1. ஆஸ்திரேலிய ஆயர்களுக்கான திருத்தந்தையின் செய்தி
2. திருப்பீடத்திலிருந்து தீபாவளி வாழ்த்து செய்தி
3. பிலிப்பீன்ஸில் கொலையுண்ட இத்தாலிய குருவுக்கான திருத்தந்தையின் இரங்கற் செய்தி
4. இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தேசிய நற்செய்தி அறிவிப்பு மையம்
5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
6. மரண தண்டனை சட்ட ரீதியான கொலை - இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
7. கிழக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரும் மனித குல நெருக்கடி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஆஸ்திரேலிய ஆயர்களுக்கான திருத்தந்தையின் செய்தி
அக் 20, 2011. ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் நல்விளைவுகள் குறித்து அந்நாட்டு ஆயர்களின் அறிக்கையிலிருந்து அறிய வந்து மகிழ்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆஸ்திரேலிய ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களிடம், அந்நாட்டில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களும், கடந்த ஆண்டில் திருச்சிலுவையின் மரிய MacKillop புனிதராக அறிவிக்கப்பட்டதும் அத்தலத்திருச்சபையின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எனக் குறிப்பிட்டார்.
அப்புனிதையின் வாழ்வு இக்காலக் குழந்தைகளுக்கான பெற்றோரின் கடமையில் துணைபுரியட்டும் என உரைத்த திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இப்புனிதையின் உறுதிப்பாடான நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்களாக இருக்கட்டும் எனக் கூறினார்.
அனைவருக்கும் நல்லதொரு வாழ்வைக் கட்டியெழுப்ப உதவும் நோக்கில் தன் கடந்த காலத் தவறுகளை திறந்த மனதுடனும் நேர்மையுடனும் ஏற்றுக்கொள்ளத் தலத்திருச்சபை முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.
2. திருப்பீடத்திலிருந்து தீபாவளி வாழ்த்து செய்தி
அக் 20, 2011. வரும் வாரம் 26ம்தேதி இந்து மதத்தவரால் சிறப்பிக்கப்படும் தீபாவளிப் பெருவிழாவை முன்னிட்டு திருச்சபையின் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
அனைத்து ஒளியின் ஆதாரமாக இருக்கும் இறைவன், அமைதியும் வளமும் நிறைந்த ஒரு வாழ்வுக்கென நம் இதயங்களையும் வீடுகளையும் சமுதாயங்களையும் ஒளிர்விப்பாராக என அச்செய்தியில் கூறியுள்ள கர்தினால், இவ்வாண்டின் இவ்விழாவிற்கான செய்தியாக 'மத விடுதலை' என்பது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மதத்தின் அடிப்படையில் முன்சார்பு எண்ணங்கள், பகைப்பிரச்சாரங்கள், பாகுபாட்டுடன் நடத்தப்படல், சித்ரவதை செய்தல் போன்றவைகளுக்கு மனித சமூகம் உள்ளாக்கப்படும் நிலையில், மதம் தொடர்புடைய மோதல்களுக்கானத் தீர்வாக மத விடுதலையே இருக்க முடியும் என்கிறது இச்செய்தி.
மனித மாண்பில் தன் மூலத்தைக் கொண்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாக இருக்கும் மத சுதந்திரம் மறுக்கப்படும்போது அல்லது பாதிக்கப்படும்போது, ஏனைய அனைத்து மனித உரிமைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன எனவும் கூறுகிறது கர்தினால் தவ்ரான் வழங்கியுள்ள இவ்வாழ்த்துச் செய்தி.
மத சுதந்திரம் என்பது ஒருவர் தன் மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிச்செல்வதையும் உள்ளடக்குகின்றது என்பதையும் இச்செய்தி வலியுறுத்தி கூறுகின்றது.
மதசுதந்திரம் என்பது மதிக்கப்படும்போது அது, நாட்டின் வளர்ச்சிக்காக அனைவருடன் ஒன்றிணைந்து உழைப்பதற்கான ஊக்கத்தையும் தருகிறது எனக்கூறும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தீபாவளி வாழ்த்துச் செய்தி, இம்மாதம் 27ம் தேதி திருந்தந்தையும் அனைத்து மதப்பிரதிநிதிகளும் அசிசியில் கூடி உலக அமைதிக்காகச் செபிக்க உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
3. பிலிப்பீன்ஸில் கொலையுண்ட இத்தாலிய குருவுக்கான திருத்தந்தையின் இரங்கற் செய்தி
அக் 20, 2011. பிலிப்பீன்ஸில் பணியாற்றி வந்த இத்தாலிய குரு ஃபவுஸ்தோ தெந்தோரியோ கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடும் இரங்கற்தந்தி, அக்குரு பணியாற்றிய Kidapawan மறைமாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Kidapawan மறைமாவட்ட ஆயர் ரோமுலு தெ லா குரூஸுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனெயால் அனுப்பப்பட்டுள்ள இரங்கற் தந்தி, அம்மறைமாவட்ட விசுவாசிகளுக்கும், அவர் சார்ந்திருந்த PIME சபையின் உடன் குருக்களுக்கும், அவரின் மறைவால் துயருறும் அனைவருக்கும் திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக உரைக்கிறது. பிலிப்பின்ஸ் மக்களிடையே பல ஆண்டுகளாக மனவுறுதியுடன் பணியாற்றி வந்த குரு ஃபௌவுஸ்தீனோவின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி கூறும் அதேவேளை, நீதியும் அமைதியும் இணக்கவாழ்வும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அனைவரும் வன்முறைகளைக் கைவிட்டுப் பணியாற்றவேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது திருத்தந்தையின் இரங்கற்செய்தி.
4. இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தேசிய நற்செய்தி அறிவிப்பு மையம்
அக்.20,2011. மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் உயர் மறைமாவட்டத்தில் Pachmarhi ல், Suvarta Kendra என்ற தேசிய நற்செய்தி அறிவிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குழுத் தலைவரான சேலம் ஆயர் எஸ்.சிங்கராயன், இந்த நற்செய்தி அறிவிப்பு மையமானது இந்தியத் திருச்சபைக்கு ஓர் ஆசீர்வாதமாகவும் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது என்று கூறினார்.
நம் ஆண்டவரின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பொதுநிலையினரையும் வேதியர்களையும் துறவிகளையும் அருட்பணியாளர்களையும் ஊக்குவிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் இம்மையம் உதவியாக இருக்கும் என்றும் ஆயர் சிங்கராயன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, Suvarta Kendra இந்தியத் திருச்சபைக்கு ஒரு கொடையாக இருப்பதோடு வடஇந்தியாவிலுள்ள திருச்சபைக்குச் சிறப்பு ஆசீர்வாதமாகவும் இருக்கின்றது என்று கூறினார்.
5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
அக் 20, 2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் குறிப்பிடத்தகும் வகையில் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு 60ஆயிரத்து 642 ஆக இருந்த பெண் துறவிகளின் எண்ணிக்கை தற்போது 46 ஆயிரத்து 451 ஆகக் குறைந்துள்ளதாக கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற பெண் துறவு சபைகளின் தலைமைத்துவக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
வரும் ஆண்டில் இவ்வெண்ணிக்கை மேலும் 2787 குறையும் என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
6. மரண தண்டனை சட்ட ரீதியான கொலை - இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
அக்.20,2011. மரண தண்டனை நிறைவேற்றுவது சட்ட ரீதியான கொலை என்று இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார்.
இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனையை அறிவித்த நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய, 74 வயதாகும் முன்னாள் நீதிபதி தாமஸ், மரண தண்டனை, தண்டனையே அல்ல என்று கூறினார்.
கோட்டயத்தில் IANS செய்தி நிறுவனத்திற்குத் தொலைபேசி பேட்டியளித்த தாமஸ், மரண தண்டனை நிறைவேற்றுவது, சமுதாயத்தின் பாதுகாப்போடு வழங்கப்படும் சட்டரீதியான கொலையாகும் என்றார்.
கொச்சின் மற்றும் திருவாங்கூரில் 1940களில் மரண தண்டனை இரத்த செய்யப்பட்ட காலத்தில் நடந்த கொலைக் குற்றங்களைவிட 1950 களில் அது மீண்டும் அமல்படுத்தப்பட்ட காலங்களில் கொலைகள் அதிகம் நடந்தன என்பதையும் தாமஸ் குறிப்பிட்டார்.
7. கிழக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரும் மனித குல நெருக்கடி
அக் 20, 2011. கிழக்கு ஆப்ரிக்காவின் வறட்சி என்பது தற்போது மிகப்பெரும் மனித குல நெருக்கடியாக தொடர்ந்து விரிவடைந்து வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் சர்வதேச வளர்ச்சிக்கான இங்கிலாந்து செயலர்.
ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக குந்தைகள் உயிரிழப்பதாக உரைத்த இங்கிலாந்து அதிகாரி ஆன்ட்ரூ மிசெல், கிழக்கு ஆப்ரிக்காவின் 24 இலட்சம் மக்களுக்கு இங்கிலாந்து உணவு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
சொமாலியாவில் மட்டும் நான்கு இலட்சம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் 46 இலட்சம் பேர், சொமாலியாவில் 40 இலட்சம் பேர், கென்யாவில் 35 இலட்சம் பேர் மற்றும் டிஜிபுத்தியில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment