Saturday 29 October 2011

Catholic News - hottest and latest - 27 October 2011

1. அசிசி நகரில் நடைபெற்ற உலக அமைதி நாள் கூட்டத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய உரை

2. அசிசி நகரில் வீசும் அமைதித் தென்றல் பாகிஸ்தானிலும் வீச வேண்டும் - பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகர்

3. போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கடமை அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் சார்ந்தது - WCC

4. அயோத்தியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடிய திபாவளி

5. புது டில்லியில் நிறுவப்படவிருக்கும் கிறிஸ்தவக் கலாச்சார மையம்

6. அக்டோபர் மாத இறுதியில், உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்

------------------------------------------------------------------------------------------------------

1. அசிசி நகரில் நடைபெற்ற உலக அமைதி நாள் கூட்டத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய உரை

அக்.27,2011. 1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இத்தாலியின் அசிசி நகரில் உலக அமைதிக்காக பிறசமயத் தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்தார். உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட அந்த செப நாளின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி அதே அக்டோபர் 27, இவ்வியாழனன்று  அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் பல நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பல்சமயத் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இவ்வியாழன் காலை 8 மணிக்கு வத்திக்கானிலிருந்து இரயில் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, 9.45 மணி அளவில் அசிசி நகர் சென்றடைந்தார். 10.30 மணி அளவில் விண்ணகத் தூதர்களின் புனித மரியா பேராலயத்தில் பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரைக்கு இப்போது செவி மடுப்போம்.

25 ஆண்டுகளுக்கு முன் 1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்நகரில் உலக அமைதிக்காக பிற சமயத்  தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்திருந்தார். மூன்று ஆண்டுகள் சென்று, 1989ம் ஆண்டு ஜெர்மனியைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் தகர்க்கப்பட்டு, இரு வேறு நாடுகளாய் பிரிந்திருந்த ஜெர்மனி ஒன்றானது.
பெர்லின் சுவர் இடிந்தபோது, அச்சுவற்றுக்குப்பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல போர் கருவிகளும் மறைந்தன. எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் நடைபெற்ற இந்த மாற்றத்திற்குக் காரணம் மக்களின் அமைதி வேட்கையே. இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும், உலகில் அமைதி நிரந்தரமாகவில்லை.
நாம் வாழும் உலகில் பெரும் போர்ச் சூழல் நம்மை பயமுறுத்தவில்லை என்றாலும், பல வகையிலும் மக்கள் தங்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் இழந்து வாழும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். சுதந்திரம் என்பது வன்முறையைப் பயன்படுத்தவும் சுதந்திரம் உண்டு என்ற தவறான எண்ணங்களை விதைத்துள்ளது.

இன்று நிலவும் வன்முறையை நாம் சிறிது ஆழமாக ஆய்வு செய்வது பயனளிக்கும். இன்றைய வன்முறை இரு வகைகளில் வெளிப்படுகிறது. தீவிரவாதம் என்ற வடிவத்தில் நிலவும் வன்முறை ஒரு வகை. தீவிரவாதம் பல நேரங்களில் மதங்களின் அடிப்படையில் எழுகின்றது. வன்முறையைத் தூண்டுவதென்பது எந்த ஒரு மதத்தாலும் ஏற்றக்கொள்ளப்பட முடியாத உண்மை என்பதை 1986ம் ஆண்டு அசிசி நகரில் கூடிய எல்லா மதத் தலைவர்களும் ஒரே குரலில் கூறினார்கள். இன்று நாம் மீண்டும் அதே உண்மையை உலகறியச் செய்கிறோம்.
ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் நான் ஒன்றை இந்நேரத்தில் கூற விழைகிறேன். திருச்சபையின் வரலாற்றில், விசுவாசத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் கிறிஸ்தவ மறையும் வன்முறையை பயன்படுத்தியுள்ளது என்பதைக் குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம். மதங்களின் உண்மை வழிகளைக் காண நாம் உரையாடல்களை வளர்ப்பதும், ஆழப்படுத்துவதும் இன்றைய நம் கடமையாகிறது.

