1. ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் வறட்சியினால் “ஒரு தலைமுறையை இழக்கும் ஆபத்து” :கர்தினால் கவலை
2. திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் சந்திப்பு
3. திருச்சபையில் சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி
4. இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் தீவிரவாத இசுலாம், தலத்திருச்சபைக்குப் பிரச்சனைகளை அதிகரிக்கின்றது – ஆயர் Situmorang
5. ஒவ்வொரு வாரமும் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உதவும் மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் திட்டம்
6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈரானியக் கிறிஸ்தவப் போதகரின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உரத்த குரல் எழுப்ப அழைப்பு
7. ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் தட்டம்மை தொடர்ந்து பரவி வருகிறது - WHO
8. பூர்வீக இன மக்களின் வாழ்வுப் போராட்டத்திற்கு ஒற்றுமை தேவை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் வறட்சியினால் “ஒரு தலைமுறையை இழக்கும் ஆபத்து” :கர்தினால் கவலை
அக்.08,2011. ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடும் உணவுப் பஞ்சம் போன்ற நெருக்கடிகள் வருங்காலத்தில் ஏற்படாதவாறு தடை செய்வதற்கு ஆப்ரிக்கச் சமுதாயங்கள் மேலும் அதிகமானப் பள்ளிகளைக் கட்ட வேண்டும் எனப் பரிந்துரைத்தார் கர்தினால் இராபர்ட் சாரா.
ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளைப் பாதித்துள்ள கடும் வறட்சி மற்றும் உணவு நெருக்கடி குறித்து திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில் பேசிய, Cor Unum என்ற திருப்பீடப் பிறரன்பு அவையின் தலைவரான கர்தினால் சாரா, ஆப்ரிக்காவில் கல்விக்கூடங்களின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார்.
தற்போதைய இந்த உணவு நெருக்கடியால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு மட்டும் அச்சுறுத்தப்படவில்லை, அத்துடன் இந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காகப் புலம் பெயர்ந்துள்ள மக்களும் எதிர்காலத்தில் இழக்கப்பட்ட தலைமுறைகளாக இருப்பார்கள் என்றும் கர்தினால் சாரா எச்சரித்தார்.
உயிர் வாழ்வதற்காகப் புலம் பெயர்ந்துள்ள ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளின் இலட்சக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில், ஒரு நாடு இன்றி, வீடு இன்றி, வேலையும் தங்களுக்கானச் சமூகமும் இன்றி அகதிகளாகவும், சட்டத்துக்குப் புறம்பே குடியேறியவர்களாகவும் இருப்பார்கள் என்று கவலை தெரிவித்தார் ஆப்ரிக்காவின் கினி நாட்டைச் சேர்ந்த கர்தினால் சாரா.
பசி மற்றும் பஞ்சத்தால் ஒரு தலைமுறை முழுவதும் இழக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதால், திறமைகளும் சமூகங்களும் எதிர்காலமும் அமைக்கப்படுவதற்கு உதவும் பள்ளிகள் மேலும் உருவாக்கப்படுமாறு பரிந்துரைத்தார் “கோர் ஊனும்” தலைவர் கர்தினால் சாரா.
ஐ.நா.வின் கணிப்புப்படி ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் தற்போது ஒரு கோடியே 30 இலட்சம் பேருக்கு உடனடி உணவு உதவிகள் தேவைப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.
2. திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் சந்திப்பு
அக்.08,2011. இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் 2011ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரைத் திட்டமிட்டுள்ள மேய்ப்புப்பணி முன்னெடுப்புக்கள் பற்றித் திருத்தந்தை மற்றும் வத்திக்கான் அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகின்றனர்.
CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள், தங்களது மேய்ப்புப்பணித் திட்டங்கள் பற்றிக் கலந்து பேசுவதற்கு இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையைச் சந்தித்தனர்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் கத்தோலிக்கரின் மறைப்பணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஆயர்கள் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து அப்பகுதி ஆயர்கள் கலந்து பேசி வருகின்றனர்.
இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் மத்தியில் கணனியையும் பிற தொழிற்நுட்பங்களையும் பயன்படுத்தி நற்செய்தியைப் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கு உதவியாக 1980களின் இறுதியில் திருப்பீட சமூகத் தொடர்பு அவையும் CELAM அமைப்பும் இணைந்து புதிய வலை அமைப்பை உருவாக்கியது.
RIIAL என்ற பெயரிலான அந்தப் புதிய அமைப்பு, www.episcopo.net என்ற புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கவிருக்கின்றது. இப்புதிய இணையதளம், சிலே நாட்டு சந்தியாகோவில் இம்மாதம் 17 முதல் 19 வரை நடைபெறும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
3. திருச்சபையில் சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி
அக்.08,2011. டிஜிட்டல் உலகில் வாழும் திருச்சபையின் உருவாக்கும் பயிற்சிகளில் சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவின் இறையியல் குருத்துவ மாணவர்களுக்கென கொல்கட்டாவில் நடைபெற்ற நான்கு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட சமூகத் தொடர்பு அவைச் செயலர் பேரருட்திரு Paul Tighe, புதிய சமூகத் தொடர்புத் துறை முன்வைக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்களுக்கு உலகளாவியத் திருச்சபையும் தலத்திருச்சபையும் பதில் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பு அவை இத்தகைய கருத்தரங்கை முதன் முறையாக நடத்தியுள்ளது. இதில் இந்தியாவின் ஐந்து இறையியல் கல்லூரிகளிலிருந்து 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
4. இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் தீவிரவாத இசுலாம், தலத்திருச்சபைக்குப் பிரச்சனைகளை அதிகரிக்கின்றது – ஆயர் Situmorang
அக்.08,2011. உலகின் மிகப் பெரிய இசுலாமிய நாடாகிய இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் தீவிரவாத இசுலாம், கத்தோலிக்கத் தலத்திருச்சபைக்குப் பிரச்சனைகளை அதிகரித்து வருகிறது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Martinus Situmorang கூறினார்.
அட் லிமினா சந்திப்பையொட்டி உரோமையில் இருந்த இந்தோனேசிய ஆய்கள் சார்பாகப் பேசிய ஆயர் Situmorang, இந்த இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் தங்களின் இருப்பை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக அதிகமாக உணர்த்தி வருவதால் கத்தோலிக்கர் மிகுந்த கவலை கொண்டுள்ளனர் என்றார்.
இந்தோனேசியாவின் ஏறக்குறைய 24 கோடியே 50 இலட்சம் மக்களில் சுமார் 3 விழுக்காட்டினராக இருக்கும் கத்தோலிக்கர் பொதுவாக முஸ்லீம்களுடன் நல்ல உறவுடன் இருக்கின்றனர் என்றும் ஆயர் கூறினார்.
நாட்டின் எல்லா நிலைகளிலும் இருக்கும் அதிகாரிகள் முஸ்லீம் தீவிரவாதிகளுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கவில்லை எனினும், இந்தத் தீவிரவாதக் குழுக்கள் தாங்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்கப்படுவதால் கைதுகள் மற்றும் தண்டனைகளிலிருந்து அக்குழுக்கள் தப்பித்து விடுகின்றன என்றார் ஆயர்.
இந்தோனேசியாவின் 32 மாநிலங்களில் ஒரு மாநிலம் மட்டும் ஷாரியா இசுலாமியச் சட்டத்தால் ஆளப்படுகிறது. இன்னும் 16 மாநிலங்களின் 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த இசுலாமியச் சட்டத்தால் தூண்டப்பட்ட சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
5. ஒவ்வொரு வாரமும் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உதவும் மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் திட்டம்
அக்.08,2011. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் உதவும் நோக்கத்தில் மெக்சிகோ உயர்மறைமாவட்டம் பசிக்கு எதிரானப் புதிய நாள் என்ற நடவடிக்கையை இம்மாதம் 15ம் தேதி தொடங்கவிருக்கின்றது.
மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் உணவு வங்கி, “பசியில்லாத மெக்சிகோ” என்ற சுலோகத்துடன் சேதமாகாத உணவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கானத் திட்டத்தைத் தொடங்கவிருக்கின்றது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மெக்சிகோ உயர்மறைமாவட்டம், ஒன்பதாவது ஆண்டாக, வருகிற 15ம் தேதி இதனைச் செயல்படுத்தவிருக்கின்றது.
இவ்வாண்டு 250 டன்கள் உணவுப் பொருள்களைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் 13 விழுக்காட்டுச் சிறார் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்று தேசிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈரானியக் கிறிஸ்தவப் போதகரின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உரத்த குரல் எழுப்ப அழைப்பு
அக்.08,2011. தனது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஈரானியக் கிறிஸ்தவப் போதகரின் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உருக்கமாகச் செபிக்கவும் உரத்த குரல் எழுப்பவும் வேண்டுமென Aid to the Church in Need என்ற அமைப்பின் பிரிட்டன் இயக்குனர் Neville Kyrke-Smith கேட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான 35 வயதாகும் Yusuf Nadarkhani என்ற போதகர், தனது சபையைப் பதிவு செய்ய முயன்ற போது 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
2010ம் ஆண்டு செப்டம்பரில் சமய எதிர்ப்புக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவரது வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இதையொட்டி Yusufன் வாழ்வு காப்பாற்றப்படுவதற்கு உருக்கமாகச் செபிக்கவும் உரத்த குரல் எழுப்பவும் வேண்டுமென கேட்டுள்ளார் Smith.
ஈரானில் 1970களில் ஒரு இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாக இருக்கின்றது என்று Aid to the Church in Need கூறியது.
7. ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் தட்டம்மை தொடர்ந்து பரவி வருகிறது - WHO
அக்.08,2011. ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் கடந்த ஆறு மாதங்களாகத் தட்டம்மை தொடர்ந்து பரவி வருவதாகவும் அமெரிக்காவில் இது குறைந்த அளவில் பரவி வருவதாகவும் WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை 26,025 பேருக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டிருப்பதாக 40 ஐரோப்பிய நாடுகள் பதிவு செய்துள்ளன எனவும், பிரான்ஸ் நாட்டில் இப்பாதிப்பு அதிகம் எனவும் WHO கூறியது.
பிரான்சில் 14,025 பேருக்கும் ஆப்ரிக்காவில் காங்கோ சனநாயகக் குடியரசில் மட்டும் 1,03,000 பேருக்கும் தட்டம்மை கண்டுள்ளது என அந்நிறுவனம் கூறியது.
8. பூர்வீக இன மக்களின் வாழ்வுப் போராட்டத்திற்கு ஒற்றுமை தேவை
அக்.08,2011. இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகள் பூர்வீக இன மக்களின் வாழ்வுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்தாக இருக்கின்றன என்று ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
இந்தியாவின் 27 மாநிலங்களில் 9 மாநிலங்களைச் சேர்ந்த பூர்வீக இனக் குழுக்களின் சுமார் 250 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் தங்களின் தனித்துவத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சுரண்டல் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தங்களது போராட்டத்திற்கு ஒற்றுமை தேவை என்றும் கூறப்பட்டது.
No comments:
Post a Comment