Monday, 31 October 2011

Catholic News - hottest and latest - 31 October 2011

1. பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. பெருமழையால் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் தாய்லாந்து மக்களுக்கான திருத்தந்தையின் செபம்

4. இடுகாடு வேண்டி நேபாள கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்

5. பழைய ஏற்பாட்டின் மூன்று முக்கிய நபர்கள் குறித்த திரைப்படங்கள்

6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை

7. 2010ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

------------------------------------------------------------------------------------------------------

1. பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை

அக்.31,2011. மனித வாழ்வின் பாதுகாப்பு, குடும்ப மதிப்பீடுகளை ஏற்று நடத்தல், கடுமையான உழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை போன்ற நல் மதிப்பீடுகளில் பிரசில் சமூகம் வளர தலத்திருச்சபை வழங்கியுள்ள உதவிகள் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான பிரசில் நாட்டின் புதிய தூதுவர் அல்மிர் ஃபிராங்கோ தெ சபார்பூடா (Almir Franco de SABARBUDA) என்பவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய திருத்தந்தை, 1500ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அந்நாட்டில் செயல்படத் துவங்கிய திருச்சபை, தன் சாட்சியங்களை அந்நாட்டு கலாச்சரத்திலும், மதக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல், அம்மக்களின் வாழ்விலும் கொண்டுள்ளது என்றார்.
இன்றைய சமூகத்தில் திருச்சபையின் பணி என்பது மனிதாபிமான மற்றும் கல்விப்பணிகளாக மட்டும் தொடர்வதில்லை, மாறாக சமூகத்தின் ஒழுக்க ரீதி வளர்ச்சிக்கும் மனச்சான்று உருவாக்கலுக்கும் உதவுவதாகத் தொடர்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
2008ம் ஆண்டு திருச்சபைக்கும் பிரசில் நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பின் ஒப்பந்தம் குறித்தும் இங்கு குறிப்பிட்ட திருத்தந்தை, இதன் வழி தலத்திருச்சபை தன் முழு சக்தியுடன் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சிக்கென உழைக்க ஊக்கம் கிட்டியுள்ளது என்றார்.
அரசின் மதச்சார்பற்ற போக்கை பாதிக்காத வகையில், பொதுநலனை மனதில் கொண்டதாய் அனைத்துப் பள்ளிகளிலும் மத வகுப்புகள் இடம்பெற வேண்டியதன் தேவை குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
2013ம் ஆண்டில் ரியோ தி ஜெனீரோவில் இடம்பெற உள்ள 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் தான் பங்குபெறுவதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

அக்.31,2011. சொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே மற்றவர்களுக்கு போதித்தார் இயேசு என தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடைபிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த பாப்பிறை, தந்தையின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையைப் பின்பற்றி செல்லவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு,  'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத்துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.

3. பெருமழையால் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் தாய்லாந்து மக்களுக்கான திருத்தந்தையின் செபம்

அக்.31,2011. தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.
கடந்த ஐம்பது ஆண்டுகளிலேயே மிகப்பெரிதென எண்ணப்படும் தாய்லாந்தின் அண்மை பெருமழையால் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அண்மையில் பெய்த பெருமழையில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

4. இடுகாடு வேண்டி நேபாள கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்

அக்.31,2011. இறந்த கிறிஸ்தவர்களை அடக்குவதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என நேபாள கிறிஸ்தவர்களின் தொடர்ந்த விண்ணப்பம் அந்நாட்டு அரசால் செவிமடுக்கப்படாததைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நேபாளத்தின் பசுபதிநாத் இந்து கோவிலுக்குரிய நிலத்தில், இறந்த உடல்களை புதைத்து வந்த கிறிஸ்தவர்களுக்கு அக்கோவில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கடந்த பிப்ரவரி முதல் அரசிடம் இடுகாட்டிற்கான இடம் கேட்டு போராடி வருகின்றனர் நேபாள கிறிஸ்தவர்கள்.
இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவானவர்களாக வாழும் கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் உறவினர்களின் உடல்களைப் புதைக்க இடமின்மை காரணமாக இரவு நேரங்களில் இரகசியமாக ஆற்றில் வீசுவதும் இடம்பெற்று வருகின்றது.

5. பழைய ஏற்பாட்டின் மூன்று முக்கிய நபர்கள் குறித்த திரைப்படங்கள்

அக்.31,2011. பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்களான நோவா, மோசே மற்றும் யூதா மக்கபே ஆகிய மூவர் குறித்தும் பெரும் பொருட்செலவில் திரைப்ப்டங்களை உருவாக்க உள்ளதாக ஹாலிவுட்டின் இரு முக்கிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நோவாவை மையப்படுத்திய திரைப்படத்தை புதிதாக எடுக்க உள்ளதாக பேராமவுண்ட் பிக்சர்ஸ் அறிவித்துள்ள அதேவேளை, மோசே குறித்த திரைப்படத்தை 'கடவுள்களும் மன்னர்களும்' என்ற தலைப்பில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கைக் கொண்டும், யூதா மக்கபே என்ற திரைப்படத்தை மெல் கிப்சனைக் கொண்டும் இயக்க உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை

அக்.31,2011. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்  எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்வதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 விழுக்காட்டினர் நன்கு படித்தவர்கள்; 19.8 விழுக்காட்டினர் படிக்காதவர்கள் எனவும், திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இநத ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டதில், அதிக எண்ணிக்கையுடன், அதாவது 12.3 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

7. 2010ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

அக்.31,2011. கடந்த 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர், 5,484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டனர், 1,408 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்' என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், நாடு முழுவதும் நடந்த கொடூரமான குற்றங்களில், 33 ஆயிரத்து 908 பேர் கொல்லப்பட்டனர். இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 15 ஆயிரத்து 787 பேர்; 1,408 பேர் அப்பாவி குழந்தைகள் என, அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர். குழந்தைகள் கடத்தலில், தலைநகர் டில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2,982 குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதற்கு அடுத்ததாக, பீகாரில் 1,359, உ.பி.,யில் 1,225, மகாராஷ்டிராவில் 749, ராஜஸ்தானில் 706, ஆந்திராவில் 581 குழந்தைகளும் கடத்தப்பட்டனர். இவ்வாறு, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment