1. திருத்தந்தை இந்தோனேசிய ஆயர்களுக்கு வழங்கிய ‘அட் லிமினா’ உரை
2. திருத்தந்தையின் அழைப்பையடுத்து, பாப்பிறை பிறரன்பு அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்
3. பாலர் தொழிலாளரை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வி – கர்தினால் கிரேசியஸ்
4. பள்ளிகள் நம்பிக்கையின் இடங்கள் - திருச்சபை அதிகாரி
5. பெலெம் நகரில் உலகின் மிகப்பெரிய அன்னைமரியா பவனி
6. ஸ்டீவ் ஜாப்ஸ் சிலிக்கன் பள்ளத்தாக்கு புரட்சிக்கு வித்திட்டவர் – வத்திக்கான் நாளிதழ்
7. பெண்ணுரிமை ஆர்வலர்களுக்கு 2011ம் ஆண்டு நொபெல் அமைதி விருது
8. ஆப்ரிக்காவிலும் அமெரிக்காவிலும் மனிதக் கொலைகள் அதிகம் – ஐ.நா.ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை இந்தோனேசிய ஆயர்களுக்கு வழங்கிய ‘அட் லிமினா’ உரை
அக்.07,2011. கிறிஸ்துவின் மீட்பு, அவர் வழங்கிய அன்பு, மற்றும் மன்னிப்பு ஆகியவை பல நூற்றாண்டுகளாக இந்தோனேசிய நாட்டில் அறிவிக்கப்பட்டு வந்துள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்திக்கும் ‘அட் லிமினா’ என்ற சந்திப்பிற்காக உரோம் நகர் வந்திருக்கும் இந்தோனேசிய ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், மறைபரப்புப் பணியில் நாம் கொள்ளும் ஆர்வம் வெறும் போதனைகளாக மட்டும் இல்லாமல், செயல்வடிவமும் பெறவேண்டும் என்று கூறினார்.
மதச் சுதந்திரம் என்பது தனிமனித அடிப்படை உரிமை என்பதை இந்தோனேசியா தன் சட்டங்களில் கொண்டுள்ளது என்றாலும், இந்தச் சுதந்திரத்தை பேணிக் காப்பதிலும், வளர்ப்பதிலும் நாம் பொறுமை காட்ட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை நினைவுறுத்தினார்.
இறைவனின் பிரசன்னத்தை கண்கூடாக உணரும் வகையில் இந்தோனேசியாவில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இருபால் துறவியரின் அர்ப்பணத்தைப் பாராட்டிப் பேசியத் திருத்தந்தை, இத்துறவியரும், பிற மறைமாவட்டக் குருக்களும் சரியான வழிகளில் உருவாவதைக் கண்காணிப்பது ஆயர்களின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கலாச்சாரம், மதங்கள் ஆகியவற்றின் சங்கமமாக இருக்கும் இந்தோனேசியாவில், முறையான, மனம் திறந்த பல்சமய உரையாடல்களை வளர்ப்பது இன்றியமையாத ஒரு பணி என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
உரையாடல்கள் மூலம் நாட்டின் ஒற்றுமை, அமைதி இவற்றை வளர்ப்பதில் ஆயர்கள் தனிப்பட்ட ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்த ஆயர்கள் அனைவரையும் அன்னைமரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகக் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.
2. திருத்தந்தையின் அழைப்பையடுத்து, பாப்பிறை பிறரன்பு அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்
அக்.07,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தற்போது நிலவும் பட்டினிக்கொடுமை, வறட்சியால் உருவான ஒரு பிரச்சனை என்றாலும், இந்தப் பிரச்னைக்கு மனிதர்களின் செயல்பாடுகளும் முக்கிய காரணம் என்று அகில உலக காரித்தாஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்ரிக்காவின் சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறையை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் குறிப்பிட்டுப் பேசுகையில், அந்த வளாகத்தில் திருத்தந்தையைச் சந்திக்கக் காத்திருந்த அகில உலக காரித்தாஸ் மனிதாபிமான செயல்களை ஒருங்கிணைக்கும் இயக்குனர் Alistair Dutton, திருத்தந்தையைச் சந்தித்தபின் இவ்வாறு கூறினார்.
Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜார்ஜியோ பெர்ட்டின், மற்றும் காரித்தாசின் பல்வேறு அதிகாரிகளும் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்து, ஆப்ரிக்காவில் காரித்தாஸ் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளைப் பற்றி திருத்தந்தையிடம் எடுத்துக் கூறினர்.
அகில உலக காரித்தாஸ் அமைப்பு தற்போதைய நிலையில் ஆப்ரிக்காவில் 5 இலட்சம் மக்களுக்கு 3 கோடி யூரோ, அதாவது, ஏறக்குறைய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவு உதவிகளைச் செய்து வருகிறது என்று காரித்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை விடுத்த அழைப்பையடுத்து, Cor Unum என்ற பாப்பிறை பிறரன்பு அவை அக்டோபர் 7 இவ்வெள்ளியன்று ஆப்ரிக்காவின் பிரச்சனையைக் குறித்து கலந்து பேச ஒரு கூட்டத்தை வத்திக்கானில் ஏற்பாடு செய்துள்ளது. காரித்தாஸ் உட்பட, பல கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
3. பாலர் தொழிலாளரை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வி – கர்தினால் கிரேசியஸ்
அக்.07,2011. உலகிலே அதிகமான பாலர் தொழிலாளரைக் கொண்டுள்ள இந்தியாவில், இதனை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் கல்வியே என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
இந்தியாவில் பாலர் தொழிலாளரின் நிலை குறித்துப் பேசிய கர்தினால் கிரேசியஸ், பாலர் தொழிலாளருக்கு எதிரான ஒரே ஆயுதம் கல்வி என்று கூறினார்.
இதனாலே இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறார்க்கு கட்டாயக் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறார் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் கர்தினால் கூறினார்.
கத்தோலிக்கர், இந்திய மக்கள் தொகையில் சுமார் 2 விழுக்காட்டினராக இருந்த போதிலும், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை கிராமங்களில் இருக்கின்றன, இவை ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு உதவுகின்றன என்றார் அவர்.
நாட்டின் நலவாழ்வுப் பணிகளில் ஐந்தில் ஒரு பாகத்தைத் கத்தோலிக்கத் தி்ருச்சபை செய்கின்றது எனவும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்
இந்தியாவில் பாலர் தொழில் முறை சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், 2001ம் ஆண்டின் புள்ளி விபரக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே 27 இலட்சம் பாலர் தொழிலாளர் உள்ளனர், ஆயினும் இவ்வெண்ணிக்கை 4 கோடியே 50 இலட்சம் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
4. பள்ளிகள் நம்பிக்கையின் இடங்கள் - திருச்சபை அதிகாரி
அக்.07,2011. இக்காலத்திய உலகளாவிய நெருக்கடி நிலைமை, வருங்காலத்திற்கு முன்வைக்கும் சவால்கள் குறித்துப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டி வரும்வேளை, கத்தோலிக்கத் திருச்சபை பள்ளிகளை நம்பிக்கையின் இடங்களாக நோக்குகின்றது என்று திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.
இஸ்பெயின் நாட்டு சரகோசாவில் இம்மாதம் 18 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் கத்தோலிக்கக் கல்வி குறித்த 17வது அனைத்துலக மாநாடு பற்றிப் பேசிய, சர்வதேச கத்தோலிக்கக் கல்வி அலுவலகப் பொதுச் செயலர் அருட்பணி Angel Astorgano இவ்வாறு கூறினார்.
“பள்ளி, மனித உரிமைகளுக்கான நம்பிக்கையின் இடம்” என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டில், சுமார் 4 கோடியே 40 இலட்சம் மாணவர்கள் சார்பாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய 600 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
IOCE என்ற சர்வதேச கத்தோலிக்கக் கல்வி அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டு Lucerneல் 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அரசு-சாரா அலுவலகத்தின் பொதுத் தலைமையகம் பெல்ஜிய நாட்டு Brussels ல் உள்ளது. இது 102 நாடுகளில் 2 இலட்சத்து 10 ஆயிரம் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
5. பெலெம் நகரில் உலகின் மிகப்பெரிய அன்னைமரியா பவனி
அக்.07,2011. உலகின் மிகப்பெரிய அன்னைமரியா பவனி பிரேசில் நாட்டு Belém என்ற நகரில் இந்த அக்டோபர் 9ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.
இஞ்ஞாயிறன்று நடைபெறும் இந்த மாதாப் பவனிக்குத் தயாரிப்பாக, பெலெம் உயர்மறைமாவட்டத்தின் பல பங்குகளும் பொதுநிலை கத்தோலிக்க இயக்கங்களும் மேய்ப்புப்பணி மையங்களும் இப்புதனன்று 48 மணிநேர திருநற்கருணை ஆராதனை பக்தி முயற்சியைத் தொடங்கியுள்ளன.
பெலெம் பேராலயத்திலிருந்து தொடங்கும் இப்பவனி இரண்டு மைல்கள் சென்று நாசரேத்தூர் மரியா திருத்தலம் சென்றடையும். இதில் பிரேசில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள்.
1792ம் ஆண்டு வத்திக்கான் அனுமதியுடன் தொடங்கப்பட்ட இந்தப் பவனி பற்றி அறிக்கை வெளியிட்ட பிரேசில் ஆயர்கள், இது ஒரு குடும்ப விழா, இது ஒரு சகோதரத்துவ விழா என்று குறிப்பிட்டுள்ளனர்.
6. ஸ்டீவ் ஜாப்ஸ் சிலிக்கன் பள்ளத்தாக்கு புரட்சிக்கு வித்திட்டவர் – வத்திக்கான் நாளிதழ்
அக்.07,2011. உறவுகளையும், தொடர்புகளையும் வளர்க்கும் வண்ணம் திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் வத்திக்கான் வானொலியையும், வத்திக்கான் இரயில் நிலையத்தையும் அமைத்ததுபோல், Apple நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராய் இருந்தார் என்று இயேசு சபை அருள் பணியாளர் அந்தோனியோ ஸ்பதாரோ (Antonio Spadaro) கூறினார்.
அக்டோபர் 5ம் தேதி, இப்புதனன்று தன் 56வது வயதில் காலமான ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி, இயேசு சபையினர் நடத்தும் La Civiltà Cattolica என்ற மாத இதழின் ஆசிரியரான அருள்தந்தை ஸ்பதாரோ வத்திக்கான் வானொலிக்கு இவ்வியாழனன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
வாழ்க்கையை, ஒவ்வொரு நாள் அலுவல்களின் தொகுப்பாக மட்டும் காணாமல், குறிக்கோளுடன் கனவுகளுடன் வாழ்வதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் விட்டுச் சென்ற சிந்தனைகளை தன் பேட்டியில் தெளிவுபடுத்தினார் அருள்தந்தை ஸ்பதாரோ.
மேலும், வத்திக்கானில் இருந்து வெளியாகும் L’Osservatore Romano நாளிதழில் இவ்வெள்ளியன்று வெளியாகியுள்ள ஒரு செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸ் சிலிக்கன் பள்ளத்தாக்கு புரட்சிக்கு எவ்வகையில் வித்திட்டார் என்றும், நாம் பயன்படுத்தும் கருவிகளில் மட்டுமல்லாமல், நமது சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றிலும் நாம் புரட்சிகளை கொணர வேண்டும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முன்னோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
7. பெண்ணுரிமை ஆர்வலர்களுக்கு 2011ம் ஆண்டு நொபெல் அமைதி விருது
அக்.07,2011. அகிம்சா வழியில் பெண்ணுரிமைக்காக உழைத்து வரும் லைபீரிய நாட்டு அரசுத்தலைவர் Ellen Johnson Sirleaf, லைபீரிய அமைதி ஆர்வலர் Leymah Gbowee, ஏமன் நாட்டு Tawakkul Karman ஆகிய மூவருக்கும் 2011ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக நார்வே நொபெல் விருதுக் குழு இவ்வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அமைதியைக் கட்டியெழுப்பும் பணிகளில் முழுமையாகப் பங்கெடுப்பதற்குப் பெண்களுக்கு இருக்கும் உரிமைகளுக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் இம்மூவரும் வன்முறையற்ற வழிகளில் உழைத்து வருகின்றனர் என்று சொல்லி அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதாக அக்குழு கூறியுள்ளது.
72 வயதாகும் Johnson Sirleaf, லைபீரியாவில் 2005ம் ஆண்டில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசுத்தலைவராவார்.
லைபீரிய அமைதி ஆர்வலர் Leymah Gbowee, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் பெண்களைக் குழுக்களாக உருவாக்கி அந்நாட்டுப் புரட்சிப்படைகளுக்குச் சவாலாக இயங்கி வருபவர்.
32 வயதாகும் Tawakul Karman மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இவர் பத்திரிகையாளர்க்கான மனித உரிமைகள் குழுவான Women Journalists without Chains என்ற குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ஏமனில் கடந்த சனவரியில் அரசுத்தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட Ali Abdullah Saleh வுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் Karman முக்கியமானவர்.
சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் வளர்ச்சிக்கானத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஆண்களைப் போன்று பெண்களும் ஒரேமாதிரியான வாய்ப்புக்களைப் பெறாத வரையில் உலகில் சனநாயகத்தையும் நிலையான அமைதியையும் நாம் அடைய முடியாது என்று நார்வே நொபெல் குழு கூறியது.
8. ஆப்ரிக்காவிலும் அமெரிக்காவிலும் மனிதக் கொலைகள் அதிகம் – ஐ.நா.ஆய்வு
அக்.07,2011. மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தெற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவிலும் இளைஞர்கள் தாங்கள் கொலை செய்யப்படும் ஆபத்துக்களை அதிகம் எதிர்நோக்குகின்றனர் என்று UNODC என்ற ஐ.நா.போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் அறிவித்தது.
இந்த ஐ.நா. அலுவலகம் இவ்வியாழனன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், இளையோரைத் தவிர, வீட்டு வன்முறைகளில் பெண்கள் கொலைசெய்யப்படும் அச்சுறுத்தலும் அதிகமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ஆண்களுக்கு 11.9 பேர் வீதம் வன்முறையை எதிர்நோக்கும்வேளை, ஒரு இலட்சம் பெண்களுக்கு 2.6 பேர் வீதம் இத்தகைய இறப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என்று அவ்வாய்வு கூறுகிறது.
துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது குறித்த ஐ.நா. தீர்மானம் கடுமையாய் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன என்று அவ்வாய்வு கூறுகிறது.
கடந்த ஆண்டில் உலகில் 4,68,000 கொலைகள் நடத்தப்பட்டன. இவற்றில் சுமார் 36 விழுக்காடு ஆப்ரிக்காவிலும் 31 விழுக்காடு அமெரிக்காவிலும் 27 விழுக்காடு ஆசியாவிலும் 5 விழுக்காடு ஐரோப்பாவிலும் 1 விழுக்காடு ஓசியானியாவிலும் நடத்தப்பட்டன என்று ஐ.நா. ஆய்வு கூறுகிறது.
No comments:
Post a Comment