Monday, 17 October 2011

Catholic News - hottest and latest - 14 October 2011

1. திருத்தந்தை :  அரசுப் பணிகளைச் செய்வோருக்கு கிறிஸ்தவ விழுமியங்கள் புதிய உந்து சக்தியைத் தருகின்றன

2. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டு விழாத் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்துவார்

3. திருத்தந்தையின் அசிசிக் கூட்ட நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன

4. கர்தினால் இரஞ்சித் : சிறார் கல்வியில் கவனம் செலுத்த அழைப்பு

5. மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்தலத்திருச்சபை வலியுறுத்தல்

6. எகிப்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு

7. பேரிடர் தடுப்பு நடவடிக்கை ஒவ்வொருவரின் அன்றாடக் கவலையாக இருக்க வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்

8. ஜப்பானில் நீண்ட தூரம் பரவியக் கதிர்வீச்சு

9. அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியினால் சுமார் 55 பில்லியன் டாலர் இழப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை :  அரசுப் பணிகளைச் செய்வோருக்கு கிறிஸ்தவ விழுமியங்கள் புதிய உந்து சக்தியைத் தருகின்றன

அக்.14,2011. மனிதர் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உதவும் உறுதியான அறநெறி விழுமியங்களின் அடிப்படையில் சமூதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு நாட்டின் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கத்தோலிக்கத் திருச்சபை விரும்புகிறது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி ஒன்றிணைந்த நாடாக உருவானதன் 150ம் ஆண்டையொட்டி உள்துறை அமைச்சர் ரொபெர்த்தோ மரோனி தலைமையில் சுமார் 200 அரசு அதிகாரிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அரசுப் பணிகளைச் செய்வோருக்கு கிறிஸ்தவ விழுமியங்கள் புதிய உந்து சக்தியையும் புத்தூக்கத்தையும் தருகின்றன என்றும் கூறினார்.
எந்த அதிகாரமும் கடவுளிடமிருந்து வருகின்றது என்பதால் அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மனிதருக்குப் பணி செய்யும் போது அந்தக் கடவுளுக்கேப் பணி செய்கிறோம் என்பதை நினைவில் கொண்டவர்களாய், மிகுந்த மதிப்போடும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசு அதிகாரிகளின் ஒவ்வொரு நாளையப் பணியும், நீதி அமைதி சுதந்திரம் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவையாய் இருக்க வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை, இவர்கள் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். 

2. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டு விழாத் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்துவார்

அக்.14,2011. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, வருகிற டிசம்பர் 12ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி நிகழ்த்துவார் என்று திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை அறிவித்தது.
இலத்தீன் அமெரிக்கப் பாதுகாவலியான குவாதாலூப்பே (Guadalupe) அன்னைமரியா விழாவான டிசம்பர் 12ம் தேதி இத்திருப்பலியை நிகழ்த்துவதற்குத் திருத்தந்தை மகிழ்வுடன் ஒத்துக் கொண்டார் என்று அந்த அவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் பெரு மற்றும் பிரேசில் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் இந்த 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் 2010க்கும் 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம் பெறுகின்றன. பெருவும் பிரேசிலும் 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்பிக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் 1808ம் ஆண்டிலிருந்து 1824ம் ஆண்டு வரை இடம் பெற்றன என்று கூறும் அத்திருப்பீட அறிக்கை, ஹெய்ட்டி நாடு 1804ம் ஆண்டிலும் கியூபா நாடு 1898ம் ஆண்டிலும் விடுதலை அடைந்ததையும் குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறது.

3. திருத்தந்தையின் அசிசிக் கூட்ட நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன

அக்.14,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அசிசியில் முதன் முதலாக நடத்திய அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தின் 25ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்காக இம்மாதம் 27ம் தேதி அசிசி செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்த 25ம் ஆண்டின் நிகழ்வுகளில், சமய நம்பிக்கை இல்லாதவர்களும் பங்கு பெறுவார்கள் என இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்பவர்களில்  ஒருவரான திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்த அசிசி நிகழ்வானது செபத்தைப் பற்றி அல்ல, ஆனால் திருப்பயணம் பற்றி அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று கர்தினால் டர்க்சன் மேலும் கூறினார்.
இக்கூட்டத்தில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், லூத்தரன், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் பிரமுகர்கள், Constantinople முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ, சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் பேராயர், மாஸ்கோ முதுபெரும் தலைவருக்கு நெருக்கமானவர், இன்னும், யூதம், இசுலாம், இந்து, புத்தம், இயற்கையை வழிபடுவோர் என சுமார் 100 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அசிசிக் கூட்டத்தையொட்டி இம்மாதம் 26ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மாலை செபவழிபாடு நடைபெறும் எனவும் கர்தினால் அறிவித்தார்.
1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அசிசியில் நடை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறப்பிக்கும் நிகழ்வுகள் குறித்த மேலும் பல விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

4. கர்தினால் இரஞ்சித் : சிறார் கல்வியில் கவனம் செலுத்த அழைப்பு

அக்.14,2011. கடவுள் தமது விலைமதிப்பில்லாக் கொடைகளாகிய சிறாரை நமது கண்காணிப்பில் வைத்துள்ளார், அவர்களின் ஆளுமையில் முழுக்கவனம் செலுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் கல்விப் பணிக்குழு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய கர்தினால் இரஞ்சித், ஆசிரியப் பணி மதிப்புமிக்கது மற்றும் மேன்மையானது என்று கூறினார்.
ஒவ்வோர் ஆசிரியரும் செப மனிதனாக இருந்து, அந்தச் செபத்தில் கிடைக்கும் சக்தி மூலம் சிறார் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உதவ வலிமை பெறுகிறார்கள் என்றும் இலங்கை கர்தினால் கூறினார்.

5. மியான்மாரில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்,  தலத்திருச்சபை வலியுறுத்தல்

அக்.14,2011. மியான்மாரில் இவ்வாரத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள அதேவேளை, அந்நாடு மேலும் அதிகமான குடியரசு  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக மியான்மார் தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.
இராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் மியான்மார் அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர்  ஆயர் Raymond Saw Po Ray இவ்வாறு கூறினார்.
தற்போது சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அரசின் நல்ல மாற்றத்தைக் காட்டினாலும், எஞ்சியுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு உண்மையான விருப்பம் தேவைப்படுகின்றது என்று ஆயர் Po Ray மேலும் கூறினார்.
தற்போது விடுவிக்கப்ப்டடுள்ள 6,359 கைதிகளில் 220 பேரே அரசியல் கைதிகள் எனவும், இன்னும் சுமார் இரண்டாயிரம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் எனவும் மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
மேலும், மியான்மார் அரசின் தற்போதைய மன்னிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், அந்நாட்டின் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

6. எகிப்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு

அக்.14,2011. எகிப்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Péter Erdő கேட்டுக் கொண்டார்.
எகிப்தில் இராணுவம், காவல்துறை, காப்டிக்ரீதிக் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடையே அண்மையில் இடம் பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் கர்தினால் எர்டோ.
இம்மோதல்களில் ஈடுபட்ட குழுக்கள் காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது கற்களை எறிந்தார்கள் என்று இச்சம்பவத்தை நேரிடையாய்ப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
எகிப்தின் மொத்த மக்கள் தொகையில் காப்டிக் ரீதி மற்றும் பிற கிறிஸ்தவர்கள் பத்து விழுக்காடாகும்.

7. பேரிடர் தடுப்பு நடவடிக்கை ஒவ்வொருவரின் அன்றாடக் கவலையாக இருக்க வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்

அக்.14,2011. பேரிடர் தடுப்பு நடவடிக்கை ஒவ்வொருவரின் அன்றாடக் கவலையாக இருக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பேரிடர்களைத் தடுப்பதற்கு உலகிற்கு இருக்கும் சக்தியைவிட பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது என்று பான் கி மூன் மேலும் கூறினார்.
இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும் 10 கோடி இளையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆற்றுப்படுகைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளைவிட இவ்வாண்டு 114 விழுக்காடும், புயல் உருவாகும் கடற்கரையோரங்களில் 192 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஐ.நா.பேரிடர் குறைப்பு அலுவலகம் அறிவித்தது.

8. ஜப்பானில் நீண்ட தூரம் பரவியக் கதிர்வீச்சு

அக்.14,2011. ஜப்பானின் டோக்கியோ நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கதிரியக்கம் காணப்பட்டதால், ஃபுக்குசிமா அணுஉலை விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடு குறித்த அச்சங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
டோக்கியோ, ஃபுக்குசிமாவிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றபோதிலும், அந்நகரிலும் ஃபுக்ககுசிமா அணுவிபத்தால் ஏற்பட்ட கதிரியக்கம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இடம்பெற்ற அணுஉலை விபத்தையடுத்து கதிரியக்கத்தை அளவிடும் கெய்கர் மானியின் விற்பனை ஜப்பானில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஃபுக்குசிமா பகுதியிலிருந்த மூன்று இலட்சத்து அறுபதினாயிரம் சிறார்களைப் பரிசோதிப்பதற்கான ஓர் ஆய்வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் கூறுகின்றன.

9. அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியினால் சுமார் 55 பில்லியன் டாலர் இழப்பு

அக்.14,2011. இவ்வாண்டில் வட ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இடம் பெற்ற பொது மக்கள் எழுச்சியினால் 5,000 கோடி டாலருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
எகிப்து, சிரியா, லிபியா, டுனிசியா, பஹ்ரைன், ஏமன் ஆகிய நாடுகள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, அவற்றின் உள்நாட்டு உற்பத்தியில் 2,056 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியது.  
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...