Friday, 14 October 2011

Catholic News - hottest and latest - 12 October 2011

1. வத்திக்கானில் நற்செய்தியின் புதிய அறிவித்தல் கருத்தரங்கு நடைபெறும்

2. எகிப்தில் பலியான காப்டிக் ரீதி கத்தொலிக்கர்களுடன் அகில உலகத் திருச்சபை ஒன்றித்துள்ளது - வத்திக்கான் அதிகாரி

3. இந்தோனேசியத் தீவுகளில் இஸ்லாமிய ஆதிக்கம் ஊடுருவி வருகிறது - ஆயர் Hubertus Leteng

4. பங்களாதேஷ் பணியாளர்களுக்கு சவுதி அரசு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு ஆயர் கண்டனம்

5. கச்சின் பகுதி மக்களுடன் தலத்திருச்சபை ஆயர் Philip Lasap சந்திப்பு

6. விரைவில் இவ்வுலகில் பிறக்கப் போகும் 700 கோடியைத் தாண்டிய முதல் குழந்தைக்கு நல்லதொரு சூழலை உருவாக்குவது நமது கடமை - ஐ.நா.பொதுச் செயலர்

7. 'பசிக்கொடுமைக்கு செல்வம் மிகுந்த நாடுகளே காரணம்'

8. காசநோயாளர்களின் எண்ணிக்கை குறைகிறது

------------------------------------------------------------------------------------------------------
1. வத்திக்கானில் நற்செய்தியின் புதிய அறிவித்தல் கருத்தரங்கு நடைபெறும்

அக்.12,2011. நற்செய்தியின் புதிய அறிவித்தலுக்கென உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறை அவை, வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது.
உலகெங்கும் நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு தலைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று இந்த பாப்பிறை அவையின் தலைவரான பேராயர் Salvatore Fisichella கூறினார்.
கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகைதரும் பன்னாட்டு அங்கத்தினர்களை வருகிற சனிக்கிழமை திருத்தந்தை வரவேற்று உரையாற்றுவார். பின்னர் ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காவில் அவர்களுக்கு ஒரு சிறப்புத் திருப்பலியைத் திருத்தந்தை ஆற்றுவார்.
கருத்தரங்கில் உரையாற்றும் பலரில், இத்தாலியைச்  சேர்ந்த ஒரு பேராசிரியர் அறிவியலுக்கும் விசுவாசத்திற்கும் இடையே உருவாகவேண்டிய உரையாடல் குறித்து பேசுவார் என்றும், கொலொம்பியா நாட்டு ஆயர் ஒருவர் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்து பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது" என்று திருத்தூதர் பணியில் காணப்படும் வார்த்தைகள் வத்திக்கானில் நடைபெறும் நற்செய்தியின் புதிய அறிவித்தல் கருத்தரங்கின் மையக் கருத்தாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2. எகிப்தில் பலியான காப்டிக் ரீதி கத்தொலிக்கர்களுடன் அகில உலகத் திருச்சபை ஒன்றித்துள்ளது - வத்திக்கான் அதிகாரி

அக்.12,2011. கடந்த ஞாயிறன்று எகிப்தில் அத்துமீறிய அடக்குமுறையால் பலியான காப்டிக் ரீதி கத்தொலிக்கர்களுடனும், அந்நாட்டில் வாழும் அனைத்து கத்தொலிக்கர்களுடனும் அகில உலகத் திருச்சபை ஒன்றித்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தங்கள் கோவில்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதையும், தங்கள் உரிமைகள் பலவகைகளில் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஓர் அமைதி ஊர்வலம், அத்துமீறிய வெறிச்செயல்களில் முடிவடைந்தது மிகவும் வேதனையை அளிக்கிறது என்று கீழை ரீதி சபைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
கடந்த ஞாயிறன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது இஸ்லாமிய அடிப்படை வாதிகளும், பின்னர் அந்நாட்டு இராணுவமும் மேற்கொண்ட வெறித் தாக்குதல்களில் இதுவரை 36 பேர் இறந்துள்ளனர் என்றும், 327 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அரசுத் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிகிறது.
இறந்தவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட மரண அறிக்கையில், அவர்களில் பலர் வாகனங்களுக்கு அடியே சிக்குண்டு இறந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இறந்தோரில் 17 பேருக்கு இச்செவ்வாய் மாலை கெய்ரோவின் பேராலயத்தில் அடக்கச் சடங்குகள் நடைபெற்றன என்று MISNA செய்தி குறிப்பொன்று கூறுகிறது.
தற்போது எகிப்தில் அரசுப் பொறுப்பில் உள்ள இராணுவ அவை இந்தத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் நடத்த தனிப்பட்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.


3. இந்தோனேசியத் தீவுகளில் இஸ்லாமிய ஆதிக்கம் ஊடுருவி வருகிறது - ஆயர் Hubertus Leteng

அக்.12,2011. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பல இந்தோனேசியத் தீவுகளில் இஸ்லாமிய ஆதிக்கம் ஊடுருவி வருகிறதென்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
ஜெர்மனியின் Frankfurt நகரில் அமைந்துள்ள Aid to Church in Need என்ற ஒரு பன்னாட்டு அமைப்பின் தலைமையகத்தில் பேட்டியளித்த இந்தோனேசிய ஆயர் Hubertus Leteng, இந்தோனேசியாவில் பரவி வரும் இஸ்லாமிய ஆதிக்கம் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசிய நாட்டில், உள்ளூர் அரசு அலுவலகங்களிலும், ஆசிரியப் பணிகளிலும் இஸ்லாமியர்களே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்பதை ஆயர் சுட்டிக் காட்டினார்.
Maluku தீவுகளில் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும், அங்கும் இஸ்லாமிய ஊடுருவல் அதிகரித்து வருகிறது என்றும், பல தீவுகளில் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரித்து வருவதை இஸ்லாமிய சகோதரர்களே விரும்பவில்லை என்பதையும் ஆயர் Leteng தெளிவுபடுத்தினார்.
இந்தோனேசியாவில் 23 கோடியே 30 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 80 விழுக்காடு மக்கள் இஸ்லாமியர்கள். 11 விழுக்காடு கிறிஸ்தவர்கள். Ruteng மறைமாவட்டத்தில் வாழும் 717000 மக்களில் 674000 பேர் கத்தோலிக்கர்கள்.


4. பங்களாதேஷ் பணியாளர்களுக்கு சவுதி அரசு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு ஆயர் கண்டனம் 

அக்.12,2011. நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், சவுதி அரேபிய அரசு இன்னும் ஒருவரது தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பெரும் கொடூரம் என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை சவுதி அரேபிய அரசு பங்களாதேஷைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்களின் தலையை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த பங்களாதேஷ் பணியாளர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு காவல் பணியாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். பங்களாதேஷ் அரசு சவுதி அரசுக்கு அனுப்பிய பல்வேறு விண்ணப்பங்களை அந்நாடு ஏற்றுக் கொள்ளாமல் கடந்த வெள்ளியன்று தன் மரண தண்டனையை நிறைவேற்றியது.
சவுதியில் பணி செய்யச் செல்லும் ஆசிய நாட்டைச் சார்ந்த பணியாளர்களை மட்டும் கேவலமாக நடத்தும் போக்கை சுட்டிக்காட்டி பேசிய பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Gervas Rosario, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து அஙகு பணியாற்றச் செல்வோர் மதிப்புடன் நடத்தப்படுவதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
மனித உரிமைகள் அனைத்தையும் கேள்விக்குறியாக்கும் சவுதி அரசின் இந்தக் கொடுமையான மரணதண்டனை, பல்வேறு  உலகளாவிய அமைப்புக்களின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.


5. கச்சின் பகுதி மக்களுடன் தலத்திருச்சபை ஆயர் Philip Lasap சந்திப்பு

அக்.12,2011. மியான்மாரில் நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள கச்சின் பகுதி மக்களை தலத்திருச்சபை ஆயர் Philip Lasap இப்புதனன்று சென்று சந்தித்தார்.
இப்போராட்டங்களால் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் கச்சின் பகுதி மக்கள் Mong Ji எனுமிடத்தில் உள்ள மரியன்னை கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களைச் சென்று சந்தித்த ஆயர் Lasap அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற நிவாரண உதவிகளைச் செய்தார்.
செப்டம்பர் 30ம் தேதி முதல் உருவான இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், குடிநீர், உணவு ஆகிய உதவிகளையும் மியான்மார் வின்சென்ட் டி பால் சபையைச் சார்ந்தவர்கள் செய்து வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. விரைவில் இவ்வுலகில் பிறக்கப் போகும் 700 கோடியைத் தாண்டிய முதல் குழந்தைக்கு நல்லதொரு சூழலை உருவாக்குவது நமது கடமை - ஐ.நா.பொதுச் செயலர்

அக்.12,2011. இந்த மாத இறுதிக்குள் இவ்வுலகில் பிறக்கப் போகும் 700 கோடியைத் தாண்டிய முதல் குழந்தைக்கு நல்லதொரு சூழலை உருவாக்கித் தருவது அனைத்து நாடுகளின் கடமை என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
டென்மார்க் அரசின் முயற்சியால் இச்செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்கள் Copenhagenல் நடைபெறும் 3G Global Green Forum என்ற அகில உலகச் சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
700 கோடி மக்களைத் தாண்டி வளரவிருக்கும் இவ்வுலக மக்கள் தொகையில், வருங்கால சந்ததி தகுந்த சூழலில் நலமுடன் வாழும் வழிகளை இன்றே அமைப்பது நமது கடமை என்பதை இச்செவ்வாயன்றும், அதற்கு முன், திங்களன்றும் பான் கி மூன் இருவேறு கருத்தரங்குகளில் வலியுறுத்தினார்.

உணவு, எரிபொருள், பொருளாதாரம் ஆகிய மூன்று சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ள நாம், சமத்துவப் பகிர்வில் இன்னும் வளர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.
உலகின் 20 விழுக்காடு மக்கள் எரிபொருள் வசதிகள் அதிகமின்றி வாழும்போது, மற்ற 80 விழுக்காடு மக்கள் தேவைக்கும் அதிகமாக எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் உலகின் எரிபொருள் சக்திகள் தீர்ந்து போகும் ஆபத்து நம்மை நெருங்கியுள்ளது என்று பான் கி மூன் எச்சரிக்கை விடுத்தார்.


7. 'பசிக்கொடுமைக்கு செல்வம் மிகுந்த நாடுகளே காரணம்'

அக்.12,2011. உலகின் வறிய பகுதிகளில் நிலவும் பசிக்கொடுமைக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் என்று உணவுக் கொள்கை குறித்த முன்னணி அறிவாளிகள் விடுத்துள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
அதிகமான விவசாய நிலங்கள் தாவர எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுதல்,  காலநிலை மாற்றம் தரும் அதிர்ச்சி ஆகியன, வறிய மக்களை பட்டினி உலகில் தொடர்ந்து வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து செயற்படும் சர்வதேச உணவு கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பு கூறியுள்ளது.
வறிய நாடுகளில், அதிலும் பெரும்பாலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே இருக்கும் நாடுகளில் பட்டினி நிலைமை மோசமடைவதற்கு செல்வம் மிகுந்த நாடுகளின் செயற்பாடுகளே காரணம் என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற செல்வந்த நாடுகள் தாவர எரிபொருட்களுக்கான அதிகாரபூர்வ இலக்கை அதிகரிப்பதும் உள்ளடங்குகிறது. இதனால், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உணவுப் பயிர்களுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த நிலங்களில் தாவர எரிபொருளுக்கான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
அதேவேளை காங்கோக் குடியரசு போன்ற சில நாடுகளில் காணப்படும் கொடிய பஞ்சத்துக்கு உள்நாட்டுப் போர்களும் காரணம் என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக உலகளவில் 1990 ஆண்டு முதல் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு தென்கிழக்காசியாவிலும், தெற்கு அமெரிக்காவிலும் ஏற்பட்ட விளைச்சல் அதிகரிப்பே காரணம் என்றும் இந்த ஆண்டறிக்கை கூறுகிறது.
ஆனால், தற்போது சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகமான அளவு பசிக்கொடுமை தாக்கப் போகிறது என்றும், ஆனால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் அந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை கானா நாடு மட்டும் விதி விலக்காக இருப்பதாகவும், பட்டினியை குறைப்பதில் அந்த நாடு வெற்றி கண்டிருப்பதாகவும் அது கூறுகிறது.


8. காசநோயாளர்களின் எண்ணிக்கை குறைகிறது

அக்.12,2011. காச நோயாளர்களின் எண்ணிக்கை முதல் தடவையாக குறைந்துள்ளது, மற்றும் காச நோயாளர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தில் இருந்து 88 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நோயால் உயிரிழக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் 14 இலட்சமாகக் குறைந்துள்ளதாக இவ்வறிக்கை கூறுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். கடந்த 2003ம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தனர்.
இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று கூறியுள்ள ஐநாவின் பொதுச் செயலர் பான் கி மூன், இன்னும் அதிக மக்கள் இந்நோயினால் உயிரிழக்கும் நிலையில், மேலும் நிதியுதவி தேவை என்று உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிலும், பிரேஸில் நாட்டிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே இந்த எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. சீனாவில் காச நோய் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் 80 விழுக்காடு வீழச்சியடைந்துள்ளது.
எச்.ஐ.வி நோய் பெருக்கம் குறைவதாலும், காச நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உலக மக்கள் தொகையில் மூன்றுல் ஒரு பங்கினரை பாதிக்கக் கூடிய தன்மை படைத்த இந்த நோய் பரவல் குறைந்து வருவது முக்கிய மைல் கல் என்றாலும், காச நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துவிடக் கூடாது என்று உலக நலவாழ்வு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...