Tuesday, 18 October 2011

catholic news - hottest and latest - 17/10/11

1. விசுவாச ஆண்டு : அக்டோபர் 11, 2012 - நவம்பர் 24, 2013

2. திருத்தந்தை : விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு

3. சீரோ மலபார் ரீதியின் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

4. திருத்தந்தை, மங்கோலிய அரசுத்தலைவர் சந்திப்பு

5. உலக உணவு தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

6. இந்திய‌ ஆய‌ர் பேர‌வையின் பொதுநிலையின‌ருக்கான‌ அலுவ‌ல‌க‌த்தின் செய‌ல‌ராக‌ குரு வின்சென்ட் சின்ன‌த்துரை

7. பிலிப்பீன்சில் இத்தாலிய‌ குரு ஒருவ‌ர் கொலை

8. சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 35 இலட்சம் விவிலியப்பிரதிகள் அச்சிடப்படுகின்றன‌

9. மத வன்முறை சம்பவங்களில் 3 ஆண்டுகளில் 427 பேர் பலி

------------------------------------------------------------------------------------------------------

1. விசுவாச ஆண்டு : அக்டோபர் 11, 2012 - நவம்பர் 24, 2013

அக்.17,2011. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு விசுவாச ஆண்டை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்கென வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இந்த விசுவாச ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை.
இந்த ஆண்டானது, 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவடையும்.
முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்விலிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை .
மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார்.
திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குக் கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.    


2. திருத்தந்தை : விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு

அக்.17,2011. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வியில் கொடுக்கப்பட்டுள்ள விசுவாசத்தின் அடிப்படைக் கூறுகளை அறிவிக்க வேண்டிய பணியை இந்த விசுவாச ஆண்டு கொண்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“Porta fidei” என்ற தலைப்பில் Motu proprio அமைப்பில் அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலம் இந்த விசுவாச ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் பாப்பிறை பணியைத் தொடங்கியது முதற்கொண்டு விசுவாசப் பயணத்தை மீண்டும் கண்டுணர வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இவ்வாண்டை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைத் திருப்பீட விசுவாசக் காப்புப் பேராயம் வழங்குமாறு தான் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


3. சீரோ மலபார் ரீதியின் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு

அக்.17,2011. கல்வி,சமூக மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் மூலம் ஆற்றும் பணிகளுக்காக மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபை, மதவாத அமைப்புகளின் சந்தேகப் பார்வை மற்றும் வன்முறைகள் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் அச்சபையின் பிரதிநிதிகள் குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தாங்கள் வாழும் பகுதியின் அமைதி மற்றும் இணக்கவாழ்வை மனதிற்கொண்டு அனைவரும் ஒவ்வொரு குடிமகனின் மற்றும் திருச்சபையின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்றார்.
இந்தியத் திருச்சபையில் தேவ அழைத்தல்கள் பெருகிவருவது குறித்த தன் மகிழ்ச்சியையும் வெளியிட்ட பாப்பிறை, குருத்துவப் பயிற்சியில் எதிர்நோக்கப்படும் சவால்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.
இளையோருக்கென சீரோம‌ல‌பார் ரீதி திருச்ச‌பை ஆற்றி வரும் ப‌ணிக‌ளைப் பாராட்டிய‌துட‌ன், ஏனைய‌ ரீதி ஆய‌ர்க‌ளுட‌ன் கொண்டிருக்க‌ வேண்டிய‌ ஒத்துழைப்பின் தேவை குறித்தும் வ‌லியுறுத்தினார் பாப்பிறை.


4. திருத்தந்தை, மங்கோலிய அரசுத்தலைவர் சந்திப்பு

அக்.17,2011. மங்கோலிய அரசுத்தலைவர் Tsakhiagiin Elbergdorjஐ இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மங்கோலிய அரசுத்தலைவர் Elbergdorj.
இச்சந்திப்புக்கள் குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், மங்கோலியாவுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவு, ஆசியக் கண்டத்தின் நிலைமை, நீதியையும் அமைதியையும் ஊக்குவிப்பதில் பல்சமய மற்றும் பல கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலின் முக்கியத்துவம் போன்றவை இடம் பெற்றதாகக் கூறியது.
இரஷ்யாவையும் சீனாவையும் எல்லைகளாகக் கொண்ட மத்திய ஆசிய நாடாகிய மங்கோலியாவில் 6 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.


5. உலக உணவு தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

அக்.17,2011. கடந்த பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனித குல நெருக்கடியான ஆஃப்ரிக்க கொம்பு நாடுகளின் பசிக்கொடுமைகள் குறித்து சர்வதேச நாடுகள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'உணவுப்பொருட்களின் விலை: நெருக்கடியிலிருந்து நிலையான தன்மை நோக்கி' என்ற தலைப்பில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் முப்பதாவது உலக உணவு தினத்தை முன்னிட்டு உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தைஇன்றைய‌ பொருளாதார‌ நெருக்க‌டிக‌ளால் பெரும‌ள‌வில் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஏழை ம‌க்க‌ள், த‌ங்க‌ள் உண‌வுப்பொருட்க‌ளைப் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளைச் ச‌ர்வ‌தேச‌ ச‌முதாய‌ம் உருவாக்கிக் கொடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அதில் விண்ணப்பித்துள்ளார்.
மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை மற்றும் மாண்பு மதிக்கப்படுவது என்பது வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும் என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.


6. இந்திய‌ ஆய‌ர் பேர‌வையின் பொதுநிலையின‌ருக்கான‌ அலுவ‌ல‌க‌த்தின் செய‌ல‌ராக‌ குரு வின்சென்ட் சின்ன‌த்துரை

அக்.17,2011. இந்திய‌ ஆய‌ர் பேர‌வையின் பொதுநிலையின‌ருக்கான‌ அலுவ‌ல‌க‌த்தின் செய‌ல‌ராக‌ த‌மிழ‌க‌ குரு வின்சென்ட் சின்ன‌த்துரை நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
த‌மிழ‌க‌ ஆய‌ர் பேர‌வையின் ச‌மூக‌த்தொடர்பு அவையின் செய‌ல‌ராக‌வும் சென்னை சாந்தோம் க‌லைத்தொட‌ர்பு நிறுவ‌ன‌த்தின் இய‌க்குன‌ராக‌வும் ப‌ணியாற்றியுள்ள‌ அருட்திரு வின்சென்ட் சின்ன‌த்துரை, த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையினர்‌ ந‌ல‌ம் ம‌ற்றும் உரிமை அமைப்பின் த‌ல‌வ‌ராக‌வும் ப‌ணியாற்றி வ‌ருகிறார்.
மேலும், இந்திய ஆயர்களின் கிறிஸ்த‌வ‌ ஒன்றிப்புக்கான அலுவலகத்தின் புதிய செயலராக சலேசிய சபையின் அருட்சகோதரி தெரேசா ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். உரோம் ந‌க‌ரின் கிர‌கோரிய‌ன் ப‌ல‌க‌லைக்க‌ழ‌க‌த்தில் முனைவ‌ர் ப‌ட்ட‌ம் பெற்றுள்ள‌ அருட்ச‌கோத‌ரி திரேசா, ஆசிரிய‌ர்க‌ளுக்கும் மாண‌வ‌ர்க‌ளுக்கும் க‌ருத்த‌ர‌ங்குக‌ளையும் ப‌யிற்சி முகாம்க‌ளையும் ஏற்பாடு செய்து உத‌வி வந்துள்ளார்.


7. பிலிப்பீன்சில் இத்தாலிய‌ குரு ஒருவ‌ர் கொலை

அக்.17,2011. 1978ம் ஆண்டு முத‌ல் பிலிப்பீன்சில் ப‌ணியாற்றிவ‌ந்த‌ இத்தாலிய‌ குரு ஒருவ‌ர் இஞ்ஞாயிறு காலை அடையாள‌ம் தெரியாத‌ ம‌னித‌ர் ஒருவ‌ரால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்.
ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌வும், வ‌ட‌ Cotabato ப‌குதியில் ச‌ட்ட‌ம் ஒழுங்கு காப்பாற்ற‌ப்ப‌ட‌வும் போராடி Arakan எனுமிட‌த்திலிருந்து ப‌ணியாற்றி வ‌ந்த 59 வயதான இத்தாலிய‌ குரு ஃபவுஸ்தோ தெந்தோரியோவின் கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை அறியப்படவில்லை.


8. சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 35 இலட்சம் விவிலியப்பிரதிகள் அச்சிடப்படுகின்றன‌

அக்.17,2011. சீனாவில் இதுவரை 5கோடியே 50 இலட்சம் விவிலியப்பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வோர் ஆண்டும் 35 இலட்சம் பிரதிகள் என்ற விகிதத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சீன கிறிஸ்தவ அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.
1970ம் ஆண்டுக‌ளின் இறுதியிலிருந்து சீனாவின் வெவ்வேறு மொழிக‌ளிலும் விவிலிய‌ப்பிர‌திக‌ள் அச்சிட‌ப்ப‌ட்டுவ‌ருவ‌தாக‌த் தெரிவித்தார் சீன கிறிஸ்தவ அவைத்தலவர்  Gao Feng.


9. மத வன்முறை சம்பவங்களில் 3 ஆண்டுகளில் 427 பேர் பலி

அக்.17,2011. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் 2,420 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில், 427 பேர் பலியாகியுள்ளனர் எனவும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், 651 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து, அவற்றில் 114 பேர் பலியாகி, 2,115 பேர் காயம் அடைந்தனர் என்றும், 2009ல் நிகழ்ந்த 773 மத வன்முறைச் சம்பவங்களில், 123 பேர் இறந்து, 2,417 பேர் காயம் அடைந்தனர் எனவும், 2008ல் நிகழ்ந்த 656 மத வன்முறைச் சம்பவங்களில், 123 பேர் பலியாகினர் என்றும் புள்ளி விவரங்களை வெளியிடும் இந்திய உள்துறை அமைச்சகம், மத வன்முறைச் சம்பவங்களைக் கடுமையாகக் கையாளும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டில், ஆகஸ்ட் மாதம் வரை, 338 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில், 53 பேர் பலியாகி, 1,059 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த செப்டம்பர் 14ம் தேதி, இராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில், 10 பேரும், அக்டோபர் 2ம் தேதி உத்தரகண்ட் மாநிலம், உதாம்சிங் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில், நான்கு பேரும் இறந்தனர் என புள்ளி விவரங்கள் மேலும் கூறுகின்றன.


No comments:

Post a Comment