Saturday 29 October 2011

Catholic News - hottest and latest - 29 October 2011

1. நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை

2. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

3. கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை

4. உக்ரைன் நாட்டில் நீதி மிகப்பெரும் அளவில் குறைவு படுவதாக கிரேக்க கத்தோலிக்க ரீதி கவலை

5. விவசாயிகள் தற்கொலை :மகாராஷ்டிரா முன்னிலை

6. செயற்கை இரத்தம் தயாரித்து இங்கிலாந்து அறிவியலாளர்கள் சாதனை

------------------------------------------------------------------------------------------------------
1. நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை

அக் 29, 2011.   நற்செய்தி நோக்கித் திரும்பும் போது மனமாற்றமும் மனமாற்றத்தின் வழி வளர்ச்சிப் பணிகளுக்கான அர்ப்பணமும் இடம்பெறுகிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அட்லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த அங்கோலா மற்றும் சவோதோம் பிரின்சிபே நாடுகளின் ஆயர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்றார்.
ஆப்ரிக்க நாடுகளில் கத்தோலிக்கத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் ஆயர்களுக்கு சுட்டிக்காட்டிய பாப்பிறை, திருமணப் பொறுப்புணர்வுகளை ஏற்கும் வண்ணம் இளைய தலைமுறையினரை மனிதகுல மற்றும் ஆன்மீக முதிர்ச்சி நோக்கி தயாரித்து அழைத்துச் செல்ல வேண்டிய கடமை திருச்சபைக்கு உள்ளதையும் எடுத்துரைத்தார்.
பில்லி சூன்யம் என்ற பெயரால் குழந்தைகளும் முதியோர்களும் உயிரிழக்கும் சூழல்களில், தலத்திருச்சபை, உண்மையின் பக்கம் நின்று தன் குரலை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பாப்பிறை.
திருமுழுக்கு பெற்ற மக்களும் கூட கிறிஸ்தவத்திற்கும் ஆப்ரிக்க பாரம்பரிய மதங்களுக்கும் இடையே பாகுபட்டவர்களாய் உழன்று வரும் சூழல்களில், புதிய நற்செய்தி அறிவித்தலின் அவசியத்தை அங்கு திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஆப்பிரிக்க நாடுகள் பல, தங்கள் இனம், மொழி ஆகியவைகளையும் தாண்டிச் சென்று, அண்மை நாடுகளின் மக்களுக்கு உதவி வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பிறை, இத்தகையைப் பணிகள் தொடர்ந்து இடம்பெற தலத்திருச்சபைகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பெனின் நாட்டிற்கான தன் அடுத்த திருப்பயணம் குறித்தும் ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

2.  பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

அக் 29, 2011.   பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதே மறைமாவட்ட குரு செபஸ்தியான் டுடுவை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தலைநகர் டாக்காவின் தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வரும் குரு டுடு 1967ம் ஆண்டு சங்குரா எனுமிடத்தில் பிறந்தவர். இதே குருமடத்தில் பயின்று 1999ம் ஆண்டின் இறுதியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர்,  இரு பங்குதளங்களில் பணிபுரிந்துள்ளதுடன் உரோம் நகரின் உர்பான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள குரு செபஸ்தியான் டுடு, 2009ம் ஆண்டு முதல் டாக்கா தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார்.

3.  கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை

அக் 29, 2011.   கொல்கத்தாவின் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றே நாட்களில் 29 குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அறிவித்துள்ளார் இந்தியாவின் Asansol  ஆயர் சிப்ரியன் மோனிஸ்.
அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற குழந்தைகளின்  திடீர்ச் சாவுகளுக்கு அரசு பொறுப்பேற்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் மோனிஸ்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசரச் சிகிச்சைகளை வழங்கும் வசதி திருச்சபையிடம் இல்லையெனினும், குழந்தை இறப்புகளை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வுத் திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்த உள்ளதாக ஆயர் மோனிஸ் மேலும் கூறினார்.

4.  உக்ரைன் நாட்டில் நீதி மிகப்பெரும் அளவில் குறைவு படுவதாக கிரேக்க கத்தோலிக்க ரீதி கவலை

அக் 29, 2011.    உக்ரைன் நாட்டில் நீதி என்பது மிகப்பெரும் அளவில் குறைவுபடுவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் கிரேக்க கத்தோலிக்க ரீதி முதுபெரும் தலைவர் Sviatoslav Shevchuk.
உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் Yulia Tymoshenkoவிற்கு வழங்கப்பட்டுள்ள அண்மை தீர்ப்பு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட முதுபெரும் தலைவர், அப்பாவி மக்கள் தொடர்ந்து தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணமே என்றார்.
சட்டம் என்பது மனித மாண்பு, மனித விடுதலை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அதேவேளை நீதித்துறையோ அச்சட்டம் அமுலாக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும் என மேலும் கூறினார் முதுபெரும் தலைவர் Shevchuk.
குற்றவாளிகள் தப்பவும் அப்பாவிகள் தண்டனை பெறவும் உக்ரைனில் நீதி அமைப்பு பயன்படுத்தப்படுவது குறித்து தன் கவலையையும் வெளியிட்டார் அவர்.

5.  விவசாயிகள் தற்கொலை :மகாராஷ்டிரா முன்னிலை

அக் 29, 2011.   விவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தேசிய குற்றவியல் புள்ளிவிவர அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995 -ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான 16 ஆண்டு கால கட்டத்தில் சுமார் 2லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்‌கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், முதல் எட்டு ஆண்டு கால இடைவெளியில் இத் தற்‌கொலைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 66 ஆக இருந்தது அடுத்த எட்டு ஆண்டுகளில் 30 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிய வருகிறது.
விவசாயிகள் தற்‌கொலை ‌செய்யும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்‌டிராவும், அதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களும் இடம்பெறுகி்ன்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,155 ஆக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.

6.  செயற்கை இரத்தம் தயாரித்து இங்கிலாந்து அறிவியலாளர்கள் சாதனை

அக் 29, 2011.   அவசரத் தேவையின் போது உடனடியாக இரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தற்போது இங்கிலாந்து அறிவியலாளர்கள் செயற்கை முறையில் இரத்தம் தயாரித்துள்ளனர்.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கி, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்.
மனித உடலில் செலுத்தும்போது, எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத இந்த இரத்தம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய அறுவைச் சிகிச்சை, இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்துவதன் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment