Wednesday 5 October 2011

Catholic News - hottest and latest - 02 October 2011

1. திருத்தந்தை - உங்களது காவல்தூதர்களை மறவாதீர்கள்

2. விசுவாசத்திற்கும் பகுத்தறிவுவாதத்திற்கும் இடையேயான தொடர்பை திருத்தந்தை விளக்கியது குறித்து திருப்பீடப் பேச்சாளர்

3. காந்தியின் 142வது பிறந்தநாள் விழாவில் குவகாத்திப் பேராயர்

4. அகில உலக முதியோர் நாளையொட்டி இலங்கையின் தலைநகரில் ஊர்வலம்

5. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டுகோள்

6. துபாயில் நடைபெறும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

7. பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - உங்களது காவல்தூதர்களை மறவாதீர்கள்

அக்.03,2011. கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதற்கும் உதவி செய்வதற்குத் தங்களது காவல்தூதர்களை அழைக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கோடை விடுமுறை முடிந்து முதல் முறையாக வத்திக்கானிலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, நம் ஆண்டவர் மனித வரலாற்றில் எப்போதும் அருகிலும் செயல்திறத்துடனும் இருக்கிறார், தமது தூதர்களின் தனித்துவமிக்க பிரசன்னத்தோடு நம்மைப் பின்தொடருகிறார் என்று உரைத்தார்.
வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய அவர்,  அக்டோபர் 2ம் தேதி திருச்சபை காவல்தூதர்கள் விழாவைச் சிறப்பிக்கின்றது, இவர்கள், ஒவ்வொரு மனிதன் மீதும் கடவுள் கொண்டுள்ள அக்கறையைத் தெரிவிக்கும் பணிகளைச் செய்கிறார்கள் என்றார்.
இத்தூதர்கள், மனித வாழ்வின் தொடக்கமுதல் மரணம் வரை தங்களது இடைவிடாத பாதுகாப்பால் அவ்வாழ்வைச் சூழ்ந்துள்ளார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, செபமாலை அன்னையின் மணிமகுடத்தை இந்தத் தூதர்களே அலங்கரித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
17ம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் காவல்தூதர்கள் விழாவை அகிலத் திருச்சபையில் கொண்டு வந்தார்.
மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடவுள் தமது நண்பர்களுக்காகத் திட்டம் வைத்திருக்கிறார், ஆனால் இதற்கான மனிதனின் பதில் அவனின் பிரமாணிக்கமற்ற வாழ்வால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று கூறினார்.
இறைவனின் விலைமதிப்பில்லாத கொடைாகிய அவரது ஒரே மகனை ஏற்பதற்குக்கூட தற்பெருமையும் தன்னலமும் தடையாய் இருக்கின்றன, எனவே இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு முழுவதும் விசுவாசமாக இருக்கும் வாழ்வைப் புதுப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட் 


2. விசுவாசத்திற்கும் பகுத்தறிவுவாதத்திற்கும் இடையேயான தொடர்பை திருத்தந்தை விளக்கியது குறித்து திருப்பீடப் பேச்சாளர்

அக் 03, 2011.  விசுவாசத்திற்கும் பகுத்தறிவுவாதத்திற்கும் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு சிறந்த உள்ளொளியை அண்மை ஜெர்மன் திருப்பயணத்தின் போது திருத்தந்தை வழங்கினார் என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
ஃப்ரெய்பூர்க் நகரில் குருமாணவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை குறித்து, தன் இவ்வார தொலைக்காட்சித் தொடரில் கருத்துக்களை வழங்கிய திருப்பீடப் பேச்சாளர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, பகுத்தறிவு வாதமும் அறிவியலும் நிரம்பி வழியும் இன்றைய உலகு, பகுத்தறிவு வாதத்திற்கு ஒத்துவராத எதையும் ஒதுக்கி வைக்கும் போக்கிலும் நன்மைகள் உள்ளன என்ற திருத்தந்தையின் கருத்தை விளக்கினார்.
விசுவாசம் என்பது அனைத்திற்கும் அர்த்தம் தரவல்லதாய், உள்ளார்ந்த அறநெறி சார்ந்த நோக்கத்தைத் தருவதாய், இறைவனை நோக்கிய பாதையை தெளிவுபடுத்துவதாய் இருக்கிறது என விளக்கிய திருத்தந்தை, அதனைப் புரிந்து கொள்வதும், அதற்கு திறந்த மனதாய் செயல்படுவதும், அதனைக் கற்றுக்கொள்வதும் அவசியம் என்பதைக் குறிப்பிட்டார் என்றார் குரு லொம்பார்தி.
கல்வி கற்பது என்பது இன்றைய குருத்துவப்பயிற்சிக்கு இன்றியமையாதது, இதன் மூலமே நாம் உறுதிப்பெற்றவர்களாக வளர்ந்து, நம் விசுவாசத்திற்கான காரணத்தை எடுத்துரைக்க முடியும் என திருத்தந்தை தன் ஜெர்மன் பயணத்தின்போது எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடப் பேச்சாளர் குரு லொம்பார்தி.


3. காந்தியின் 142வது பிறந்தநாள் விழாவில் குவகாத்திப் பேராயர்

அக்.03,2011. உலகின் பல நாடுகள் காந்தியின் கொள்கைகள் மீது கூடுதலான ஆர்வம் காட்டி வரும் வேளையில், இந்தியாவில் உள்ள நாம் அவரை மறந்து வருகிறோம் என்று குவகாத்திப் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.
காந்தியின் 142வது பிறந்தநாளை இஞ்ஞாயிறன்று புதுடில்லியில் கொண்டாடியபோது, அங்கு கூடியிருந்த பல காந்தியவாதிகளின் மத்தியில் உரையாற்றிய பேராயர் மேனம்பரம்பில், இந்தியாவின் அடிப்படை உண்மைகளில் ஒன்றான அகிம்சை என்ற தத்துவத்தை உலகறியச் செய்தவர் காந்தி என்று கூறினார்.
பல்வேறு சமயங்கள், கலாச்சாரங்கள், கட்சிக் கொள்கைகள், மாநிலக் கொள்கைகள் என அனைத்து எண்ணங்களுக்கும் மதிப்பு அளித்த காந்தி, கலாச்சாரங்களின் சங்கமத்தில் எவ்வாறு வாழ்வதென்பதை நமக்குச் சொல்லித் தந்தார் என்று பேராயர் மேனம்பரம்பில் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
Gandhi Smriti மற்றும் Dharshan Samiti என்றழைக்கப்படும் ஒரு அமைப்பின் உதவி இயக்குனரான காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்ஜி புது டில்லியில் நடத்தப்பட்ட இச்சிறப்புக் கூட்டத்திற்கு பேராயர் மேனம்பரம்பிலை அழைத்திருந்தார்.
இக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், புது டில்லியின் முதலமைச்சர் ஷீலா திக்ஷித் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


4. அகில உலக முதியோர் நாளையொட்டி இலங்கையின் தலைநகரில் ஊர்வலம்

அக்.03,2011. அக்டோபர் 1, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக முதியோர் நாளையொட்டி, இலங்கையின் தலைநகரில் 700க்கும் மேற்பட்ட முதியோர், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் அகில உலக நலவாழ்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து, ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
முதியோருக்கென ஓர் உலக நாளை உருவாக்கி, மேடைகளில் நின்று அவர்களைப் பற்றி பேசுவதை விட, அவர்களது தேவைகளை தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதே இந்த நாளைச் சிறப்பிக்கும் ஒரு சிறந்த வழி என்று இவ்வூர்வலத்தில் கலந்துகொண்ட 70 வயது நிறைந்த Alfred Kulas கூறினார்.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 2 கோடி மக்கள் தொகையில் 16 இலட்சம் மக்கள்  60 வயதைக் கடந்தவர்கள் என்று தெரிகிறது.
இலங்கையில் உள்ள 11 மறைமாவட்டங்களில் 30க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் வழியே தலத்திருச்சபை இவர்களுக்குப் பணிகள் செய்து வருகின்றன என்று முதியோர் நலப் பணிகள் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை Saveri Viton Aritappar, UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.


5. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டுகோள்

அக் 03, 2011.  இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்குமாறு Amnesty International  எனும் சர்வதேச மன்னிப்பு அவை அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் இம்மன்னிப்பு அவையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டோனல்ட்.
தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின்போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்கவேண்டும் என்றும், அதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பேற்பதற்கான முயற்சியில் முதலடியை எடுத்து வைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29ம் தேதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டோனல்ட் தெரிவித்துள்ளார்.


6. துபாயில் நடைபெறும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அக்.03,2011. துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இஞ்ஞாயிறு காலை நடைபெற்ற  துவக்க விழாவில், மலேசிய அரசின் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் வணிகத்துறையில் ஒன்றுபட்டு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றார்.
இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினை துவக்கி வைத்து தொடக்கவுரை நிகழ்த்திய இந்தியத் தொழில் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தனது உரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு, இம்மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என தான் நம்புவதாகக் கூறினார்.
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது என்று கூறிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முடியாதது என்று எதுவும் இல்லை, எதையும் சாதித்துக் காட்டவேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம் என்றார்.


7. பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்

அக் 03, 2011.  உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ், 165 நாடுகளில் நடத்தியதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்தியா சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பது காட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்தும், இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளும், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாடு ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவை விட, சிறிய நாடுகளாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.


No comments:

Post a Comment