எழுப்பப்படும் பொருளாதாரமே உறுதியாக இருக்கும் என்று கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் மக்களைப் புறந்தள்ளும் பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், இதனால், எளிய மக்கள் தங்கள் வேலைகளையும், நலக்காப்பீடுகளையும் இழக்கும் பேராபத்தில் உள்ளனர் என்றும் பான் கி மூன் தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடு பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவருவதாகத் தெரிந்தாலும், அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 இலட்சம் மக்கள் வேலைகளை இழந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இந்நிலை கடந்த 50 ஆண்டுகளில் அந்நாடு சந்தித்துள்ள மிக மோசமான ஒரு நிலை என்றும், ஐ.நா.வின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள Magdalena Sepúlveda கூறினார்.


8. மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 20 விழுக்காடு குறைந்துள்ளது

அக்.18,2011. உலகில் மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 20 விழுக்காடு குறைந்துள்ளதென்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் 108 நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகள் மலேரியா நோய் ஒழிப்புத் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் புதிய அறிக்கையொன்று கூறுகிறது.
இதே முனைப்புடன் அரசுகள் செயல்பட்டால், 2015ம் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக, 30 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று இந்நிறுவனத்தைச் சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகிலேயே ஆப்ரிக்க நாடுகளில் இந்த நோயினால் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். 2009ம் ஆண்டில் மட்டும், உலகம் முழுவதிலும் மலேரியாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 781,000 என்றும், இவர்களில் ஆப்ரிக்காவின் பின்தங்கியச் சகாராப் பகுதிகளில் மட்டும் இவ்வேண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர் உயிரிழந்துள்ளனர் என்றும் BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


9. மக்கள் போராட்டத்தால் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் முடக்கம்

அக்.18,2011. தமிழகத்தின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கான பணிகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அணு உலைகள் அமைவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள், பல்வேறு சாலைத் தடைகளை அமைத்துள்ளதால், ஆலைக்குள் பணியாளர்கள் வரமுடியாத நிலை இருப்பதாக கூடங்குளம் அணு மின் திட்டத்தின் இயக்குனர் பாலாஜி BBCயிடம் தெரிவித்தார்.
சாதாரணமாக 4 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும், அணுமின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த 600 முதல் 800 பேரும் தினந்தோறும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், ஆனால் தற்போது ஏற்கனவே ஆலைக்குள் சென்ற 100 பேரைத் தவிர வேறு யாரும் அந்த வளாகத்துக்குள் இல்லை என்றும் பாலாஜி தெரிவித்தார்.
அங்கே பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வருவதாகவும், போராட்டம் தொடர்ந்தால் முதல் அணு உலையை வரும் டிசம்பரில் துவக்க முடியாமல் போகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் ஃபுக்குஷிமா விபத்துக்குப் பிறகு அணுஉலை தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில் மற்ற சில நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் அணுஉலைகளை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் அச்சங்களைப் போக்கும்வரை அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அமைச்சரவை நிறைவேற்றியுள்ளதென ஊடகங்கள் கூறுகின்றன.
அணுஉலைப் பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும்வரை புதிய உலைகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்று கோரி, ஒய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளனர். நாட்டின் பிற இடங்களிலும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...