Wednesday 5 October 2011

Catholic News - hottest and latest - 04 October 2011

1. லிபியாவிற்குச் சென்றுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் Tommaso Caputo

2. பாகிஸ்தானில் மறைபரப்புப் பணி ஆண்டு துவக்க விழாத் திருப்பலியில் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perra

3. அரசையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே பாகிஸ்தானில் நிலவும் சட்டங்கள் நடுநிலையாக இருக்க முடியும் - இஸ்லாமாபாத் ஆயர்

4. பிலிப்பின்ஸில் சுற்றுச்சூழலின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் திரு உருவத்தைத் தாங்கிய ஊர்வலம்

5. உரோம் நகரில் லாத்தரன் திருமுழுக்குத் தலத்தை காண உதவும் முப்பரிமாண தொழில் நுட்பம்

6. அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழலுக்கு விளையும் ஆபத்துக்கள் பற்றி ஐ.நா.அவை எச்சரிக்கை

7. கறுப்புப்பணம் தகவல் பெற நிதித்துறையில் இந்தியா-சுவிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

------------------------------------------------------------------------------------------------------

1. லிபியாவிற்குச் சென்றுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் Tommaso Caputo

அக்.04,2011. லிபியா மற்றும் மால்டா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Tommaso Caputo லிபியாவின் புதிய அரசுத் தலைவர்களைச் சந்திக்க Tripoli வந்திருப்பதற்கு தன் மகிழ்வைத் தெரிவித்த Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி, அந்நாட்டின் முழு விடுதலைக்கும், நல் வாழ்வுக்கும் தலத்திருச்சபை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இத்தாலி நாடு லிபிய மக்களுக்கு உதவிகள் செய்ய முன் வந்திருப்பதுபோல், பிற நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய முன் வர வேண்டும் என்று பேராயர் மார்த்தினேல்லி கூறினார்.
லிபியாவில் சென்ற வாரம் நடைபெற்ற சண்டைகளில் காயமுற்ற 25 பேரை இத்தாலிய இராணுவத்தினர் உரோம் நகருக்குக் கொண்டு சென்று அவர்களை மருத்துவ மனைகளில் சேர்த்திருப்பதை சுட்டிக் காட்டி பேசிய பேராயர் மார்த்தினெல்லி, பிற நாடுகளிலிருந்தும் இதே போன்ற உதவிகள் லிபியாவுக்கு மிக அவசரத் தேவையாக உள்ளது என்றார்.
Gaddafi பிறந்த ஊரான Sirte என்ற இடத்தில் தொடர்ந்து சண்டைகள் நடைபெறுவதாகவும், அந்நகரின் 70000 மக்களில் 10000 க்கும் மேற்பட்டோர் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


2. பாகிஸ்தானில் மறைபரப்புப் பணி ஆண்டு துவக்க விழாத் திருப்பலியில் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perra

அக்.04,2011. நற்செய்தியைப் போதிப்பதை விட, சமூக நலப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறோம்; எனவே, திருச்சபை நம்மிடம் எதிர்பார்ப்பதை நாம் மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
Duc In Altum அதாவது, 'இன்னும் ஆழத்திற்குச் சென்று வலைவீசுங்கள்' என்ற கருத்துடன் மறைபரப்புப் பணி ஆண்டை பாகிஸ்தானில் அண்மையில் துவக்கியபோது, துவக்க விழாத் திருப்பலியில் உரையாற்றிய கராச்சி உயர்மறைமாவட்ட பேராயர் Evarist Pinto இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான் நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perra தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில், பேராயர் Perra திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும் சவால் நிறைந்த சூழலில் அங்கு கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்வது மிகவும் கடினம் என்பதையும், அப்படி சாட்சிகளாய் வாழும் கிறிஸ்துவர்களை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்துவை மிக இரகசியமாகப் பேச வைக்கும் இந்தச் சூழலிலும் பாகிஸ்தானில் வாழும் விசுவாசிகள் கிறிஸ்துவையும், நற்செய்தியையும் மக்களுக்கு எடுத்துக் கூறும் அர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஸ்லாமியக் கொள்கைகளும், இஸ்லாமியச் செய்திகளும் மட்டுமே பெருமளவில் இடம்பெறும் பாகிஸ்தானில் தங்கள் குரலை எழுப்பி கிறிஸ்துவை எடுத்துச் சொல்ல, கிறிஸ்தவர்கள் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று பாப்பிறையின் மறைபரப்புக் கழகத்தின் தேசிய இயக்குனர் அருள்தந்தை மாரியோ ரொட்ரிகுவெஸ் கூறினார்.


3. அரசையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே பாகிஸ்தானில் நிலவும் சட்டங்கள் நடுநிலையாக இருக்க முடியும் - இஸ்லாமாபாத் ஆயர்

அக்.04,2011. அரசையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே பாகிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டங்கள் நடுநிலையாக இருக்க முடியும் என்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
இவ்வாண்டு சனவரி மாதம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில ஆளுநர் Salman Taseer அவரது மெய்க்காப்பாளரான Mumtaz Qadri என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை குற்றத்திற்காக, Mumtaz Qadriக்கு பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் இச்சனிக்கிழமை மரணதண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட ஆசியா பிபியை விடுவிக்கக் கோரி குரல் எழுப்பிய Salman Taseerஐக் கொன்றது சரியே என்றும், அவரை கொலை செய்த Mumtaz Qadri கௌரவிக்கப்பட வேண்டுமேயொழிய அவருக்கு மரண தண்டனை அளித்திருப்பது தவறு என்று இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினர் பலர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தத் தீர்ப்பை குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்ட பல கிறிஸ்தவத் தலைவர்கள், ஓர் உயிரை எடுப்பது என்பதை விட, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே தங்களுக்கு திருப்தியை அளித்துள்ளது என்று கூறினர்.
தான் மரண தண்டனையை எப்போதும் எதிர்ப்பதாகக் கூறிய ஆங்கலிக்கன் ஆயர் Alexander John Malik, பாகிஸ்தான் நீதித் துறை துணிவுடன் செயல்பட்டிருப்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறினார்.
Mumtaz Qadriயை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆசியா பிபியை தூக்கிலிட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.


4. பிலிப்பின்ஸில் சுற்றுச்சூழலின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் திரு உருவத்தைத் தாங்கிய ஊர்வலம்

அக்.04,2011. இயற்கையின் மீது ஆர்வம் கொண்டிருந்த புனித அசிசி நகர் பிரான்சிஸ் அவர்களின் திருநாள் இச்செவ்வாயன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிலிப்பின்ஸ் நாட்டின் Quezon நகரில் 1000க்கும் அதிகமான இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
சுற்றுச்சூழலின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் திரு உருவத்தைத் தாங்கிய பிரான்சிஸ்கன் துறவியர் ஊர்வலத்தின் முன் நடக்க, அவர்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
பிலிப்பின்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் அளவு மேற்கொள்ளப்படும் மரம் வெட்டுதல், மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ்வூர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
ஊர்வலம் சென்ற வழியெங்கும் சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கப்படும் ஆபத்துக்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பிலிப்பின்ஸ் நாட்டில் 50 விழுக்காடு காடுகள் தேவையாக இருக்கும் வேளையில், தங்கள் நாட்டில் இப்போது 3 விழுக்காடு காடுகளே உள்ளன என்றும், காடுகளை அழிக்கும் போக்கை நிறுத்த வெறும் சட்டதிட்டங்கள் மட்டுமே உதவாது என்றும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பேராசையை ஒழித்து கடவுளுக்குச் சேவைகள் செய்த புனித பிரான்சிஸ், இயற்கையின் வழியாக இறைவனைச் சந்தித்ததைப் போல், நாமும் இயற்கையை அழிக்கும் பேராசைகளை விடுத்து, சுற்றுச்சூழலைக் காப்போம் என்று இவ்வறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.


5. உரோம் நகரில் லாத்தரன் திருமுழுக்குத் தலத்தை காண உதவும் முப்பரிமாண தொழில் நுட்பம்

அக்.04,2011. உரோம் நகரில் உள்ள ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னத்தை முப்பரிமாணத்தில் காணும் தொழில் நுட்பத்தை வத்திக்கானும் ஸ்வீடன் நாடும் இணைந்து மேற்கொண்டுள்ளது.
உரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்திற்கு அருகே உள்ள உரோம் லாத்தரன் திருமுழுக்குத் தலத்தை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு உதவியாக இந்த முப்பரிமாண தொழில் நுட்பம் அமைந்துள்ளதென்று கத்தோலிக்க செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
நான்காம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை பல்வேறு நிலைகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பழம்பெரும் நினைவுச் சின்னங்களின் சுவர்கள், கூரை ஆகியவற்றில் பதிந்துள்ள பல கருவூலங்களை ஆய்வதற்கு இந்தத் தொழிநுட்பம் உதவியாக இருக்கும் என்று இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் கிறிஸ்தவ புதைபொருள் பாப்பிறை நிறுவனத்தைச் சேர்ந்த Olof Brandt செய்தியாளர்களிடம் கூறினார்.
பல்வேறு கோணங்களில் 5000க்கும் மேற்பட்ட புகைப்படங்களில் இந்த நினைவுச் சின்னம் பதிவு செய்யப்பட்டு, அப்புகைப்படங்களைத் தொகுத்து இந்த முப்பரிமாண தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது என்று இத்தொழில்நுட்பக் குழவைச் சார்ந்த Hakan  Thoren என்ற ஸ்வீடன் நாட்டு பணியாளர் கூறினார்.


6. அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழலுக்கு விளையும் ஆபத்துக்கள் பற்றி ஐ.நா.அவை எச்சரிக்கை

அக்.04,2011. சுற்றுச்சூழல் மாற்றங்களால் நகரங்களில் உருவாகும் பிரச்சனைகளை உலகச்சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமைகளில் World Habitat Day அதாவது, உலக தங்குமிட நாள் கடைபிக்கப்படுகின்றது. அக்டோபர் 3 இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட உலகத் தங்குமிட நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பெருமளவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் சுற்றுச்சூழலுக்கு விளையும் ஆபத்துக்கள் பற்றி மனித குலம் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
உலகெங்கும் உள்ள பல நகரங்களில் 6 கோடி மக்கள் கடலுக்கு மிக அருகில், அதாவது, கடலில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், சுற்றுச் சூழல் மாற்றங்களால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருவதையும் எடுத்துக் கூறினார்.
பல்வேறு நாடுகளில் சிறு ஊர்களில் காற்று, சூரியன் ஆகிய சக்திகளைப் பயன்படுத்தும் பல முயற்சிகள் உருவாகியிருப்பது நல்லதொரு போக்கு என்பதை எடுத்துரைத்த பான் கி மூன், இந்த முயற்சிகளுக்கு அரசுகளின் ஆதரவும், உலக சமுதாயத்தின் ஆதரவும் வெகுமளவில் தரப்பட வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.


7. கறுப்புப்பணம் தகவல் பெற நிதித்துறையில் இந்தியா-சுவிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அக்.04,2011. கறுப்புப்பணம் குறித்த தகவலைப் பெற சுவிட்சர்லாந்து இந்தியா அகிய இரு நாடுகளுக்குமிடையே ‌நிதித்தொடர்பான பேச்சுவார்‌த்தையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இத்திங்களன்று ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புபணம் பற்றிய தகவலினை பெற சில வெளிநாட்டு வங்கிகள் தகவலினை தர உள்ளன. இதில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் குறித்து விவரங்களை வெளியிட இரு நாடுகளிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு்ள்ளது.
தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அந்நாட்டு தலைவர் Micheline Calmy-Rey ஆகியோர் முன்னிலையில், சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதர் சித்ரா நாராயணன், சுவிஸ் நிதித்துறை செயலர் Michael Ambuhl ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இத்திங்களன்று கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து வரும் கறுப்புப்பணப்பரிமாற்றம் ‌வெளியே வரும். மேலும் இரு நாடுகளிடையே வரி விதிப்பு முறையிலும் மாற்றம் ஏற்படும்.

 

No comments:

Post a Comment