1. கிறிஸ்தவர்கள், மனித மாண்பை உயர்த்திக் காட்டும் மதிப்பீடுகளை வளர்க்கத் திருத்தந்தை வேண்டுகோள்
2. புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்குத் திருத்தந்தை திருப்பலி
3. தாக்குதலை எதிர்கொண்டுள்ள எகிப்து கிறிஸ்தவர்கள் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கர்தினால் வலியுறுத்தல்
4. நிகராகுவா ஆயருக்குத் தொலைபேசி மிரட்டல்
5. உலகளாவியப் பசிக்கொடுமையின் மூல காரணங்கள் களையப்படுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை - FAO
6. அனைத்துலக கைகழுவுதல் தினம்
7. வட இந்தியாவில் மூளைக் காய்ச்சலுக்கு 400 பேர் பலி
8. இந்தியாவில் புதிய அணுமின் நிலையங்கள் வேண்டாம் எனக் கோரி வழக்கு
----------------------------------------------------------------------------------------------------------------
1. கிறிஸ்தவர்கள், மனித மாண்பை உயர்த்திக் காட்டும் மதிப்பீடுகளை வளர்க்கத் திருத்தந்தை வேண்டுகோள்
அக்.15,2011. இன்று கடவுளின் படைப்புப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்கும் அழைப்பை ஏற்றுள்ள மனிதன், அந்தத் தனது அழைப்பைச் செயல்படுத்துவதற்கு குடும்பமும் வேலையும் சாதகமான இடங்களாக இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“Centesimus Annus Pro Pontifice” என்ற அமைப்பின் சுமார் 300 பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நற்செய்திப் பணியில் குடும்பங்களின் முக்கியமான பங்கை எடுத்துரைத்தார்.
வேலையிலும் பொருளாதாரத்திலும் இக்காலத்தில் நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குடும்பங்களைத் தாக்கி சமூக வாழ்விலும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே ஒரு நல்லிணக்கமான நிலைமை உருவாக வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இன்றைய உலகு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில், கிறிஸ்தவர்கள், தீமைகளைக் கண்டித்து மனித மாண்பை உயர்த்திக் காட்டும் மதிப்பீடுகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
உழைக்கும் வர்க்கம் குறித்து பாப்பிறை 13ம் லியோ 1891ம் ஆண்டில் வெளியிட்ட Rerum Novarum என்ற திருமடலின் நூறாவது ஆண்டு நினைவாக, அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் 1991ம் ஆண்டில் Centesimus Annus அதாவது நூறாவது ஆண்டு என்ற தலைப்பில் எழுதியது பற்றிக் குறிப்பிட்டு, கடந்த 120 ஆண்டுகளில் திருச்சபையின் சமூகப் போதனைகள் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கானில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் “Centesimus Annus Pro Pontifice” என்ற அமைப்பில் வணிகர்கள் கல்வித்துறையினர் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பொதுநிலையினரால் நடத்தப்படும் இவ்வமைப்பிலுள்ள இவர்கள் "புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்குத்" திருத்தந்தைக்கு உதவி வருகின்றனர்.
2. புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்குத் திருத்தந்தை திருப்பலி
அக்.15,2011. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்கெனத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“புதிய நற்செய்தி அறிவிப்புக்கான புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள் - கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது (தி.தூதர். 12,24)” என்ற தலைப்பில் வத்திக்கானில் இச்சனிக்கிழமை இரண்டு நாள் மாநாடு துவங்கியது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella உரையுடன் தொடங்கிய இம்மாநாட்டில், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு யார் பொறுப்பானவர்கள் என்பது வலியுறுத்தப்பட்டது.
ஆன்மீகமும் அகவாழ்வும், மேற்கும் அது கிறிஸ்துவிடம் எழுப்பும் கேள்வியும், அறிவியலும் விசுவாசமும் - ஓர் ஆழமான உரையாடல், இலத்தீன் அமெரிக்காவில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அனுபவம், போன்ற தலைப்புக்களில் சொற்பொழிவுகள் இடம் பெற்று கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
3. தாக்குதலை எதிர்கொண்டுள்ள எகிப்து கிறிஸ்தவர்கள் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கர்தினால் வலியுறுத்தல்
அக்.15,2011. எகிப்தில் கடந்த ஞாயிறன்று அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியிருந்தாலும், கிறிஸ்தவர்கள் உண்மையான குடிமகன் என்ற உணர்வுடன் வாழுமாறு கேட்டுக் கொண்டார் கர்தினால் Antonios Naguib.
எகிப்து நாட்டுக் கத்தோலிக்கரின் தலைவரான கர்தினால் Naguib, ZENIT செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கிறிஸ்தவர்கள் தங்களோடு வாழும் அனைத்துச் சகோதர சகோதரிகளுடன் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்தில் கிறிஸ்தவர்கள் 10 விழுக்காட்டினர்.
கடந்த ஞாயிறு தாக்குதலில் சுமார் 26 கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர்.
4. நிகராகுவா ஆயருக்குத் தொலைபேசி மிரட்டல்
அக்.15,2011. மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் அடுத்த மாதத்தில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள வேளை அந்நாட்டில் அமைதியான சூழல் காணப்படவில்லை என்று அந்நாட்டு Matagalpa ஆயர் Rolando Álvarez Lagos கூறினார்.
நாட்டின் தற்போதைய அமைதியற்ற சூழல் குறித்துப் பொதுப்படையாகப் பேசுவதால் தனக்கும் இரண்டு அருட்பணியாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல் கிடைத்திருப்பதாகவும் ஆயர் அல்வாரெஸ் லாகோஸ் கூறினார்.
தான் மௌனமாக இருக்காவிட்டால் தான் மௌனமாக்கப்படுவதாகத் தொலைபேசியில் மிரட்டப்பட்டதாகவும் ஆயர் தெரிவித்தார்.
நற்செய்தியின் ஒளியில் மக்களின் மனச்சாட்சிகளை ஒளிர்விக்கும் பணியைத் தாங்கள் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
5. உலகளாவியப் பசிக்கொடுமையின் மூல காரணங்கள் களையப்படுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை - FAO
அக்.15,2011. உலகில் சிறாருக்குப் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.
அக்டோபர் 16ம் தேதி, இஞ்ஞாயிறன்று உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு கூறிய அந்நிறுவனம், உலகில் நிலவும் பசிக்கொடுமையின் மூல காரணங்கள் களையப்படுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று கூறியது.
உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் FAO கூறியது.
இந்த விலைவாசி ஏற்றமானது, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் மேலும் சுமார் 7 கோடிப் பேரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வைக்கும் என்று உலக வங்கியும் கூறியுள்ளது.
“உணவு விலைகள் : நெருக்கடியிலிருந்து உறுதியான நிலைக்கு” என்ற தலைப்பில் இவ்வுலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
6. அனைத்துலக கைகழுவுதல் தினம்
அக்.15,2011. சோப்புப் போட்டுத் தண்ணீரில் கைகளைக் கழுவுதல் நோய்கள் வராமல் காத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி, குறிப்பாகச் சிறார் கைகழுவுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென்று ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது.
இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கூறிய இந்நிறுவனம், இப்பழக்கத்தின் மூலம், வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் போன்ற வியாதிகளை தடுக்கலாம் என்று கூறியது.
ஆப்கானிஸ்தானில் 1,700 பள்ளிகளில் 17 இலட்சம் சிறாருக்கும் எரிட்ரியாவில் 1,272 பள்ளிகளில் 3,26,809 சிறாருக்கும் என 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உலக தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிகழ்ச்சிகளை நடத்தியது ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு.
இராஜஸ்தான் மாநிலத்தின் 80 இலட்சம் சிறாரும், பாகிஸ்தானின் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரும் இவ்வுலக தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
7. வட இந்தியாவில் மூளைக் காய்ச்சலுக்கு 400 பேர் பலி
அக்.15, 2011. என்சிஃபாலிட்டிஸ் (Encephalitis) எனப்படும் ஒருவகை மூளைக்காய்ச்சல் நோய் பரவியதால், வட இந்தியாவில் பெரும்பாலும் சிறார்கள் உட்பட 400 பேர் உயிரிழந்துள்ளதாக நலவாழ்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூளை வீக்கமடையும் இந்த வகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2,400 பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்க காலத்தில் இந்த நோய், கொசு மூலம் பரவியதாகக் கருதப்பட்டாலும், தற்போது மாசடைந்த நீரினாலேயே இது அதிகம் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த 420 பேரில் 335 பேர் சிறார்களாவர்.
8. இந்தியாவில் புதிய அணுமின் நிலையங்கள் வேண்டாம் எனக் கோரி வழக்கு
அக்.15,2011. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராட்டம் தொடரும் நிலையில், இந்தியாவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல்.ராமதாஸ் உள்பட 13 பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறின.
அரசு மற்றும் அணுசக்தி அமைப்பு சாராத சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து, தற்போதுள்ள மற்றும் உத்தேச அணுசக்தி நிலையங்கள், யுரேனிய சுரங்க வசதிகள் மற்றும் பிற அணுசக்தி எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், நலவாழ்வு, பாதுகாப்பு குறித்தும், மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடுகையில் அணுசக்தி மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆய்வுகள், சிக்கனத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, உத்தேச அணுமின் நிலையங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரி்க்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment