1. ஆன்மீகப் பாரம்பரியங்களை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் போலந்து மக்களுடனான திருப்பீட அமைப்பு
2. திருத்தந்தை : அடுத்து வாழ்பவருக்கான அன்பின் அடையாளங்கள் புதிய புனிதர்கள்
3. உலகப் பொருளாதர நெருக்கடி குறித்து விவாதிக்கிறது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை
4. உலக மக்கள் தொகையில் 17.42 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்
5. ஆசிய ஆயர் பேரவையின் புதியத் தலைமைச் செயலர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ்
6. மங்களூர் நகரில் இரு கத்தோலிக்க நிறுவனங்கள் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டுள்ளன
7. பாகிஸ்தானில் மறைபரப்பு ஞாயிறன்று விவிலியத்தின் புதியதொரு பதிப்பு வெளியிடப்பட்டது
8. இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஆன்மீகப் பாரம்பரியங்களை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் போலந்து மக்களுடனான திருப்பீட அமைப்பு
அக்.24,2011. போலந்து நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியிலும் வாழும் அந்நாட்டு மக்களுடன் ஆன திருப்பீடத்தின் உறவை மேம்படுத்தவும், அம்மக்களின் கலாச்சார, மத, மேய்ப்புப்பணி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளில் ஊக்கமளிக்கவும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் திருப்பீடத்தில் துவக்கப்பட்ட அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று சந்தித்து உரையாடினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
போலந்து திருச்சபையின் ஆன்மீகப் பாரம்பரியங்களை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, அருளாளர் இரண்டாம் ஜான் பாலின் படிப்பினைகளையும், மேய்ப்புப்பணி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளையும், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், பிரசுரங்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் மக்களுக்கு அறிவித்து வருவதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார் திருத்தந்தை.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் குருத்துவப் பயிற்சிக்குப் பெருமளவில் உதவி வரும் அருளாளர் இரண்டாம் ஜான் பால் பெயரிலான இந்த அமைப்பு, உரோம் நகர் வரும் திருப்பயணிகளுக்கு ஆற்றி வரும் சேவையையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.
2. திருத்தந்தை : அடுத்து வாழ்பவருக்கான அன்பின் அடையாளங்கள் புதிய புனிதர்கள்
அக்.24,2011. மறைபரப்புப் பணிகளுக்கான ஆர்வத்தையும் அர்ப்பணத்தையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மறைபரப்பு ஞாயிறன்று, இறைவனுக்கும் அடுத்து வாழ்பவருக்குமான உயரிய அன்பின் அடையாளமாக இருந்த மூவரை புனிதர்களாக அறிவிப்பதில் தான் மகிழ்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“சவேரியன் மறைபோதகர்கள்” என அழைக்கப்படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபையை ஆரம்பித்த இத்தாலிய ஆயர் அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, பிறரன்புப் பணியாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறைபராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங்கியவரும் “ஏழைகளின் தந்தை” என அழைக்கப்படுபவருமான இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்து,புனித வளன் பணியாளர் பெண்கள் சபையைத் தொடங்கிய அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகிய மூவரையும் புனிதர்களாக அறிவித்த இஞ்ஞாயிறு திருப்பலியில் இவ்வாறு கூறினார் பாப்பிறை.
முழு இதயத்தோடு இறைவனை அன்பு செய்வது, மற்றும் நம் அடுத்திருப்போரையும் நம்மைப் போல் அன்புசெய்வது என்பதை வலியுறுத்திக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து இந்தப் புதிய புனிதர்கள் எவ்வாறு இறை அன்பின் சாட்சிகளாக விளங்கினார்கள் என்பதையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் பாப்பிறை.
இத்திருப்பலிக்குப் பின் உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், இந்த மூன்று புனிதர்களும் ஆரம்பித்த துறவு சபைகளின் அங்கத்தினர்களுக்கு வாழ்த்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இத்தாலியின் அசிசியில் இவ்வியாழனன்று இடம்பெற உள்ள உலக அமைதிக்கான பல்மதங்களின் கூட்டம் வெற்றியடைய அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி செபிக்குமாறும் அனைவரிடமும் விண்ணப்பித்தார்.
3. உலகப் பொருளாதர நெருக்கடி குறித்து விவாதிக்கிறது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை
அக்.24,2011. சர்வதேச நிதி அமைப்பில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை.
