Tuesday, 25 October 2011

Catholic News - hottest and latest - 25 October 2011

1. உலகக் குடியேற்றதார நாளுக்கான திருத்தந்தையுயின் செய்தி

2. இந்தியாவின் மதத் தலைவர்கள் - அசிசி நகர் அமைதி நாள் கூட்டத்தைப் போன்ற முயற்சிகளால் உலகில் அமைதி வளர வாய்ப்புண்டு

3. சுற்றுச்சூழல் அக்கறையுடன் திருப்பயணங்களை இடம்பெற ஊக்குவித்தல்

4. வத்திக்கான் தோட்டத்தில் 400 ஆண்டு பழமையுடைய இஸ்ரயேல் ஒலிவ மரம்

5. பங்களாதேஷ் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் வாய்ப்பு

6. பிலிப்பின்ஸ் நாட்டில் கொலையுண்ட அருள்பணியாளரின் வழக்கு தீர விசாரிக்கப்பட வேண்டும் - ஆயர் பேரவை

7. அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் ஓவியக் கண்காட்சி

------------------------------------------------------------------------------------------------------

1. உலக குடியேற்றதார நாளுக்கான திருத்தந்தையுயின் செய்தி

அக்.25,2011. வரும் ஆண்டு சனவரி மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் உலகக் குடியேற்றதாரர் நாளையொட்டி 'குடியேற்றமும் புதிய நற்செய்தி அறிவித்தலும்' என்ற தலைப்பில் சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்செவ்வாயன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தி, இன்றைய உலகில் நல்வாழ்வைத்தேடியும், சித்ரவதைகளின் அச்சுறுத்தலாலும், போர், வன்முறை, பசி மற்றும் இயற்கைப் பேரிடர்களாலும் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் மக்கள் குடிபெயரவேண்டியிருப்பதால் எழுந்துள்ள ஒழுக்க ரீதி, ஆன்மீக மற்றும் மனித குல பிரச்னைகள் குறித்து சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.
பல இனத்தவரும் பல கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்களும் ஒரே குடும்பமாய் வாழவேண்டிய கட்டாயச் சூழல்கள் உருவாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், மதத்தை ஒதுக்கி வைத்து வாழ்தல், கிறிஸ்தவ விரோத போக்கு, பிரிவினை இயக்கங்கள் போன்றவை இதற்கு பெருந்தடைகளாக நிற்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளுக்கு குடிபெயரும் கிறிஸ்தவர்களிடையே பணியாற்றும் திருச்சபை அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவ மனச்சான்றை உயிர்துடிப்புடையதாக வைத்திருக்க உதவும் புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவை குறித்தும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து அடைக்கலம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்ல மக்களைத் தூண்டும் நிலைகள் குறித்து பத்திரிகைத்துறை நேர்மையான முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் பாப்பிறை.
குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்காக கத்தோலிக்க சமூகம் செபிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தியுள்ள பாப்பிறை, சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் உலகக் குடியேற்றதாரர் நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


2. இந்தியாவின் மதத் தலைவர்கள் - அசிசி நகர் அமைதி நாள் கூட்டத்தைப் போன்ற முயற்சிகளால் உலகில் அமைதி வளர வாய்ப்புண்டு

அக்.25,2011. இவ்வியாழனன்று இத்தாலியின் அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள அமைதி நாள் கூட்டத்தைப் போன்ற முயற்சிகளால் உலகில் அமைதியும், மனித நேயமும் வளர வாய்ப்புண்டு என்று இந்தியாவின் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உண்மைக்கும், நீதிக்கும் தங்களையே அர்ப்பணித்துள்ள பல உலகத் தலைவர்களை அசிசி நகர் கூட்டத்திற்குத் திருத்தந்தை அழைத்திருப்பது உலக அமைதியை நிலைநாட்ட அவர் காட்டும் அரியதொரு எடுத்துக்காட்டு என்று இந்தியாவில் இருந்து இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.
உலகின் பல்சமயத் தலைவர்கள் 200 பேருக்கும் அதிகமானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு பெற்றுள்ளனர்.
உலகமயமாக்கல் கொள்கைகள் எவ்வகையில் கடவுள், மனிதம், உண்மை, மற்றும் நீதிக்கு முற்றிலும் முரணானவை என்பதை தான் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தவிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் மேலும் கூறினார்.
பல்வேறு மதங்களும் ஒருங்கிணைந்து செய்திகளை அனுப்ப முயலும்போதுதான் உலகில் நல்ல மாற்றங்கள் உருவாக வழி பிறக்கும் என்றும், அசிசி அமைதி நாள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவம் தராமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறதென்றும் சமண மதத்தின் பிரதிநிதியாக அசிசி செல்லும் Sadhvi Sadhana கூறினார்.


3. சுற்றுச்சூழல் அக்கறையுடன் திருப்பயணங்களை இடம்பெற ஊக்குவித்தல்

அக்.25,2011. சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய‌ திருப்பயணங்களை உலக அளவில் ஊக்குவிக்கும் திட்டத்தை WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதி அமைப்பும் இங்கிலாந்திலுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையும் இம்மாத இறுதியில் அசிசியில் துவக்க திட்டமிட்டுள்ளன.
ப‌சுமைத் திருப்ப‌ய‌ண‌ங்க‌ள் என்ற‌ த‌லைப்பில் இய‌ங்க‌ உள்ள‌ இக்கூட்ட‌மைப்பு, திருத்த‌ல‌ங்க‌ளின் புனித‌த்துவ‌ம் காக்க‌ப்ப‌டுவ‌துட‌ன் சுற்றுச்சூழ‌லும் ம‌தித்து காக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தில் முக்கிய‌ க‌வ‌ன‌ம் செலுத்தி செய‌ல்ப‌ட‌ உள்ள‌து.
உல‌க‌ அமைதிக்கான‌ அசிசி கூட்ட‌த்தைத் தொடர்ந்து அதே ந‌க‌ரில் இந்து, இஸ்லாம், புத்தம், யூத‌ம் ம‌ற்றும் கிறிஸ்த‌வ‌த்தின் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் சுற்றுச்சூழ‌ல் குறித்து இட‌ம்பெற‌ உள்ள‌ இக்கூட்ட‌த்தில், திருத்த‌லங்க‌ளில் திருப்ப‌ய‌ணிக‌ளின் வ‌ருகையால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புக‌ளைக் க‌ளைவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ள் குறித்து ஆராய‌ப்ப‌டும்.


4. வத்திக்கான் தோட்டத்தில் 400 ஆண்டு பழமையுடைய இஸ்ரயேல் ஒலிவ மரம்

அக்.25,2011. இஸ்ரயேலுக்கும் வத்திக்கானுக்கும் இடையே விளங்கும் நட்புறவின் அடையாளமாக 400 ஆண்டுகள் பழமையுடைய ஒலிவ மரம் ஒன்றை இப்புதனன்று வத்திக்கான் தோட்டத்திற்கென வழங்குகிறது இஸ்ரயேல் அரசு.
இஸ்ரயேல் பிரதமர் பெஞ்சமின் நெத்னயாகு கடைசியாக திருப்பீடம் வந்தபோது, இவ்வளவு பழமையான ஓர் ஒலிவ மரத்தை வத்திக்கானுக்கு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அம்மரத்தை வத்திக்கானுக்கு கொண்டு வர உதவியுள்ளது Keren Kayemeth LeIsrael என்ற யூத அமைப்பு.
4மீட்டர் உயரமுடைய இந்த ஒலிவ மரம், கிறிஸ்தவர்களின் புனித இடமான நாசரேத் மலைக்குன்றில் வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று காலை வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெற உள்ள இம்மரம் நடும் விழாவில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயுடன் திருப்பீட அதிகாரிகளும், யூத மதப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.


5. பங்களாதேஷ் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் வாய்ப்பு

அக்.25,2011. பங்களாதேஷில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்களாதேஷின் நான்கு அமைச்சர்கள் அறிவித்தனர்.
பங்களாதேஷின் கல்வி, நல ஆதரவு, சமூக பொருளாதார மற்றும் ஒழுக்க ரீதி முன்னேற்றத்திலும் 1971ன் விடுதலைப்போரிலும் அந்நாட்டு கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை ஒரு நாளும் நாம் மறக்க முடியாது என்றார் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கலாச்சாரத்துறை அமைச்சர்  Promod Mankin.
இயேசு உயிர்ப்பு ஞாயிறை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தல், பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கிறிஸ்தவர்களுக்குரிய பங்கை அளித்தல், நில உரிமைமாற்றுச் சட்டத்தில் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதை அகற்றல் என்பவை உட்பட 10 கோரிக்கைகளை இக்கூட்டத்தின்போது பங்களாதேஷ் கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் நிர்மல் ரொசாரியோ, அந்நாட்டு உள்துறை அமைச்சர் Shamsul Haque Tuku மற்றும் மத நடவடிக்கைகளுக்கான அமைச்சர் Shahjahan Miahடம் சமர்ப்பித்தார்.


6. பிலிப்பின்ஸ் நாட்டில் கொலையுண்ட அருள்பணியாளரின் வழக்கு தீர விசாரிக்கப்பட வேண்டும் - ஆயர் பேரவை

அக்.25,2011. இம்மாதம் 17ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்ட அயல்நாட்டுப் பணிகள் பாப்பிறை கழகத்தின் அருள்பணியாளர் Fausto Tentorioவின் கொலை குறித்த வழக்கில் பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அரசுத் தலைவர் Aquinoவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கடவுள் பணியிலும், பிறரன்புப் பணியிலும்  ஈடுபட்டிருக்கும் நல்லவர்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் கொல்லும் போக்கு பிலிப்பின்ஸ் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள் அவையின் தலைவர் ஆயர் Nereo Odchimar, அரசு இந்தக் கொலை வழக்கை அனைத்து கோணங்களில் இருந்தும் முழுமையாக ஆராய வேண்டும் என்றும், வழக்கமாகக் கூறும் சாக்கு போக்குகள் இந்த வழக்கில் இருக்கக்  கூடாது என்றும் வலியுறுத்திக் கூறினார்.
கொலை செய்யப்பட்ட குருவின் உடல் இத்திங்களன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, Kidapawan நகரில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டது என்றும், இச்செவ்வாயன்று அருள்தந்தை Fausto Tentorioவுக்கு இறுதி மரியாதைகள் செய்யப்பட்டன என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.


7. அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் ஓவியக் கண்காட்சி

அக்.25,2011. அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் 45 ஓவியங்கள் கொண்ட ஒரு கண்காட்சி கொல்கத்தாவில் இத்திங்களன்று நிறைவு பெற்றது. அன்னை தெரேசா பிறந்த 101வது ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் அமைந்திருந்த இந்த ஓவியக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாய் நடைபெற்றது.
கடந்த 50 ஆண்டுகள் உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்களை வரைந்த Ritu Singh என்ற பெண்மணி, அன்னை தெரேசாவுடன் மிக நெருங்கியத் தொடர்பு கொண்டவர்.
இவரது தாய் அன்னைத் தெரேசாவுடன் ஏழைகள் பணியில் ஈடுபடச் சென்ற வேளைகளில் சிறுமியாக இருந்த Ritu Singh அன்னையின் இல்லத்தில் நாள் முழுவதையும் கழித்தபோது, அங்கு தன் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார் என்று கூறியுள்ளார்.
'வாருங்கள் என் ஒளியாய் இருங்கள்' என்ற தலைப்பில் ஓவியர் Ritu Singhஆல் வரையப்பட்ட அன்னை தெரேசாவின் ஓவியம் 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அன்னை அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டபோது, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...