1. அருள்பணியாளர்கள் உலகப் போக்குடன் இணைந்து நல்ல மதிப்பீடுகளை இழக்கக் கூடாது - வத்திக்கான் உயர் அதிகாரி
2. புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் அதிகம் உள்ளன - பேராயர் தொமாசி
3. ஒரிஸ்ஸா தலத்திருச்சபையின் முயற்சியால் 19 இலங்கை மீனவர்கள் விடுதலை
4. கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் இன்னும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை
5. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் மேற்கொள்ளும் அமைதி முயற்சி
6. நீதியை வலியுறுத்தும் அமைப்புக்களில் இளையோர் இணைய வேண்டும் - ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்
7. 2050க்குள் புகைப்பிடிப்போரில் நான்கு கோடிப் பேர் காச நோயால் இறக்கும் ஆபத்து - ஆய்வாளர்கள் எச்சரிக்கை
8. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை உயர் அதிகாரி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருள்பணியாளர்கள் உலகப் போக்குடன் இணைந்து நல்ல மதிப்பீடுகளை இழக்கக் கூடாது - வத்திக்கான் உயர் அதிகாரி
அக்.05,2011. இவ்வுலகத்தோடும், மக்களோடும் தன்னை இணைத்துக்கொள்ளும் அருள்பணியாளர்கள், உலகப்போக்குடன் இணைந்து நல்ல மதிப்பீடுகளை இழக்கக் கூடாதென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அருள்பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Mauro Piacenza, அமெரிக்காவில் பணியாற்றும் அனைத்து இஸ்பானிய அருள்பணியாளர்களையும் இத்திங்களன்று லாஸ் ஆஞ்சலெஸ் நகரில் சந்தித்து உரையாற்றியபோது இவ்விதம் கூறினார்.
லாஸ் ஆஞ்சலெஸ் பேராயர் Jose Gomez அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த கர்தினால் Piacenza, 21ம் நூற்றாண்டுக்குத் தேவையான அருள்பணியாளர்கள் எவ்விதம் வாழவேண்டும், பணியாற்றவேண்டும் என்ற கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இன்றைய உலகில் பணியாற்றும் குருக்கள் மக்களை மையப்படுத்திய பணிகளில் பணிவான மனதோடு ஈடுபட்டு, மனித மாண்பை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுவதே முக்கியம் என்று கர்தினால் Piacenza சுட்டிக் காட்டினார்.
தன்னை மக்களின் சேவைக்கு வழங்குவதன் மூலம், கிறிஸ்துவை இந்த உலகிற்கு வழங்கும் குருக்களே உலகம் பெறக்கூடிய சிறந்த கொடைகள் என்று திருப்பீட உயர் அதிகாரி கர்தினால் Piacenza தன் உரையில் வலியுறுத்தினார்.
2. புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் அதிகம் உள்ளன - பேராயர் தொமாசி
அக்.05,2011. சமுதாயப் புரட்சிகளாலும், இயற்கையில் உருவாகும் வறட்சி மற்றும் பசி, பட்டினிக் கொடுமைகளாலும் நாடு விட்டு, நாடு செல்லும் புலம்பெயர்ந்தோர், அகதிகள் ஆகியோருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் அதிகம் உள்ளன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா. அகதிகள் அமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.நா. அகதிகள் அமைப்பின் 60 ஆண்டுகள் சேவையால் 4 கோடியே 30 இலட்சம் பேர் மனித மாண்புடன் வாழும் நிலையைப் பெற்றுள்ளதை நாம் மறுக்க முடியாது என்று கூறிய பேராயர் தொமாசி, இந்தப் பணியானது நாம் வாழும் நாட்களில் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனித மாண்புக்கு பெரும் களங்கத்தை விளைவித்த இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐ.நா. அகதிகள் அமைப்பின் முயற்சிகளால், மனிதர்களின் அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் மதிக்கப்படுகின்றன என்றாலும், இன்றைய நாட்களிலும் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்கள் சிறைக்கூடங்களாக இருப்பது வேதனையைத் தருகின்றன என்ற தன் கவலையையும் வெளியிட்டார் பேராயர் தொமாசி.
உலகை இன்று பெருமளவில் பாதிக்கும் அகதிகள் பிரச்சனையில் குழந்தைகளும் சிறுவர்களும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்படுவது நமது தனிப்பட்ட, அவரசக்கால கடமையாகிறது என்று திருப்பீட அதிகாரி பேராயர் சில்வானோ தொமாசி வலியுறுத்திக் கூறினார்.
3. ஒரிஸ்ஸா தலத்திருச்சபையின் முயற்சியால் 19 இலங்கை மீனவர்கள் விடுதலை
அக்.05,2011. ஒரிஸ்ஸா தலத்திருச்சபையின் முயற்சியால் சிறையில் இருந்த 19 இலங்கை மீனவர்கள் இத்திங்களன்று விடுவிக்கப்பட்டனர்.
இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி மீன்பிடித்த 24 இலங்கை மீனவர்களை இரு மாதங்களுக்கு முன் இந்தியக் கடற்படையினர் கைது செய்தனர்.
ஒரிஸ்ஸாவின் கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக் குழுவின் செயலர் அருள்தந்தை திபாகர் பரிச்சாவின் முயற்சியால் இந்த 24 பேரில் 19 பேர் கடந்த சனிக்கிழமை, மற்றும் திங்கள் கிழமை ஆகிய இரு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். மற்ற ஐந்து பெரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிகிறது.
விடுவிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் தற்போது குருக்களின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த பேராயர் ஜான் பார்வா, அவர்கள் பெற்ற விடுதலை அனைவருக்கும் மகிழ்வான ஒரு நற்செய்தி என்றும், இலங்கை செல்லும் இவர்கள் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும்படியும் கூறினார்.
4. கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் இன்னும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை
அக்.05,2011. இந்தியாவின் பல பகுதிகளில், சிறப்பாக ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் இன்னும் கவலைக்குரிய வழிகளில், அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று அனைத்திந்திய கிறிஸ்தவ அவை கூறியுள்ளது.
தகுந்த காரணங்கள் ஏதுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறதென்று, அனைத்திந்திய கிறிஸ்தவ அவை இந்தியாவின் சிறுபான்மைத் துறை அமைச்சர் Salman Khurshidக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.
மதத்தின் அடிப்படையில் புறந்தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவ தலித், மற்றும் பழங்குடியினரின் பல உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் அளிக்க வேண்டும் என்று இக்கடிதத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளதென்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
கந்தமால் பகுதியில் நீதி இன்னும் எவ்வகையிலும் நிலைநாட்டப்படாமல் இருப்பது நாட்டுக்கே ஒரு பெரும் அவமானம் என்றும், கந்தமால் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் எவ்வித உதவிகளும் தரப்படவில்லை என்றும் அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச் செயலர் ஜான் தயாள் கூறினார்.
5. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் மேற்கொள்ளும் அமைதி முயற்சி
அக்.05,2011. இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் அனைத்தும் இணைந்து நூறு நாள் அமைதிப் பராம்பரியம் என்ற முயற்சியில் ஈடுபட உள்ளன.
2012ம் ஆண்டு இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி Westminster, Southwark, Brentwood ஆகிய மறைமாவட்டங்களில் உள்ள 485 கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரைக் கொண்டு இந்த முயற்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் துவக்கமாக, அக்டோபர் 7, வருகிற வெள்ளியன்று Westminster பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியொன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி ஆரம்பமாகும் இந்த நூறுநாள் முயற்சி, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நாட்களிலும், அதைத் தொடரும் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டிகள் நேரத்திலும் தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி நிறைவுபெறும் என்று Westminster உயர்மறைமாவட்டச் செய்தியொன்று கூறுகிறது.
6. நீதியை வலியுறுத்தும் அமைப்புக்களில் இளையோர் இணைய வேண்டும் - ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்
அக்.05,2011. ஐ.நா.வின் பல்வேறு அமைதி முயற்சிகளிலும், இன்று உலகில் புதிதாக உருபெற்றிருக்கும் மக்களாட்சிகளில் நீதியை வலியுறுத்தும் அமைப்புக்களிலும் இளையோர் இணைய வேண்டும் என்று ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
நியூயார்க் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு சொற்பொழிவொன்றை இச்செவ்வாயன்று வழங்கிய பான் கி மூன், நீதி, சமத்துவம், சட்டங்கள் நிலைநாட்டப்படுதல் ஆகிய முயற்சிகளில் இளையோர் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஐவரி கோஸ்ட் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் அநீதியான, அடக்கு முறைகளை மீறி, இளையோர் மேற்கொண்ட முயற்சிகளால் மாற்றங்கள் உருவானதைச் சுட்டிக் காட்டிய பான் கி மூன், நடுநிலையான சட்டதிட்டங்களுடன் கூடிய மாற்றங்கள் உருவாவதற்கு இளையோர், முக்கியமாக, படித்த இளையோர் முன்வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
7. 2050க்குள் புகைப்பிடிப்போரில் நான்கு கோடிப் பேர் காச நோயால் இறக்கும் ஆபத்து - ஆய்வாளர்கள் எச்சரிக்கை
அக்.05,2011. உலகில் புகைப்பிடிப்போரில் நான்கு கோடிப் பேர் காச நோயால் 2050ம் ஆண்டுக்குள் இறக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிப்போர் காசநோய்க் கிருமிகளால் பாதிக்கப்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக பிரித்தானிய நுரையீரல் நிறுவனத்தின் கௌரவ மருத்துவ ஆலோசகரான காசநோய் நிபுணர் John Moore-Gillon கூறினார்.
TB எனப்படும் காசநோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுவோரில் பெரும்பாலானோர், ஆப்ரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் நாடுகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ளனர் என்றும் Moore-Gillon தெரிவித்தார்.
உலக நலவாழ்வில் உடனடியாக அக்கறை எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இந்தக் காசநோய் இருக்கின்றது என்று உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்து சுமார் இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
8. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை உயர் அதிகாரி
அக்.05,2011. தமிழகத்தில், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் வன்குற்றங்கள் போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இக்குற்றம் தொடர்பாக, கடந்தாண்டில் மட்டும் 810 வழக்குகள் பதிவாகின என்றும், இது 2009ம் ஆண்டைவிட 27.8 விழுக்காடு அதிகம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சிசுக்கொலை, குழந்தைகளைத் தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என பலவகையான குற்றங்கள் இடம் பெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இவற்றைத் தடுக்க கடுமையானச் சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், கள்ளத்தொடர்பு, குடும்பப் பிரச்சனைகள் போன்ற சமூகப் போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று அந்தக் காவல்துறை அதிகாரி கூறினார்.
2004ம் ஆண்டிலிருந்து இந்த 2011ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வரை தமிழகத்தில் காணாமல் போய்க் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை, 1,220. இதில் பெண் குழந்தைகள் 625 என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment