Tuesday 11 October 2011

Catholic News - hottest and latest - 10 October 2011

1. திருத்தந்தை நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை

2. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடிப்படையில் ஒரு மறைபோதகரே - பேராயர் Orani Joao

3. காஷ்மீர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள விவிலியம் வெளியீடு

4. கந்தமால் பகுதியில் கத்தோலிக்க கோவில் கட்டுமிடத்தில் காவிக்கொடி ஒன்றை நாட்டியுள்ளனர் சிலர்

5. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்தை நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம்

6. கத்தோலிக்க கோவில் கட்டுவதற்கான அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது இரஷ்ய அரசு

7. எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாம் தீவிரவாதிகள் தாக்குதல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை

அக்.10,2011. தென் இத்தாலியின் Lamezia Terme விசுவாசிகள் தங்களது கடும் சமுதாயப் பிரச்சனைகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிக்குமாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடும் வேலைவாய்ப்பின்மையும் பெருமளவாகக் குற்றங்களும் இடம் பெறும் இத்தாலியின் மிக ஏழைப் பகுதியான கலாபிரியாப் பகுதிக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியிலுள்ள பல அன்னைமரியா திருத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு அம்மக்களின் பாரம்பரிய மாதா பக்தியையும் பாராட்டினார்.
பொதுநலனைக் கட்டி எழுப்புவதில் விசுவாசிகள், தலஆயர்களுடன் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
மேலும், கலாபிரியாவிலுள்ள கர்த்தூசியன் துறவு இல்லத்திற்கு ஞாயிறு மாலை சென்று உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்துச் சமூகத்தில் அமைதி இல்லாமல் இருப்பது, பலரை மிகவும் பதட்டநிலைக்கு உள்ளாக்குகின்றது என்று கூறினார்.
இப்பகுதியின் பல இளையோர், சமுதாயத்தில் காணப்படும் வெறுமையை எதிர்கொள்ளப் பயந்து, வெறுமையாக உணரும் நேரங்களை இசையிலும் வேறு பல பொழுதுபோக்கிலும் செலவிடுகிறார்கள் என்றார் அவர்.
அமைதியிலும் தனிமையிலும் நேரத்தைச் செலவிடுவது இறைப்பிரசன்னத்தை உணர உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தத் துறவு மடம், 900த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானியரும் கர்த்தூசியன் துறவு சபையைத் தொடங்கியவருமான புனித புருனோவால் உருவாக்கப்ட்டது.
இத்துறவு மடம் அமைந்திருக்கும் Serra San Bruno என்ற ஊருக்கு இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை சென்றபோது முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றனர்.


2. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடிப்படையில் ஒரு மறைபோதகரே - பேராயர் Orani Joao

அக்.10,2011. ஒவ்வொரு கிறிஸ்தவரும் அடிப்படையில் ஒரு மறைபோதகரே என்கிறார் பிரசில் நாட்டின் ரியோ தெ ஜெனய்ரோ பேராயர் Orani Joao.
திருச்சபை, அக்டோபர் மாதத்தில், மறைப்பணிகள் குறித்தும் செபமாலை குறித்தும் அதிகம் அதிகமாக சிந்திக்கிறது என்ற பேராயர், இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை, ஏனெனில் நற்செய்தி அறிவிப்பிற்கான நம் கடமையில் செபம் எனும் ஊக்க சக்தி இன்றியமையாதது என்றார்.
திருச்சபையின் அடிப்படை மறைப்பணி என்பது கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதாகும், அந்த நற்செய்தி ஒவ்வொருவரின் வாழ்விலும் வெளிப்படவேண்டும் என்றார் அவர்.
மறைப்பணி என்றால் ஏதாவது ஒரு துறவு சபையில் சேர்ந்து செய்யப்படவேண்டிய பணி என பலரும் எண்ணும் வேளை, குடும்பங்களில் இருந்தும் மறைப்பணியாற்ற முடியும் என்றார் பேராயர் Joao.
தான் சார்ந்திருந்த துறவு மடத்தை விட்டு வெளியே வராமலேயே மிகப்பெரும் மறைப்பணியாளராக விளங்கிய புனித குழந்தை திரேசாவை இதற்கு எடுத்துக்காட்டாய் முன்வைத்தார் பேராயர்.


3. காஷ்மீர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள விவிலியம் வெளியீடு

அக்.10,2011. இறை வார்த்தையை இன்னும் சக்திவாய்ந்த ஒரு கருவியாகப் பயன்படுத்த, இஸ்லாமியருடன் உரையாடலை வளர்க்க வேண்டும் என்று இந்தியாவில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennacchio கூறினார்.
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ஜம்மு-ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அண்மையில் ஸ்ரீநகர் சென்றிருந்த பேராயர் Pennacchio, இந்த வெள்ளிவிழாவையொட்டி காஷ்மீர் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள விவிலியத்தை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
வெள்ளிவிழாவையொட்டி ஸ்ரீநகர் சென்றிருந்த பேராயர் Pennacchio, அம்மாநிலத்தின் அரசு அதிகாரிகளையும், மற்றும் கல்வித்துறைத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
கல்வித்துறையில் பணியாற்றி வரும் Joseph Predhuman Dhar என்ற எழுத்தாளர் கடந்த 16 ஆண்டுகளாக விவிலியத்தை காஷ்மீர் மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருதார் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
காஷ்மீர் மொழி விவிலியத்தை திருப்பீடத் தூதர் வெளியிட்ட இந்த விழாவில் ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் பீட்டர் செலஸ்தீன ஏலம்பசேரியும் கலந்து கொண்டார்.


4. கந்தமால் பகுதியில் கத்தோலிக்க கோவில் கட்டுமிடத்தில் காவிக்கொடி ஒன்றை நாட்டியுள்ளனர் சிலர்

அக்.10,2011. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தின் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றில் கத்தோலிக்க கோவில் கட்டப்பட்டு வந்த பகுதியில் அத்து மீறி காவிக்கொடி ஒன்றை நாட்டியுள்ளனர் இந்து அடிப்படைவாதிகள் சிலர்.
2008ம் ஆண்டின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலின்போது முற்றிலுமாகத் தரைமட்டமாக்கப்பட்ட Bakingia கிராமக் கத்தோலிக்க கோவிலுக்கான இழப்பீட்டுத்தொகையை அரசிடமிருந்து பெற்று மீண்டும் அதைக் கட்டுவதற்கான முயற்சியில் தடைகளை விதித்துள்ளது இந்து தீவிரவாத குழு ஒன்று.
இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளால் அப்பகுதியின் கிறிஸ்தவர்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்வதாக அறிவித்தார் அப்பகுதி குரு சந்தோஷ் டிகால்.


5. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்தை நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம்

அக்.10,2011. தமிழ் நாட்டின் கூடங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் கட்டுமானத்தை நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் உட்பட  கூடங்குளம் பகுதியிலிருந்து 12 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சென்ற வார இறுதியில் சந்தித்தபின்னரும் சரியான முடிவுகள் காணப்படவில்லை என்ற காரணத்தால் இந்தப் போராட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த பிரதமர், இந்தப் பிரச்னையை ஆய்வு செய்வதற்கு ஒரு நிபுணர் குழுவை ஏற்படுத்தப் போவதாக உறுதி கூறியுள்ளார் என்று ஆயர் அம்புரோஸ் கூறினார்.
ஆய்வுக் குழுக்கள் தேவையில்லை, இந்த கட்டுமானம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று இப்போராட்டத்தை முன்னின்று நடத்தும் S.P.உதயகுமார் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் இந்தியத் திருச்சபை நேரடியாக ஈடுபடவில்லை என்றும், மக்கள் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டத்தை தார்மீக முறையில் திருச்சபை ஆதரிக்கிறது என்றும் ஆயர் அம்புரோஸ் மேலும் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்தை எதிர்த்து செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 12 நாட்கள் போராட்டங்களில் கத்தோலிக்க குருக்கள் மற்றும் இருபால் துறவியரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


6. கத்தோலிக்க கோவில் கட்டுவதற்கான அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது இரஷ்ய அரசு

அக்.10,2011. இரஷ்யாவின் வடகிழக்கு நகர் Pskov வில் கத்தோலிக்க கோவில் ஒன்றை கட்டுவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் மாஸ்கோ பேராயர் Paolo Pezzi.
 Pskov கத்தோலிக்கர்கள் மிகுந்த பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கவலையை வெளியிட்ட பேராயர், கோவில் கட்டுவதற்கென அரசு ஏற்கனவே வழங்கிய அனுமதி தற்போது புதுப்பிக்கப்படாததற்கான காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றார்.
10 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கப்பட்டு தற்போது பங்குத்தள வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் கோவில் கட்டப்படவில்லை என, அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது அரசு.


7. எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாம் தீவிரவாதிகள் தாக்குதல்

அக்.10,2011. கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்ட எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 24பேர் உயிரிழந்தனர், 212பேர் காயமடைந்துள்ளனர்.
எகிப்தின் Aswan பகுதி கிறிஸ்தவக் கோவில் ஒன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக காப்டிக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட அமைதி ஊர்வலத்தின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் மீண்டும் நடத்தியுள்ள இத்தாக்குதல், நவம்பரில் அந்நாட்டில் இடம்பெற உள்ள அரசுத்தலைவர் தேர்தலோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இஸ்லாம் தீவிரவாதிகளோடு எகிப்து இராணுவமும் கைகோர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிட்ட எகிப்து பிரதமர் Essam Sharaf உரைக்கையில், இத்தாக்குதல் மூலம் குடிமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையேயான உறவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.
 

No comments:

Post a Comment