மதங்கள் வன்முறைகளுக்கு வழிவகுப்பதால், மதங்களே வேண்டாம் என்று கூறும் போக்கு உலகில் பெருகி வருகிறது. வன்முறைகளை வளர்க்கும் கடவுளும், மதங்களும் தேவையில்லை என்று கூறும் பல குழுக்களின் மத்தியிலும் வன்முறைகள் பெருகி வருகின்றன. வன்முறையின் மற்றொரு வகை இதுவே. கடவுளையும், மதங்களையும் புறக்கணித்து வாழ்பவர்கள் மத்தியில் நிலவும் இந்த வன்முறை இன்னும் ஆபத்தானது. தங்களை மீறிய எதுவும் உலகில் இல்லை என்ற எண்ணத்துடன் இவர்கள் வன்முறைகளை மேற்கொள்ளும்போது, அது எல்லை மீறிய வகைகளில் வெளிப்படுகிறது.
கடவுள் இல்லை என்பதால் உருவாக்கப்படும்  வெற்றிடத்தை நிறைப்பதற்கு பணம், கட்டுக்கடங்காத அதிகாரம் ஆகிய போக்குகள் பெருகுகின்றன. தான் என்ற சுயநலத்தை வளர்க்கும் வழிகள் மற்ற சமுதாயச் சிந்தனைகளைப் புறந்தள்ளுகின்றன.
எவ்வகையிலும் இன்பத்தைத் தேடுவதைக் கருத்தாய் கொண்டுள்ள இவ்வுலகில், போதைப் பொருட்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. இந்தப் போதைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்குகின்றனர். போதைப் பொருள் பயன்பாட்டால் வாழ்வைச் சீரழிக்கும் மக்கள் மீது, முக்கியமாக, இளையோர் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் இவர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் இடத்தைப் பணம் பெற்றிருப்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மதநம்பிக்கை உள்ளவர்களும், மதநம்பிக்கை அற்றவர்களும் உருவாக்கும் வன்முறைகளை நோக்கும் அதே நேரம், கடவுள் நம்பிக்கை, மதப்பற்று ஆகியழை இல்லாதபோதும், உண்மையைத் தேடுவோரை நாம் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்கள் உண்மையையும், அமைதியையும் தேடி செல்லும் பயணிகள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடமும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடமும் கேள்விகளை எழுப்புகின்றனர். இவர்கள் இன்னும் கடவுளையும், உண்மையையும் காண முடியாமல் இருப்பதற்கு, மத நம்பிக்கையுள்ளவர்களும் நம்பிக்கையற்றவர்களும் நடந்து கொள்ளும் வாழ்வே காரணமாகிறது.
இன்று நாம் அசிசி நகரில் கூடியிருக்கும் இவ்வேளையில் மத நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் நான் அழைக்கவில்லை; மாறாக, கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் அழைத்துள்ளேன். நாம் அனைவருமே உண்மையை, நன்மையை, அமைதியைத் தேடும் பயணிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, நான் ஒன்றை மீண்டும் உறுதியாகக் கூற விழைகிறேன். வன்முறைகளுக்கு எதிரான வழிகளைத் தேடுவதிலும், உண்மை அமைதியை உலகில் நிலை நாட்டும் முயற்சிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை என்றும் தயங்காது என்பதை வலியுறுத்திக் கூற விழைகிறேன். நாம் அனைவருமே உண்மையையும், அமைதியையும் தேடிச் செல்லும் பயணிகளே. 

2. அசிசி நகரில் வீசும் அமைதித் தென்றல் பாகிஸ்தானிலும் வீச வேண்டும் - பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகர்

அக்.27,2011. அசிசி நகரில் வீசும் அமைதித் தென்றல் பாகிஸ்தானிலும் வீச வேண்டும் என்று பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Paul Bhatti கூறினார்.
அசிசி நகரில் இவ்வியாழன் உலக அமைதி வேண்டி நடைபெற்ற பல் சமய கூட்டத்தில் பாகிஸ்தான் Ulama Mashaikh அவையின் தலைவர் Allama Zubair Abid கலந்து கொண்டார் என்று FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறிய Paul Bhatti, உண்மையான மதத் தலைவர்கள் அனைவருமே அமைதியை மட்டுமே நாடுவர் என்று வலியுறுத்திக் கூறினார்.
வருகிற 2012ம் ஆண்டு உலகின் பல நாடுகளில் இருந்தும் அழைக்கப்படும் பிரதிநிதிகள் கொண்ட ஒரு பல் சமய மாநாடு இஸ்லாமாபாதில் நடப்பதற்கான திட்டங்கள் உருவாகி வருகின்றன என்றும் Paul Bhatti கூறினார்.
பாகிஸ்தானில் உண்மையான முன்னேற்றம் உருவாக வேண்டுமெனில், நல் மனம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வழிகளை ஆராய வேண்டும் என்று பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகர் சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றி, கொலையுண்ட Shahbaz Bhatti யின் சகோதரர் Paul Bhatti என்பது குறிப்பிடத் தக்கது.


3. போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கடமை அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் சார்ந்தது - WCC

அக்.27,2011. போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கடமை அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் சார்ந்தது என்று உலகக் கிறிஸ்தவ சபைகளின் அவை கேட்டுக் கொண்டுள்ளது.
மனித உரிமைகளை நிலை நாட்டும் சட்டங்களை ஒவ்வொரு நாடும் அமல் படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அண்மையில் நியூ யார்க் நகரில் கூடிய உலகக் கிறிஸ்தவ அவையின் கூட்டத்தில் இவ்வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
உலகில் எளிய மக்களைப் பலவகையிலும் அச்சுறுத்தும் போர்ச் சூழல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் போர்க்கருவிகளின் பயன்பாட்டை குறைக்கவும், முடிந்தால், முற்றிலும் ஒழிக்கவும் கிறிஸ்தவர்கள் எப்போது உழைக்க வேண்டும் என்று இவ்வுலக அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit கூறினார்.
2012ம் ஆண்டில் உலகின் அனைத்து நாடுகளும் போர்க்கருவிகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பொது உடன்பாட்டை மேற்கொள்ள உலகக் கிறிஸ்தவ சபை தீவிரமான முயற்சிகளில் ஈடுபடும் என்று பொதுச் செயலர் Tveit  கூறினார்.


4. அயோத்தியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடிய திபாவளி

அக்.27,2011. மதக்கலவரங்களால் பலவழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்த அயோத்தியில் திபாவளி விழாவை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இப்புதனன்று இணைந்து கொண்டாடினர்.
கலைநயம் மிக்க பல மலர் மாலைகளை இஸ்லாமியர்கள் உருவாக்கி, இந்து தெய்வங்களுக்கு அளித்தனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பல தலைமுறைகளாய் மலர் மாலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் எப்போதும் இந்து மதத்தினருடன் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்று மலர்மாலைகளை உருவாக்கும் Rafeeq கூறினார்.
எங்கள் குடும்பத்தினர் கடந்த 300 ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்து வருகிறோம்; இந்து நண்பர்கள் பலர் எங்கள் மீது  நல்ல மதிப்பு கொண்டுள்ளனர். அயோத்தியாவில் வாழும் எங்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இருந்ததில்லை என்று Zhora Khatoon என்ற மற்றொரு இஸ்லாம் பெண்மணி கூறினார்.


5. புது டில்லியில் நிறுவப்படவிருக்கும் கிறிஸ்தவக் கலாச்சார மையம்

அக்.27,2011. கிறிஸ்தவக் கலாச்சார மையம் ஒன்று புது டில்லியில் விரைவில் நிறுவப்படும் என்று டில்லி சிறுபான்மையினர் கழகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவ மறை, கலாச்சாரம் இவைகளை மையப்படுத்திய ஒரு மையமும், ஒரு நிரந்தர கண்காட்சியும் புது டில்லியில் நிறுவப்படும் என்று சிறுபான்மையினர் கழகத்தின் உறுப்பினர் A.C. மைக்கில் கூறினார்.
25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவிருக்கும் இந்த மையத்தின் திட்டங்களை புது டில்லி முதலமைச்சர் ஷீலா திக்ஷித்திடம் அளித்துள்ளதாகவும், இத்திட்டங்களை அவர் வரவேற்றுள்ளதாகவும் மைக்கில் மேலும் கூறினார்.
பல ஆண்டுகளாய் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும், புது டில்லி மறை மாவட்டமும் இந்த மையத்தை அமைக்கும் விருப்பத்தைத் தெரிவித்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது.
10 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த மையத்தில் கிறிஸ்துவின் வாழ்வை விளக்கும் ஒரு கண்காட்சி, நூலகம், நினைவுப் பரிசுகள் கொண்ட வர்த்தக மையம், மற்றும் திறந்த வெளி அரங்கம் ஆகியவை உட்பட பல அம்சங்கள் காணப்படும் என்று இம்மையத்தை வடிவமைக்கும் நிபுணர் இரஞ்சித் ஜான் கூறினார்.
Jatin Das உட்பட பல சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்படும் ஓவியங்கள், சிலைகள் இந்த நிரந்தரக் கண்காட்சியில் இடம் பெறும் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.


6. அக்டோபர் மாத இறுதியில், உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்

அக்.27,2011. இன்னும் நான்கு நாட்களில், அதாவது, அக்டோபர் மாத இறுதியில், உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் வேளையில், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வருங்காலத் தலைமுறையைப் பாதிக்கும் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
உலகின் இளையத்தலைமுறையினர் கல்வியிலும், நல வாழ்விலும் முன்னேறும் அனைத்து வழிகளையும் இவ்வுலகம் கண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப்புதனன்று ஐ.நா. வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது.
உலகின் பல பகுதிகளில், பல வழிகளில் நிலவும் பொருளாதாரத் தடைகள், சமுதாயத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, குழந்தைகள், இளையோர், மற்றும் பெண்கள் சம உரிமைகளுடனும், சம மதிப்புடனும் வாழ்வதற்கான வழிகளை அனைத்து அரசுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி Babatunde Osotimehin கூறினார்.
700 கோடியைத் தாண்டும் உலக மக்கள் தொகையில் 180 கோடிக்கும் மேலானோர் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய ஐ.நா.வின் உயர் அதிகாரி, இவர்கள் நல்ல முறையில் வளர்ந்தாலே இவ்வுலகம் வளம் பெற முடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
 

No comments:

Post a Comment