இன்றைய உலகின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மீக பிரச்னைகளை ஆராயும் போது, ஒவ்வொருவரின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாக கூறும் இந்த அறிக்கை, எந்த ஒரு நாட்டின் அரசியல் நடவடிக்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாத திருச்சபை, மனித குல விவகாரங்களில் தன் ஈடுபாட்டின் வழி மிக நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது என தெரிவிக்கிறது.
நம் சமூக ஒத்திணக்க வாழ்வின் அடிப்படையாக இருக்கும் கலாச்சார மற்றும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகளின் ஆழம் குறித்து ஒவ்வொருவரும் ஆராயவேண்டும் என, இவ்வுலகம் இன்று எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி எதிர்பார்க்கின்றது என்று இவ்வறிக்கையின் முன்னுரையில் கூறியுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
உலகப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் பொறுப்புணர்வின் மீது கட்டப்பட்டவைகளாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் அவர்.
'பொருளாதார வளர்ச்சியும் இவ்வுலகில் காணப்படும் சரிநிகரற்ற தன்மைகளும்' என்பது குறித்து முதலில் விவாதிக்கும் இவ்வேடு, பல நாடுகளில் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் துன்புறுவதையும், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்குக் குறைவான வருமானத்தைப் பெற்று அதிலேயே வாழ்க்கையை நகர்த்துவதையும் சுட்டிக்காட்டி கவலையைத் தெரிவிக்கிறது.
இவ்வுலகில் தொழில் நுட்பத்தின் பங்கும் ஒழுக்க ரீதி சவாலும், உண்மையான உலக அரசியல் அதிகாரம், அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச நிதி அமைப்புகளை சீர்திருத்துதல் என்ற தலைப்புகளிலும் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்துள்ளது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் ஏடு.
4. உலக மக்கள் தொகையில் 17.42 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்
அக்.24,2011. 2009ம் ஆண்டின் இறுதி நாள் வரையுள்ள கணக்கின்படி உலக மக்கள்தொகை எண்ணிக்கை 677 கோடியே 75 இலட்சத்து 99 ஆயிரம் எனவும், இதில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 118 கோடியே 6 இலட்சத்து 65 ஆயிரம் எனவும் திருச்சபையின் FIDES செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மறைபோதக நாளையொட்டி இப்புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள இக்கத்தோலிக்கச் செய்தி நிறுவனம், உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 0.02 விழுக்காடு அதிகரித்து, தற்போது அது உலக மக்கள் தொகையில் 17.42 விழுக்காடாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஆஃப்ரிக்காவில் 0.3 விழுக்காடும் அமெரிக்காவில் 0.04 விழுக்காடும், ஆசியாவில் 0.01 விழுக்காடும் அதிகரித்துள்ள வேளை, ஐரோப்பாவில் 0.02 விழுக்காடும் ஓசியானியாவில் 0.03 விழுக்காடும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
திருச்சபையில் குருக்களின் எண்ணிக்கை ஐரோப்பா தவிர ஏனைய அனைத்துக்கண்டங்களிலும் அதிகரித்துள்ளதாகவும் FIDES செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
5. ஆசிய ஆயர் பேரவையின் புதியத் தலைமைச் செயலர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ்
அக்.24,2011. ஆசிய ஆயர் பேரவையின் புதியத் தலைமைச் செயலராக மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பாங்காக்கில் ஆசிய ஆயர் பேரவையின் மத்திய அவை கூடியபோது, கர்தினால் கிரேசியஸ் தேர்ந்தெடுக்கபட்டார்.
தற்போது இந்திய ஆயர் பேரவையின் தலைவராக பணிபுரியும் கர்தினால் கிரேசியஸ், வரும் ஆண்டு சனவரி முதல் நாளிலிருந்து ஆசிய ஆயர் பேரவையின் இந்தப் புதிய பொறுப்பையும் மேற்கொள்வார்.
இவருக்கு முன்னதாக இப்பொறுப்பில் பணிபுரிந்து வரும் பிலிப்பின்ஸ் பேராயர் Orlando Quevedoவின் ஆறு ஆண்டு பணிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியன்று முடிவடைகிறது.
கர்தினால் கிரேசியஸ் ஆசிய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக் குழுவின் தலைவராக ஏற்கனவே 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. மங்களூர் நகரில் இரு கத்தோலிக்க நிறுவனங்கள் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டுள்ளன
அக்.24,2011. இந்தியாவில் மங்களூர் நகரில் இரு கத்தோலிக்க நிறுவனங்கள் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டுள்ளதைக் குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
பெத்தனி அருள்சகோதரிகளால் நடத்தப்படும் புனித தெரேசா பள்ளி மீதும், மங்களூர் மறைமாவட்டம் நடத்தி வரும் பதுவை கல்லூரி மீதும் இஞ்ஞாயிறன்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களையும் சோடா புட்டிகளையும் எறிந்து சேதங்களை உருவாக்கியுள்ளனர்.
ஞாயிறு காலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தெரேசா பள்ளியின் முகப்புப் பகுதியில் இருந்த கண்ணாடி சன்னல்கள் மீதும், புனித தெரேசா திரு உருவச் சிலை மீதும் கற்கள் எறிந்தனர் என்றும், காவல் காரர்கள் வந்ததும், அவர்கள் மறைந்தனர் என்றும் பெத்தனி அருள்சகோதரி ரோஸ் செலின் கூறினார்.
1997ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1300க்கும் அதிகமான மாணவிகள் பயில்கின்றனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையினர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர் என்றும், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பாடு செய்த ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட்டதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
மங்களூர் மறைமாவட்டம் நடத்தி வரும் பதுவை கல்லூரியில் உள்ள சிறு ஆலயத்தின் சன்னல்கள் கற்களால் தாக்கப்பட்டதென்றும், இவ்விரு தாக்குதல்களையும் ஒரே குழுவினர் செய்திருக்கக் கூடும் என்றும் கல்லூரியின் முதல்வர் அருள்தந்தை மைக்கில் சாந்துமேயர் கூறினார்.
2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற கலவரங்களின் போதும் இக்கல்லூரி தாக்கப்பட்டதென்றும், புனித தெரசா பள்ளி 2007 மற்றும் 2009 ஆகிய இரு ஆண்டுகள் தாக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது.
7. பாகிஸ்தானில் மறைபரப்பு ஞாயிறன்று விவிலியத்தின் புதியதொரு பதிப்பு வெளியிடப்பட்டது
அக்.24,2011. உருது மொழியில் விவிலியத்தின் புதியதொரு பதிப்பு மறைபரப்பு ஞாயிறென திருச்சபையில் கொண்டாடப்பட்ட இஞ்ஞாயிறன்று பாகிஸ்தானில் வெளியிடப்பட்டது.
உருது மொழியில் பத்தாவது பதிப்பாக வெளியாகும் இந்த விவிலியத்தை பாகிஸ்தானில் பணிபுரியும் ஏழு ஆயர்களும், இன்னும் ஆயிரக்கணக்கான குருக்களும் பல்வேறு ஆலயங்களில் வெளியிட்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
விவிலியத்தின் இந்தப் புதிய பதிப்பு நான்கு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.
2005ம் ஆண்டு விவிலியப் பதிப்புக்கள் வெளியானபோது, 50,000 பிரதிகள் வெளியாயின என்றும், இம்முறை 70,000 பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
வருகிற ஆண்டு அந்நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் மரியம்மாபாத் என்ற இடத்தில் திட்டமிடப்பட்டு வரும் விவிலிய மாரத்தான் என்ற நிகழ்வில், தொடர்ந்து விவிலிய உரைகள் ஒரு வாரம் இடைவிடாமல் நடைபெறும் என்றும், அதற்காக பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகம் ‘ஒரு இலட்சம் விவிலிய நண்பர்கள்’ என்ற குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் இக்கழகம் அறிவித்துள்ளது.
8. இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா வெற்றி கண்டு வருகிறது
அக்.24,2011. போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா வெற்றி கண்டு வருவதாகவும், இருப்பினும் மிகக் கவனமுடனேயே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் இந்திய நலத்துறை அமைச்சர்.
இத்திங்களன்று சிறப்பிக்கப்படும் உலக போலியோ ஒழிப்பு நாளையொட்டி செய்தி வெளியிட்ட நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் எவரும் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டதாக எந்தவித செய்தியும் இல்லை என்றார்.
இளம்பிள்ளைவாத நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துக்கள் கண்டுபிடிக்காத நிலையில், அந்நோய்க்கான தடுப்பு மருந்துகளை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஏறத்தாழ 17 கோடியே 2 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது இந்திய அரசு.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நைஜீரியா ஆகியவைகள் குறிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment