1. அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
2. அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வுகள்
3. அசிசி உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலாவில் பல்சமயக் கூட்டம்
4. திருப்பீடமும் ஆர்த்தடாக்ஸ் சபையும் நடத்தவிருக்கும் கருத்தரங்கு
5. துருக்கியில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பணிகள் கிறிஸ்தவ அன்புக்கு சாட்சி - பேராயர் Ruggero Franceschini
6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது - அமெரிக்க ஆயர்
7. பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
அக்.28,2011. உலகில் அமைதியை விழையும், மற்றும் அமைதிக்காக உழைத்து வரும் பல கோடி மக்களின் பிரதிநிதிகளாக அசிசி நகரில் மதத்தலைவர்கள் மேற்கொண்ட ஒரு நாள் முயற்சிக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற பல் சமயக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியத் திருத்தந்தை, அசிசி நகரில் உணரப்பட்ட நல்லுறவு, உலகின் அனைத்து குழுக்களிடையேயும் உருவாவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.
வெகு தொலைவில் இருந்து, கடினமான பயணங்களை மேற்கொண்ட பல பிரதிநிதிகளின் முயற்சியைத் தனிப்பட்ட வகையில் பாராட்டியத் திருத்தந்தை, அனைத்து மதங்களின் சார்பில் உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார்.
1986ம் ஆண்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்தது, எதிர்காலத்தின் தேவைகளைத் தீர்க்கமாகச் சிந்திக்க முடிந்த அவரது எண்ணங்களைத் தெளிவாக்குகிறது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, உலக அமைதி ஒரு தொடர் பயணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.
இந்த ஒரு நாள் முயற்சிக்குப் பின் நாம் நமது இடங்களுக்கும், நம் பணிகளுக்கும் பிரிந்து செல்லும்போது, இந்தப் பயணத்தின் நல்லுணர்வுகளைத் தாங்கிச்செல்வோம் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தையின் உரைக்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீஸியோ பெர்தோனே வழங்கிய விருந்தில் அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
2. அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வுகள்
அக்.28,2011. வன்முறையும், போரும், தீவிரவாதமும் இனி உலகில் ஒருபோதும் வேண்டாம்; கடவுளின் பெயரால் ஒவ்வொரு மதமும் உலகிற்கு நீதியை, அமைதியை, மன்னிப்பை, அன்பை மற்றும் வாழ்வைக் கொண்டு வரட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வாக மாலையில் புனித பிரான்சிஸ் பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று அசிசி நகர் வந்திருந்த 300க்கும் அதிகமான மற்ற சமயப் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒளியேற்றப்பட்ட ஒரு விளக்கை இளையோர் அளித்தனர். அமைதிக்காக அங்கு இருந்தோர் கூறிய உறுதி மொழிகளின் ஓர் அச்சாரமாக அந்த ஒளிவிளக்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடவுளிடமிருந்து வரும் அமைதியை உலகில் இன்னும் ஆழமாக விதைக்க நாம் அனைவரும் கருவிகளாவோம் என்று கூறிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, மன்னிப்பின்றி நீதியும், நீதியின்றி அமைதியும் உருவாக முடியாது என்று வலியுறுத்தினார்.
இந்த மாலை நிகழ்வில், ஒருவருக்கொருவர் சமாதானத்தைப் பகிர்ந்து கொண்ட போது, அங்கிருந்த பிரான்சிஸ்கன் துறவியர் வெள்ளைப் புறாக்களை வானில் பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் விருப்பமுள்ள பிரதிநிதிகளும், திருத்தந்தையும் புனித பிரான்சிஸ் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்று செபித்தனர்.
3. அசிசி உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலாவில் பல்சமயக் கூட்டம்
அக்.28,2011. அசிசி நகரில் இவ்வியாழன் நடைபெற்ற உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலா நகரில் பல்சமயக் கூட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகளும், பிலிப்பின்ஸ் பழங்குடியினர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அசிசி நகரில் திருத்தந்தை விடுத்த செய்தியின் சுருக்கத்தை மனிலாவின் துணை ஆயர் Bernardino Cortez எடுத்துரைத்தார்.
பல்வேறு தலைவர்கள் பேசியபின்னர், அருளாளர் இரண்டாம் ஜான்பால் தலைமையில் அசிசி நகரில் மேற்கொள்ளப்பட்ட பல்சமயத் திருப்பயண விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பிரதிநிதிகள் சமாதானத்தின் அடையாளமாக, மலர்களைப் பகிர்ந்து கொண்டனர் என்றும், இறுதியில் அனைவரும் ஒரு சமாதான உறுதிமொழியில் கையொப்பம் இட்டனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. திருப்பீடமும் ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து நடத்தவிருக்கும் கருத்தரங்கு
அக்.28,2011. கத்தோலிக்கத் திருச்சபையும், ஆர்த்தடாக்ஸ் சபையும் எடுத்துரைக்கும் நன்னெறி விழுமியங்கள் ஐரோப்பிய சமுதாயத்தின் கட்டமைப்பில் எவ்விதம் தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்யும் ஒரு கூட்டம் நவம்பர் மாதம் Minsk நகரில் நடைபெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வளர்ச்சி என்ற திருப்பீட அவையும், பல்சமய உரையாடல் நிறுவனமும், Belarus நாட்டின் ஆர்த்தடாக்ஸ் அவையுடன் இணைந்து, நவம்பர் 13 முதல் 15 வரை நடத்தவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் சமுதாய நன்னெறி, பொருளாதார நெருக்கடி, விசுவாச வாழ்வு சந்திக்கும் சவால்கள் ஆகிய தலைப்புக்களில் கருத்துக்கள் பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கின்போது, நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பாடல்களும், பிற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசை படைப்புக்களும் இடம் பெறும் என்று வத்திக்கான் செய்தி கூறுகிறது.
5. துருக்கியில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பணிகள் கிறிஸ்தவ அன்புக்கு சாட்சி - பேராயர் Ruggero Franceschini
அக்.28,2011. துருக்கியில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டது அனைவரின் உள்ளங்களையும் கிறிஸ்தவ அன்பால் நிறைத்துள்ளது என்று துருக்கியின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று துருக்கியைத் தாக்கிய 7.2 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் அந்நாட்டின் Van என்றும் நகர் பெரிதும் அழிந்துள்ளது என்றும், அம்மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை செய்த காரித்தாசின் பணி போற்றுதற்குரியதென்றும் Smyrna பேராயரும், துருக்கி ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் Ruggero Franceschini கூறினார்.
அசிசி நகர் பயணத்திற்கு முந்திய நாள் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட செப வழிபாட்டின் இறுதியில் துருக்கி மக்களின் துயர் துடைக்க அனைவரும் முன் வர வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்று பலரும் உதவிகள் செய்து வருகின்றனர் என்றும் பேராயர் Franceschini எடுத்துரைத்தார்.
கரித்தாஸ் செய்யும் அற்புதமான துயர்துடைப்பு பணிகளால் பெரிதும் பயன் பெறுவது கிறிஸ்தவர் அல்லாதோரே என்பதை பேராயர் Franceschini சுட்டிக்காட்டினார்.
6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது - அமெரிக்க ஆயர்
அக்.28,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய ஆயர் William Lori கூறினார்.
அமெரிக்க அரசின் ஓர் உயர்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை ஆயர் பேரவையின் சார்பில் இப்புதனன்று சந்தித்த Bridgeport மறைமாவட்டத்தின் ஆயர் Lori, அண்மைக் காலங்களில் அமெரிக்க அரசு எடுத்து வரும் பல முடிவுகள் மதச்சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
நலவாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் கருத்தடையை இணைப்பது, கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ய விரும்பாத கத்தோலிக்க அமைப்புக்களுக்கு அரசின் உதவித் தொகைகளை மறுப்பது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறிய ஆயர் Lori, அரசின் இந்தப் போக்கு கிறிஸ்துவ நன்னெறி விழுமியங்களைக் கேள்விக்குரியதாக்கும் ஒரு போக்கு என்று கூறினார்.
மதச்சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Lori, இவ்வுரிமைகள் அரசின் அதிகாரத்திற்குக் கீழ் வராத முதல் உரிமைகள் என்பதை வலியுறுத்தினார்.
7. பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'
அக்.28,2011. வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை தமிழகத்தில் ஒரு கிராம மக்கள் கொண்டாடினர்.
புதுச்சேரிக்கு அருகில், தமிழகப் பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை. கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்தின்னும் வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம்.
பழந்தின்னும் இந்த வவ்வல்களுக்காக கடந்த 5 தலைமுறையாக இந்த ஊர் மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல், சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இந்த ஊரில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என கொண்டாடப்படும் பொதுவான நிகழ்ச்சிகளிலும், வெடி சத்தமும், புகை, நெடி ஆகியவைகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கள் ஊரை இவர்கள் கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.
வழக்கம்போல, இவ்வாண்டும் தீபாவளி விழாவின்போது இந்த ஊர் மக்கள் பட்டாசுக்களை வெடிக்காமல், மற்றப்படி இனிப்புகள், புத்தாடைகள் ஆகியவற்றுடன் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர்.
No comments:
Post a Comment